Monday, May 11, 2020

கதாநாயகர்களைக் கடந்த சில ஒருவரி வசனங்கள்

    எம்ஜிஆரும் சிவாஜிகணேசனும் தமிழ்த்திரையுலகில்  கொடிகட்டிப் பறந்த  காலங்களில்,முன்னவரின் சமூகச் சிந்தனையும் பாட்டுகளும் ,பின்னவரின் ஈடு இணையில்லா நடிப்புமே பிரதானமாக இருந்தது. காட்சியை ஒட்டிய நடிகர் திலகம் பேசிய பல வசனங்கள் இன்றைக்கும் நம் நெஞ்சைவிட்டகலாமல் நிற்கின்றன.
   ஆனால் பின்னர் சூப்பர் ஸ்டார் தொடங்கி வைத்த ஒருவரி பஞ்ச் டயலாக்ஸ் அனைத்தும் ரசிகர்கள் மத்தியிலே பெற்ற மாபெரும்  வரவேற்பின் அடிப்படையில்,ஒரு சில கதாநாயகர்கள் அவரின் வழியைப் பின்பற்றத் தொடங்கினர். 
   வழக்கமாக, இதுபோன்ற ஒருசில கதாநாயகர்கள் பேசிய பஞ்ச் டயலாக்ஸ்  மட்டுமே ரசிகர்களின் நினைவில் நின்றாடும். இருப்பினும் சில நேரங்களில், நகைச்சுவை நடிகர்களோ,வில்லன்களோ,அல்லது துணை நடிகர்களோ பேசிய சில ஒருவரி வசனங்கள்,காலத்தை கடந்து நினைவுகளில் நிலைப்பதோடு,அந்த வசனங்கள் இடம்பெற்ற திரைப் படங்களையும் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் நினைவு கூறும். அப்படி நம் நினைவலைகளைத் தாக்கும் ஒருவரி வசனங்கள் சில!
   "இது வேரு அது வேறு" எனும் கே.ஏ.தங்கவேலு விட்டுச்சென்ற'அமர தீபம்' திரைப்படத்தில் வரும் ஒருவரி வசனம் என்றென்றும் வெறும் வசனமாக நில்லாது தமிழ் மொழியின் இரட்டுற மொழிதலின் பொலிவை பறைசாற்றும். இந்த ஒருவரி வசனம் நிறைந்த காட்சி, சிவாஜி சாவித்திரி பத்மினி இணைத்து நடித்த அந்தத் திரைப்படத்திற்கு மெருகூட்டியது  என்றே சொல்லவேண்டும்.
   'முதல் மரியாதை' திரைப்படம் பாரதி ராஜாவின் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட சிவாஜியை நம் கண்முன்னே நிறுத்தி வரலாறு படைத்தது. ஆனாலும் அந்த திரைப்படத்தில் அவ்வப்போது சிவாஜி கணேசன் முன்னே தோன்றி  A.K வீராச்சாமி  பேசும்,"எசமான்,எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்" என்ற ஒருவரி வசனம்,இன்றைக்கும் அந்த வசனத் தாலும்'முதல் மரியாதை'திரைப் படத்தை மறக்கமுடியாமல் செய்தது.
    இதேபோன்று 'ரமணா' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் பேசிய 'மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த' என்ற வசனத்தையும் தாண்டி யூகி சேது பேசிய 'இங்க அடிச்சா அங்க வலிக்கும்' என்ற ஒருவரி வசனம் தனிச் சிறப்பு பெற்றது.
   'நாட்டாமை' திரைப்படத்தில் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்தில் ஊர் நாட்டாமை நடத்தும் கூட்டத்தில்,சாதாரணமான ஒருவர்,"நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு" என்று  கொக்கரிக்கும் ஒருவரி வசனம்,நாட்டாமைப் புத்தகத்தின் வரலாற்றை மாற்றி எழுதியதென்றே சொல்லலாம்.இந்த வசனம் பல திரைப்படங்களில் மீண்டும் நக்கலாக எதிரொலித்தது.  
   சூப்பர்ஸ்டார் பஞ்ச் டயலாகிற்கு முதன்மை பெற்றவர் என்றாலும் 'சந்திரமுகி' திரைப்படத்தில் பிரபு பேசிய 'என்ன கொடும சரவணன்' எனும் ஒரு வரி வசனம் வேறு சில திரைப்படங்களிலும் நையாண்டியாக எதிரொலித்தது.
    நகைச்சுவையில் தங்கவேலுவிற்குப் பின்னர் விவேக் பேசிய 'எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்' எனும் வசனம் நம்மில் இப்போதும் பலரை நினைத்த நினைத்து சிரிக்கச் செய்கிறது.அவ்வளவு ஏன், போக்கிரி திரைப்படத்தில் விஜய் பேசிய "ஒருதடவை முடிவு பண்ணீட் டேன்னா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்" எனும் பஞ்ச் டயலாகையும் கடந்து ,வடிவேலு பேசின 'வட போச்சே'ங்கிற வசனம் ஒரு தனிரகம் தான்.வடிவேலுவின் வாய்க்கொழுப்பில் விளைந்த இன்னொரு வசனமே , சரத்குமார் கதாநாயகனாகத் தோன்றிய 'கம்பீரம்' திரைப் படத்தில் இடம்பெற்ற"அவனா நீ?"எனும் அகம் பாயும் சொற்களாகும்.அதே வடிவேலுவை, ''நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய் " எனும் சிங்கமுத்துவின் விளக்கம் தரா ஒருவரி வசனம், பாடாய் படுத்தியதைக் கண்டு  வாத்தியார் திரைப்படம் பார்த்தவர்கள்  குலுங்கி குலுங்கி சிரித்திருப்பார்கள்.    
   வில்லன்களில் அன்றைய பி எஸ் வீரப்பாவின் "சபாஷ் சரியான போட்டி" எனும் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' வசனம் மிகவும் பிரசித்தி பெற்று பல சூழ்நிலை களில் பலராலும் அடிக்கடி நினைவுகூப் பட்டது. அதேபோலதான்  'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில்  ரஜினிகாந்த் வில்லனாகத் தோன்றி  விஷமத்துடன் அடிக்கடி பேசிய "இது எப்படி இருக்கு" எனும் வசனம்.இந்த ஒருவரித் திருவிழா, பின்னர் பலதிரைப் படங்களில் உலாவந்து.  
   இந்தவகையில்,சத்யராஜ் வில்லனாக நடித்த காலத்தில்,'காக்கிச் சட்டை' திரைப்படத்தில் அவர் பேசிய "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங் களே"எனும் அமர்க்களமான ஒருவரி வசனத்தை,அவரே மேலும் சில திரைப் படங்களில் பேசித் தீர்த்தார். 
    இப்படி நிறைய வசனங்கள் கதாநாயகர்களின்'பஞ்ச் டயலாக்கை 'வெட்கப்படச் செய்திருக்கின்றன என்றால்,அது மிகையாகாது. அவ்வளவு ஏன்? 'சொப்பன சுந்தரி'ங்கிற பேர கேட்டவுடனே, 'கரகாட்டக்காரன்' திரைப்படமும் கவுண்டமணி- செந்திலின் நகைச் சுவை அட்டகாசங்களும் நம் நெஞ்சங்களில் "ச்சும்மா அதிருதுல்ல". 
 ப.சந்திரசேகரன் .   
                                 ======================================         

2 comments: