Friday, March 20, 2020

தமிழ்த்திரை வரிகளில் மனிதன்

   மண்ணில் காணும் நன்மையையும் தீமையும் மனிதன் மாட்டே! மனிதன் இல்லையேல்,இன்பம் இல்லை; துன்பம் இல்லை;அறிவியல் இல்லை; இலக்கியம் இல்லை;மதம் இல்லை;மொழி இல்லை; சாதி இல்லை;சான்றுகள் இல்லை.நோய் இல்லை; மருத்துவம்  ல்லை. வறுமை இல்லை;சுரண்டல் இல்லை.பெருமை இல்லை;தாழ்மை இல்லை. இன்னும் எத்தனையோ, இல்லை, இல்லை!  
  மனிதனின் அருமை பெருமைகளையும் அழுக்குச் சுமைகளையும்,மனிதனே அறிவான்.அதனால் தானோ என்னவோ,கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எம் ஜி ஆர் நடித்து 1956- இல் வெளியான 'தாய்க்குப்பின் தாரம்' திரைப் படத்தில் கீழ்காணும் வரிகளில் கவிஞர் A.மருதகாசி மனிதனைப்பற்றி எழுதி வைத்தார்.

"மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா,தம்பி பயலே;
இது மாறுவதெப்போ தீருவதெப்போ,
நம்ம கவலை."

  பின்னர் அதே சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில்,எம் ஜி ஆர் நடித்து 1961 இல் வெளியான 'தாய் சொல்லை தட்டாதே' திரைப் படத்தில்,அதே டி.எம் சௌந்தராஜனின் கம்பீரக்குரலில், கண்ண தாசன் வடித்த,

"போயும் போயும் மனிதனுக்கிந்த,
புத்தியைக் கொடுத்தானே,இறைவன்
புத்தியைக் கொடுத்தானே!..
அதில் பொய்யும் புரட்டும்
திருட்டும் கலந்து,
பூமியைக் கெடுத்தானே, மனிதன்
பூமியைக் கெடுத்தானே!".


 எனும் பாடல் மூலம்,மனிதனோடு ஊறிப்போனது,அவனது மலிவான புத்தி மட்டுமே என்பதை,நம்மால் உணரமுடிந்தது. 
   இதே நிலைபாட்டுச் சிந்தனையுடன்தான் 1961-இல்,A. பீம்சிங் இயக்கத்தில் உருவான 'பாவ மன்னிப்பு' திரைப்படத்தில்,
கவியரசு கண்ணதாசன் மனிதனைப்பற்றி,தன் மனக்குமுறலை  சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்பின் முலம்,பின்வரும் வரிகளில் எடுத்துரைத்தார். 

"நிலை மாறினால்,
குணம் மாறுவான்;பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்;
தினம் ஜாதியும் பேதமும்
கூறுவான்;அது வேதன்
விதி என்றோதுவான்.
மனிதன் மாறிவிட்டான்;
மதத்தில் ஏறிவிட்டான்."

  மீண்டும் அதே ஆண்டில் முக்தா ஸ்ரீனிவாசனின் படைப்பில் உருவான 'பனித்திரை' எனும் திரைப்படத்தில்,ஜெமினி கணேச னுக்காக பி பி ஸ்ரீனிவாஸ் குரல் கொடுக்க,கவியரசின் ஒப்பற்ற வரிகளில்,மனித மனதின் நிலையற்ற தன்மையும் பலவீனமும், பாமரனுக்கும் புரியும் படியாக எழுதப்பட்டு,நம் செவிகளில் நாமே வெட்கப்படும் வண்ணம், நமட்டலாக ஒலித்தன! 

"ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்,  
அவன் எனோ மரம்போல் வளர்ந்துவிட்டான். 
எதிலும் அச்சம்,எதிலும் ஐயம், 
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான், 
தன இயற்கை அறிவை மடமை என்னும், 
பணித்திரையாலே மூடுகிறான். 
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள், 
பெருமை என்று பேசுகிறான். 
பெண் பேதைகள் என்றும்,பேடிகள் என்றும், 
மறுநாள் அவனே ஏசுகிறான்; 
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்,
நன்றியெனும் குணம் நிறைந்திருக்கும். 
நரியாய் அவனே உருவெடுத்தாலும், 
தந்திராமாவது தெரிந்திருக்கும். 
காக்காய் குலமாய் அவதரித்தாலும், 
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும். 
காற்றாய் நெருப்பாய்,நீராய் இருந்தால், 
கடுகளவாவது பயனிருக்கம். 
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும், 
அறிந்தே மனிதன் பிறந்துவிட்டான்; 
அந்த ஆறாம் அறிவை தேரா அறிவாய், 
அவனே வெளியில் விட்டுவிட்டான். 
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் 
அவன் எனோ மரம்போல் வளர்ந்துவிட்டான்" 

    அடுத்த ஆண்டு{1962}சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனின் நெஞ்சைவிட்டகலா நடிப்பில்,A.பீம்சிங் படைத்த'படித்தால் மட்டும் போதுமா'திரைப்படத்தில்,கண்ணதாசனின் கிண்டலான,

"ஓஹோ  ஹோஹோ மனிதர்களே,
ஓடுவதெங்கே சொல்லுங்கள் 
உண்மையை வாங்கி 
பொய்களை விற்று, 
உருப்பட வாருங்கள்." 

    எனும் வரிகள்,மனிதனுக்கு திருந்துவதற்கான ஒரு வாய்ப்பினை அளிப்பது போன்று,அறைகூவல் விடுத்தன.
    1962 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட 'அழகு நிலா' எனும் திரைப் படத்தில் கவிஞர் A.மருதகாசி புனைந்த கருத்தாழமிக்க பின்வரும் பாடலில், வேண்டாத கெடுவினைகள் அனைத்தும் கற்றுக்கொண்ட மனிதன் மனிதனாக  மட்டும் வாழ கற்றுக்கொள்ளவில்லை எனும் கசப்பான உண்மையை,கே.வி மகாதேவனின் தேனிசையில் சீர்காழி கோவிந்த ராஜனின் கனத்த,ஈட்டியெனப் பாயும் குரலில், நாம் கேட்க நேர்ந்தது. 

"மனிதன் எல்லாம் தெரிந்துகொண்டான் 
வாழும் வகை புரிந்துகொண்டான்; 
மனிதனாக வாழமட்டும் 
மனிதனுக்கே தெரியவில்லைஹோ! 
கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை, 
சொல்லில் கொடுக்க தெரிந்துகொண்டான்;  
குள்ளநரிபோல் தந்திரத்தால், 
குடியை கெடுக்க தெரிந்து கொண்டான்;
வெள்ளிப் பணத்தால் மற்றவரை, 
விலைக்கு வாங்க தெரிந்துகொண்டான்;  
மனிதனாக வாழ மட்டும், 
மனிதனுக்கே தெரியவில்லை ஹோ!" 

   கவியரசு கண்ணதாசன்,வெண்திரையில் தனது கற்பனை ஊற்றின் வலுவோடு,தன் கவிதை வரிகளை மயில் பீலிகளாகவும்,மனம் மிரளும் மத்தள ஓசையாகவும்,மரண பயத்தை தோற்றுவிக்கும் எமனின் சாட்டையாகவும்,படியாத மாடுகளாய் வாழும் மனிதரை,படியச்செய்யும் பிரம்பாகவும் கொண்டு,மனிதனை மனிதனாக மாற்ற,அரும்பாடு பட்டார் என்றே சொல்ல வேண்டும். 
   மனித இனத்தின் மீது தனக்குள் இருந்த ஆதங்கத்தையும் வேதனை யையும்,அவர் A.L நாராயனோடு தானும் எழுதி உருவாக் கிய'லட்சமி  கல்யாணம்'{1968} திரைப்படத்தில்,டி.எம்.எஸ் குரலில் தனது உரத்த வரிகளால் வெளிப்படுத்திய பின் வரும் பாடல்,நம் நினைவுகளில்  அழுத்தமாக பதிந்தது என்றே சொல்லலாம்.

