{சாகாவரம் பெற்ற'சங்கீத மேகத்'திற்கு சமர்ப்பணம்}
ஒரே ஆண்டில்{1969} கே.வி.மகாதேவனின்"ஆயிரம் நிலவே வா"{'அடிமைப்பெண்'}மற்றும் எம்.எஸ்.வியின்"இயற்கை எனும் இளைய கன்னி"{'சாந்தி நிலையம்'}என்ற, நெஞ்சில் என்றும் இனிக்கும் இரு டூயட் பாடல்களுடன்,தமிழ்த்திரையில் தன் இசைப்பயணத்தை தொடங்கிய, எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனும் தமிழ்த்திரையிசையின் புதிய அறிமுகம், தன் இமயக்குரலால்,திக்கெட்டும் தமிழ்த்திரைப் பாடல் களை ஒலிக்கச் செய்தது.
எம்.எஸ்.வீ க்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "அவளொரு நவரச நாடகம்" "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்""அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ""பாடும்போது நான் தென்றல் பாட்டு" போன்ற எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல்கள் அனைத்துமே,மக்கள் திலக ரசிகர்கள் மத்தியில்,பரவசம் ஏற்படுத்தின என்பது,அனைவரும் அறிந்த ஒன்றே!அதே எம்.எஸ்.வி யின் இசை மழையில் அவர் நீங்காமல் நிலைபெறச் செய்த 'சுமதி என் சுந்தரி' திரைப்படத்தில் B.வசந்தாவுடன் இணைந்து,உல்லாசமாய்ப் பாடிய,"பொட்டுவைத்த முகமோ" பாடலும் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப் படத்தில் வந்த"கடவுள் அமைத்துவைத்த மேடை" எனும் பாடலும் 'சிம்லா ஸ்பெஷல்' திரைப்படத்தில் இடம்பெற்ற "உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்த லாலா"எனும் பாடலும், குரலால், குனிந்து நிமிர்ந்து,நம் மனம் குளிரச் செய்தன.
எம்.எஸ்.வி யின் இசையில்,எஸ்.பி.பியின் முதல் பத்தாண்டு இசைப்பயணத்தில் பாடிய இன்னுமொரு அற்புதப் பாடல், கண்ணதாசனின் வரிவடிமைப்பில் உருவான "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்"{படம்:- கே.பாலச்சந்தரின் 'நினைத் தாலே இனிக்கும்'} எனும் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து திரையரங்கங் களில் ஆடச்செய்த பாடலாகும் .
கே.வி.மகாதேவனின் கர்நாடக இசைக்காப்பியமான 'சங்கராபரணம்' திரைப் படத்தில் பல பாடல்கள்,எஸ்.பி.பியின் உரத்த, உணர்வூட்டும், ஒய்யாரக் குரலால் உயர்ந்து,பாடல்களுக்கும் படத்திற்கும்,செல்வாக்கை சிதறாமல் சேகரித்தன.
பின்னர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து,எப்.பி.பி பயணித்த இசைப்பயணம்,புதிய எல்லைகளைத் தொட்டு,ஏகாந்த ஏற்றம் கண்டது. 'இளைய நிலா'என எழுந்து நம் 'இதயம்வரை நனைத்து' 'உலாப்போகும் மேகங்களுடன்' நம்மையும் இணைத்து,'கனா காண'வைத்த எஸ்.பி.பி என்னும் மாபெரும் பாடகரின் குரலுக்கு,இழையவும் தெரியும்,சீறவும் தெரியும் என்பதை,நடைமுறைப்படுத்தினார் இசைஞானி.ஆயிரக் கணக்கில்"சங்கீத மேக"மென மழை பொழிந்த,சகலகலா இசைவல்லவர் எஸ்.பி.பி,"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நேரமில்லையோ"{'மௌனராகம்'}என்று மனம் குமுறி "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ"{'கேளடி கண்மணி'}என்று குரலால், இசையால், காதலை காவியமாக்கிய ஒப்பற்ற கலைஞர்.
இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி பாடிய பல பாடல்களும் , தனிச்சிறப்பு வாய்ந்தவை மட்டுமல்ல;அவை இசைப்பாதையில் பல்வேறு வளைவு நெளிவுகளை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழ்த் திரை உலகில் கொடிகட்டிப் பறந்த டி.எம்.சௌந்தராஜனும் சீர்காழி கோவிந்தராஜனும்,தங்களின் கணீர் குரல்களால்,எப்போதுமே நேர்கோட்டில் தங்கள் இசைவாகனத்தில் பயணித்தனர். ஆனால் எஸ்.பி.பியோ,அந்த நேர்கோட்டு பயணத்தை முறியடித்து,குரலால், குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து, பரவி, நெருடி, வருடி,இசையின் அழுத்தத்தையும், ஆழத்தையும், அமைதியையும், ஆர்ப்பாட்டத்தையும்,ஒருசேர நிலை நிறுத்தி இசையில் மாற்றுப் பாதைகள் காணச் செய்தார்.
இந்த மாறுபட்ட பயணத்தின் முதல் அடியே,அவர்'சபதம்' திரைப் படத்தில் குரல் பதித்த "தொடுவதென்ன தென்றலோ" பாடல்{இசை ஜி.கே.வெங்கடேஷ்}.''தொடுவ தென்ன''என்று அழுத்தித் தொடங்கி,ஒரு சில கோணங்கித்தனங்களால், இசையில் தான் ஒரு 'அடங்கா பிடாரி' என்றும்,அவதார நாயகன் என்றும்,நிரூபித்தார். அதற்குப்பின்னர் அவர் குரல் முள்ளாகவும் மலராகவும்,தேளாகவும் தேனாகவும், தீயாகவும் நீராகவும்,மத்தாகவும் மயிற்பீலியாகவும்,பல்வேறு பரிணாமங்களை படைத்தது.
எஸ்.பி.பி தனது தொடக்க காலத்தில் எம்.எஸ்.வி இசையில் பாடிய இன்னொரு நேர்க்கோட்டினைத் தவிர்த்த பாடலே,'அவளுக்கென்று ஓர் மனம்' திரைப்படத்தில் இடம்பெற்ற "ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு". முக்கல் முனகலுடன் தொடங்கி, அசுர வேகம் எடுத்து,ஆனந்ததின் உச்சத்தை அளவெடுத்த இப்பாடலில், எஸ்.பி.பி யின் குரல் மறு அவதாரம் எடுத்தது. இதுபோன்ற பாடல்களை வேறு பாடகர்கள் பாடமுடியுமா என்பது கேள்விக்குறியே. காரணம், எஸ்.பி.பியின் குரல், இசையின் மாறுபட்ட தாண்டவங்களுக்காக,இறைவனால் வித்திடப்பட்ட, வித்தியாச விளைச் சலாம்!
குரலின் கோபுரமாகவும்,குழையும் அனிச்சமாகவும்,குமுறும் எரிமலையாகவும், குதூகல மேடையாகவும்,பரவச பானமாகவும் அமைந்த, எஸ்.பி.பியின் மேற்கண்ட பாடல்கள் மட்டுமல்லாது,வேறு சில பாடல்களையும் இங்கே பட்டியலிட்டே ஆக வேண்டும்.
'ஒருதலை ராகம்' திரைப்படத்தில் கேட்ட"இது குழந்தை பாடும் தாலாட்டு",'பகலில் ஓர் இரவில்' இனித்த"இளமையெனும் பூங்காற்று"'வாழ்வே மாயம்'திரைப்படத்தில் ஒலித்த,"நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா, 'புதுப்புது அர்த்தங்கள் திரைப் படத்தில் குரலால் திருமணத்திற்கு குணம் சேர்த்த"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே",'ராஜ பார்வை' திரைப்படத்தில் பொன்மழைத் தூவல் களாக மணம்பரப்பிய "அந்தி மழை பொழிகிறது"{எஸ்.ஜானகி மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து பாடியது}'மறுபடியும்' திரைப் படத்தில் மனதை வருடிய"நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக் கள்"'தர்மத்தின் தலைவன்' என்னும் ரஜினியின் படத்தின் மூலம், என்றென்றும் ரீங்காரமிடும்"தென் மதுரை வைகை நதி"{மலேஷியா வாசுதேவன் மற்றும் பி சுசீலாவுடன் சேர்ந்து பாடியது}மற்றும் 'சிகரம்' திரைப் படத்தில் அவரே தோன்றி,நடித்துப்பாடிய"வண்ணம் கொண்ட வெண்ணிலவே"போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களை,எஸ்.பி.பியின் இசைத் தாலாட்டுகளாகக் கொள்ளலாம்!
இவற்றில் 'ஒருதலை ராகம்' 'சிகரம்'தவிர இதர படங்கள் அனைத் திற்குமே, இளையராஜா இசையமைத்திருந்தார்.'ஒரு தலை ராக'த்திற்கு டி.ராஜேந்தர் இசைவடிக்க,'சிகரம்'திரைப் படத்திற்கு எஸ்.பி.பி யே இசையமைத்திருந்தார்.
இதேபோன்று,குரலினை மேடையாக்கி குதூகலம் பரப்பிய பாடல்களாக,"என்னடி மீனாட்சி"{'இளமை ஊஞ்சலாடுகிறது'}"மேகம் கொட்டட்டும்"{'எனக்குள் ஒருவன்'} "சொர்க்கம் மதுவிலே"{'சட்டம் என் கையில்'}"இளமை இதோ இதோ"{'சகலாகலா வல்லவன்'}"'அடி ராக்கம்மா கைய தட்டு"{'தளபதி' திரைப்படத்தில் ஸ்வர்ணலதா வுடன் இணைந்து பாடியது}''நான் ஆட்டோக்காரன்"{'பாஷா'}"ஒருவன் ஒருவன் முதலாளி"{'முத்து'} "என் பேரு படையப்பா"{'படையப்பா'}போன்ற எண்ணற்ற பாடல்களை வரிசைப் படுத்தலாம். இவற்றில் கடைசி இரண்டு பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும்,''நான் ஆட்டோகாரன்''பாடலுக்கு தேவாவும் இசையமைக்க, இதர ஐந்து பாடல்களிலும்,இளைய ராஜாவின் இசை இரண்டறக் கலந்தது.
வேதனையால் மனதை வெட்டி வீழ்த்திய பாடல்களுக்கு"பாடி பறந்த கிளி பாட மறந்ததடி"{கிழக்கு வாசல்}"குயில பிடிச்சு கூண்டிலடைச்சு"{சின்ன தம்பி}"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்;யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்"{அமர்க்களம்} "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்"{அபூர்வ சகோதரர்கள்}"பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பார்த்ததம்மா"{இதயம்} "காதலே என் காதலே என் காதலே"{டூயட்'}போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். இளையராஜாவின் இசையில் முதல் நான்கும்,பரதவாஜ் இசையில் 'அமர்க்களம்'பாடலும்,ரஹ்மானின் இசைப் பிழிதலில் 'டூயட்' படப் பாடலும்,தனி முத்திரை பதித்தன.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய எஸ்.பி.பியின் குரல் ஆளுமை, இந்த நூற்றாண்டில்,இன்றுவரை,வெண்திரையிலும்,இசை மேடைகளிலும், இசைப்போட்டி தளங்களிலும்,இரவாது பெற்ற இறவா வரமாக,இசைப்போற்றும் அனைவராலும் உணரப்பட்டுவருகிறது. இராகங்களை உயிர் மூச்சென உள்வாங்கி தனது பன்முகக் குரலால் பாடல்களோடு இராகங்களுக்கும் புத்தம்புது பயண இலக்குகளை நிர்ணயித்து,தனது இருநூற்றாண்டு கலந்த இசைப்பயணத்தில் இசை யுடன் தனது குரலையும் இணைத்து,அமரத்துவம் பெறச் செய்தார் எஸ்.பி.பி.
