Sunday, June 11, 2023

இன்பம் எங்கே?

 

    "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"எனும் மகாகவி பாரதியின் வரியில்,தமிழ் நாடும் தமிழ் மொழி யும் தன்னிரைவுடன் இன்பத்தில் திளைத்திடும்.மண்மணக்கும் வேளை யில்,நம் மனமும் இன்பத்தின் ஆழத்தை உணரும். 

  வாழும் வரையில் இன்பத்தை தேடும் மனிதனுக்கு உண்மையான இன்பம் அறத்தால் மட்டுமே கிட்டும் எனும் பண்பு ரைக்கும் கருத்தினை, 

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

  என்று அறுதியிட்டுக் கூறினார் வள்ளுவர். இதோடு நில்லாது,தன் இன்பம் பேணாது மற்றவர் துன்பம் துடைப்பவன்,எல்லோர்க் கும் தூணாகிறான் என்று,

இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர் 

துன்பம் துடைத்துஊன்றும் தூண்.    

என்றும்,

தாய்மையின் இன்பமே தன் மகனை அறிஞனாய்க் காண்பதில்தான் எனும் வகையில், 

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை 

சான்றோன் எனக்கேட்ட தாய் 

  என்றும்,இன்பம் பற்றிய உயரிய பல கருத்துக்களை தமிழ் மண்ணுக்கு விட்டுச்சென்றார் வள்ளுவர்.

  தமிழ்த்திரைப்படங்கள் பலவும் இன்பத்தை எல்லையின்றி கொண்டாடின என்பதை,பாடல்கள் மூலம் அறியலாம்.

  முதலில் ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியான 'மணமகள்'எனும் திரைப்படத்தில் P.லீலா வும் எம்.எல்.வசந்தகுமாரியும் இணைந்து பாடிய 

"எல்லாம் இன்ப மயம்

புவிமேல்   இயற்கையினாலே 

இயங்கும் எழில்வளம் எல்லாம்

இன்ப மயம்"  

    எனும் ரம்யமான பாடலை குறிப்பிட வேண் டும்.இப்பாடலை உடுஉமலை நாராயணகவி இயற்றியிருந்தார்.இப்பாடலுக்கு C.R சுப்ரமணியம் மரபு சார்ந்து இசையமைத் திருந்தார.பின்னர் 'எல்லாம் இன்ப மயம்' எனும் தலைப்பில் கமலகாசனின் திரைப் படமும் வெளியாயிற்று.    

   இதனையடுத்து 'மனமுள்ள மறுதாரம்' எனும் திரைப்படத்தில்,சீர்காழி கோவிந்த ராஜன் அனுபவித்து, அசுரவேகத்தில் பாடிய,அ.மருதகாசியின், 

"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு;

அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.

இன்றிருப்போர் நாளை இங்கே

இருப்பதென்ன உண்மை;

இதை எண்ணிடாது சேர்த்து வைத்து

காத்து என்ன நன்மை.

இருக்கும் வரை இன்பங்களை

அனுபவிக்கும் தன்மை,

இல்லையென்றால் வாழ்வினிலே

உனக்கு ஏது இனிமை…….

கனிரசமாம் மதுவருந்தி

களிப்பதல்ல இன்பம்;

கணிகையரின் துணையினிலே

கிடைப்பதல்ல இன்பம்;

இணையில்லா மனையாளின்

வாய்மொழியே இன்பம் – அவள்

இதழ் சிந்தும் புன்னகையே

அளவில்லாத இன்பம்…..

மாடி மனை கோடி பணம்

வாகனம் வீண் ஜம்பம்,

வாழ்வினிலே ஒருவனுக்கு

தருவதல்ல இன்பம்.

மழலை மொழி வாயமுதம்

வழங்கும் பிள்ளைச் செல்வம்,

உன் மார் மீது உதைப்பதிலே

கிடைப்பதுதான் இன்பம்…..

இன்பமெங்கே ….

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு;

அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு."

  என்ற இந்த அற்புதமான வரிகள் இன்பத் தில் எது தேவை,எது புறக்கணிக்கப் பட வேண்டியது,எனும் பண்பாட்டு முதன்மை யினை மனதில் பதியும் வண்ணம்,பாடல் பொக்கிஷமாய் தமிழறிந்தோர் சுவைக்கச் செய்தது.இந்த  பரவசமான பாடலுக்கு திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் உன்னதமாய் உயிரூட்டியிருந்தார்.

 இன்பத்தை காதலுக்கும் திருமணத்திற்கும் காகாணிக்கையாக்கி P.சுசீலாவும்,டி.ஏ. மோதியும் பாடிய, 

"காணா இன்பம் கனிந்ததேனோ 

காதல் திருமண ஊர்வலம்தானோ."  

  எனும் கு.மா.பாலசுப்ரமணியனின்'சபாஷ் மீனா'திரைப்பட பாடல் வரிகளுக்கு டி.ஜி லிங்கப்பா மயிலிறகால்  வருடுவதுபோல் இசையமைத்திருந்தார்.அடுத்து'வீர பாண்டிய கட்டபொம்மன்' திரைப்படத்தில்  P.B சீனிவாசும்,P.சுசீலாவும் பாடிய, 

"இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே  

என்னைக்கண்டு மௌன மொழி பேசுதே" 

   எனும் இந்த இன்பமூட்டும் வரிகளை அதே கு.மா.பாலசுப்ரமணியன் எழுத,இசை மேதை ஜி.ராமநாதன் அதற்கு இசைத்தேன் கலந்தார். இப்பாடலின் தனிச்சுவை பல ஆண்டுகளுக்குப்பிறகு சி.சுந்தரின் கவனத்தை ஈர்க்க,அவரின்'ஆம்பள'திரைப் படத்தின் 'ரி மிக்ஸ்'பாடலாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அலங்கரித்தது. 

  P.B.சீனிவாஸ் இன்பம் பற்றி தனித்துப் பாடிய ஏகாந்தப் பாடலொன்று 'யாருக்குச் சொந்தம்'எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

"எத்தனை எத்தனை இன்பமடா

இவை எல்லாம் உனக்கே சொந்தமடா"

  என்று,இன்பத்தை தனியுடைமையாக்கிய இப்பாடல்,எல்லாவகை இன்பத்திற்கும் ஒரு தனி மனிதன் சொந்தம் கொண்டாடும் வேட்கையினை வெளிப்படுத்தியது.இந்த வித்தியாசமான அ.மருதகாசி எழுதிய பாடலுக்கு,கே.வி.மகாதேவன் இன்பமுற இசையமைத்திருந்தார்.

  இன்பத்தை பெண்மையின் உருவகமாக்கி, டி.எம்.சௌந்தராஜனும் P.சுசிலாவும் பாடிய,

  "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ"

   எனும்  காதல் கனிந்த 'இதயக்கனி' திரைப் படப்பாடல் புலமைப் பித்தனின் வரிகளாளும் எம்.எஸ்.வி.யின் ஆர்ப்பாட்ட இசையாலும் இன்பத்தின் உச்சியில் ஆனந்தத் தாண்டவம் ஆடியது.

   இன்பம் எதுவென்றறியா இன்றைய மனித சமூகம்,"இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் தேடித்தேடி தேடும் மனது தொலைகிறதே"என்று ஒவ்வொரு நிலையிலும் அங்கலாய்க்கிறது.இன்பம் என்ற சொல்லிற்குள் பெருத்து நிற்கும் இச்சை,உன்னத உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி,புலன்களுக்கு புத்தியை இரையாக்குகிறது.பேரின்பம் என்பது தன்னை மறந்து, 

"தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே"

 எனும் கருத்தினை பிரதிபலிக்கும், புறநானூற்றுப் பாடல் போன்றவற்றில், நீக்கமர நிறைந்து படர்ந்திருக்கிறது என்பதே,'இன்பம் எங்கே?'எனும் கேள்விக்கு இணையில்லா விடையாகும்.

ப.சந்திரசேகரன்.

  

4 comments:

  1. இன்ப லோகமே இனிதாகுமே
    பாட்டை விட்டு விட்டீர்களே?

    ReplyDelete
  2. "இன்ப நாளிலே"( மனோகரா)& ஆஹா இன்ப நிலாவினிலே( மாயா பஜார்). போன்ற பாடல்களும் உண்டு.

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி திரு.மணிகண்டன்.

      Delete