மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல திரைப் படங்களின் வெற்றிக்கு,பாடல்கள் பெரும் பங்கு வகித்தன என்பதுபற்றி, இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப் பில்லை.அதே போன்று,அவரின் பாடல் களில்,காதல், தாய்மை,புரட்சி ஆகிய வையே பிரதானமாக முன்னிறுத்தப்பட் டன என்பதும், அனைவரும் அறிந்த ஒன்றே!திராவிட அமைப்பில் தன்னை முழு மனதுடன் இணைத்துக்கொண்ட பின்னர் அவரின் 'தனிப்பிறவி'திரைப் படத்தில் ஜெயலலிதாவுக்காக P.சுசீலா பாடிய,''எதிர் பாராமல் நடந்ததடி''எனும் பாடலுக்கிடையே,முருகனாகக் காட்சி யளித்தார் என்பதல்லாது,MGR ஆலயங் களுக்குச் செல்லும் காட்சி கள் கூட அவர் திரைப் படங்களில் இடம் பெறவில்லை என்றே தோன்றுகிறது.
முற்போக்கு சிந்தனையும்,தன்னம் பிக்கை தாக்கங்களும்,உழைக்கும் வர்க்கத்தின் வியர்வைத்துளிகளும், உள்ளடக்கிய எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களே,அவரின் அரசியல் முகப்பிற்கு அடையாளமும், அங்கீகாரமும்,அமோக மான ஆதரவும் கூட்டியது.டி. எம்.எஸ். பாடல்களே எம்.ஜி.ஆரின் அரசியல் கால்பதிப்பின் முத்திரைகள். இருப்பி னும்,எம் ஜி ஆரின் திரைப்படப் பாடல் களிலும், இறைவனைப் பற்றிய முரண் பட்ட சில பாடல்களும்,தைரியத்தின் மறுவுருவாகப் பார்க்கப்பட்ட அவரின் கதாபாத்திரங்களுக் கிடையே,சோகத்தை வெளிப்படுத் திய கண்ணீர் சிந்தவைத்த சில பாடல் களும் உண்டு.
கடவுளைப்பற்றி 'ஆனந்தஜோதி' திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய,
"கடவுள் இருக்கின்றார்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுக்கிறார்
அது உன் கண்ணுக்கு தெரிகிறதா"
எனும் பாடல்,எம்.ஜி.ஆரின் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்தாலும், 'நாடோடி' திரைப்படத்தில்,அதே கண்ண தாசன் அவருக்காக எழுதி எம். எஸ். விஸ்வநாதனின் இசையில் டி.எம்.எஸ் பாடிய,
"கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்"
எனும் வரிகள் கடவுளையும் மனிதனை யும் இரு துருவங்களாக்கின.இதே தொனி யில்தான், 'தாய் சொல்லை தட்டாதே' திரைப்படத்தில் கவியரசு எழுதி, கே.வி. மகாதேவன் இசையமைப்பில் எம்.ஜி. ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய,
"போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக்கொடுத்தானே
இறைவன் புத்தியைக்கொடுத்தானே!
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியைக் கெடுத்தானே!''
எனும் பாடலும் அமைந்திருந்தது.பின்னர் 'என் அண்ணன்' திரைப்படத்திலும்,
கண்ணதாசனின் வரிகளை,கே.வி.மகா தேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,
"கடவுள் ஏன் கல்லானார்
மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே"
பாடல்,கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளியை உறுதி செய்தது.
பொத்தாம் பொதுவாக,கடவுளையும் மனிதனையும் பிரித்துப்பார்த்த எம். ஜி.ஆரின் திரைப்பாடல்களிடையே, தனி மனிதன் வேதனைக்கும் கடவுளைக் காரணம் காட்டிய பாடலே,'பெரிய இடத்துப் பெண்'திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசன் வரிகளான,
"அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டுவிட்டான்"
என்று தொடங்கி,
"வானிலுள்ள தேவர்களை
வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தை எல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான்"
என்று புராணங்களை காரணம் காட்டி கடவுளை வம்புக்கிழுத்த பாடல். இதே போன்றுதான்'படகோட்டி' திரைப்படத்தில் மீனவச் சமூகத்திற்காக மனமுடைந்து, விரக்தியில் எம்.ஜி.ஆர் வாயசைக்க, அவருக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய வாலியின்,
"தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க
வைத்தான்'
எனும் கடவுளை வசைபாடிய பாடல். மேலே பட்டியலிட்ட பாடல்களில் கடைசி இரண்டு பாடல்களில், அசாதா ரணமாக எம்.ஜி, ஆரிடம் கம்பீரத்திற்கி டையே கண்ணீரைக் காணமுடிந்தது. இவற்றை யெல்லாம் கடந்து முழுமையான சோகத்தை எம்.ஜி.ஆரின் முகத்தில் கொண்டு வந்து அவரைக்கதறவைத்தது,
'நீதிக்குப்பின் பாசம்' திரைப்படத்தில் அவருக்காக டி. எம். எஸ் பாடிய,
"போனாளே போனாளே
ஒரு பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல்
போனாளே"
எனும் சோகத்தை பிழிந்து வைத்த பாடல்.
இப்பாடலுக்கும் கண்ணதாசன் வரியெழுத கே.வி.மகாதேவன் இசையூட் டினார். இதே போன்று, வேறு இரண்டு சோக கீதங்களும் எம்.ஜி.ஆர் திரைப் படங்களில் இடம்பெற்றன.'பணக்கார குடும்பம்' திரைப்படத்தில், எம். ஜி. ஆருக் காக விஸ்வநாதன் இசையில், டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசன் வரிக ளான,
"பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
மல்லிகைப்பூ வாங்கிவந்தேன் பெண்ணுக்குச் சூட
அதை மண்மீது போட்டுவிட்டேன் வெய்யிலில் வாட"
எனும் வரிகள்.எம்.ஜி.ஆருக்கான பாடலா கவே தோன்றாது.இந்த மாதிரி அமைந்த இன்னொரு பாடல்தான் 'தாயைக் காத்த தனயன்"படத்தில் இடம் பெற்ற,
'நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்'
என்று தொடங்கி,
"தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனமிங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயரிங்கே''
என்று துன்பத்தை.தோலுரித்துக் காட்டிய,கண்ணதாசன் வரிகளிலமைந்த கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் சோகத் தின் ஆழம் கண்ட பாடல்.
இந்த வகையில் அமைந்த மற்றொரு பாடல்தான்,'பெற் றால்தான் பிள்ளையா?' திரைப்படத் தில்,எம்.எஸ்.விஸ்வநாத னின் இசையில்,வாலி கவிபுனைந்து, டி.எம்.எஸ் P.சுசீலாவுடன் இணைந்து இருமுறையில் ஒரு முறை சோகமாக கேட்கப்பட்ட,
"செல்லக்கிளியே மெல்லப்பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு"
எனும் கேட்போரை மெய்மறக்கச் செய்த பாடல்.
இவற்றுக்கெல்லாம் மேலாக,1968 இல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் 'ஒளி விளக்கு' திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலி வரிவடித்து,சவுகார் ஜானகிக்காக P.சுசீலா பாடிய,
"இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு"
என்று தொடங்கி,
"ஆண்டவனே உன் பாதங்களை
என் கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழவைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்
முருகையா"
எனும் கடவுளின் பாதத்தில் கண்ணீரை காணிக்கையாகிய பாடல் வரிகள், திராவிட முன்னேற்றக்கழக அரசு அமைந்த அடுத்த ஆண்டில்,எம். ஜி.ஆர் திரைப்படத்தில் இறைநம்பிக்கை வலு வூன்றியதைக் குறிப்பிட்டு,அது அவரின் உள் மனதில் உலவிய இறைபக்தியை வெளிப்படுத்துவதாக விமர்சிக்கப் பட்டது.
மனதில் நின்ற,மாறுபட்ட எம்.ஜி.ஆரின் சில திரைப்படப் பாடல்கள், இப்பதிவில் குறிப்பிடப்பட்டன.காதல், தாய்மை, சமூக நீதி பாதையில் பயணித்த எம்.ஜி.ஆரின் பல பாடல்களுக்கிடையே, கடவுளையும் கண்ணீரையும் வெளிப்படுத்திய எம்.ஜி. ஆர் படப்பாடல்களையும் தமிழ்த்திரை ரசிக்கச் செய்தது,எனும் கருத்தினை வெளிப்படுத்துவதே,இப்பதிவின் நோக்கமாகும்.
===============0====================