Sunday, August 11, 2024

மரியாதை தேய்ந்து,

 

   மனிதனுக்கு மனிதன் காட்டும் மரியாதையை நிர்ணயம் செய்வது, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மதிப்பின் அடையாளமாகவோ,அல்லது அன்பின் அடர்த்தியாகவோ, நெருக்கத் தின் நீட்சியாகவோ இருக்கும் என்பதே, வாழ்வின் இயல்பு நிலையாகும்.வெறுப் பில் வார்த்தைகள் இடறுகையிலும், சினத்தில் சொற்கள் சிதறுகையிலும், மரியாதைவாகனம்,தடம் புரளுவதுண்டு.

   ஆனால் பெரும்பாலும், நெருக்கம் நிரம்பி வழிகையில்,மரியாதைச் சொற் கள் விடை பெற்றுக்கொள்வ துண்டு. அதுவும் குறிப்பாக தமிழில்,'டா' என்பதும் 'டி' என்பதும் மரியாதை தேய்ந்து, மனசுக் குள் மத்தளம் வாசிக்கும்,மகிழ்ச்சித் துள்ளலாகும்.தமிழ்த்திரையின் தொடக்க காலத்திலேயே,'டா'எனும் ஒலி கொண்ட எழுத்து,சற்றுத் தூக்கலாய் இருந்ததை, எம்.ஜி.ஆரின்,'மன்னாதி மன்னனின்

"அச்சம் என்பது மடமையடா

 அஞ்சாமை திராவிடர் உடமையடா",

 'அரசிளங்குமரி'யின்

" சின்னப்பயலே சேதி கேளடா''

போன்ற  டி எம் எஸ் பாடல்களில் காணமுடிந்தது.

  இப்படி ஒருமையில் உபதேசம் செய்த 'விஜயபுரி வீரன்' திரைப்படத்தில், 

ஏ. எம்.ராஜா பாடிய, 

"உள்ளத்திலே உரம் வேணுமடா 

உண்மையிலே திறம் காணுமடா 

ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா"

'நீலமலைத் திருடன்' திரைப்படத்தில்

 டி எம் எஸ் பாடிய,

"சத்தியமே லட்சியமாய்க்கொள்ளடா 

தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா" 

  போன்ற பல பாடல்களும் தமிழ்த்திரை ரசிகர்கள் கண்டும் கேட்டும் ரசித்ததவை யாகும்.

  தமிழ்த் திரைப் பாடல்களில் இந்த மரியா தைத் தேய்வு,பெரும்பாலும் மகிழ்ச்சி அல்லது விரக்தியின் வெளிப்பாடேயா கும்!'உத்தமபுத்திரன்'படத்தில் டி.எம்.எஸ் பாடிய,

"யாரடி நீ மோகினி 

கூறடி என் கண்மணி

ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ  

ஆட ஓடிவா காமினி" 

  எனும் ஆரவார பாடலிலும் சரி,பின்னர் 'லட்சுமி கல்யாணம்' திரைப்படத் தில் அதே டி.எம்.எஸ் பாடிய, 

"யாரடா மனிதன் இங்கே 

கூட்டிவா அவனை இங்கே" 

  எனும் மனிதமின்மைப் பற்றிய விரக்தி பாடலிலும் சரி,மரியாதை சட சடவெனத் தேய்வதை நாம் அறிகிறோம்.

அதே போன்று,'சிவகாசி'திரைப்படத்தில் சங்கர் மகாதேவன் குரலில் ஒலித்த,

"வாடா வாடா, வாடா வாடா தோழா; 

நாம வாழ்ந்து பாப்போம் வாடா. 

நீயும் நானும் நீயும் நானும் ஒண்ணா, 

சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா "

என்று தோழமைக்கூட்டுவதும், 

"வாடி தோழி கதாநாயகி 

மனசுக்குச் சுகம்தானா" 

   என்று 'துலாபாரம்'திரைப்படத்தில் குசலம் விசாரிப்பதிலும், தோழமையில் மரியாதை மடைமாறிச் செல்வதை உணரமுடிந்தது.

   இதற்கு ஒருபடி இன்னும் கீழிறங்கி 'காலம் மாறிப்போச்சு' திரைப்படத்தில் வடிவேலு வரிந்துக்கட்டி வசைபாடிய, 

"வாடி பொட்டப் புள்ள வெளியே 

என் வாலிபத்தை நோகடிக்க கிளியே" 

எனும் பாடல், மனைவிக்கான மரியாதை யை மலைக்கேற்றியது.இதே வடிவேலு தனது முதல் படமான ராஜ்கிரணின்'என் ராசாவின் மனசிலே'திரைப்படத்தில் ஆடிப்பாடிய, 

"போடா போடா புண்ணாக்கு 

போடாத தப்புக்கணக்கு" 

 என்ற பாடல் மரியாதையை மூட்டைக்கட்டி மூலையிலிட்டது.இதற்கு எதிர்வினையாக அமைந்திருந்தது, 'தாமரை நெஞ்சம்' திரைப்படத்தில் P.சுசீலாவும் L.R.ஈஸ்வரி யும் பாடிய, 

 "அடி  போடி பைத்தியக்காரி 

நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா" 

  எனும் அசட்டையானப்பாடல்.இப்படிப்பட்ட வேறொரு பாடல் இந்த இரட்டைப்பாடகர் களின் குரல்களில் 'கன்னிப் பெண்' திரைப்பத்தில் இடம் பெற்றது.

"அடி.ஏண்டி அசட்டுப் பெண்ணே

உன் எண்ணத்தில் யாரடி கண்ணே"

எனும் பாடல்,பலரின் மனம் கவர்ந்த இனிய கீதமாகும்.

'சவாலே சமாளி'திரைப்படத்தில் 

"என்னடி மயக்கமா சொல்லடி 

கட்டுப்படாதே 

உனது உரிமையை 

விட்டுதராதே"

 என்று தோழமைக்குத் துணை நின்ற P.சுசீலா L.R.ஈஸ்வரி குரல்களில் அமைந்த பாடலும், பின்னர் அதே L.R. ஈஸ்வரியின் தனிக்குரலில் அமைந்த, 

"அடி என்னடி உலகம் 

இதில் எத்தனைக் கலகம்" 

  எனும் விரக்திப்பார்வை அமைந்த பாடலும், மரியாதை தேய்மானத்துடன் மரியாதைக்கு மரியாதை தேடித்தந்தன. இப்படி மனிதர்களுக்குள் மரியாதையை மடிக்கச் செய்த பல பாடல்களுக்கிடையே, இறைவனையும்  வம்புக்கிழுத்த மரியாதை தேய்ந்த பாடல்களும் உண்டு. 'மனிதனும் தெய்வமாகலாம்' திரைப்படத் தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, 

"என்னடா தமிழ்குமரா

என்னை நீ மறந்தாயா" 

 எனும் தமிழ்க்கடவுள் முருகனை யாசித்துத் துணைக்கழைத்த பாடலிலும், மரியாதை மாயமானது,இறைவனுடன் மனிதன் கொண்ட மனதின் நெருக்கமே யாகும்.இதே முருகனை அவன் பெயரைச் சொல்லும்போது ஏற்படும் மனதின் உற்சாகத்தை வெளிப்படுத்திய பாடலே 'கந்தன் கருணை' திரைப்படத்தில் P.சுசலா பாடிய, 

"சொல்ல சொல்ல இனிக்குதடா 

உள்ளமெல்லாம் உன்பெயரை 

சொல்ல சொல்ல இனிக்குதடா" 

எனும் சந்தோஷத்தின் சன்னிதானம். 

  இறைவனிடம் உள்ள நெருக்கத்தை இன்னும் ஒருபடி மேலே போய், மரியாதை யை மடக்கிப்போட்டு கட்டளையிடும் வண்ணம் 'ஆதி பராசக்தி'திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய, 

"சொல்லடி அபிராமி 

வானில் சுடர் வருமோ 

எனக்கு இடர் வருமோ 

பதில் சொல்லடி அபிராமி 

நில்லடி முன்னாலே 

முழு நிலவினை 

காட்டு உன் கண்ணாலே" 

   என்ற உருக்கமானப் பாடல்.இப்பாடலை கேட்கும்போதெல்லாம்,இத் திரைப்படத் தில் அபிராமி பட்டராகத் தோன்றிய, எஸ்.வி. சுப்பையாவின் அற்புதமான நடிப்பும் மேலோங்கி நிற்கும். 

  வரிக்குவரி 'டி' போட்டு உரிமைப்பரவசத் தில் திளைத்த பாடலே 'என் கடமை'திரை ப்படத்தில் டி.எம்.எஸ் மகிழ்ச்சித்துள்ளளு டன் பாடிய,

''நில்லடி நில்லடி சீமாட்டி 

உன் நினைவில் என்னடி சீமாட்டி 

வில்லடி போடும் கண்களிரண்டில்

விழுந்ததென்னடி சீமாட்டி ......

தொட்டால் சுருங்கி செடியை போல 

நாணம் என்னடி சீமாட்டி 

கட்டண உடல் காயாய்  இருந்து

கணிந்ததென்னடி சீமாட்டி 

சிட்டாய் பறக்கும் கால்களிரண்டில்

தயக்கம் என்னடி சீமாட்டி 

இங்கு வந்தது என்னடி சீமாட்டி 

சங்கதி சொல்லடி சீமாட்டி 

தந்தியை மீட்டும் கைகளாலே 

தழுவிக் கொள்ளடி சீமாட்டி 

......................................................

உன்னையல்லாது இன்னொரு கன்னி 

உலகில் ஏதடி சீமாட்டி" 

   என்று 'டி'சொல்லி காதலில் குளித்த பாடலைப்போல்,அதில் கொஞ்சம்'டி' யில் திளைத்த பாடலே 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடி, பட்டி தொட்டியெல்லாம் பவனிவந்த,

''என்னடி ராக்கம்மா 

பல்லாக்கு நெளிப்பு 

என் நெஞ்சி குலுங்குதடி"

 எனும் ஆரவாரப்பாடல்."அடி ராக்கு என் மூக்கு" என்று தொடங்கி,வரி வரியாய் மரியாதைக்கு விடைகூறி மனம் கவர்ந்த பாடலாகும்.சில நேரம் இரு பாலாருக்கும் ஒரே பாடலில் மரியாதைக்கு சங்கூதுவ தும் உண்டு.அப்படி அமைந்ததுதான்' படகோட்டி'திரைப்படத்தில் P.சுசீலா பாடிய, 

"என்னை எடுத்து தன்னை கொடுத்து 

போனவன் போனாண்டி"

  என்று வேதனையில்,மரியாதையை மண்ணுக்குள் புதைத்த பாடல்.தமிழ்த் திரைத் தலைப்புகள்கூட சில சமயங் களில் மரியாதையை தவற விட்டதுண்டு. அப்படி அமைந்த தலைப்புகளில்,'போடா போடி''யாரடி நீ மோகினி'போன்றவை தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். 

    இந்த மாதிரி மரியாதையை மனசுக்குள் வைத்து,'அவன்''அவள்''டா' 'டி'என்று, உரிமையுடன் மொழியில் மரியாதையை சுருங்கச்செய்த இன்னும் பல பாடல்க களும் தலைப்புக்களும் தமிழ்த் திரை யிரல் உண்டு.அன்பின் தாக்கத்தில், நெருக்கத்தின் சல்லாபத் தில்,நட்பின் நங்கூரத்தில், ஒருமையில் சொற்கள் நிலை நிறுத்தப்படுவதில்,மரியாதை  தேய்வதில்"குறையொனறும் இல்லை நிறையுண்டு கண்ணா" என்றே, கூறத்தோன்றும்.

  குறிப்பு :-மரியாதைக்கு மல்லுக்கட்டும் பாடல்களை பட்டியலிடுகையில், அவற்றை எழுதிய கவிஞர்களும்,அவற் றிர்க்கு இசைக்கோர்த்த இசை மேதை களின் பெயர்களும்,இரண்டாம் பட்சமே எனும் அடிப்படையில், இப்பதிவில் அவர் களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

                             ================0==================



2 comments: