Saturday, July 11, 2020

வெள்ளித்திரையில்,மலர்களின் பொலிவும் மணமும்

     மலர்கள்  ஏற்படுத்தும் பரவசம்,அவைகளின் நிறங்களால்,மணத்தால் மட்டுமே!.கண்ணுக்கு அழகாக காட்சிதரும் எல்லா மலர்களுமே மணம் பரப்புவதில்லை.அதேபோன்று,அருமையாக மணம்பரப்பும் சில மலர்கள்,{தாழம்பூ போல},விழிகளுக்கு விருந்தாவதில்லை.
     இருப்பினும் மலர்களால் மட்டுமே மண் மாண்புறுகிறது.'மலரும்' என்ற சொல்லே,வளமையின் அடையாளம் என்பதை,'காதல் மலரட்டும்','நட்பு மலரட் டும்','ஒற்றுமை மலரட்டும்',சகோதரம் மலரட்டும்'என்றும்,'வாழ்வில் நம்பிக்கை மலரட்டும்','வெற்றி மலரட்டும்',போன்ற பயன்பாட்டுச்  சொற்றொடர்கள், பல்வேறு வழக்கு மொழிகளாக, தமிழ் மொழிக்கே மெருகூட்டுகின்றன.
    பூக்கள் பூமியின் வரப்பிரசாதம் என்று கருதுவதினாலோ என்னவோ, தமிழ்த் திரைப் படங்களில், தலைப்புகளாகவும் கவிதை வரிகளாகவும், பல்வேறு பூக்களும் அவற்றின் பெருமையும்,பறைசாற்றப்படுவதை நாம் காண்கிறோம். 
    ஒரு திரைப்படத்திற்கு 'பாசமலர்' என்று பெயர் சூட்டி,அத்திரைப் படத்தில்"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"என்றும் "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழிவண்ணமே"என்றும் ஊட்டமான  உவமை உருவகங்களை உள்ளடக்கி,இலக்கிய திரட்சியுடன் பாடல்கள் அமைத்த அந்த கால படைப் பாளிகளின் திறமையும் பெருமையும்,தனி ரகமே.
   பெண்ணை எப்போதுமே மலரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் கவிஞனின் கற்பனை, ஆழ்கடல் மூழ்கி முத்துக்குளித்து மொழியோடு விளையாடி, காலம் வெல்லும் கவிதைகளை படைக்குமாம்! அவ்வாறு முத்துக்குளிக் கையில்,"நான் மலரோடு  தனியாக ஏனிங்கு நின்றேன் "என்று சந்தேகக் குரல் எழுப்பி,உடனே அதற்கு  விடைளிக்கும் விதமாக "என் மகாராணி உனைக்காண,ஓடோடி வந்தேன்" என்று அதற்கான பதிலையும் கூறும் காதலின் மாயப்பாதையில், கள்ளூறும் கவியாவதே,ஆண்மையின் ஆலாபனக் காட்சிகளாம் {இரு வல்லவர்கள்}
     பூக்களை/மலர்களை தலைப்புகளாகக் கொண்ட 'செந்தாமரை''இரு மலர்கள்''தாழம்பூ' 'மகிழம்பூ' 'ஆவாரம்பூ' 'செம்பருத்தி' 'செந்தூரப்பூவே' 'ரோஜா,'நிறம் மாறாத பூக்கள்' என்ற பல்வேறு திரைப்படங்கள் இங்கே குவிந் திருக்க,பூக்களை மாலைகளாக்கி திரைப்படங்களுக்கு கவிதைப் பூங்கா அமைத்துக்கொடுத்த கவிஞர்களின் கற்பனை வீரியத்தால், தமிழ்த்திரைப் படங்கள்,பாடல்களின் பெட்டகமாய்த் திகழ்கின்றன.  இதேபோன்று,'பூ'எனும் சொல்லைக் கொண்டு 'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டு கிறது'' பூவே பூச்சூடவா' 'பூவெல்லாம் கேட்டுப்பார்' 'பூவெல்லாம் உன் வாசம்' 'பூக்களைப் பறிக்காதீர்கள்' போன்ற தலைப்புகளைக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் திரையரங்கு களை அலங்கரித்தன. 
     மலர்களையும் பூக்களையும் கவிதை வரிகளாக்கி மணம்பரப்பிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் எண்ணிலடங்கா. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவதே அப்பாடல்களுக்கு நாம் செலுத்தும் அங்கீகாரமும் அற்பணிப் புமாகும்.'அம்பிகாபதி' திரைப்படத்தில் டி.எம் .சௌந்தராஜ னின் காந்தக்குரலில் ஒலித்த ''வாடா மலரே தமிழ்த்தேனே'''வாழ்க்கைப் படகு' திரைப்படத்தில் பி.சுசீலாவின் மனங்கவரும் குரலில் நாம் கேட்ட "ஆயிரம் பெண்மை மலருட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தி யின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்"மற்றும் 'நிறம் மாறாத பூக்கள்'திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன்,எஸ் பி ஷைலஜா, மற்றும் ஜென்சி குரல்களில் ஒலித்த "ஆயிரம் மலர்களே மலருங்கள்" போன்ற அனைத்துமே,நம் நினைவுகளை சிதராமல் கட்டிப்போட்டன. 
   மலர்களுடன் மனதை சங்கமித்து,பொழுதின் விடியலை மலர்களுக்கு சமர்ப்பித்து,மலர்களை இறைவனுக்குக் காணிக்கையாகும் வகையில்      பி.சுசீலாவின் இதமான மென்மையான குரலில் இறைமைக்கும் மலருக்கும் முடிச்சுப்போட்ட,
 
"மலர்கள் நனைந்தன பனியாலே 
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே 
பொழுதும் விடிந்தது கதிராலே 
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே"

   எனும் எழிமிகு வரிகள் தாங்கிய பாடலாகும்.எல் வி பிரசாத்தின் தயாரிப் பில் உருவான 'இதைக்கமலம்' திரைப்படத்தில் இடம்பெற்ற  ப்பாடல்  இன்றும் நம் நெஞ்சில் சுகமாக பூபா ராகம் கேட்கச் செய்கிது. கண்ண தாசனின் வரிகளுக்கும் காலைப்பொழுதுக் கும் இசையால் இனிமை கூட்டினார் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சுகமான இராகங்களாகும்.  
    இவற்றில் மலர்களைத் தனியாக வகைப்படுத்தி "ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி" {வீரத்திருமகன்} என்றும் "மலரே குறிஞ்சி மலரே"{Dr. சிவா} என்றும்,பெண்மையின் தரத்திற்கும் பெருமைக்கும் புகழாரம் சூட்டிய பாடல்களும் உண்டு. காதலுக்குக் காவடி எடுக்கும் கவிதை வரிகளில் "பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் பிரிக்காதீங்க"{'பூக்களப்  பறிக்காதீர்கள்'}என்றும் "பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்; அவள் வந்து விட்டாள்"{I} என்றும் பெண்ணையும் காதலையும் மலராக்கி, பெரிதுவக்கும் கவிஞர்கள் பலருண்டு.    
   "மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணை யுண்டு"{எங்க வீட்டு பிள்ளை } என்று மலரையும் தென்றலையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கும் கவிதை வரிகள் ஒரு புறமிருக்க "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா"{முள்ளும் மலரும் }என,'தானாடாவிட்டாலும் தன சதையாடும்' எனும் பாணியில், தென்றலை தனக்கென மோதவிடும் மலர்களும் உண்டு என்பதை, கவிஞர்களின் கற்பனையின்  மாறுபட்ட உச்சங்களாய் அறிகிறோம். "தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப்பேசு ,''எனும் பாடல் வரிகள் {கை கொடுக்கும் கை }எவ்வளவு இனிமையாய்,இதமாய் ,நம் செவிகளில் சாய்ந்தாடி, நெஞ்சில் நிலைபெற்று,நளினமாய் நினைவு களில் ரீங்காரமிடுகின்றன.       காதல் வயப்படுகையில்"முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே"{உத்தம புத்திரன்} என்று காதலனும் காதலியும் நினைப்பதும்"பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேனென்றது"{ஊட்டிவரை உறவு }என்று காதலன் மகிழ்ச்சியில் திளைக்க, "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ"{தீர்க்க சுமங் கலி}என்று காதலியோ மனைவியோ கருத்துரைக்க,மென் மையான ஆண்  பெண் உறவிற்கு,மேன்மை சேர்க்கும் மலர்களின் பங்கு, அபரிமிதமானது எனும் மேலான உண்மையை,கவிதை வரிகள்  நமக்கு வெளிக்காட்டுகின்றன. இது போன்ற கற்பனைக் கோலங்களை மேலோட்டமாகக் காணாது,வாழ்வியல் கோட்பாடுகளாக மனம் பதியச் செய்வது,நமது இலக்கிய,பண்பாட்டு நெறியாகும்.   
   தமிழ்திரையில் வெவ்வேறு காலகட்டங்களில்,மலர்கள் பல்வேறு வகை யில் மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இக்கட்டுரையில் குறிப்பிடப் பட்ட சில உதாரணங்களை,'ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' எனும் அடிப்படை யில்,தென்றலைப்போல்,நிலவைப்போல் மலர்களும் படைப்பாளிகளின் பரவச மேலாண்மையைப் பிரதிபலித்து, அந்த பரவசத்தை நாமும் உணரும் வண்ணம்,பாடல் வரிகளாகவும் திரைப்பட தலைப்புகளாகவும்,நமது சிந்தனைக்கும் ,நினைவுளுக்கும் காலம் காலமாய் களிப்பூட்டி  வருகின்றன என்பதே ,திரைத்துறையை நேசிக்கும் அனைவரது மனநிலையாகும். 
 ப.சந்திரசேகரன் . 

2 comments: