மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
என்று பெண்மையின் புகழ் பாடினார் வள்ளுவர்.பெண்ணின் முகத்தை யும் வெண்மதியையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாது,விண்மீன்கள் திக்குமுக்காடுகின்றன என்பதே இதன் பொருள்.
இதேபோன்றொரு கற்பனையில் மிதந்து பின்வருமாறு பெண்மையைப் போற்றினார் ஜே.கே.{J.K} எனும் எனது நெருங்கிய நண்பர் ஒருவர்.
"கண்களில் மீனைத்தேக்கி
கழுத்தினில் சங்கைக்காட்டி
வண்ணமா மணியாய் ஓர் பெண்
வாழ்வினில் மெல்லவந்தாள்
அன்புடன் என்னைத் தேற்றி
ஆறுதல் மொழிகள் கூறி
அன்னைபோல் கவனம் கொண்டாள்
அழகிய கவிதை சொன்னாள்".
இந்த வரிகளை நான் எனது ஆங்கில பாட வகுப்பில்,கற்பனைக்கு பிரசித்தி பெற்ற John Keats -இன் "La Belle Dame Sans Mercy"{The Beautiful Lady Without Mercy}எனும் கவிதையை புகட்டுகையில்,ஒரு மாறுபாட்டுச் சிந்தனையாக,மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ந்ததுண்டு.
பெண்மையும் தாய்மையும் இல்லையெனில் மண்ணில் மனிதர்க்கு ஏது வாழ்வு? தமிழ்த் திரையுலகம்,அது தொடங்கிய காலந்தொட்டே,திரைப்பட தலைப்புகளாலும் திரையிசைப் பாடல்களாலும்,பெண்மைக்கு ஆலா பனை செய்யத்தவறியதில்லை. தமிழ்திரைப்படத்துறை பெண்மையைப் போற்றிய தலைப்புகளில்'பெண்ணின் பெருமை''மாதர்குல மாணிக்கம்' 'மங்கையர் திலகம்''பத்தினி தெய்வம்''கற்புக்கரசி''எங்கள் குலதேவி' 'எங்க வீட்டு மகாலட்சுமி''பெண் என்றால் பெண்''பெண்ணே நீ வாழ்க' 'பெண்ணை நம்புங்கள்''பெண்ணை வாழ விடுங்கள்''பெண்ணின் மனதைத் தொட்டு'போன்ற பல திரைப்படங் களைப் பட்டியலிடலாம்.
திரையிசைப்பாடல்களைப்பொறுத்தமட்டில் கடந்த நூற்றாண்டின் 1955-இல் வெளியான ஜெமினி கணேசன் சாவித்திரி ஜோடிசேர்ந்து நடித்த, 'குணசுந்தரி'திரைப்படத்தில் ஏ.எம்.ராஜாவின் அமுதக்குரலில் இசைத்த,
"கலையே உன்விழி கூட கவிபாடுதே
தங்கச்சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே"
எனும் தெவிட்டாப்பாடல், பெண்மையின் ஒளியினை நம் விழிகளுக்கு பார்வையாக்கியது.தஞ்சை ராமையாதாஸின் இந்த வரிகளுக்கு, கண்டசாலா இசைதேனூட்டினார்.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த'தை பிறந்தால் வழிபிறக்கும்' திரைப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் உச்சக்குரலில் இசை உயர்த்திய,
"அமுதும் தேனும் எதற்கு
நீ,அருகினில் இருக்கையிலே எனக்கு"
எனும் பாடலும்,பின்னர் வெளியான'தெய்வப்பிறவி'திரைப்படத்தில் சிதம்பரம் ஜெயராமனின் தனித்தன்மை வாய்ந்த குரலில்,எஸ்.ஜானகியும் இணைந்து குரல்கொடுத்த,
"அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்"
எனும் பாடலும்,பெண்ணின் பெருமை போற்றும் பாடல்களாக அமைந் தன.இதில் முதல் பாடலை கவிஞர் சுரதா எழுதி,கே.வி.மகாதேவன் இசையமைக்க, இரண்டாம் பாடலை உடுமலை நாராயணகவி எழுதி, சுதர்சனம் இசையேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலத்தின் கருவறையில் தோன்றி காலமெல்லாம் வாழும் பெண்மையை பரவசமாய்ப் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது,'மாலையிட்ட மங்கை'திரைப்படத்தில் நாம் செவிகுளிர கேட்ட,இன்றும் தொடர்ந்து பல இசை மேடைகளில் பலரால் பாடப்பட்டு,என்றென்றும் நெஞ்சில் இனிக்கும்,
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
...........................................................
