Saturday, October 3, 2026

குங்குமக் கோலங்கள்.

 

   நெற்றியின் திலகம் பலருக்கும் வெற்றியின் நம்பிக்கை.பெண்மை  பெரிதுவக்கும் பேரின்பம்,குங்குமம் பொலிவின் பிறப்பிடம் என்றும், ஒரு மதத்தின் அடையாளமாக கருதப்பட்டா லும், முகத்தின் மிளிர்ச்சியை முன்னுக்குத் தள்ளும் குங்குமத்தை, வணங்குதற்குரிய வடிவாகப் பார்க்கலாம். இதைத்தான் சிவாஜி கணேசன் நடித்த 'குங்குமம்'எனும் திரைப்படத்தின்

"குங்குமம் மங்கள குங்குமம் 

குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்" 

 எனும் சூலமங்கலம் ராஜலட்சுமியும் P.சுசீலாவும் பாடிய,கே.வி.மகாதேவன் இசையில், இதயத்தில் குங்குமம் தெளித்த கண்ணதாசன் பாடல்.இப்பாடல் குங்குமத் தோடு என்றும் தெய்வதூய் மையை மனத்தூய்மை ஆக்கியது.

  ஆண்களும் நெற்றியில் குங்குமத் திலகம் இடுவதுண்டு.ஆணின் நெற்றி யில் அழகு சேர்க்கும் புன்னகையை 'முதலாளி'திரைப் படத்தின் எம்.எஸ். ராஜேஸ்வரியும் டி.எம்.எஸ்ஸும் பாடிய, 

"குங்கும பொட்டுக்காரா கோன கிராப்புக்காரா

உன்னையே நான் பிரிவேனே" 

  எனும் க.மு.ஷெரீபின் பாடலுக்கும், கே.வி மகாதேவனே இசையமைத்தி ருந்தார்.

  குங்குமத் திலகத்தின் குதூகலம், மகப்பேறின் மகத்துவத்தை கொண்டாடி, வளைகாப்பு விழாவின் வாழ்த்தாக அமைத்தது.'இது சத்தியம்'திரைப்படத் தின் விஸ்வநாதன் இசையில்,P.சுசீலா வும் எஸ் ஜானகியும் குரல்களை, குங்கும நீரில்  நனைத்துப்பாடிய,

"குங்குமப்பொட்டு குலுங்குதடி 

நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி 

மங்கலத்தோற்றம் பொங்கி எழுந்து 

மகன் வருவதை கூறுதடி"

 என்று  பிறப்பின் பெருமையை குங்குமத் துடன் பிணைத்துக் கொண்டாடியது.   

. குங்குமத் திலகம் இரண்டு உள்ளங் களை உணர்வுபூர்வமாக இணைக்கும் என்பதைத்தான் 'குடியிருந்த கோயில். திரைப்படத்தின் டி.எம் எஸ்ஸும் P.சுசீலாவும் பாடிய, 

"குங்குமப் பொட்டின் மங்களம் 

நெஞ்சமிரண்டின் சங்கமம்" 

  எனும் கவிஞர் ரோஷனாரா எழுதிய இந்த அற்புதமான பாடலுக்கு,எம்.எஸ் விஸ்வ நாதன் வரம்கூட்டி ஸ்வரம் சேர்த்தார்.

. குங்குமத்தை காதலின் சங்கமத்துடன் ஊடுருவச்செய்து சந்தோஷத்தை  சங்கீதமாக்கிய அனுபவத்தை,வாலியின் வரிகளுடன்,இளையராஜாவின் இசையில் கே.எஸ்.சித்ரா பாடிய,'சாமி போட்ட முடிச்சு' திரைப்படத்தின்,

"மங்கலத்து குங்குமப் பொட்டு 

வந்ததென்ன நெத்தியத் தொட்டு 

இந்த கோலம் அந்த சாமி சம்மதமா 

இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா" 

எனும் ஏகாந்தப்பாடல் எடுத்துரைத்தது 

. குங்குமத்துடன் சந்தனமும் சேருகையில் மனம் முழுக்க மணம் பரப்பி, மனத்தூய் மைக்கு விலாசமாளிக்கிறது. இவ்வகை யில் அமைந்த இரு சுவையான பாடல்க ளை இங்கே குறிப்பிட்டாகவேண்டும் 'சின்னத் தம்பி'யில் கங்கை அமரன் வரிகள் புனைந்து இளையராஜாவின் இசையில் 'பாடும் வானம்பாடி' எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய, 

"அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் 

அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் 

சிரிக்கும் பந்தலிலே 

முழு சந்திரன் வந்தது போல் 

ஒரு சுந்தரி வந்ததென்ன 

ஒரு மந்திரம் செஞ்சதுபோல் 

பல மாயன்கள் தந்ததென்ன 

இது பூவோ பூந்தேனோ" 

   எனும் இறக்கை கட்டி அதிவேகத்தில் பறந்த பாடல்,பரவசத்தின் உச்சத் திற்கு நம்மை கொண்டு சென்றது.'சின்ன தம்பி' பாடல்கள் அனைத்துமே வெகு சிறப்பு என்றாலும்,சங்கீத பாய்ச்சலில் சாதனை புரிந்தது இப்பாடல். இதற்கு முற்றிலும் மாறாக,பாரதிராஜாவின் கவிதைத் தலைப்பு கொண்ட 'நாடோடித்தென்றல்' திரைப்படத்தில் இளையராஜா தானே எழுதி இசையமைத்து,மனோவும் எஸ்.ஜானகியும் மெய்மறந்து,நாம் மெய் சிலிர்க்கப்பாடி, நம் நெஞ்சங்களை இளைப்பாறச்செய்த, 

"சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே 

ஓ மதி ஓ மதி "

. எனும் பாடல் என்றென்றும் நம் உள்ளங் களை ஊஞ்சலாடச்செய்யும்.

    கோபுரக்கலசமெனும் குங்குமத்தின் பெருமையினை பறைசாற்றும், இன்னும் பல பாடல்களும்,'குங்குமம்''குங்குமச் சிமிழ்''குங்குமப்பொட்டு கவுண்டர்' போன்ற திரைப்பட தலைப்புகளும், வெண்தமிழ்த்திரைக்கு செந்நிற அலங் காரம் செய்து ,செம்மையாய் தமிழ்த் திரைக்கு வாழ்த்துப்பா அமைத்திருக் கின்றன என்பதே,எவரும் மறுக்க இயலா யதார்த்தமாகும்.

.       ===============0=============.