Wednesday, November 11, 2020

தமிழ்த்திரையின் புராணப் புதல்வன்

   
















    தமிழ்த்திரை உலகம் பலமான படைப்புத்திறன் கொண்ட பல்வேறு இயக்குனர் களை சந்தித்திருக்கிறது.சமூகம்,காதல்,இல்லறம்,குடும்பம்,குற்றப்பிரிவு,வரலாறு, போன்ற வெவ்வேறு வாழ்வியல் நடைமுறைகள் குறித்த திரைப் படைப்பாளிகளின் கற்பனை மற்றும் படைப்பாற்றல் கண்டு,ஒரே மாதிரியான வியப்பையும்,பாராட்டு தலையும் திரைப்படம் காண்போரும் திரைப்பட ரசிகர்களும் முழுமையாக வெளிப் படுத்தியுள்ளனர்.

   மாறுபட்ட படைப்பாளிகளுக்கிடையே,தமிழ் கலாச்சாரத்தையும்,மரபுகளையும், புராணங்களையும்,ஆழ்ந்து ஆர்ப்பரிப்போடு  நேசித்து,பல்வேறு திரைப்படங்களை, எழுத்தாளராக,இயக்குனராக,தயாரிப்பாளராக, நடிகராக,நான்கு திசைகளில் நின்று தொழுது,'திரை'கடலோடிய தெவிட்டா தமிழின்,பன்முக பிரம்மாண்டமாக,நம் நினைவுகளில் என்றென்றும் கொடிகட்டிப் பறப்பவர்,ஏ.பி.நாகராஜன் ஆவார். 

   இருபத்தைந்து திரைப்படங்களை இயக்கி,அவற்றில் சில திரைப்படங்களை தானே'விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்'எனும் பெயர்கொண்ட நிறுவனத்தால் தயாரித்து, இருப்பது ஏழு திரைப் படங்களுக்கு கதை எழுதி,எட்டு திரைப்படங்களில் நடித்த ஏ.பி நாகராஜனின் கலைத்துறை அர்ப்பணிப்பு,காலப்பெட்டகத்தின் கவின்மிகு 'கண்காட்சி'யாகும்.அவர் திரைக்கதை மட்டுமே எழுதிய'நல்ல இடத்து சம்பந்தம்' 'மக்களைப் பெற்ற மகராசி''நீலாவுக்கு நெறஞ்ச மனசு''அல்லி பெற்ற பிள்ளை' 'நான் பெற்ற செல்வம்''பாவை விளக்கு''தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' போன்றவை கடந்த நூற்றாண்டின் பெருமைமிகு பொக்கிஷங்களாக விளங்கிய தமிழ் மண்ணின் பண்பாடு,மற்றும் கலாச்சார கோபுரங்களாகும். 

    ஸ்ரீ லஷ்மி பிக்செர்ஸ் 'வடிவுக்கு வளைகாப்பு'விஜயலக்ஷ்மி பிக்செர்ஸ்'நவராத் திரி'ஸ்பைடர் பிக்சர்ஸ்'குலமகள் ராதை'கஜலட்சுமி பிலிம்ஸ்,குருதட்சணை' ஜெமினியின்'விளையாட்டுப்பிள்ளை'போன்ற காதல் களிப்பு சம்பந் தப்பட்ட  நளின மான கதை வடிவங்கள் கொண்ட திரைப் படங்கள் மட்டுமல்லாது, காலம் வென்ற ஒரு இதிகாச காவியமான'தில்லானா மோகனாம்பாள்'எனும் ஒப்பற்ற திரைப்படத் தையும் இயக்கியவர் ஏ.பி நாகராஜன். இவரது படைப்பில் மிகவும் வித்தியாசமான 'கண்காட்சி',வா ராஜா வா','மேல்நாட்டு மருமகள்'போன்ற திரைப்படங்களையும், ஆன்மீகப் பயணத்தை சித்தரிக்கும் 'திருமலை தென்குமரி' எனும் படத்தையும் நம்மில் பலரும் கண்டு,மகிழ்ச்சியில் மிதந்திருப்பர். 

