Saturday, April 22, 2017

வரிகளில் வாழும் வெண்திரைக் கவிஞர்கள்

                

      கடந்த நூற்றாண்டில், தமிழ்த் திரைப்படங்களின் வரவேற்புக்கும் வெற்றிக்கும், பாடல்கள் பெரிதும் அழுத்தம் கொடுத்து, ரசிகர்களை திரை அரங்கிற்குள் மட்டுமல்லாது, வாழ்நாள் முழுவதும்  வசீகரித்தன.எம்.கே தியாகராஜ பாகவதரின் ''பூமியில் மானிட ஜென்மமடைந்தும் புண்ணிய மின்றி விலங்குகள் போல்” தொடங்கி எத்தனை பாடல்கள் சொல்லாலும், பொருளாலும், குரல் மற்றும் இசை ஆக்ரமிப்பாலும்,வரலாறு படைத்தன. 
      குறிப்பாக அப்போதைய பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் கருத்துச்  செறிவும் கலைத்தாயின் வரப்பிரசாதம் எனக்கொள்ளலாம். காதலையும், பெண்மையையும், இதர வாழ்வியல் தத்துவங்களையும், இலக்கிய உணர்வோடு, உவமையும் உருவகமும் கலந்து, கற்பனையின் பொக்கிஷங்களாக, காலத்தை கடந்து,ஞாலத்தில் நிலைபெறச் செய்தனர் பல்வேறு கவிஞர்கள்.
           இலக்கிய தன்மைக்கும், இணையிலாப் பெண்மைக்கும், பின்வரும் பெருமைமிகு பாடல்களை உதாரணமாகக் கொள்ளலாம்."முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே" { படம்உத்தம புத்திரன்’, பாடல் A.  மருதகாசி; பாடியவர்கள் டி. எம். சௌந்தராஜன் பி. சுசீலா;  இசை. ஜி ராமநாதன்}விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” {படம்  ‘புதையல்’ பாடல்  எம் .கே. ஆத்மநாதன்; பாடியவர்கள் சி. எஸ் .ஜெயராமன் பி.சுசீலா; இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி} “நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே” {படம்மதுரை வீரன்’ பாடல் கண்ணதாசன்; பாடியவர்கள் டி. எம். சௌந்தராஜன், ஜிக்கி ;இசை. ஜி/ ராமநாதன் }’’வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே” {படம்சாரங்கதாரா’ பாடல் A.மருதகாசி பாடியவர்கள் டி. எம். சௌந்தராஜன்  இசை ஜி. ராமநாதன்
     இதேபோன்று 'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தில் வரும் டி .ஆர். மகாலிங்கம் பாடிய, கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த, "செந்தமிழ் தேன்மொழியாள்/ நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்", 'பாவமன்னிப்பு' படத்தில் கண்ணதாசன் எழுத்தில் அதே இரட்டையர்கள் இசையில், P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய, "காலங்களில் அவள் வசந்தம்/கலைகளிலே அவள் ஓவியம் /மாதங்களில் அவள் மார்கழி/ மலர்களிலே அவள் மல்லிகை" பாடலும் 'பணத்தோட்டம்' திரைப்படத்தில் ண்ணதாசனின் படைப்பில், ரட்டையர் இசையில் டி .எம். எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய "பேசுவது கிளியா, பெண்ணரசி மொழியா /பாடுவது வியா, பாரிவள்ளள் மகனா" போன்ற அனைத்தும் காலத்தைக் கடந்த கவித்துவ முத்திரைகளாகும்.
     திரைப்படப் பாடலில் இதிகாசச்  சொற்களாக   இடம்பெயர்ந்தன, 'பாசமலர்' திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் புகுத்திய, அழியா வரிகளான, 
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே -  
வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே".
     டி எம் எஸ்ஸும் பீ சுசீலாவும் பாடிய இப்பாடல், தமிழ்க் கவிதையின் தரத்தையும், தாலாட்டின் தகைமையையும், தாய்மாமனின் முக்கியத் துவத்தையும், வெண்திரையில்  வரலாறாக்கியது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை, வரிகளுக்கும் குரலுக்கும், வலுவூட்டியது, 
     கற்பனைக் களஞ்சியமாய், திரைப்படப் பாடல்களில் இலக்கியத்தை, சுவையோடு பரிமாறும் பக்குவம், கடந்த ஆண்டு முடிவுவரை தொடர்ந்தது என்பதை, கோவை தம்பியின்பயணங்கள் முடிவதில்லை’ மற்றும் பி. வாசுவின்சின்னத்தம்பி'போன்ற  திரைப்படங்களில் காண முடிந்தது. இரண்டு படங்களுமே இசைஞானியின் மாபெரும் இசைவிருந்தாக அமைந்த.
       முதலாவது படத்தில் வைரமுத்துவின் வரிகளில்,எஸ் பி பால சுப்ரணயத்தின்,''இளையநிலா எழுகிறதே இதயம்வரை நனைகிறதே" என்கிற பாடலும், அப்பாடலில் இடையே வரும் ''முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ/ முகவரிகள் தொலைந்த தனால் அழுதிடுமோ அது மழையோ? ''என்ற இயற்கை உருவாக்கப்படு த்தலும், திரைப்படங்களில் இலக்கியம் தொடரும் என்ற நம்பிக்கை ஊற்றினை நிறையச் செய்தது.
       அதுபோலவே சின்னத்தம்பியில் வாலி விளைவித்து, மனோ பாடிய, "தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே" பாடல் பயிரும் அதன் கதிர்களான '’சோறுபோட  தாயிருக்கா  பட்டினியை பார்த்ததில்ல/தாயிருக்கும்  காரணத்தால், கோயிலுக்கும் போனதில்ல/தாயடிச்சு வலிச்சதில்ல,  இருந்தும் நானழுவேன் /நானழுதா தாங்கிடுமா, உடனே தாயழுவா  /ஆகமொத்தம் தாய்மனசு போல்வளரும் பிள்ளதான்/வாழுகின்ற வாழ்க்கையிலே, தோல்விகளே இல்லாதான்" போன்ற எளிமையான சொற்களால் தாய் மகன் உறவையும் நம்பிக்கை வித்துக்களையும் நமது நாடியின் துடிப்பாக்கினார்,கவிஞர் வாலி.   
      ஆனால் பெண்மையைப் பற்றி, தலைமுறைமாற்றத்தைப் புரிந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ''அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் கொதிக்கிறியே/ முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே/ அடிமனச அருவா மனையில் அறுக்கிறியே ''என்ற புருவம் எழச்செய்த 'முதல்வன்' படத்தில் எஸ். பி .பி யும், ஹாரிணியும் பாடிய ஆஸ்க்கார் இசையமை ப்பாளரின் ஆரம்பகாலப் பாடல், அசத்தலாகவே அமைந்தது.விஸ்வரூபக் காதலில், பாண்டி நாட்டுக் கவிஞரின் கவிதை வெப்பத்தை, வெட்டித் தீர்த்த பாடலாய், பலரையும் வியக்கச் செய்தது, அப்பாடல்
     காதலின் மகத்துவத்தை கவிதை வரிகளாக்கி அவற்றை இசை நேசிப்போரின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெறச்செய்த வகையில், கவியரசு கண்ணதாசன் தனியிடம் பெறுகிறார்.இந்த வகையில் அவர்  எழுதிய எல்லா பாடல்களையும் இங்கே நினைவு கூறுவதில் அர்த்த மில்லை.ஆனால் 'பாலும் பழமும்' திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பி. சுசீலா பாடிய "காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா'' பாடலும்,அதில் வரும் "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி /பேசமறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி /அதுதான் காதல் சந்நிதி''எனும் வரிகளும் அதற்குப் பின்னர்  தொடரும் "முறையுடன் மணந்த  கணவன் முன்னாலே  பரம்பரை நாணம் தோன்றுமோஎனும் வரிகளும் எழுதி வைத்து அதில் 'முறையுடன்' என்ற சொல்லை மீண்டும்  வலுவாக இரண்டாம் முறை சுசீலா பாடுகையில், கவியோடு சேர்ந்து, பாடகியும் இசைமேதைகளும் ஒருசேர, காதலின் உயர்வைப் போற்றிகவிதையின் உச்சத்தைத்  தொட்டதாகப் புரியலாம் .
     காதலைப் போலவே கணவன் மனைவி உறவின் புனிதத்தை, தாம்பத்யத்தின் தர்மத்தை,நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் " சொன்னது நீதானா ''பாடலில் வரும் "தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா /தெருவினிலே விழுந்தாலும் வேறோர்க்கை படலாமா'' என்ற வரிகள் மூலமாக என்ன அருமையாக உணர்த்தினார் கவியரசு.இப்பாடலும், இரட்டையர் இசையில் பி.சுசீலா பாடினார் என்பது, பாடலின் கூடுதல் சிறப்பாகும்
     காதலின் அற்புதத்தை திரைப்பட பாடல் வரிகளாய்க் குறிப்பிடுகையில் ஒருதலைக் காதலின் வலியினை, வேதனையை, புடம்போட்ட சொற்களால் பளிச்சென்று வெளிப்படுத்திய டி ராஜேந்தர் பாராட்டுக்குரியவர். ‘ஒருதலை ராகம்’ திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரணயத்தின் ஒப்பற்ற குரலில் ''வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது’’ பாடலாகட்டும், இணையத்துடிக்கும் துருவங்களின் முரண்பாட்டு நிலைகளை "இது குழந்தை பாடும் தாலாட்டு /இது இரவு நேர பூபாளம் /இது மேற்கில் தோன்றும் உதயம் /இது நதியில்லாத ஓடம்'' என்று வித்தியாசமாக  எழுதி, எடுத்துக் காட்டியதி லாகட்டும்,  தாடிக்கார கவிஞர் தனியிடம் பிடித்து, அப்பாடலுக்கு இசையும் அமைத்து வெற்றிக்கொடி கட்டினார்.எஸ் பி பி யின் காந்தக் குரல் இப்பாடல்க ளுக்கு வசந்தம் கூட்டியது.
      வாழ்வியல் கோட்பாட்டில், தன்னிறைவும்வாழ்க்கைப் பாதையை தன்னறிவுக்கு உட்படுத்துதலும், இன்றியமையாத நிலைகளாக, எம். ஜி. ஆர் திரைப்படங்களின் பல பாடல்கள், வலியுறுத்தின.இதுபோன்ற பாடல்கள்மூலம்  தனிமனித,மற்றும்  சமூக ஒழுக்கத்தின் முக்கியத்து ம் உணர்த்தப்பட்டது. குறிப்பாக, 'திருடாதே' 'அரசிளங்குமரி' மற்றும்  'நாடோடி மன்னன்' திரைப் படங்களில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி,  டி எம். எஸ். பாடிய ''திருடாதே பாப்பா திருடாதே''  ''சின்னப் பயலே சின்னப் பயலே  சேதி கேளடா'' ''தூங்காதே தம்பி தூங்காதே'' பாடல்கள், இன்றும் மக்களின் மனதைவிட்டு அகலாத தாரக மந்திரங்களாகும் .
   அந்த பாடல்களின் உள்ளார்ந்த வரிகளாக வரும், முறையே,  ''திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'' ''ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி /உன்னை ஆசையோடு ஈன்றவளுவுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி''விழித்து கொண்டோ ரெல்லாம் பிழைத்துக்கொண்டார் /உன்போல் குறட்டை  விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்''போன்றவை வாழ்க்கைச் சித்தாந்தங்களே. இவற்றில் அரசிளங்குமரிக்கு ஜி. ராமநாதனும், மற்ற இரண்டு படங்களுக்கும் எஸ். எம். சுப்பையா நாயுடுவும் இசையமைப்புப்  பணியை மேற்கொண்டனர்.
     எம் ஜி ஆரின் அறிவுரைப் பாடல்களில் இன்னுமொரு தேன்துளி 'நம்நாடு' திரைப்படத்தில், எம். எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், டி. எம். எஸ் பாடுவதற்காக, வாலி எழுதிய "நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளேஎன்ற அற்புதமான பாடலாகும்.அப்பாடலின் நடுவே நறுக்குத் தெறித்தாற்போல்வரும் ''கிளிபோல பேசு/ இளங் குயில்போல பாடு/ மலர்போல சிரித்து/ நீ குறள்போல வாழு/ மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாபம்/ மெய்யான அன்பே தெய்வீகமாகும்''எனும் சொற்கள் நல்வாழ்வுச் சிந்தனையின் அடிக்கற்களாகும் . 
