Sunday, January 22, 2023

உன்னையும் என்னையும் உருகவைத்த, தமிழத்திரை.

"உன்னைக் கண் தேடுதே உறங்காமலே!

உன் எழில் காணவே,உளம் நாடுதே"

 எனும்'கணவனே கண்கண்ட தெய்வம்' திரைப் படப்பாடல் தொடங்கி,உன்னையும் என்னையும் உருகவைத்தது,தமிழ்த்திரையின் உள் சுவாசமே!.

''உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல'' ('இதயக்கமலம்')

என்றும்,

''உன்னைநான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன்''.

('ஆயிரத்தில் ஒருவன்')

என்றும்,

''உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்லவேண்டும்

என்னைப்பாடச் சொன்னால்

என்ன பாடத்தோன்றும்''

( 'புதிய பறவை') என்றும் அதற்கு பதிலடி போல,

''நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

நீ வரவேண்டும்''(நூற்றுக்கு நூறு)

என்றும்,

''உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்''.

('அவளுக்கென்று ஓர் மனம்')

  என்றும்,எத்தனை பாடல்கள் பாவையரின் மனம் நிறைந்த பரிசுத்தக் காதலை, பளிங்குச் சொற்களுடன் பதிவு செய்தன. இந்த பாடல்களில் ஒன்றைத்தவிர,இதர எல்லாவற்றையுமே தமிழ்த் திரயுலகின் இசைத் தாரகை P.சுசிலா தனது ஒப்பற்றக் குரலினால்,எவ்வளவு நேர்த்தி யாக உயர்த்திப் பிடித்தார்."உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்"பாடல் எஸ்.ஜானகி யின் தனித்தன்மை வாய்ந்த குரலால் தர நிலை உயர்த்தியது.

  மேற்கண்ட பாடல்களில் முதல் பாடலை,கு.மா.பாலசுப்ரமணியம் எழுத, ஹேமந்த் குமார் இசை படைத்தார்.'ஆயிரத்தில் ஒருவன்'மற்றும் 'நூற்றுக்கு நூறு' பாடல்களை வாலி வரைய,மற்ற பாடல்கள் கவியரசு கண்ணதாசனின் கற்பனையை களமிறக்கின.'இதயக்கமலம்'பாடலுக்கு கே.வி.மகாதேவனும்,'நூற்றுக்கு நூறு' பாடலுக்கு V.குமாரும், 'அவளுக் கென்று ஓர் மனம்'பாடலை மெல்லிசை மன்னர் தனித் தும் மற்ற பாடல் களை ராமமூர்த்தியுடன் இணைந்தும் இசையமைத்திருந்தனர்.

  இந்த காதல் வயப்பட்ட பாடல்களைக் கடந்து,

"உன்னை விட மாட்டேன். உண்மையில் நானே

கபடம் எல்லாம் கணடுகொண்டேனே" 

.  எனும் பி.பானுமதி பாடிய,காதலனை எச்சரிக்கும் தன்மைகொண்ட பாடலொன்று வசீகரமாய்'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' திரைப்படத்தில் அரங்கேறியது. A.மருதகாசியின் இப்பாடலுக்கு                      S.தட்சிணாமூர்த்தி இசைகலந்தார்.  

  ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆழ்ந்த காதலை வெளிப்படுத்திய,

"உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே

உறவென்று நான் நினைத்தது உன்னைத் தானே" ('பறக்கும் பாவை') 

எனும்,டி.எம்.எஸ் பி.சுசிலா பாடிய டூயட் பாடலும்,

"உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பிவந்தேன் நானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து புது கோலமிட்டேன்"

('நல்லவனுக்கு நல்லவன்') 

  எனும் கே.ஜே.ஏசுதாஸ்,மஞ்சுளா குருராஜ் பாடிய அபூர்வப் பாடலும்,இரு மாறுபட்ட கோணங்களில் காதல் மழைத்தூவின. கண்ணதாசனின் எம்.ஜி ஆர் படப்பாட லுக்கு மெல்லிசை மன்னரும்,வைரமுத்துவின் ரஜினிகாந்த் படப்பாடலுக்கு இஞைஞானியும் மெட்டுக்கட்டினர்.இந்த உணர்வினை வெளிப்படுத் தும் வண்ணம் அமைந்த வேறு இரு பாடல்களே நவக்கிரகம் திரைப்படத்தில்,வி.குமாரின் இதமான இசையில் பி.சுசிலா தொடங்கி எஸ்.பி.பி பின் தொடரும்,வாலியின் 

''உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது''

  எனும் பாடலும்,'தலைவாசல்'திரைப் படத்தில் வைரமுத்து எழுதி பாலபாரதி இசை பருகச்செய்த,எஸ்.பி.பி தொடங்கி கே.எஸ்.சித்ரா தொடரும்,

''உன்னை தொட்ட தென்றல் இன்று

என்னை தொட்டுச் சொன்னதொரு சேதி

உள்ளுக்குள்ளே ஆசைவைத்துத்

தள்ளித் தள்ளி போவதென்ன நீதி''

எனும் பாடலுமாகும்.

   'என்னை' தமிழ்த்திரையில் இன்பமாய் இணைத்து வைத்த பாடல்கள் ஏராளம்.

"என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா,

நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா"

   எனும் P.சுசிலா சீர்காழியாருடன் இணைந்து பரவசமாய்ப்பாடிய 'குமுதம்' திரைப்படப்பாடலும்,

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்"

 எனும் டி.எம்.எஸ்ஸின் கம்பீரக்குரல் P.சசிலாவின் குரலுடன் சங்கமித்துப்பாடிய 'பாலும் பழமும்' திரைப்படத்தின் காலம் வென்ற பாடலும்,'படகோட்டி' திரைப்படத் தில் P.சுசிலா நெஞ்சம் தவித்திடப் பாடிய,

"என்னை எடுத்து தன்னைக்கொடுத்து

போனவன் போனாண்டி"

   ஆகிய மூன்றுமே கவிதைச் சிறப்பும் கானச்சிறப்பும் நிறைந்து பல முறை கேட்கப் பட்ட பாடல்களாகும்.இந்த மூன்று பாடல்களையும் முறையே A.மருதகாசியும், கண்ணதாசனும்,வாலியும் எழுத,முதல் பாடலுக்கு கே.வி.மகாதேவனும் மற்ற இரண்டிற்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையூட்டியும்,என்றும் இனிக்கச்செய்தனர்.தன்னைத்தானே பாராட்டி தன்னில் பெரிதுவக்கும் பாடலே'குடியிருந்த கோயில்' திரைப்படத்தில் வாலி வரிவடித்து, மெல்லிசை மன்னரின் மேலான இசையில் டி.எம்.எஸ்.குரலுயர்த்தி,எழுச்சியுடன் பாடிய,

"என்னைத் தெரியுமா 

நான் சிரித்து பழகி கருத்தை கவரும்

ரசிகன் என்னை தெரியுமா"

எனும் எழில் மிகுப் பாடல்.சில சமயங்களில் ஒரு பாடல் மற்றொன்றை சொற்களால் சாய்ப்பது போலத் தோன்றும்.குறிப்பாக "மனோகரா'திரைப்படத்தில் டி.வி ரத்திணமும் எஸ்.வி.வெங்கட்ராமனும் டி.ஆர்.ராமநாதன் இசையில் பாடிய,

''என்னைப்பாரு என் அழகைப்பாரு கண்ணாலே ரெண்டு கண்ணாலே,

பார்த்தா இன்பலோகம் கண்ணில் தெரியயும் முன்னாலே''! 

   என்ற பாடலுக்கு பதிலடி கொடுப்பது போலத் தோன்றும், 'அடிமைப்பெண்'திரைப் படத்தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய,

''உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உன் செயலைப்பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது'' 

எனும் கே.வி.மகாதேவனின் இசையில் ஊறிய வாலியின் வரிகள்.  

  'என்னையும் உன்னையும்' சேர்த்துப் பிடிக்கும்  டி.எம்.எஸ்ஸின் அசத்தல் பாட லொன்றும், கே.ஜே. ஏசுதாசின் ஆனந்தப் பாடலொன்றும் தமிழ்த் திரையிசையில் தரமான தடங்களை,தடங்கலின்றி பதித்தன.

'குலமகள் ராதை'திரைப்படத்தில்

"உன்னைச் சொல்லி குற்றமில்லை

என்னைச் சொல்லிக் குற்றமில்லை" 

என்று 'என்னையும் உன்னையும்' குறை நீக்கி,குற்றத்தை காலத்தின் மீதும்,கடவுள் மீதும் போட்ட,கே.வி. மகாதேவன் இசையில் அமைந்த கண்ணதாசன் வரிகளும்,

'நாளை நமதே'திரைப்படத்தில்

"என்னைவிட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க

உன்னைவிட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க''

  எனும் வாலியின் வரிகளும் மெல்லிசை மன்னர் இசையில் வசந்தம் பரப்பியது. கவித்துவத்தால் காதல் சங்கமத்தை வெளிப்படுத்தும் இன்னொரு பாடலே, 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவும் எஸ்.பி.பி யும் மோகவலையில் சிக்கிய குரல்களில் பாடிய,

''என்னைத் தொட்டு 

அள்ளிச்சென்ற

மன்னன் பேருமென்னடி 

எனக்குச் சொல்லடி;

விஷயமென்னடி"

என்ற வாலியின் வரிகளுக்கு ஈர்ப்பு நல்கிய இசைஞானியின் பாடல்.இதே மோகவலையில் விழும் கண்ணதாசனின் வரிகளை 'பார் மகளே பார்'திரைப்படத்தில் கடந்து வந்தோம்.பி.பி சீனிவாசும் பி.சுசிலா வும் பாடிய

''என்னை தொட்டு 

சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே 

சென்றன கைகள்" 

  எனும் பாடலுக்கு,விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையால் மோகவலை விரித்தனர்.

   'என்னையும் உன்னையும்'கலந்து இலக்கியம் படைத்த திரைப்பட பாடல் வரிகள் மட்டுமல்லாது,திரைப்பட தலைப்பு களாகவும் நின்று நிலைத்த, 'என்னைப் பார்' 'என்னைப்போல் ஒருவன்','உன்னைச் சுற்றும் உலகம்' 'உன்னை நினைத்து', 'உன்னைப் போல் ஒருவன்','உன்னை நான் சந்தித்தேன்' 'உன்னை ஒன்று கேட்பேன்', 'உன்னைக் கொடு என்னை தருவேன்' 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' போன்ற பல திரைப் படங்கள் உண்டு.

  'உன்னையும் என்னையும்' இணைத்து வைத்த தமிழ்த்திரை,உனக்கும் எனக்கும் உணர்வுகளை உதயமாக்கி,உனக்காக நான் என்று உரைக்க வைத்து,உன்னில் என்னையும்,என்னில் உன்னையும்,இறைவனாய்க் காண வைத்து உலகத்துக்கே ஒளியூட்டி அன்பு வழியே அறவழி என்பதை அர்த்தமாக்குகிறது.

                  ===========0===========



 









2 comments:

  1. சிறப்பு சார்... அருமையான பதிவு... அற்புதமான பாடல்களை நினைவூட்டும் பதிவு.... நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.மணிகண்டன்.

      Delete