Sunday, October 20, 2024

எங்கும் நிறைந்த தமிழ்த்திரையிசை


''இங்கே இருப்பதா அங்கே வருவதா 

மங்கள நாயகியே சொல்லம்மா''

  என்று,ஒருபுறம் மாமியாருக்கு பாதப் பணிவிடையும்,மறுபுறம் கட்டிலுக்கு அழைக்கும் கணவனின் அன்பையும், தட்டிக்கழிக்க இயலாது,தவிக்கும் மரு மகளின்,மனைவியின்,தர்ம சங்கடத்தை வெளிப்படுத்தும் வண்ணம், எம்.எல் வசந்தகுமாரியின் கனத்த குரலில்  அமைந்த பாடல்,'மாமியார் மெச்சிய மருமகள்'திரைப்படத்தின் வசீகரக்காட்சியானது.கவி ராஜகோபாலின் நைய்யாண் டித் தன்மைகொண்ட இப்பாடலுக்கு, நயம்பட இசையமைத்தார் சுதர்சனம்.

"இங்கு நல்லாயிருக்கணும் எல்லோரும் 

நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும் 

நாம் ஒண்ணோடு ஒண்னாக சேரணும் 

இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்"

   என்று,இங்கும்,எங்கும்,எல்லோரின் நலம் பேணும் வாலியின் அற்புத பாட லொன்று, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை யில்'ஒரு தாய் மக்கள்'படத்தில் இடம் பெற்றது.டி.எம். சௌந்தராஜனும் பி.சுசீலாவும் பாடிய இந்த ஜனரஞ்சக மானப் பாடல்,உறங்கிய உணர்வுகளை உலுக்கி எழுப்பியது. 

  அக்கரை பச்சை என்பது,என்றென்றும் மனதின் மாயை.அதனால்தானோ என்னவோ,மனம் இங்கொரு கண்ணும் அங்கொரு கண்ணுமென,ஆலய வழி பாட்டில்கூட அலைபாய்கிறது.மனதின் மருட்சியில், 

"அங்கே மாலை மயக்கம் யாருக்காக 

இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக" 

என்றும், 

"அங்கே வருவது யாரோ 

அது வசந்தத்தின் தேரோ" 

  என்றும் அங்கிங்கெனாதபடி,எங்கும் எதிலும் மயங்கும் மனம்,தூரத்துக் காட்சிகளை துரத்துகிறது.'ஊட்டிவரை உறவு' கண்ணதாசனின் மயக்கம் பாடலை டி.எம். சௌந்தராஜனும்,பி சுசீலாவும் மெல்லிசை மன்னரின் இசையின் மயங்கிப்பாட, நேற்று இன்று நாளை திரைப்படத்தில், வசந்தத்தை, தூரத்தில் நின்று தரிசித்து எஸ்.பி.பி.யும் ஜானகியும் இணைந்து,அவிநாசி மணியின் வரிகளை அதே எம்.எஸ்.வி இசையில் குழைந்து பாட, இசையின் இனிமைக் காற்று,இங்கும், அங்கும், எங்கும் நிறைந்து பரவுவதை உணரலாம். 

 எட்டி நின்று ஏளனம் செய்பவர்களை,தட்டி வைத்து,மனம் இளைப்பாறும் வகையில்,

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அது ஆணவச் சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ

ஆனந்தச் சிரிப்பு"

  என்று எதிரிகளின் ஏளனச்சிரிப்பை, பச்சிளங்குழந்தையின் பரவசச் சிரிப்பு டன் ஒப்பிட்டுப்பாடினார் டி.எம்.எஸ், 'ரிக்ஷாக் காரன்' திரைப்படத்தில். எம்.எஸ்.வி இசையில் வாலியின் வரிகள், தூரத்து வன்மச் சிரிப்பை, தூசியெனத் தட்டி தூர வீசி எறிந்தது.

  இங்கும் அங்கும் இடைவெளி இன்றி இணைந்து,எங்கும் நீக்கமர நிறைந் திருக்கும் இறைவனைப் போன்றதே இசை.'சகுந்தலா' திரைப்படத்தில்

"எங்கும் நிறைநாத பிரம்மம்"

  என்று தொடங்கும் பாடலை,கர்நாடக கோகிலகான இசைவாணி, எம்.எஸ். சுப்புலட்சுமியின் தனித்தன்மை வாய்ந்த குரலில் கேட்கையில், 'இங்கும் அங்கும்' என்பது,'எங்கும்'என்பதை,இறைவனைப் போல் தன்னுள் கொண்டதே இசை,என்ப தாக அறியலாம்.

"எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ

பாடலிலே"

  என்று'கல்லும் கனியாகும்' திரைப்படத் தில் எம்.எஸ்.வி யின் இசையை உயிராக்கி,கண்ணதாசன் வரிகளை டி.எம்.எஸ் பாடிட, அப்பாடல் எங்கு ஒலித் தாலும்,அதனுள் சங்கமித்த பாடகரின் குரல்,திசை எட்டும் களிப்பூட்டும்.

"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்"

  எனும் 'நினைத்தாலே இனிக்கும்'திரைப் படத்தில்,எம்.எஸ்.வி.இசையில் எஸ்.பி.பி குழுவினருடன் பாடிய,கவியரசின் உற்சாகப் பாடல் போல, காற்று புகும் இட மெல்லாம் ஊற்றெடுக்கும் இன்னிசை.

 'எங்கும்'எனும் சொல்லில்,இடம் என்பது புறந்தள்ளப்படுவதை, அனைவரும் அறிவர்.

"எங்கிருந்தோ வந்தான்

இடைச் சாதி நானென்றான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்துவிட்டேன்"

  எனும் மகாகவி பாரதியின் வரம் பெற்ற வரிகளை ,கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் மனமுருகிப் பாடிட அப்பாடலையும்,பாடல் அமைந்த 'படிக்காத மேதை' திரைப்படத்தையும் மறந்தவர் மனிதராக இருக்க வாய்ப் பில்லை.மனிதத்திற்கு இப்புவியில் இடம் என்பது இல்லாத ஒன்றே, என்பதை உரக்க உணர்த்திய பாடலிது.பின்னர், 'எங்கிருந் தோ வந்தாள்'என்றும் 'எங்கிருந்தோ வந்தான்'என்றும்,இரு திரைப்படங் கள் அரங்கேறின.

  குரலை வைத்து திசை மறந்து ஒரு தேவ தையைத் தேடும் வண்ணம் அமைந்த பாட லே 'அவன்தான் மனிதன்'திரைப்படத் தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் வாணி ஜெயராம் கூர்ந்த குரல்கொண்டு பாடிய கண்ணதாசனின்,

"எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ"

எனும் தேன்சுவைப் பாடல்.

  திசையறியா வாழ்வின் பாதையைத் தேடிய பாடலே,'சேது' திரைப்படத்தில் கேட்போரை சோகத்தில் ஆழ்த்திய, அறிவுமதி இயற்றி,இளையராஜா வின் இசையில்,அவரது குரலாழத்தில் குடைந்த, 

"எங்கே செல்லும் இந்த பாதை 

யாரோ யாரோ அறிவாரோ"

எனும் இடுகாட்டை எடுத்துக்காட்டிய வரிகள்.

  வாழ்த்துவதில் கூட,நேசிக்கும் நபரை நெஞ்சில் சுமந்து,இடத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய பாடலே,'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்டத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஏ.எல்.ராகவன் பாடிய கண்ணதாசனின்,

"எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயமும் அமைதியில் வாழ்க"

எனும் அமுதகானம்.

  இங்கிருந்து அங்கு மட்டுமல்ல;எங்கும் எண்ணங்கள் அலைபாய்வதே,வாழ்க்கை இதே எண்ணங்களும் உணர்வுகளும் தான்,கவிதை உட்பட பல்வேறு படைப்பில க்கியங்களாகவும்,இசை அலைகளா கவும் எழுந்து, நேரத்தையும் தூரத்தையும் ஆக்கிரமிக்கின்றன.

  "நீ எங்கே,என் நினைவுகள் அங்கே" (மன்னிப்பு திரைப்படத்தில் டி.எம்.சௌந்த ராஜனும்,பி.சுசிலாவும் தனித்தனியே பாடியது) என்றும்,"எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு" (நெஞ்சிருக்கும் வரை திரைப் படத்தில் பி.சுசிலா தனித்துப் பாடியது) 

 என்றும், 

  நினைவாலும் எண்ணங்களாலும், மனசார சஞ்சரித்து,இடமும் காலமும் கடந்த ஒரு ஆன்ம சங்கமத்தை,'இங்கும்' 'அங்கும்' 'எங்கும்' எனும் சொற்கள் ஊருவாக்குகின்றன.இதை வெறும் கற்பனையாகக் கருதாது உணர்வுகளின் உல்லாசப் பயணமாகக் கொள்ளலாம்.

  'எங்கும்'எனும் சொல் மனதின் ஒருவகை யான தேடலை உருவகப்படுத்துவதை யோ அல்லது உறுதிப்படுத்துவதையோ காணலாம்.

"எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா:

அங்கே வரும என் பாடலை கேட்டதும்

கண்களே பாடிவா"

(படம்:-குமரிக்கோட்டம். பாடியவர் டி.எம்.எஸ்)

என்றும்,

"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே

எனக்கோர் இடம் வேண்டும்.

எங்கே மனிதன் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்"

(படம்:- புதிய பறவை:-பாடியவர் டி.எம்.எஸ்)

என்றும்,

 காதலைத் தேடியும் வாழ்வின் நிம்மதி யைத் தேடியும் நெஞ்சை ஆட்கொண்ட நிறைய பாடல்கள் உண்டு.இதே நிம்மதி தேடும் படலத்தை, 

"எங்கே நிம்மதி,நிம்மதி என்று தேடிப் பார்த்தேன்

அது எங்கேயுமில்லை"

என்று வேறு வகையில் 'நடிகன்' திரைப் படத்தில் பாடிக்காட்டினார் எஸ்.பி.பி.

     தேடலைச் சுட்டிக்காட்டிய 'அன்பு எங்கே''சுகம் எங்கே' 'தர்மம் எங்கே' போன்ற திரைப்படத் தலைப்புகளும் உண்டு.

    மேலே குறிப்பிட்ட ஐந்து பாடல்களில், மன்னிப்பு, 'குமரிக்கோட்டம்' பாடல்க ளுக்கு வாலிவரியமைக்க,நெஞ்சிருக்கும் வரை,'புதிய பறவை' பாடல் வரிகளுக்கு கவியரசு உயிரூட்டினார்.இதில் முதல் பாடல் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவின் இசையில் அழுத்தம் பெற்றது.இதர மூன்று பாடல்களும் மெல்லிசை மன்ன ரின் மேலோங்கிய இசையில்,காலம் வென்றன.'நடிகன்'பாடலை தானே எழுதி மனதை இலகுவாக்கினார்,இசைஞானி.

    இங்கும் அங்குமென்று,எங்கும் நிறைந்த,இன்னும் எத்தனையோ பாடல் கள்,தமிழ்த் திரையிசையில் உண்டு. உள்ளங்களுக்கு உவகையூட்டும் தமிழ்த் திரையிசை,'எங்கும் நிறைநாத பிரம்ம மாய்'இதயம் நுழைந்து,இறைவனைப் போல் நம்முள் சங்கமித்து நாம் வாழும் காலத்தை இனிதாக்குகிறது.

                                              ============////============



No comments:

Post a Comment