Monday, April 10, 2017

வசனங்களின் அதிர்வுகள்:-



                  வசனங்களின் அதிர்வுகள்:- 
"பேரக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல"என்று சூப்பர் ஸ்டார் சொல்லும்போது எத்தனை அதிர்வுகள்.எத்தனையோ அருமையான வசனங்கள் தமிழ்திரையில் திரைப்படம் காண்போரின் செவிகளில் ஆழமாய் பதிந்து மனதில் அழியாத அதிர்வலைகளை ஏற்படுத்தியதுண்டு.ஆருர்தாஸ் தொடங்கி ஏ எல் நாராயணன், மதுரை திருமாறன், மல்லியம் ராஜகோபால், கே எஸ் கோபாலகிருஷ்ணன்,கே பாலச்சந்தர், ஏ பி நாகராஜன், பாரதிராஜா மற்றும் பலரின் வசனங்கள் ரசிகர்களின் நெஞ்சிலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு.ஆனால் வசனங்களைக் காட்டிலும் அவற்றை யார் உச்சரித்து உயிர் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்தே வாய்மொழி வல்லமையால் அதிர்வுகளை ஏற்படுத்தி, வசனங்கள் வாழ்ந்து   கொண்டிருக்கின்றன.  'பராசக்தி' முதல் சிவாஜியின் ஆயுட்காலம்வரை அவர் உச்சரித்த எத்தனை வசனங்கள்  நமது நினைவலைகளில் ரீங்காரமிட்டு வலம் வருகின்றன ."லதா நீ விஸ்கியைத் தான குடிக்கவேணாம்னு சொன்ன! வெஷத்த குடிக்கவேணாம்னு சொல்லலல்ல" என்ற ஒரு சிறிய வசனம் கூட அவர் உச்சரித்த வசனத்தையும் அவர் குறிப்பிடும் பெயரையும்,  அந்த திரைப்படத்தையும், வாழவைத்துக் கொண்டிருக்கின்றன . அதேபோலத்தான் ரஜினியின் கம்பீரமான அதிர்வை ஏற்படுத்தும் வசீகரக் குரலும் ."உள்ளே போ" என்ற இரண்டு சொற்களே அந்த காட்சியையும் அது  இடம்பெற்ற திரைப்படத்தையும் நினைவுக்கு கொண்டுவரும்.அழுத்தமான வசனங்கள் மட்டுமல்லாது சாதாரண வசனங்கள் கூட அதிர்வுக்குரல்கள் மூலம் அழியா வரம் பெறுகின்றன.இந்த குரல் அதிர்வுகளே வசனங்களின் வெற்றியாகும்.                  

No comments:

Post a Comment