உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பர். அதுபோலவே இசையில்லாத் திரைப்படங்கள் இதயத் துடிப்பற்றவையே. பின்னணி இசையில்லாத திரைப்படம் பிணத்திற்கு இணையெனலாம் .ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இசையும் பெரும் பங்கு வகிக்கிறது. பேசும் திரைப்படம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை திரைப்படங்கள் திரையிசையால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.எல்லாத்திரைப்படங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது நெஞ்சில் நிற்க கூடும். ஒருபாடல் கூட நினைவுக்கு வராத கடந்த நூற்றாண்டுத் திரைப்படங்கள் மிகக்குறைவே .
பாடும் நடிகர்களாகிய தியாகராஜ பாகவதர் மற்றும் டி.ஆர் மகாலிங்கம் போன்றோர்களின் பாடல்கள் பல, அவர்களின் திரைப்படங்களின் பெயர்களைச் சொல்லமுடியாவிட்டாலும் அவர்களின் அருமையான குரல் வளத்தால் நம் செவிகளிலும் மனதிலும் அவ்வப்போது இன்னும் வலம்வந்து கொண்டி ருகின்றன. 'நீலகருணாகரனே நடராஜா நீலகண்டனே' 'பூமியில் மானிட ஜென்மமடைந்தும் புண்ணியமின்றி விலங்குகள் போல்' போன்ற பாகவதரின் பாடல்களும், 'செந்தமிழ் தேன் மொழியாள்' 'இசைத்தமிழ் நீ செய்த யாரும் சாதனை' எனும் டி ஆர் மகாலிங்கத்தின் இசைச் சுவடுகளும் காலக்கரு வூலத்தின் பேழைகளாம்.
ஆனால் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் காலத்தில், பின்னணிப் பாடகர்களின் முன்னணிப் பாடல்கள் திரைப்படங்களுக்கு தனி முகவரியைத் தேடித்தந்தன. குறிப்பாக எம் ஜி ஆர் திரைப்படங்களில், பாடல்களுக்கென சிறப்பு முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, அப்பாடல்களால் அவரின் செல்வாக்கு கூடியதை, அன்றைய திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக அமைவது அரிதே. பொதுவாக, எம் ஜி ஆரின் திரைப்படங்கலில் அவருக்கென டி .எம். எஸ் பாடிய அனைத்து பாடல்களுமே, அப்பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களுக்கு,ஒரு அசாதாரண அங்கீகாரத்தை தேடித்தந்தது எனலாம் .மலைக்கள்ளன் திரைப் படத்தில் வந்த 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் தொடங்கி பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒன்றே குலமென்று பாடுவோம்' வரை, அனைத்தும், 'எம் ஜி ஆர் பாடல்' எனும் தனிப்பெருமை பெற்றன, அப்பாடலை டி .எம். எஸ் பாடினாலும், ஏசுதாஸோ அல்லது எஸ் .பி. பி யோ பாடினாலும் அவை அனைத்துமே தமிழகம் முழுவதும் தாரக மந்திர மாயின.
இருப்பினும் எல்லா எம். ஜி. ஆர் படங்களிலும் எல்லா பாடல்களும் நினைவுகொள்ளத்தக்கதாக இருந்தது என்று சொல்லமுடியாது. ஏனெனில், பாடல் வரிகளின் தன்மை, பாடகரின் அப்பாடல்மீதுள்ள ஈர்ப்பு, இசையமைப்பா ளரின் பாடல் அமைப்புமுறை, இவை அனைத்தும் ஒருங்கிணைந்து இறையருள் பெற்றால் மட்டுமே, ஒரு பாடல் அழியா நிலை அடைகிறது. இசைமலர்கள் கலைத்தாயின் பாதம் தொட்டு, கூடுதல் மணம்பரப்பும் என்பதே, இசைமரபாகும்.
எம் ஜி ஆரின் புரட்சிப் பாடல்களைப் போன்று சிவாஜி கணேசனனின் தத்துவப் பாடல்கள் அர்த்தமுள்ள ஆழமான கருத்துக்களாலும் அமுத இசையா லும் கேட்போரின் செவிகளில் தேனாக ஒலித்து ரசிகர்கள் மத்தியிலே சிந்தனைத் தேடலையும் சத்திய நெறியாளுமையையும் தோற்றுவித்தன. ஆலயமணியில் 'சட்டி சுட்டதடா'தொடங்கி 'போனால் போகட்டும் போடா'{பாலும் பழமும்} 'ஆறு மனமே ஆறு' {ஆண்டவன் கட்டளை} 'உள்ளம் என்பது ஆமை' {பார்த்தால் பசிதீரும்} போன்ற அகன்ற வாழ்வியல் சாலை வழியாக, அவன்தான் மனிதனின் 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ''ஆட்டு வித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா 'போன்ற பாடல்களால் தத்துவம் ப்ரபஞ்சத்தைத் தொட்டது .
மேலே குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் ஆழ்கடலில் கவிஞர்கள் மூழ்கி எடுத்த முத்துக்களே 'அவற்றை இசைமேதைகள் மாலையாக்கி கலைத்தாய்க்கு அணிவித்து மகிழ்ந்தனர். கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது இதுபோன்ற பாடல்கள் அத்திரைப்படங்க ளுக்கு அமரத்துவம் அளித்தன. ஒருபடத்தில் ஓரிரு நல்ல பாடல்கள் என்ற நிலை கடந்து, சில சமயங்களில் ஒரு திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே விரிந்த நீலவானமாய், அகன்ற காவிரியாய் ஆர்ப்பரித்து அத்திரைப்படத்தை ஆனந்த கொண்ட்டாட்டமாக்கின.
பட்டியலிட்டு சொல்லவேண்டுமெனில், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, ஆலயமணி, பார்த்தால் பசிதீரும், ஆண்டவன் கட்டளை, ஊட்டிவரை உறவு, போன்ற சிவாஜி கணேசன் திரைப்படங்களும் எம் ஜி ஆரின், அன்பே வா படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், பணம் படைத்தவன் ,குடியிருந்த கோயில், உலகம் சுற்றும் வாலிபன், போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம் .இந்த பட்டியலில் ஒரு சிலருக்கு மாறுபட்ட கருத்தும் இருக்கக்கூடும். இருப்பினும் என்மனதின் இசைத்தாக்கத்தை மட்டுமே இங்கே நான் கொண்டாட இயலும். எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் நடித்திராத வீரத்திருமகன், மற்றும், பாதகாணிக்கை, போன்ற திரைப்படங்களில், அனைத்து பாடல்களும் அருமையாக அமையப்பெற்ற காரணத்தால், இப்பட்டியலில் அவையிரண்டும் அடங்கும் என்பது என் கருத்தாகும்.
இதே போன்று பின்னர் இசை ஞானி இளைய ராஜாவின் இசைமழையில் உயிர்பெற்றெழுந்த இசைக்கனிகளை, ஒரே கூடையாக இறக்கி வைத்த திரைப்படங்களில், பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம் ,வைதேகி காத்திருந்தாள், மெல்லத் திறந்தது கதவு,சின்ன தம்பி போன்ற பல திரைப்படங்கள்,இசையால் மட்டுமே இதிகாச நிலைபெற்றன. எம் ஜி ஆரைப் போன்று இன்றைய கதாநாயகர்களில், விஜய் தன் திரைப்படங்களின் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. பாடல்களால் பெருமையுற்ற திரைப்படங்களைக் காணும்போது, ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ,பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம்.
=================================
Lyrical importance in Tamil movies glorified by the author without any exaggeration.
ReplyDelete