      ஆனால் இவை எல்லாவற்றையும் விட,புராணக் கதைகளில் ஏ.பி.நாகராஜன்  காட்டிய ஏகாந்தமான ஈடுபாடு,ஒரு தனி ரகமாகும்.அவர் முதன் முதலில் தன் பொற் கரத்தால் கதை வடிவமைத்துக்கொடுத்த,மிகவும் தெய்வீகமான திரைப்படம் 1958- இல் எம்.ஏ. வேணுவின் தயாரிப்பில்,கே.சோமுவின் இயக்கத்தில் உருவான, 'சம்பூரண ராமாயணம்'எனும் அமரகாவியமாகும்.  

    பின்னர் கடந்த நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில்,அவரது அபூர்வ இயக்கத்தில் உருவான 'திருவிளையாடல்''சரஸ்வதி சபதம்''கந்தன் கருணை''திருவருட்செல்வர்' 'திருமால் பெருமை''அகத்தியர்''திருமலை தெய்வம்''காரைக்கால் அம்மையார்' ஆகிய அனைத்துமே பக்தி மார்க்கத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்து, மெய்மறக்க வைத்த.

   இத்திரைப்படங்களின் அமோக வரவேற்புக்குக் காரணமாக அமைந்தவை,ஏ.பி நாகராஜனின் ஈடு இணையற்ற கலையுணர்வும்,அகம்நிறைந்த ஆன்மீக வளமு மாகும்.தூய தமிழில் அமைந்த வசனங்களும்,இறைமையை முழுமையாக ஆட் கொண்ட அபரிமிதமான ஆத்ம பலமும்,இவற்றோடு இடையிடையே சேர்க்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களும்,எல்லாவற்றையும் ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கும் ஒலி ஒளி அமைப்புகளும்,நெஞ்சை கொள்ளையடிக்கும் பாடல்களும் ஒருங்கிணைந்து,திரையரங்கங்களில் படம்பார்ப்போரை ஒரு மாறுபட்ட உலகத் திற்கு  கொண்டு சென்றன.  

   பெரும்பாலான இப்புராணத் திரைப்படங்களுக்கு ஜீவநாடியாகி,பூரண கும்பமாக விளங்கியது,நடிகர் திலகத்தின் நிகரில்லா நடிப்பாகும்.சிவனாக,நாரதனாக, கலைவாணியின் திருவருள் பெற்ற வித்யாபதியாக,வீரபாகுவாக,அப்பராக, அனைத்து புராண மற்றும் இதிகாச நாயகர்களை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி புராண மகிமையினை உணர்ச் செய்தார் கலைத்தாயின் தவப்புதல்வன் செவாலியர் சிவாஜி கணேசன்.

   அப்பர்,சேக்கிழார்,திருத்தொண்ட நாயனார்,சுந்தரர்,போன்ற அனைத்து வேடங்களில்'திருவருட்ச்செல்வர்'எனும் ஒரே படத்தின் மூலம்,புராண கம்பீரத்தின் உச்சத்தை உணரச் செய்தார் நடிகர் திலகம். இதேபோன்று 'திருமால் பெருமை' எனும் ஒற்றை திரைப்படத்தின் மூலம்,பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,மற்றும் தொண்டரடிப்பொடியாழ்வார்,ஆகிய பனிரெண்டு வைணவத் தூண்களில் மூவரை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்,சிவாஜி கணேசனும்,அவரை  இயக்கிய ஏ.பி.நாகராஜனும்.

   ஏ.பி.நாகராஜனின் தனிச் சிறப்பே புராண காதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் யார் என்பதை உணர்ந்து,அவரவர் திறமைக் கேற்ப குந்த கதாபாத்திரங் களை அவர்களுக்கு அளித்ததேயாகும். நடிப்பின் இமயமான சிவாஜி எல்லா கதா பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர் என்றாலும்,அகத்தியர் வேடத்திற்கு சீர்காழி கோவிந்தராஜனை தேர்ந்தெடுத்ததும்,முருகன்/திருமால் வேடத்திற்கு சிவகுமார் பொருத்தமானவர் என்று உணரவைத்ததும்,அவ்வையார் வேடத்திற்கு கே.பி.சுந்தராம்பாளைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்பதை இரு படங்கள் மூலம் உறுதி செய்ததும்,ஏ.பி.நாகராஜனின் தனிச் சிறப்பே.   

   இதேபோல'காரைக்கால் அம்மையார்'திரைப்படம் இயக்கத் தொடங்குகையில் அவ்வேடத்திற்கு கே.பி.சுந்தராம்பாளைத் தவிர வேறு ஒருவரை அவர் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்.பொதுவாகவே அந்த காலகட்டத்தில் வாழ்ந்த நடிகர்கள் அனைவருமே,தூய தமிழ் பேசி, உணர்ச்சி ததும்ப நடிக்கும் திறன் கொண்டோராகத் தான் இருந்தனர். இப்படித்தான் தட்சன் வேடத்திற்கு ஓ.ஏ.கே.தேவரும்,பாணபத்திரர் வேடத்திற்கு டி ஆர் மகாலிங்கமும்,ஹேமநாத பாகவதர் கதாபாத்திரத்திற்கு டி.எஸ். பாலையாவும்,பொருந்தினர்.ஏ.பி.நாகராஜன் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது ஒரு அற்புதமான நடிகர் என்பதை 'திருவிளை யாடல்'திரைப்படத்தில் நக்கீரனாகி, நெற்றிக்கண் கொண்டு சுட்டெரித்த ஈஸ்வரனின் வெப்பத்திற்கு எதிராக,தனது கொழுந்து விட்டெரியும் வசனங்களினால் வெகுண்டெழுந்து,பின்னர் சிவனடி பணிந்தார். 

     நடிப்பைப்பொறுத்தவரை'திருவிளையாடல்'திரைப்படத்தில் நக்கீரன் வேடத்தில் தோன்றி,சிவாஜி கணேசனின் தமிழ் வசன உச்சரிப்பின் தெளிவு,அழுத்தம், சொற்களும் உணர்வும் சங்கமிக்கும்,புள்ளிகளை தொடும் அசாதாரண குரலமைப்பு, ஆகிய அனைத்தையும் நடிகர் திலகத்தின் பாணியிலேயே அவருடன் பக்குவமாய் போராடி, வெளிப்படுத்திய  காட்சி, நாகராஜனின் நடிப்புத்திறனுக்கு,ஒரு அற்புத சான்றிதழாய் விளங்கியது. அனல் கக்கும் வசனங்களை,தீப்பிழம்புகளாய் இந்த இருவரும் வெளிப்படுத்த,இறுதியில் சொற்களின் சூட்டோடு,நெற்றிக்கண் எரிக்கும் சூடும் கலந்திட,வெப்பம் தாளாது பொற்றாமரைக் குளத்தில் விழுந்தெழும் நக்கீர னாக நாகராஜன் அன்றும்,இன்றும்,என்றும்  நம் அனைவரின் மனம் நிறைந்தவரா வார். 

    ஏ.பி.நாகராஜனின் பாரம்பர்ய மற்றும் புராண திரைப்படங்களுக்கு பக்க பலமாக அமைந்தவற்றில் திரையிசையும் மிக முக்கிய பங்கு வகித்து,அத்திரைப்படங் களின் வெற்றி இலக்கினை நிர்ணயம் செய்தது. இந்த வகையில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனும்,குன்னக்குடி வைத்தியநாதனும் ஏ.பி.நாகராஜனின் திரைப்படங்களுக்கு,கர்நாடக இசையூட்டம் அளித்தனர். 

     டி.எம்.சௌந்தராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்,டி.ஆர்.மகாலிங்கம் கே.பி.சுந்த ராம்பாள்,டாக்ர் பாலமுரளி கிருஷ்ணா,P.B ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா,எஸ்.ஜானகி, எஸ்.வரலட்சுமி போன்ற குரல்வளம் நிரம்பப்பெற்ற இசை மேதைகள்,தங்கள் தெவிட்டா பாடல்கள் மூலம் ஏ.பி.நாகராஜன் திரைப்படங்களுக்கு சிறப்பு  வரவேற்பை  ஏற்படுத்தினர்.

   மொத்தத்தில் திவ்யமான திரைக்கதைகளால்,வசனத்தால்,நடிகர்களின் பங்களிப் பால், இசை ஆழத்தின் மேன்மையால்,ஏ.பி.நாகராஜனின் பெருமைமிகு திரைப் படங்கள்,அவரை தமிழ் மரபு மற்றும் புராண வடிவங்களின் உன்னதமான முகப் பாக்கி,தமிழ்த்திரை இயக்கத்தின் புராணப் புதல்வனாக்கின என்பதே,தமிழ்த்  திரைப்பட வரலாறு போற்றும் உண்மையாகும்.

ப.சந்திரசேகரன் . 

                    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  


No comments:

Post a Comment