"யாரடா மனிதன் இங்கே,
கூட்டிவா அவனை இங்கே;
இறைவன் படைப்பில்,
குரங்குதான் மீதி இங்கே!
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு;
பார்வையில் புலிகள் உண்டு;
பழக்கத்தில் பாம்பும் உண்டு;
நாயும் நரியும் புலியும் 
பாம்பும்வாழும் பூமியிலே,
மானம் பண்பு ஞானம் கொண்ட,
மனிதனை காணவில்லை.
சிரிப்பினில் மனிதன் இல்லை;
அழுகையில் மனிதன் இல்லை;
உள்ளத்தில் மனிதனில்லை;
உறக்கத்தில் மனிதனுண்டு. 
வாழும் மிருகம்,தூங்கும் தெய்வம்,
நடுவே மனிதனடா!
எங்கோ ஒருவன்,இருந்தால் அவனை,
உலகம் வணங்குதடா!"

   'வனவாசம்' 'அர்த்தமுள்ள இந்துமதம்' போன்ற இணையற்ற புத்தகங்களை எழுதிய கண்ணதாசன்,தன வாழ்நாளில்,தத்துவக்  கடலில் மூழ்கி முத்தெடுக்கும் வேளைகளில்,மனிதம் மாண்புற வேண்டும் எனும் வேட்கை கொண்டிருந்தார்.நற்குணங்கள் மட்டுமே நிறைந்த மனிதன்,தெய்வத்திற்கு இணையாவான் எனும் அவரது ஆழ்ந்த புரிதலே,கீழ்க்காணும் பாடல் வரிகளில்,ஸ்ரீதரின் 'சுமைதாங்கி' திரைப்படத்தில்,பி பி ஸ்ரீனிவாசன் மெல்லிய குரல் அதிர்வுகளாய் அரங்கேறியது. 

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 
வாரி வாரி வழங்கும்போது வள்ளாகளாம் 
வாழைபோல தன்னை தந்து தியாகியாகலாம்" 

    மனிதரில் மனிதராய்,'உள்ளத்தின் உள்ளூரும்' கவிதையுடன் வலம்வந்த கவியரசு,மனிதக் குறைகளை முழுமையாய் சுவாசித்து, மனிதன் மேன்மையுற,ஏக்கங்களில் மனம் பதித்து,மனிதனை தெய் வமாய் ஒருங்கிணைத்து,மனம் காட்டும் வழிதனிலே,மனிதனின் நினைவிற்கு மரணத்தின் உண்மை எட்டுவதில்லையே,எனும் வேத னையை,எவ்வளவு இயல்பாக 'அவன்தான் மனிதன்'{1975} திரைப் படத்தில் வெளிப்படுத்தினார்.
  எடுத்துக்காட்டான ஒருமனிதனை,பெருந்திரையில் போற்றிய த் தமிழ்த் திரைப்படத்தில்,உன்னதமான கோட்பாடுகளின் உருவமாக, மனிதனை நடிப்பில் வெளிப்படுத்த, சிவாஜி கணேசனைத் தவிர  வேறு எவரால் முடிந்திருக்கும்? கதையாலும் நடிப்பாலும், A.Cதிருலோக்சந்தரின் உணர்வுபூர்வமான இயக்கத்தாலும், கவியரசின் வரிகளாலும், மெல்லிசை மன்னரின் இசையாலும்,' அவன்தான் மனிதன்',என்றும்  ம் உறங்கும் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய திரைப்படமாக அமைந்தது.இதோ,கவியரசின் எழுத்தில்,எம்.எஸ். வி இசையில், டி.எம்.எஸ் சிவாஜி கணேசனுக் காகப் பாடிய வரிகள். 

