Saturday, February 6, 2021

கடவுள் கண்டெடுத்த தொழிலாளி

 "கடவுளெனும் முதலாளி 

கண்டெடுத்த தொழிலாளி 

விவசாயி ,விவசாயி" 

    எனும்  எம் ஜி ஆரின்'விவசாயி'திரைப்படப் பாடலைக் கேட்கையில் வேளாண் பெருமை திக்கெட்டும் பரவுவிதுபோல் தோன்றும்.

   ஆனால் கடந்த பல மாதங்களாக கொடிய கொரோனா எனும் நோயையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது,இந்தியத் தலைநகரில் எண்ணற்ற வகையில் திரளாகக் கூடியிருக்கும் விவசாயிகளை எண்ணி மனம் கங்காதோர் ஒரு சிலர் மட்டுமே இருக்கக்கூடும்.வேளாண் திருத்தச் சட்டங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாதுதான் என்றாலும், நெஞ்சுரத் துடன் இப்படி ஒரு கூட்டம் கூடியிருக்கிறது என்றால் வலுவான காரணங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். 

  எம்.ஜி.ஆரின் 'விவசாயி' திரைப்படம் மட்டுமல்லாது சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றிபெற்ற'மக்களை பெற்ற மகராசி' 'பழனி' 'பாகப்பிரிவினை''பட்டிக்காடா பட்டணமா'போன்ற திரைப் படங்களும் ஜெமினி கணேசனின் திரைப்படங்களான 'வாழ வைத்த தெய்வம்'மற்றும் 'பொன்னு விளையும் பூமி'எனும் திரைப்படங்களும் உழவுத் தொழிலின் உன்னதத்தை பறைசாற்றின.

   குறிப்பாக \மக்களை பெற்ற மகராசி' திரைப்படத்தில் இடம் பெற்ற

"பொன்னு வெளையிற பூமியடா

விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமடா….

உண்மையா உழைக்கிற நமக்கு

எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா

மணப்பாறை மாடு கட்டி

மாயாவரம் ஏரு பூட்டி

வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு

பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா

பாத்து வாங்கி விதை விதைச்சி

நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு

தண்ணிய ஏத்தம் புடிச்சு

எறைச்சி போடு செல்லக்கண்ணு

கருதை நல்லா வெளைய வச்சி

மருத ஜில்லா ஆளை வச்சி….

அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு

நல்லா அடிச்சி தூத்தி

அளந்து போடு செல்லக்கண்ணு

பொதிய ஏத்தி வண்டியிலே

பொள்ளாச்சி சந்தையிலே

விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு

நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு"

   எனும் இணையிலாப் பாடல்மூலம்,விவசாயிக்கு அன்றிருந்த வளமையையும்,வல்லமையையும்,விற்பனைச் சுதந்திரத்தையும் மிகைப்படுத்தாது வெளிப்படுத்தியது.

  அன்றைக்கு பூமியும் மாசுபடவில்லை;மனித நெஞ்சங்களும் மாசுபடவில்லை.அரசியல் அர்ப்பணிப்பும் தொண்டாற்றும் சிந்தனையும் நிறைந்திருந்த தால் மண்ணெல்லாம் பொன்னானது.

   இதேபோன்றொரு வேளாண் பெருமிதத்தை எஸ்.எஸ் ராஜேந்திரன் நடித்து,தேவர் தயாரிப்பில் வெளியான 'பிள்ளைக் கனியமுது,திரைப்படத்தில் கேட்ட 

"ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமேயில்லே 

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே" 

எனும் நெஞ்சை நிமிர்த்தும் பாடல் உணர்த்தியது.

 மேற்கண்ட மூன்று பாடல் களுமே, A.மருதகாசி எழுத கே.வி. மகாதேவன் இசையமைத்து,டி.எம்.சௌந்தராஜன் தனது உரத்த குரலில் பாடியிருந்தார்  என்பது அப்பாடல்களின்  தனிச்சிறப் பாகும். 

  இத்திரைப்படங்கள் வெளியான கடந்த  நூற்றாண்டின் ஐம்பது களில், பிரச்சனைகளே இல்லை என்று சொல்வதிற்கில்லை. ஆனால் நாடு சுதந்திரம் பெற்றவுடன் நிறைந்திருந்த மனித நேயமும் ஒற்றுமை உணர்வும்,இந்திய கலாச்சாரத்தை வலுவாகத் தாங்கிப்பிடித்தன.அப்போதும் ஒருசிலரின் சுயநலம் காரணமாக நிலச்சுவாந்தார்களின் கொடுமைகளும்,பண்ணை அடிமை நடைமுறைகளும்'எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்' என்ற பொதுவுடமைச் சிந்தனைக்கு எதிர்மறையாக இருந்தன.

  இருப்பினும்,வேளாண்துறை வீறுநடை போட்டது.ஏர்பிடித்தவன் கை ஏற்றம் கண்டது.தற்போது தொழில்முன்னேற்றமும்,தனியார் துறை நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியும்,இடைக் காலத்தில் இந்தியச் சமூதாயம் விதைத்த சமத்துவச் சிந்தனை களை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் ஒரு பண்ணை அடிமை கால கட்டம்,விஷ விதைகளாக விதைக்கப்பட்டு வேகமாக வளரும் அபாயம் புலப்படுகிறது.வேளாண் துறை உட்பட அனைத்து துறைகளையும் வேட்டையாடி,கார்பொரேட் நிறுவனங்களின் மன்னர் ஆட்சி உருவாகும் அச்சத்தை தோற்றுவிக்கிறது.

     விதைப்பது நன்றாயின் விளைவது நன்றாகும் என்பதை, இக்கட்டுரை யின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட 'விவசாயி' திரைப்படத்தில், உடுமலை நாராயண கவி எழுதிய ஒரு   பாடலையும் சுட்டிக்காட்டி  நிறைவு செய்வதே,முறையாகும்.  

"நல்ல நல்ல நிலம் பார்த்து

நாமும் விதை விதைக்கனும்

நாட்டு மக்கள் மனங்களிலே

நாணயத்தை வளர்க்கனும்

பள்ளி என்ற நிலங்களிலே

கல்விதனை விதைக்கனும்

பிள்ளைகளை சீர்திருத்தி

பெரியவர்கள் ஆக்கனும்

கன்னியர்க்கும் காளையர்க்கும்

கட்டுப்பாட்டை விதைத்து

கற்பு நிலை தவறாது

காதல் பயிர் வளர்த்து

அன்னை தந்தை ஆனவர்க்கு

தம் பொறுப்பை விதைத்து

பின் வரும் சந்ததியை

பேணும் முறை வளர்த்து

இருப்பவர்கள் இதயத்திலே

இரக்கமதை விதைக்கனும்

இல்லாதார் வாழ்க்கையிலே

இன்பப் பயிர் வளர்க்கனும்

பார் முழுதும் மனிதக்குல

பண்புதனை விதைத்து

பாமரர்கள் நெஞ்சத்திலே

பகுத்தறிவை வளர்த்து

போர் முறையை கொண்டவர்க்கு

நேர்முறையை விதைத்து

சீர் வளர தினமும்

வேகமதை வளர்த்து

பெற்ற திருநாட்டினிலே

பற்றுதனை விதைக்கனும்

பற்றுதனை விதைத்துவிட்டு

நல்ல ஒற்றுமையை வளர்க்கனும்".

   டி.எம்.சௌந்தராஜனின் அழுத்தமான தமிழ் உச்சரிப்பிலும்,குரல் எழுச்சியிலும்,இப்பாடல் அமரத்துவம் பெற்றது.எம்.ஜி.ஆர் தனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு திரைப்படத்திலும் உழைக்கும் வர்க்கத்திற்காக வெள்ளித்திரையில் குரல்கொடுக்கவும்,போராடவும் தயங்கியதே இல்லை. எம் ஜி ஆர் பெயர் சொல்லி அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளும், அவரது சமத்துவச் சிந்தனைகளுக்கு முரண்பட்டு செயல் படாமல் இருப்பதே,அவர்கள்  வேளாண்துறையின் வெறுமையை போக்கு தெற்கென எடுத்துவைக்கும் ஒரு முதல் படியாக அமையும்.முடிவாக,  

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கும் நிலை.

  எனும் வள்ளுவரின் கூற்றினை நன்குணர்ந்து திருக்குறளை வெறும் வாக்கிற்கு மட்டும் பயன்படுத்தாது,நீதிவழுவா நெறிமுறையினைக் கடை பிடித்து,அவரவர்க்கு உரிய நீதியினை வழங்குவதே,ஒரு நல்லரசின் கடமை யாகும்.

ப.சந்திரசேகரன்.

                        =========================================  






No comments:

Post a Comment