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ"
எனும் தமிழ் மணக்கும் கண்ணதாசனின் பாடல்.இப்பாடலை,மெல்லிசை மன்னர்களின் இசையில்,குரலால்'கோடி கோடி இன்பம்'தந்த,டி .ஆர்.மகா லிங்கம் மெய்மறந்து பாடியிருந்தார்.இதே காலகட்டத்தில் வெளியான 'சபாஷ் மீனா'திரைப்படத்தில்,சிவாஜி கணேசனுக்காக டி.எம்.சௌந்த ராஜன் குழைந்து பாடிய,
"சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி ...............................
முத்து சரங்களைப்போல்
மோகன புன்னகை மின்னுதடி"
எனும் பாடல் இன்றும் ரீங்காரமிடுவதை பலரும் உணர்வுப்பூர்வமாக சம்மதிப்பர்.கு.மா.பாலசுப்ரமணியம் எழுதிய இவ்வரிகளுக்கு டி.ஜி. லிங்கப்பா திவ்யமாக இசையூட்டியிருந்தார்.
இவற்றையெல்லாம் மிஞ்சியதே,'பாவமன்னிப்பு'திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளால் பெண்மைக்கு வாழ்த்துரைத்த
"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை"
என்றும்,
"பால்போல் சிரிப்பதில் பிள்ளை
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை"
என்றும் உருவகத்தால் பெண்மையை உயரத்தில் ஏற்றிவைத்த பாடலா கும். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைவெள்ளத்தில் P.B.ஸ்ரீநிவாஸின் காந்தக் குரல்படகு,ஒய்யாரமாக ஊர்ந்து கரையேறியது.இதே P.B ஸ்ரீனி வாஸ் அந்த மெல்லிசை இரட்டையர்களின் மனம்கவரும் இசையில் பாடிய, மற்றுமொரு பாடலே'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்'திரைப்படத்தில்,நம் செவிகளில் சந்தோஷம் கூட்டிய,
"இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மனமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே"
எனும் ஏகாந்த கீதமாகும்.இப்பாடலுக்கு இடையே வரும்,
"கவிஞர் பாடுவதும்
கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ
பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ"
எனும் வரிகள்,பெண்ணுக்கு பெண்மை அல்லாது வேறு சீதனமுண்டோ, என்று சொல்லாமல் சொல்லியது.இந்த பாடலும்,கவியரசின் கற்பனை ஊற்றெடுத்த இசையருவியாகும்.
பெண்மை ரசனைக்குட்பட்டது என்பதை பெண்மை அறியுமென்றாலும் கூட, பெண்மையின் பரிசுத்தத்தை இழக்க நேர்மையான பெண்மை ஒருபோதும் அனுமதிக்காது என்று பலமாக வெளிப்படுத்திய பாடலே,
"ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்,
தோழி சொல் சொல் சொல்"
எனும் வரிகளாகும்.'வாழ்க்கைப்படகு' திரைப்படத்தில் கண்ணதாசனின் அற்புதமான வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைக்க பி.சுசீலா வின் தெளிவான, இனிமையான குரலில் நாம் கேட்டு கேட்டு மகிழ்ந்த உணர்வுபூர்வமான பாடலாகும் இது.
புரட்சிப்பாடல்களை புடம்போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம்.ஜி ஆர் கூட,'தெய்வத்தாய்' திரைப்படத்தில்
"ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரை பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
என்றும், பிறகு தானே இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில்,
"நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ"
என்றும்,டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலால் பெண்மைக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.இந்த இரண்டு பாடல்களுமே வாலியின் கற்பனையில் உதித்த பொன்மணிகளாகும்.
அதே'உலகம் சுற்றும் வாலிபன்'.திரைப்படத்தில் நாம் கேட்டு கேட்டு உற்சாகமுற்ற இன்னுமொரு பாடலே,பாடு நிலா எஸ்.பி.பி பாடிய,
"அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்".எனும் மதுரகீதம்.
இப்பாடல் முழுவதுமே"காலங்களில் அவள் வசந்தம்"பாடல்போல், கவியரசின் கவின்மிகு சொற்களால் பெண்மைக்கு வாழ்த்துப்பா புனைந் தது.P.B ஸ்ரீநிவாஸையும் எஸ்.பி.பி யையும் வைத்து,பெண்மைக்கு நடத்தப் பட்ட மாபெரும் இசைவிழாக்களாக,இப்பாடல்களைக் கருதலாம்.
எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' மற்றும்'உலகம் சுற்றும் வாலிபன்'ஆகிய இரண்டு படங்களுக்கும் முறையே,விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தும் எம்.எஸ். விஸ்வநாதன் தனித்தும்,இசைமழை பொழிந்தனர்.P.B.ஸ்ரீனி வாசும் எஸ்.பி. பி யும் தங்களின் அதிர்வுக்குரல்களால்,ஆனந்தப் பெருமிதத்தில் பெண்மையை அலங்கரித்தனர்.
பரிசுத்த மனநிலையில் பெண்மையை இராகங்களாக்கி கண்ணதாச னின் கற்பனைக் களஞ்சியத்திலிருந்து கே.ஜே யேசுதாஸின் ஆனந்த பரவசத்தின் அதிர்வுகளாய் 'அபூர்வ ராகங்கள்'திரைப்படத்தில் நாம் சுவைத்த,
"அதிசிய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்"
என்ற பாடலும்,அப்பாடலுக்கு இடையே நம்மை அசத்திய,
"ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி[ளி]
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி"
எனும் வசந்தம் பீறிட்ட வரிகளுமாகும்.மெல்லிசை மன்னரின் இசையில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய,தமிழ்த்திரை வரலாற்றுப்பாதையின் மைல்கல் லாகும்,இப்பாடல்.
தமிழ்திரையில் பெண்மை,தங்கத்தொட்டிலில் தாலாட்டு பெற்றது என்பதற்கு,பானைச்சோற்றின் பருக்கைகளாக சிலவற்றை, இக்கட்டுரை யில் பார்த்தோம். இவையெல்லாம் காலக்கடலின் கரைதொட்ட சில அலைகளே!
ஆனால் இன்றோ'அழகிய தீயே'போன்ற தலைப்புகளும்"Fifty K.G தாஜூமகால் எனக்கே,எனக்கா"போன்ற கவிதை வரிகளும் பெண்மை யின் தரிசனத்தை அதிசயித்து எடைபோடுவதோடு நில்லாது,இன்னும் சற்று விறைப்பான சொற்களால்,
"அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே"
என்று,அட்டகாசமாக,அழகில் வன்முறை புகுத்தி,அழகை அனலாக்கி, அம்மன் ஆலயத்தில் தீ மிதியில் இணைவது போன்ற பிரமையை ஏற்படுத் துகின்றன.உருவகக் கோர்வைகளால் அழகில் அக்கினிப் பிரவேசமும் செய்யமுடியும் என்பதை,கவிப்பேரசு வைரமுத்துவைத் தவிர வேறு யார் உணர்ந்திருக்கக்கூடும்? தலைமுறை மாற்றங்களை பிரதிபலிப்பவனே உண்மையான படைப்பாளி.இந்த வலுவான யதார்த்த நிலையினை, சிந்தனையில் நிறுத்தியே,தற்கால திரைப்படத் தலைப்புகளும் திரை யிசைப்பாடல்களும்,வித்தியாசமாக,பெண்மையின் புகழ் பரப்பி பரவச மூட்டுகின்றன
ப.சந்திரசேகரன்.
==============================