"மனிதன் நினைப்பதுண்டு 
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு 
பாவம் மனிதனென்று"

    தான் நடிக்கும் திரைப்படங்களில் புகைபிடித்தல் மற்றும் மது அருந் துதல் போன்ற காட்சிகளுக்கு அரிதாக இடமளித்த  எம் ஜி ஆர், தனது 'ஒளிவிளக்கு' திரைப்படத்தில்,தீய பழக்கங்களுக்கு தன் மனதில் ஒரு போதும் இடமில்லை எனும் உறுதியான மனநிலையினை,தனக் கென டி.எம். எஸ் பாடிய "தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? இல்லை.நீ மிருகம்.நீ மதுவில் விழும் நேரம்" எனும் வாலியின் வலுவான பாடல் மூலம் வெளிப்படுத்தினார். 
   மனிதனைப்பற்றி,மனிதனின் கவிதைக்கரங்களால் எழுதப்படும் விமர்சனங்கள் அனைத்தும்,மனித இனத்தின் சுய விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.'மனிதன்' எனும் சொல்லை பல் வேறு  கோணங்களில் திரைப்படங்களில் புகுத்தி,மனிதனின் நிறை குறை களை தலைப்புகளாகவும் கவிதை வரிகளாகவும் மனித இனத்தின் பார்வைக்கு தமிழ்த் திரைப்படங்கள் கொண்டுவந்துள்ள.ரஜினிகாந்த் நடித்து A.V.M தயாரிப்பில் வெள்ளித்திரையை அலங்கரித்த 'மனிதன்' திரைப்படப்பாடல்,எவன் மனிதன்,எவன் மனிதனில்லை,என்று வரை யறுத்துச் சொன்னது.கவிப்பேரசு வைரமுத்து கவிதை வரிகளை வேட்டையாட,சந்திரபோஸின் இசை ஓட்டத்தில்,மலேஷியா வாசு தேவன் தனது வீரியக் குரலில் வெடித்த சொற்கள் இதோ!  

மனிதன் மனிதன்,
எவன்தான் மனிதன்?
வாழும்போது செத்துசெத்து 
பிழைப்பவன்மனிதனா? 
வாழ்ந்தபின்னும்பேரை நாட்டி 
நிலைப்பவன் மனிதனா? 
பிறருக்காககண்ணீரும், 
பிறருக்காக செந்நீரும், 
சிந்தும் மனிதன்எவனோ, 
அவனே மனிதன்.
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க 
நினைப்பவன்மனிதனா? 
அந்தநேரம் ஓடிவந்து, 
அணைப்பவன் மனிதனா? 
கொடுமைகண்டும்கண்ணைமூடி, 
கிடப்பவன்மனிதனா? 
கோபம்கொண்டு நியாயம்கேட்டு, 
கொதிப்பவன்மனிதனா?
ஏழைப்பெண்ணின்சேலைத்தொட்டு, 
இழுப்பவன்மனிதனா? 
இரவில்மட்டும்தாலிகட்ட 
நினைப்பவன்மனிதனா?
காதல் என்றபேரைச்சொல்லி
நடிப்பவன் மனிதனா?
நட்பைமட்டும் கரண்சிநோட்டில், 
கறப்பவன்மனிதனா?
தன்மானம்காக்கவும், 
பெண்மானம்காக்கவும் 
துடிப்பவன் எவனோ,அவனே மனிதன்!

."கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" என்று  ஒரு கதாபாத்திரத்தில் கமல் தன்னை புகுத்திக் கொண்டது போல,                                                                  அல்லது,    
 "பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா"என்று  டி.எம்.எஸ் குரலோசையில், கவியரசின் வரிகளை,ஆலயமணி திரைப் படத்தில் நடிகர் திலகம் தன உயரிய நடிப்பால் பிரகடனப்படுத் தியது போல,மனிதன் முழுமையாக மனிதனாக இல்லை.அவன் மனிதனாக இருக்கையில்,இறைவனில் கரங்களால் ஆசிர்வதிக் கப்படுகிறான். மாறாக,மிருகமாக இருக்கும் மன நிலையில்,வினையின் விளைவுகளால் தண்டிக்கப்படுகிறான். எனவே,திரைப் பட பாடல்கள் மூலம் கவிஞர்கள் நிலை நிறுத்த விரும்புவது,சொல் புத்தி செயல் புத்தியுடன்,மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதேயாகும். 
ப.சந்திரசேகரன் 

5 comments:

  1. Under one roof...the entire out line of a human being arrayed Sr. It is really a great job to exhibit ...Thank U Sr.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete