Tuesday, October 1, 2019

சிவாஜியும் கமலும் :-ஒரு சிறப்புப் பார்வை

 
     தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லா சினிமாஸ்கோப்,செவாலியர் சிவாஜி கணேசனுடன்,வேறொரு நடிகரை ஒப்பிட நினைப்பதற்கே ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். இருப்பினும்,இதுபோன்ற ஒரு ஒப்புமைக்கு கமலைவிட வேறு ஒரு நடிகர் இருக்க வாய்ப்பில்லை என்பதற்குத் தமிழ்த்திரை வரலாறு சான்றுரைக்கும்.
 "பிள்ளைக்கு தந்தை ஒருவன்;நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்"எனும் டி.எம்.எஸ்ஸின் தேன்சுவைப் பாடலுக்கு சிவாஜி வாயசைக்க,அவர் கரங்களில் ஒய்யாரமாக படுத்துறங்கும் காட்சியில்,AVM ம்மின்'பார்த்தால் பசிதீரும்' திரைப் படத்தில்,ஒரு ஏழு வயது சிறுவனாக நடித்தவர் கமல்.
    என்னதான் AVM ம்மின் 'களத்தூர் கண்ணம்மாவின்'ஜெமினி கணேசனின்  பிள்ளையாக கமல் அறிமுகமானாலும்{'பார்த்தால் பசிதீரும்' படத்திலும் அவர்  ஜெமினியின் பிள்ளைதான்} சிவாஜிக்கும் கமலுக்கும் இடையே ஏதோ ஒரு ஆழ்ந்த நடிப்பு முடிச்சு இருந்திருக்கவேண்டும்.அந்த முடிச்சு பல ஆண்டுகளுக் குப் பிறகு,கமலின் 'தேவர்மகன்' திரைப்படத்தில் தந்தை மகன் வேடங்களில் அவிழ்க்கப்பட்டு,அட்டகாசமாக அரங்கேறியது.
    மலையாள திரைப்பட இயக்குனர் பரதனின் கைவண்ணத்தில்,'தேவர்மகன்'  திரைப்படம்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பழக்க வழக்கங்களையும் உள்ளுணர் வுகளையும்,துல்லியமாக  காண்போரின் ஆழ்மனதில் பதியவைத்தது.தன் மூலம்,சிவாஜிக்கும் கமலுக்கும்  இடையே நிழல்பிம்ப முத்திரைகள் நின்று நடமாடி,ரசிகர்களின் நாடித்துடிப்போடு சேர்ந்து நர்த்தனமாடின.
   தந்தை மகன் உறவின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 'தேவர்மகன்'திரைப்படம் சிவாஜியையும் கமலையும் இணைத்துவைத்து,புதிய கோணத்தில் கமலை மட்டுமே பார்க்கத் தூண்டியது.காரணம்,கலைவாணியின் தவப்புதல்வனான சிவாஜியை,எத்தனையோ கோணங்களில் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.கமல் உலக நாயகன் என்றாலும்,சிவாஜி எனும் நடிப்புக்கடல் அகன்று விரிந்து,அலைகளாய்ச் சீறி,அண்டத்தையே அதிரவைத்தது என்பதை,  அவரின் உள்மனது,ஊன்றி உணர்ந்திருக்கும்.
    சிவாஜியின் அடுத்த தலைமுறை நடிகனா கமலுக்கு,கே.பாலச்சந்தர் எனும் சாட்டை கமலுக்குள் கிடந்த கலைஞன் எனும் பம்பரத்தை,பலதிசையில் சுழலச் செய்து,சாகசக் குதிரையாய் மற்றவர்களை முந்தச் செய்தது.ஆனால் சிவாஜி யோ ஒரு தான் தோன்றி மலை.அது தன்னைத்தானே சிறுக சிறுகச்  செதுக்கி, இராஜ இராஜ சோழன் உருவாக்கிய தஞ்சை பெரிய கோபுரம்போல்  உயர்ந்தது. 
    கமல் அசுரத்தனமான,புத்தியுள்ள ஒரு நடிகர்.புத்தியோடு யுக்தியும் இணைத்து,புதிய முயற்சிகளை பெருமையுடன் பிரசவித்தது,கமலின் தனிச் சிறப்பு.நாள் தோறும் வளர்ந்துவரும் தொழில் நுட்பமும்,கமலின் புதிய முயற்சி களுக்கு உறுதுணையானது.
    பராசக்தியின் மைந்தனோ,நடிப்புச்சுவற்றில் பரமபதம் ஆடி,பிராம்மாண்ட வெற்றிகளால் உயர்ந்து,ஆதிகேசவன் ஆனவர்.கமலை இருவராக,மூவராக நால்வராக,தசாவதாரமாகக் கண்டிருப்போம்.உருவ மாற்றங்களாலும்,அந்த  மாற்றங்களில் நடிப்பாற்றல் நளினங்களாலும்,குறிப்பிட்டு சொல்லும் படியான உயரத்தை எட்டியவர் கமல்.சிவாஜியோ ஒவ்வொரு திரைப்படத்திலும் நடையால்,உடையால்,உடல் அசைவால்,சிம்மக் குரலால்,குரலின் நெளிவு சுளிவுகளால்,நடிப்பை உரமாக்கி உலகளந்தவர்.
    குடும்பத்தில்,சமூகத்தில்,சரித்திரத்தில்,புராணத்தில்,இலக்கியத்தில் 
இதிகாசத்தில்,தமிழ் இனம்,தான் கடந்து சென்ற அத்துணை பாதைகளிலும், சிவாஜி னும் நடிகர் தோன்றிய பல கதாபாத்திரங்களை சந்தித்திருக்கும்.
    பாமரனாக,படித்தவனாக,செலவச் சீமானாக,சல்லிக்காசில்லாதவனாக, கணவனாக,தந்தையாக பிள்ளையாக,அண்ணனாக,தம்பியாக,நண்பனாக நல்லாசிரியனாக,திருடனாக,காவலனாக,கவியாக,காதலனாக,மன்னனாக, போராளியாக, எஜமானனாக,சேவகனாக,பலகதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி வாழ்வியலை முழுமையாக வெண்திரையில் கலங்கரை விளக்கமாக்கிய சிவாஜி,விட்டு வைத்த வேடங்களே இல்லை,எனச் சொல்லலாம்.
      பொற்கைப் பாண்டியனும்,இராஜ இராஜ சோழனும்,கட்டபொம்மனும் 
கப்பலோட்டிய வ.வு.சியும், கர்ணனும்,பரதனும்,தெனாலி ராமனும்,அம்பிகா பதியும்,காளிதாசனும்,அப்பரும்,சுந்தரரும்,சிவனும்,நக்கீரனும்,முருகனும், வீரபாகுவும்,கலக முனியும்,அரிச்சந்திரனும்,பெரியாழ்வாரும், திருமங்கை யாழ்வாரும்,அனார்கலியின் சலீமும்,அறிஞன் சாக்ரடீசும்,ஜூலியஸ் சீஸரும் பகத் சிங்கும்,இன்னும்பல  வரலாற்று மற்றும் இதிகாச நாயகர்கள் எல்லோருமே,சிவாஜியின் வடிவிலேதான்,நம் கண்முன்னே தோன்று கின்றனர்.
   இதுபோன்ற மாபெரும் சகாப்த நிலையை,கமல் உட்பட வேறு எந்த ஒரு கலைஞனாலும் உருவாக்க இயலுமா என்ற ஐயற்பாட்டிற்கும் அப்பாற்பட்டு, அவ்வாறு உருவாக்க இயலாது என்பதே, திட்டவட்டமான உண்மையாகும்.
    இவை எல்லாவற்றையும் கடந்து,சிவாஜிக்கும் கமலுக்குமிடையே அடிப்படை யிலேயே ஒரு வலுவான ஒற்றுமை யாதெனின்,அவர்கள் இருவருமே எந்த ஒரு திரைப்படத்திலும் 'பஞ்ச் டைலாக்' பேசி,தங்களது நடிப்பாற்றலை வெளிப் படுத்தியது இல்லை.
    ஆனால் அவர்களுக்கிடையே,நடிப்பில் ஒரு உள்ளார்ந்த வேறுபாடும்  என்றைக்கும் விடுகதையாக நிற்கும்.அவ்விடுகதைக்கு விடைகாணும் வழியில்,சிவாஜிக்குள் ஒவ்வொரு முறையும் ஒரு  வித்தியாசமான மனிதனைக் காணமுடிந்தது என்பதும்,மாறாக,கமலுக்குள் ஒவ்வொரு முறையும் ஒரு   வித்தியாசமான நடிகனைக் காணப்பெற்றோம் என்பதும்,உண்மைகளாக வெளிப்படும்.
     சிவாஜி வாழ்ந்த காலத்தில்,மனித உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அன்றைக்கு கணினி இல்லை.கைபேசி இல்லை.வாழ்க்கை நடைமுறைகளுக் கும் வாழ்க்கையைப்பற்றிய கனவுகளுக்கும்,உயர்ந்த உணர்வுகளும் எண்ணங்களும் அடித்தளமாக அமைந்தன.தான் வாழ்ந்த காலத்தில் உலகெங் கிலுமுள்ள வாழ்க்கை நடைமுறைகளையும்,தான் பிறந்த மண்ணின் மகத்து வமான உணர்வுகளையும்,உள்வாங்கிய சிவாஜி எனும் ஒப்பற்ற கலைஞன், நடிகனுள் மனிதனானார்.'அவன்தான் மனிதன்' என்று சொல்லும் அளவிற்கு  நடிகனுள்  மனிதத்தைப் புகுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். 
   கமலோ,தான் வாழும் காலத்தில்,ஒரு படைப்பாற்றல் மிக்க கலைஞனின் ஆத்ம வேட்கையை விதையாக்கி,திரையுலகில் ஓர் அற்புத விருட்சமானார்.இன்றைய தமிழ்த்திரையுலகில் கமலின் சாதனை உயரத்தை,வேறு எவரும் எட்டவில்லை. எட்டவும் இயலாது, அதே போன்று,கமலோடு சேர்ந்து வேறு எவரும்,இன்றும் என்றும்,தமிழ் திரைவானில்,சிவாஜியின் இமயச் சிகரத்தை நெருங்கக்கூட முடியாது.
    இறுதியாக,சிவாஜி எனும் நடிப்புப் பல்கலைக்கழக நூலகத்தில்,கமல் எனும் கலைக்களஞ்சியத்தை வைத்து அழகு பார்க்கலாம்;அதன் பக்கங்களை புரட்டிப் பார்க்கலாம்.படித்து வியந்துபோகும் அதே வேளையில்,சற்றே நிமிர்ந்து பார்க்கையில்,பல்கலைக்கழகத்தின் கம்பீரத்தில்,மெய்சிலிர்த்து,மெய்மறந்து போகலாம்.சிவாஜிக்குள் கமலே தவிர,கமல் சிவாஜிக்கு நிகரல்ல. 
                                                 -------------------------------------
   பின்குறிப்பு:- 
   இக்கட்டுரையில் சிவாஜியையும் கமலையும் தராசில் வைத்துப்பார்ப்பதற்கு அவர்கள் நடித்த திரைப்படங்கள் எவையும் குறியீடுகளாக எடுத்துக்கொள்ளப் படவில்லை.'பார்த்தல் பசிதீரும்' மற்றும் 'தேவர் மகன்' ஆகிய இரு திரைப் படங்கள் குறிப்பிடப்பட்டது,இந்த இரு நடிப்பு உச்சங்களை ஒப்பிடுவதற்கான  தொடக்கப் புள்ளிகளே தவிர,ஒப்பிடுவதற்கான திரைப்படங்கள் அல்ல. 
                                                                                             ப.சந்திரசேகரன். 

2 comments:

  1. தங்கள் கருத்து சரி தான்.கமலை சிவாஜியோடு ஒப்பிட முடியாது.

    ReplyDelete
  2. "...இரு நடிப்பு உச்சங்களை ஒப்பிடுவதற்கான தொடக்கப் புள்ளிகளே தவிர,ஒப்பிடுவதற்கான திரைப்படங்கள் அல்ல. " - தொடக்ப் புள்ளிகளே இவ்வளவு புள்ளி விபரங்களை அளி;க்க முடிந்தது உங்கள் சொல்வளம் தானே ஸார்?

    ReplyDelete