    திரையில் எம். ஜி. ஆரின் சமதர்ம கொள்கைகளை அடையாளம் காட்டுவதிலும், ஏழை எளியோர் மீது, திரையில் எம். ஜி. ஆர் தன்னை ஐக்கியப்படுத்தியதை, பாடல் மூலம் வெளிப்படுத்துவதிலும், கண்ணதாசனை விட, வாலி பெரும் பங்கு வகித்தார் என்றுதான் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் புலப்படுத்தின. உதாரணத்திற்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த   'படகோட்டி' திரைப்படத்தில் வரும் டி. எம். எஸ் பாடிய இரண்டு  பாடல்கள் இதில் அடங்கும். "கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் அவன் ஊருக்காகக் கொடுத்தான்" என்ற பாடலில் வரும் "மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா? மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?" என்ற வரிகள் மூலம் எம் ஜி ஆரின் சமதர்மச் சிந்தனையை சரித்திர மாக்கினார் வாலி.
    மேலும் அப்படத்தின் ''தரைமேல் பிறக்கவிட்டான் எங்களை தண்ணீரில் மிதக்கவிட்டான்" பாடலில் ''வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு''என்ற ஒற்றை வரியில் எப்படி எம். ஜி. ஆர் ஏழை மீனவச் சமூதாயத்தில் தன்னை இயல்பாக இணைத்து க்கொண்டார் என்பதை, வாலி அழகுடன் அடித்துச் சொன்னார்.       
       உலகத்தையே தன்வசப் படுத்துவதில் எம். ஜி .ஆருக்கிருந்த ஆத்ம வேட்கை,  அபாரமானது.பாசம் திரைப்படத்தில் கண்ணதாசனின் கருத்துப் பிரசவத்தில் பிறந்த ''உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக''என்ற ஆர்ப்பரிக்கும் வரிகள் ஒரு வாமன அவதாரமாகும்.இந்த பாடலையும் டி.எம். எஸ் தனதுகம்பீரக் குரலால், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், தன்வசப் படுத்தினார், என்றுதான் உணருகிறோம்.
       தத்துவப் பாடல்களைப் பொறுத்தவரை, தமிழ்த் திரையுலகில் என்றுமே தரித்திரம் இருந்ததில்லை.வாழ்க்கைச் சித்தாந்தமும், வாழ்வின் சூனியமும் கவிதை வரிகளாய் வெண்திரையில் வேகமாய் பரவிய காலமொன்றுண்டு. கடந்த நூற்றாண்டின் இறுதிவரை அது தொடர்ந்ததென்றே சொல்லலாம்.எம். ஜி. ஆரை விட சிவாஜி கணேசனின் தத்துவப் பாடல்கள் தனித்துவம் பெற்றன."உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை"{பார்த்தால் பசி தீரும் }"சட்டி சுட்டதடா கை விட்டதடா" {ஆலய மணி } "அண்னன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா" {படித்தால் மட்டும் போதுமா} "அண்னன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே /ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே" {பழனி} போன்ற சில பாடல்களை கோடிட்டுக் காட்டி, எந்த அளவிற்கு குடும்ப உறவும் நட்பும் கடந்த காலக் கவிஞனின் சிந்தனையை, சிலந்தி வலைக்குள் சிக்க வைத்தது என்பதை நினைக்கையில், இன்றய தலைமுறை இதுபோன்ற உணர்வு வலைக்குள்ளிருந்து, வெகு வேகமாக வெளியேறுவதையும் காணமுடிகிறது. மேற்காணும் பாடல்கள் அனைத்துமே, கவியரசு கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து, செவாலியாருக்காக, டி. எம். எஸ் பாடிய பாடல்களாகும்.
     கண்ணதாசனைப் போன்றே, வைரமுத்துவும் ரஜினிக்காக இசைஞானி யின் இசையில், இரண்டு அழியாய் பாடல்களைத் தந்தார். சகோதரத்தின் சந்தர்ப்பவாதத்தை, சர்ச்சைக்கு இடமின்றி வெளிப்படுத்திய "ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என்கண்மணி '' {படிக்காதவன்} "அண்ணனென்ன தம்பியென்ன சொல்லடி எனக்கு பதிலை" {தர்ம துரை }ஆகிய இந்த இரண்டு பாடல்களும் கே. ஜெ. யேசுதாஸின் அதிர்வுக் குரலில், மனதை கக்கச் செய்தன.அதிலும் "தீப்பட்ட காயத்தில தேள்வந்து கொட்டுதடி கண்மணி " என்ற வரி முதலாவது பாடலில், வஞ்சிக்கப்பட்ட சகோதரனின் காயத் தழும்புகளை, நம்மிடையே விட்டுச் சென்றது  
      சூனியத்தின் சுற்றறிக்கையாக வந்த பாடல்களில் 'ஆலயமணி' திரைப்படத்தில் அட்டகாசமாக ஒலித்த "சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா" பாடலும் 'பாதகாணிக்கை' படத்தில் எழுந்த "வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ" என்ற மயான  கீதமும் "அவன்தான் மனிதன்" படத்தில் பரிகசித்த "மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கு  மென்று/ இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று" போன்றவை அடங்கும்  .
