Friday, May 12, 2017

திரையிசைப் பாடல்களில் திரண்ட சிரிப்பும் அழுகையும்.


    சிரிப்பும் அழுகையும் மனித வாழ்வின் மகத்தான முத்திரைகள்.இவை இரண்டும் இல்லையெனில் ஆறாவது அறிவுக்கு ஆதாரம் இல்லை என்றே சொல்லலாம்.தமிழ்த் திரையில், சிரிப்பையும் கண்ணீர்த் துளிகளையும், சிந்தனைச் சுவடுகளாய் வரிகளில் பதியச்செய்த   பாடல்கள், பசிக்கு உணவாய், தாகத்திற்கு நீராய், திகழ்ந்தது மட்டுமல்லாது, நினைவுளில் நீங்கா இடம் பெற்றன.அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
     முதன் முதலில் சிரிப்பை சிந்தாமல் சிதறாமல் சேகரித்து சிறப்புப்பிரி வுகளாய்  வகைப்படுத்தி  'ராஜா ராணி'  திரைப்படத்தில் கலைவாணர் பாடிய "சிரிப்பு" என்ற பாடல் வரிகளை  நினைக்காவிடில் நாம் திரையில் சிரிப்பை அறிந்தவர் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை.அசட்டு சிரிப்பு ஆனந்த  சிரிப்பு, ஆணவச் சிரிப்பு,சதிகார சிரிப்பு, சங்கீத சிரிப்பு, என்று சிரிப்பின் கோணங்களை வரிசைப்படுத்தியும், சகஜமாக நடித்துக்காட்டியும்,  அக்காட்சியினை நிலைபெறச் செய்தவர் கலைவாணர்.டி ஆர் பாப்பா இசையமைத்த இப்பாடல் சிரிப்பை வரலாறாக்கிய பாடலாகும்
   இதே சிந்தனையின் அடிப்படையிஆல் தான்  'ரிக்ஷாகாரன்' திரைப்படத்தில் எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் எம். ஜி .ஆருக்காக  டி எம் எஸ் பாடிய "அங்கே சிரிப்ப வர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு ''என்ற பாடல், அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆணவச் சிரிப்பையும் குழந்தையின் கள்ளம் கபடமற்ற பரவசச் சிரிப்பையும் பாகுபடுத்திக் காட்டியது. மேலும் அப்பாடல் ''வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி" என்று சிரிப்பின் தன்மையின் மூலம்  மனிதனில் மிருகமும் கலந்திருப்பதை சுட்டிக்காட்டியது.
   இதேபோன்று எம் .ஜி. ஆர் தயாரித்து இயக்கிய "உலகம் சுற்றும் வாலிபன்" பிரம்மாண்ட திரைப்படத்தில், எம். எஸ். வி இசையில் டி. எம். எஸ் பாடிய "சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" எனும் கருத்துள்ள பாடல் சிரிப்பின் அவசியத்தையும், தவிர்க்கப் படவேண்டிய  ஏளனச் சிரிப்பின் எதிர்மறை பாதிப்பையும், இயல்பாகச் சித்தரித்தது
      சிரிப்பைப் பற்றி முன்னாள் சிரிப்பு நாயகன் ஜே. பி. சந்திரபாபு பாடிய, சிவாஜி கணேசனின் 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் வரும்  "சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது/சின்ன மனுஷன்  பெரிய  மனுஷன்  செயலப்  பாக்க  சிரிப்பு வருது"என்ற இதமான  பாடல்  வரிகள்  ஒரு  தரமான  நகைச்சுவை  நடிகரின் குரல் வளத்தோடு மனித வர்க்கத்தின் குறைகளை வகைப்படுத்திக் காட்டியது.
      இவரைப்போலவே நடன மாட க்கூடிய,ஆனால் சொந்தக் குரலால் பாட இயலாத, நகைச்சுவை மன்னன் நாகேஷுக்காக  சீர்காழி கோவிந்தராஜன் பாடிய  சிரிப்பைக் கொண்டாடும் இணையிலாப் பாடல் கே .எஸ் கோபால கிருஷ்ணனின்'சின்னஞ்சிறு உலகம்' திரைப்படத்தில் ''சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன் மூச்சும் பேச்சும் உள்ளவரை '' என்ற வரிகளில் அரங்கேறியது.இப்பாடலில் எல். ஆர். ஈஸ்வரியின் காந்தக் குரலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.'ஆண்டவன் கட்டளைக்கு'  விஸ்வநாதன் ராமமூர்த்தியும் 'சின்னஞ்சிறு உலகம்' திரைப்படத்திற்கு கே வி மகாதேவனும் இசையமைத்தனர்
    காதலியின் சிரிப்பினில் சிறைவசப்பட்டு மீளமுடியாத காதலன் தனை மறந்து பாடுவதோ "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்" என்ற அற்புதமான பாடல்.எம். ஜி.ஆரின் 'தாய் சொல்லை தட்டாதே' திரைப்படத்தில் கே. வி.மகாதேவன் இசையமைப்பில், டி. எம். எஸ் பாடிய இப்பாடல், அமுத கீதமாய் அடர்ந்தது. சோகம் அகன்று இன்பம் தழுவுகையில் பெண்மையின் மனமகிழ்ச்சியின் வெளிப்பாடே, எம் ஜி ஆரின் 'நல்லவன்  வாழ்வான்' திரைப்படத்தில் டி ஆர் பாப்பாவின்  இசையமைப்பில்  சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பி.சுசீலா  இணைந்து  பாடிய "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே" எனும் தேனொழுகும் மெல்லிசை.
      இதயம் நிறைந்து, கள்ளம் கபடமற்றுச் சிரித்து, தங்கள் சிரிப்பொலியில் ராகங்கள் கண்டு, சங்கீத சரசமாடும் காதலர்களின் களிப்பை கனியச்  செய்த  பாடலே, 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் சிவாஜியும் ஜெயலலிதாவும் அபிநயித்து கே. வி. மகாதேவன் இசையில், டி. எம். எஸ் மற்றும் பி.சுசீலா ஆகியோரின் ஆனந்த குரல்களில் ஆர்ப்பரித்த "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே" என்ற பிரமிப்பூட்டும் வரிகளாகும்.
     சிரிப்பு, ஒலியாக  மட்டும் நில்லாது, மனதின் உள்ளே எழும் மகிழ்ச்சியில் பிரகாசித்து தீப ஒளியாய் உலகத்தின் வெளிச்சமாய் உருமாறக்கூடியது என்பதைத்தான், 'நாயகன்' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த "நான் சிரித்தால் தீபாவளி ஹோய்"  என்ற பாடல், நம் செவிகளை இளைப்பாறச் செய்தது. நீண்ட இடைவெளிக்குப் பின், பழைய பின்னணிப் பாடகிகள் கே. ஜமுனாராணி மற்றும் எம் .எஸ்.ராஜேஸ்வரியின் குரல்களில்,தேனாய் இனித்தது இப்பாடல்.
      சிரிப்பைப் போன்றே அழகையும் மனித உணர்வுகளின் மகத்துவ பிரதிபலிப்பாகும். அழுவதற்கான மன ஏற்புடைமை இல்லாதவன் மனிதனே இல்லை எனலாம் .அதனால்தான் 'கவலை இல்லாத மனிதன்' திரைப்படத்தில் "பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும்போதும் அழுகின்றான்" என்று ஜே. பி சந்திரபாபு மிக இயல்பாக அழுகையின் தன்னிகரற்ற இயல்பு நிலையைப் பற்றி தனது நகைச்சுவை உணர்வை தள்ளிவைத்து மனமுருகி பாடி ஒரு அருமையான பாடலை தமிழ்த் திரையுலகிற்கு விட்டுச் சென்றார். விஸ்வநாதன் ராமமுர்த்தியின் பொக்கிஷப் பாடல்களில் ஒன்றாக அப்பாடல் அமைந்தது.
      அழுகை அபாரமானது ;அழுகை அடர்ந்து பரவக்கூடியது ;அழுகை பாபங்களைக் கழுவக்கூடியது.அழுகை மனதின் கசடுகளை ஒருசில நிமிடங்களுக்காவது அப்புறப்படுத்துகிறது.துன்பத்தின், துயரத்தின் நெகிழ்ச்சியில் மன்னிப்புக் கோரும் மனநிலையின், ஒரே உண்மையான  வெளிப்பாடு அழுகையாகும்.தவறு செய்த கணவன் மனைவிக்காக ஏங்கும் மனநிலையில் "ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் நானழுது ஓய்ந்தபின்னே நன்றி சொல்லவோ அழுதாய்" என்று 'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் நடிகர் திலகம் மனம் கலங்கி பாடும் காட்சியில், டி எம் எஸ் பின்னனிக் குரலில் அப்பாடலைக் கேட்டு மனம் வெதும்பாதவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. இரட்டையர் இசையில் இதுவும் ஒரு அற்புதமான பாடலே.
    சோகத்தின் உச்சியில் இருக்கும் ஒருவன் தன் வேதனை, தன்னைச் சுற்றி அசுர வேகத்தில் படருவதையும்,   தன் சோகம், தான் சார்ந்த அனைத்திலும் நீக்கமர நிறைந்திருப்பதையும் காணமுடியும் என்பதை, 'புதிய பறவை' திரைப்படத்தில் அதே இரட்டையர் இசையில், டி எம் சௌந்தராஜனின் கம்பீரக் குரலில்  "எங்கே நிம்மதி" என்ற பாடலில் இடையே வரும் :எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் மலரும் சுடுகின்றது" என்ற ஒப்பற்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளில், அழுத்தமாக அறியமுடிந்தது.
    சிரிப்பும் அழுகையும் வேறு வேறு மன நிலைகளை பிரதிபலித்தாலும் சிரிப்பிலும் அழுகையிலும் இரண்டறக் கலந்திருப்பது கண்ணீர் துளிகளே.மிதமிஞ்சி சிரிக்கையில் ஆனந்தப் பரவசத்தில் கண்ணீர் துளிகள் இறங்குவதை நம்மில் பலரும் அனுபவமாகக் காணுகிறோம்.சில நேரங்களில் நம் வாழ்வில் பதியும் அனுபவங்கள் நாம் சிரிக்கிறோமா அல்லது அழுகிறோமா என்ற குழப்ப தழுவலைத் தோற்றுவிப்பதுண்டு .இதைத்தான் பாவமன்னிப்பு திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாயசைக்க டி. எம் .எஸ் அனுபவித்துப் பாடிய "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் /சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்''என்ற அபூர்வப் பாடல் மனதைப் பக்குவப்படுத்தியது. கவியரசு வரிகளில் இரட்டையர் இசையில் என்ன ஆழமான அனுபவம் வேரூன்றிய பாடலது.
    சிரிப்பும் அழுகையும் ஒருமித்த உணர்வுகளாக, மனித  நெஞ்சங்களை  மடக்கிப்  போடுவதை  'பெண்  என்றால்  பெண்'  திரைப்படத்தில்  வரும் டி. எம். எஸ்ஸும் பி.சுசீலாவும் சேர்ந்து சிரிப்பாய் அழுகையாய் சிந்திய பாடல் முத்துக்கள் " சிரித்தாலும் கண்ணீர்வரும் அழுதாலும் கண்ணீர்வரும்" என்ற பாடலாகும். இதுபோலவே   எங்க வீட்டுப் பெண் திரைப்படத்தில் P.B ஸ்ரீனி வாஸ் நெஞ்சுருகிப் பாடிய ''சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி /நெருப்பும் பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி''என்ற அமரத்துவம் அடைந்த பாடல்.
   .ஜெமினி கணேசனும்  சரோஜாதேவியும் நடித்த 'பெண்  என்றால் பெண்' படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க, 'எங்கவீட்டுப் பெண் திரைப்படத்தில் கே வி மகாதேவனின் இன்னிசை பவனியில்,  ஒரு ஆன்மீக மடத்தின் சாமியாராகத் தோன்றி புனிதத்திற்கு புனிதம் சேர்த்த மரியாதைக்குரிய நடிகர் வி.நாகையா வாயசைப்பில் ஸ்ரீனிவாஸ் பாடிய, நினைவலைகளில் அதிர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாடலே, "சிரிப்பு பாதி அழுகை பாதி" பாடலாகும்.
     இதுபோன்ற எத்தனையோ  பாடல்கள்  சிரிப்பும் அழுகையும் சீர்ப்படச் சேர்த்து மாசிலா மனித உணர்வுகளின் சங்கமமாய், வெண்திரைக்காட்சி களோடு நின்றுவிடாமல்,  திரை அரங்குகளைக் கடந்து,எண்ணற்ற ரசிகர்களின் நெஞ்சங்களில், இசை அலைகளின் தாக்கத்தை இடைவிடாது ஏற்படுத்தி வருகின்றன என்று சொன்னால், அது மிகையாகாது . 

2 comments:

 1. Some more sirippu songs:
  Siripputhaan varuguthaiah by Sirkali
  Sirikkachonnaar sirithaen by Susila in Kavalai Illaatha Manithan
  Sirikkindra mugathai by SJanaki in Muradan Muthu

  ReplyDelete
  Replies
  1. Thank have you for your significant additions on laughter.I could have added the second and third pieces you have referred to, because they would have given another line of interpretation to the concept of laughter.

   Delete