பாட்டுக்கொரு தலைவனாக மட்டும் நில்லாது,எஸ்.பி.பி என்னும் திரை நிரப்பும் கம்பீரத் தோற்றம்,கிட்டத்தட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப் படங்களில் தோன்றி,தன் மென்மையான நடிப்பினால் அனைவரின் உள்ளங் களையும் கொள்ளை கொண்டது.இவற்றில் 'உல்லாசம்''காதலன்''மின்சாரக் கனவு' 'ரட்சகன்' 'பிரியமானவளே''கேளடி கண்மணி''சிகரம்'போன்ற திரைப்படங்கள் அவரின் கதாபாத்திரத் தாலும் நடிப்பு முதிர்ச்சியின் வெளிப்பாட்டாலும்,வெள்ளித் திரைக்கு இன்னும் வெளிச்சமூட்டின என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இவை அனைத் திலுமே தந்தையெனும் நிலையைக் கடந்து,மகன்களிடம் பெரிதுவக்கும், பாசமும் பரிவும் காட்டும் நண்பனாக மட்டுமே, எஸ்.பி.பியை காண முடிந்தது.ஆனால், 'நாணயம்'என்னும் திரைப் படத்தில் நாணய மற்ற கதாபாத்திரமேற்று,தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது,மாறுபட்ட கோணத்தில்,அவரது நடிப்பின் நளினத்தை புலப்படுத்தியது. எஸ்.பி.பியின் இயல்பான, நாணலென குனிந்தெழும் இதமான இலேசான நடிப்பும்,சிகரம் தொட்ட இசையாற்றலும்,மற்ற பாடகர் எவர்க்கும் கிட்டா நிலையே!
நடிப்புக்கடலில் மூச்சினை முழுவதுமாய் இறக்கி,முத்துக்குளித்த செவாலியர் சிவாஜி கணேசனைப்போன்று,இசைக்கடலில் முங்கி,இசை அலைகளாய் பல்வேறு உயரங்களை தோற்றுவித்து கரைகண்டவர் எஸ்.பி.பி. தோல்விகண்ட ஒரு சில சிவாஜியின் திரைப்படங்களிலும் அவரது நடிப்பு தோற்றுப்போனதே இல்லை, என்பதைப் போன்று, தோல்வியுற்ற திரைப்படங்களிலும் கூட,எஸ்.பி.பி யின் பாடல்கள் நிலைத்து நின்று,இப்போதும் அப்படங்களை நினைவுகூறுகின்றன என்பதே சத்தியமாகும்!
உடல் பருமனுக்கும் குரல் கும்மாளத்திற்கும் இடையே நின்றாடும், படைத்தவனின் திருவிளையாடலை,எஸ்.பி.பி யின் சங்கீத ஆலமர விருட்சத்தில்,நம்மால் அவ்வப் போது அடையாளம் காண முடிகிறது. "நாளை என் கீதமே எங்கும் உலாவுமே" என்று தன் குரலால் தனக்கே சாகாவரம் பெற்ற ஒரு தீர்க்கதரிசி, எஸ்.பி.பி.ஒருபுறம் இசையால் விரைந்து பாயும் கடலலையெனவும், மறுபுறம் நடிப்பால் ஆழ்கடலில் அமைதியாக நங்கூரமிட்டு நிறுத்திய கப்பலாகவும்,இருமுகம் காட்டிய ஆறுமுகனின் பேர்கொண்ட அற்புத மனிதரை,தமிழ்த்திரை உலகம் காலமெல்லாம் நெஞ்சில் தாங்கிக் கொண்டாட, கடமைப்பட்டிருக்கிறது.
ப.சந்திரசேகரன் .