     இவை அனைத்துமே டி. எம். எஸ். உருகி அனுபவித்துப் பாடிய பாடல்க ளாகும். வாழ்வின் வெறுமையை, விரக்தியின் உச்சக்கட்டத்தில் தன்னை இருத்தி கவியரசு எழுதிய இந்த பாடல்களுக்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தியோ, அல்லது விஸ்வநாதன் தனித்தோ, சாகா வரம் கொடுத்தனர்.'வீடுவரை உறவு' பாடலின் இடையே தோன்றும் ''விட்டுவிடும் ஆவி, பட்டுவிடும் மேனி, சுட்டுவிடும் நெருப்பு, சூனியத்தின் நிலைப்பு ''என்ற வரிகள் வாழ்வின் நிலையற்ற தன்மையையும், முடிவின் வெறுமையையும், வெறுமையின் யதார்த்தத்தையும், உறுதி செய்தன.
     இதே கருத்தைத்தான் கவிப்பேரசு, 'முத்து' திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில், எஸ்.பி.பி யின் உன்னதக்  குரலில், 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலின் இடையே சுருக்கென தைக்கும்  சொற்களால்  ''மண்ணின் மீது மனிதனுக்காசை; மனிதன் மீது மண்ணுக்காசை; மண்தான்  கடைசியில் ஜெயிக்கிறது" என்று இன்றய புரிதலுக்கு ஏற்றாற்போல் எழுதிவைத்தார்.
     முடிவாக,கண்ணதாசனின் தனிச் சிறப்புகள் சிலவற்றைப் பற்றி இங்கே பதிவு செய்தாகவேண்டும்.  இறைவனைச் சாடி கவிதை புனைவதில் கண்ணதாசனை எவரும் வெல்ல இயலாது. எம். ஜி. யாருக்காக பாடல் எழுதினாலும், சிவாஜி கணேசனுக்காக கற்பனை வலையை வீசினாலும், அதில் கண்ணதாசனின் நங்கூரப் பிடிப்பை காணமுடிந்தது.எம். ஜி. ஆரின் 'பெரிய இடத்து பெண்' திரைப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் டி. எம். எஸ் பாடிய "அவனுக்கெ ன்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா" பாடலில் ''வானிலுள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்  நாட்டிலுள்ள  விஷத்தையெல்லாம்  நான்  குடிக்க  விட்டுவிட்டான்'' என்ற வரிகள் இறைவன் மீதுள்ள வெறுப்பை விஷமாகக் கக்கின.கவியரசின் மற்றொரு பாடலாக   சிவாஜி கணேசனின் 'நீதி'  படத்தில் வந்த  ''நாளை முதல்  குடிக்கமாட்டேன்  சத்தியமடி தங்கம்" பாடலில் உள்ளூறும் நஞ்சாகப் பொழியும், "கடவுள் என்வாழ்வில் கடன்காரன்/ கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்/ ஏழைகள் வாழ்வில் விளையாடும்/ இறைவா நீகூட குடிகாரன்''எனும் வசைபாடும் வரிகள் கண்ணதாசன் கடவுள்மீது விரக்தியின் விளைவாகக் கொண்ட கோபத்தை, கனைகளாக்கின.
     தீண்டாமையைப் பற்றி கண்ணதாசன் மிக எளிமையாக எழுதிவைத்த வரியையும் இங்கே நிச்சயமாகக் குறிப்பிடவேண்டும்.மல்லியம் ராஜ கோபாலின் மறக்கமுடியாத காவியமான 'சவாலே சமாளி' திரைப்படத்தில், எம். எஸ். விஸ்வநாதன் இசையில், டி. எம். எஸ் பாடிய "நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே" என்ற அப்பாடலில் ''தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நானும் இல்லையே நீயும் இல்லையே" என்று ஒரே வரியில் தீண்டாமை என்பது  தீண்டத்தகாத , தழுவத்தகாத, ஒரு சமூக நிலைப்பாடு என்பதை, சர்வ சாதாரணமாக, எத்தனை அற்புதமாக எழுதி, உண்மையை உணர்த்தி னார் கவியரசு.    
     கண்ணதாசனின் இன்னொரு சிறப்பு ஒரு கருத்தை மாறுபட்ட கோணங்க ளில் காண்பதாகும்.நடக்க முடியாத ஒரு நிகழ்வை இருகோணங்களில் கண்ணதாசனால் மட்டுமே காணமுடியும். உதாரணத்திற்கு  'பணத்தோட்டம்' திரைப்படத்தின் டி. எம். எஸ் குரலில் அமைந்த  ஒரு பாடலில், ''ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி முத்தம்மா, கட்டையிலும் வேகாதடி" என்று, மனம் காசின் பற்றுதலை விடாது என்று  எழுதிய கவியரசு, அதே ஒப்புமையை, நடக்க இயலும்படியான கருத்தாக, 'சுமைதாங்கி' திரைப்படத்தில் P.B ஸ்ரீனிவாஸ் பாடிய ,''னிதன் என்பவன் தெய்வ மாகலாம்" என்ற பாடலில் ''மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்/ வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலைகள் காணலாம்" என்று அறைகூவல் விடுத்தார்.இவை அனைத்தும் கற்பனையின் கருவறையில், காலம் கண்ட உயிர்த்துடிப்பே .ஒருவேளை இதனால்தான் "ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையாடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா"என்று துடிப்பையும் படைப்பாக்கினாரோ  கண்ணதாசன்.
     இங்கே ஆழ்ந்த உணர்வுகளோடும், ஏக்கம் கலந்த  நினைவுகளோடும், குறிப்பிட்ட எல்லா வரிகளுமே,  திரையுலகில், கடந்த கால  கவிதைப் பயணத்தின்  கதைகளே.பாடும் குரலை குழந்தையாக்கி, கவிதைத்தா யும் இசைத் தகப்பனும், கனிவுடன் பயணித்த, கலைப்பாதை கதைகளே. இங்கே சொன்னவை குறைவே.இதுவே அதிகமென்று சிலருக்குத் தோன்றக்கூடும். கலைக்கென்று,  நான்கு  எல்லைகள்  நிர்ணயிக்கப்பட வில்லை.அதற்கான  மூலைக் கற்களும் நிறுவப்பட வில்லை. தலைமுறை யின் வரவேற்பு மதிப்பீடுகளே , அதன் நான்கு எல்லையும், எடைக் கற்களுமாகும்.
     இன்றைய,காலில் சக்கரம் தாங்கிப் பறக்கும் தலைமுறைக்கு, கனமான சிந்தனைகளும்  கருத்தாழமிக்க கற்பனையும், மனம் ஏற்கா வேகத் தடைகளே.சைகளைத் தவிர மற்றவை அனைத்தும் சின்ன சின்னதாய் மாறிவிட்ட  சூழலில், முகநூலும், வாட்சப்பும், இன்று பலரும் இளைப்பாறும் நிழல் மேடைகளாகும்.இதன் பொருள், இசையை மக்கள் விரும்பவில்லை என்பதல்ல . மாறாக எல்லோரும் மனதை லேசாக்கும் இசையோடு, கானா, குத்துப்பாட்டு, மெல்லிசை, போன்ற பல இலக்கு களோடு, பயணிக்கிறார்கள். 
    அமரர் நா.முத்துக்குமார்,பா.விஜய்  தொடங்கி, கவிப்பேரரசின் வாரிசுகளான, கபிலன், மதன் கார்க்கி, போன்றோரோடு இணைந்து, தாமரை மட்டு மல்லாது, பல புதிய கவிஞர்கள், சொற்களின் மூலமாக சொர்க்கம் படைத்திருக்கின்றனர். ஆனால் இசையை மட்டுமே மைய்யமாக வைத்து இயங்கும் இன்றய திரைத் துறையில், வரிகளில் வாழும் கவியின் மகத்துவம், தொலைந்துபோகிறதோ என்ற ஐய்யமே,  இசையோடு சேர்ந்து கவிதையையும் நேசிக்கும் பலரையும், வாட்டும்  விரக்தி மனநிலையாகும்.                 .                                                                            

No comments:

Post a Comment