தொழில் நுட்பத்தின் உச்சத்தை குறிவைக்கும் உலக திரைப்படத் துறை,மனித வாழ்வியல் தத்துவங்களையும் நடைமுறைகளையும் பின்னுக்குத் தள்ளி,அறிவிய லின் துணையோடு குற்றம் புரிவதையும்,அதே அறிவியலைப் பயன்படுத்தி குற்றங் களை புலனாய்வு செய்து புரையோடச் செய்வதையும், திரைப்படத் தயாரிப்பின் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதை,நம்மால் அவ்வப்போது உணர முடிகிறது.
ஆனால் இந்தியாவிலும்,குறிப்பாகத் தமிழகத்திலும்,மனிதம் சார்ந்து சிந்தித்தும், மனித வாழ்வின் பல்வேறு நிலைப்பாடுகளை மைய்யப் படுத்தியும்,கற்பனையை யும் யதார்த்தத்தையும் இரண்டறக்கலந்து, திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
''இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களே''என்றார் மகாத்மா காந்தி. அவ்வகை யில் இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், கிராமங்களை முன்வைத்தே சுதந்திரத் திற்கு முன்னும் பின்னும்,பல திரைப்படங்கள் உருவாயின.தமிழ்த்திரையை பொறுத்தமட்டில்,கடந்த நூற்றாண்டிலும் சரி,இந்த நூற்றாண்டின் இதுவரையிலும் சரி,கிராமத்து அத்தியாயங் களை புரட்டும் திரைப்படங்களுக்கு குறைவே இல்லை,என்று திட்டவட்ட மாகக் கூறலாம்.
கடந்த நூற்றாண்டில்,கிராமங்களை நெஞ்சில் சுமந்து,தரமான கதைகளையும் திரை நிகழ்வுகளையும் வடிவமைத்து அதற்கேற்ப கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர்களின் பட்டியல் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.குறிப்பாக, ஏ.பீம்சிங், சாண்டோ சின்னப்பதேவர்,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றோர், மண்ணின் மகத்துவத்தை,கிராமங்களை முன்வைத்து பிரகடனப்படுத்தினர்.
இவர்களில் ஏ.பீம்சிங் கதை நிகழ்வுகளுக்கும்,கதாபாத்திரங்களுக்கும்,முக்கியத் துவம் அளித்தார்.சிவாஜிகணேசனை தனது திரைப்படங்களின் ஆன்மாவாகக் கொண்ட ஏ.பீம்சிங்,'பாவ மன்னிப்பு' 'பாகப்பிரிவினை',படித்தால் மட்டும் போதுமா' 'பழனி'போன்ற திரைப்படங்களால், இன்றைக்கும் தமிழ் மண்ணின் பாரம்பரியமும் கலாச்சாரமும் கிராமங்களிலே வேரூன்றி,மரமாகி கிளைகளாகி,மலர்களாகி வசந்தம் வீசியதை, நம்மால் மறக்க முடியாமல் நிலைநிறுத்தி இருக்கிறார்.ஜெமினி கணேசனை வைத்து அவர் இயக்கிய'பொன்னு விளையும் பூமி'{1959}எனும் திரைப் படமும்,அன்றைக்கு திரைப்படங்களை ஆழ்ந்து நேசித்த அனைவரின் பாராட்டையும் பெற்றதாகும்.
தேவர் பிலிம்ஸ் எனும் தனிப்பெரும் நிறுவனம், எம்.ஜி.ஆரையும், முருகனையும், விலங்குகளையும் மும்முனைகளாக்கி,தமிழகத்தின் கிராமங்களின் நிஜங்களை நிழல் பிம்பங்களாக்கி,பட்டி தொட்டியெல்லாம் வலம் வந்தது.ஜெமினி கணேசன் நடித்த 'வாழவைத்த தெய்வம்' தவிர,இதர படங்களான'தாய்க்குப் பின் தாரம்''தாய் சொல்லை தட்டாதே' 'குடும்பத்ததலைவன்''தாயைக் காத்த தனயன்''தருமம் தலை காக்கும்' 'வேட்டைக்காரன்'போன்ற பல எம்.ஜி.ஆர் திரைப்படங்களில்,கிராமப்புற தோற்றங்களை முன்னிறுத்தியே,சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர், தனது வெள்ளித்திரை காட்சிகளை அரங்கேற்றினார்.தேவர் என்று சொன்னாலே,மருத மலை முருகனும்,எம்.ஜி.ஆரும்,விலங்குகளும்,தமிழக கிராமங்களின் இயல்பு வாழ்க்கையும்,கருப்பு வெள்ளை காட்சிகளாய்,வெள்ளித்திரையில் விரைந்தோடி யதை,நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்.
ஏ.பீம்சிங்,தேவர்,ஆகியோரிடமிருந்து சிறிது மாறுபட்டு வசனங்களால்,வரிந்து கட்டி கிராமங்களை சுற்றிவந்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கிராம மக்களின் உணர்வுகளுடன் கலந்து கிராமங்களிலேயே வாழ்வது போன்ற ஒரு மனப்பிரமை யை திரையரங்குகளில் நமக்கு தோற்றுவித்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு இயக்குனர் திலகம் என்ற பட்டம் கூட,மிகச் சிறிய அங்கீகாரமே!
அவரது ஒப்பற்ற இயக்கத்தில்,நாம் கிராமங்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்த அனுபவத்தை பெற்ற திரைப்படங்களின் பட்டியலில்,'கற்பகம்' 'செல்வம்''சின்னஞ்சிறு உலகம்''கண் கண்ட தெய்வம்'கை கொடுத்த தெய்வம்' 'பணமா பாசமா''குலமா குணமா''படிக்காத பண்ணையார்' போன்றவை தமிழ்த் திரை உலகை தலை நிமிரச் செய்தவையாகும்.வசனமும் கதாபாத்திரமும் வசியமுற, திரைக் கதை நிகழ்வுகளை,கலாச்சார மணமுடன் ரசிகர்கள் நெஞ்சங்களில், நீங்காத நினைவுகளாய் நிலை பெறச் செய்தவர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்.
கடந்த நூற்றாண்டின் ஐம்பது,அறுபது,எழுபதுகளில்,வெற்றி கொடி கட்டிய இந்த இயக்குனர்களின் மத்தியில்,கே.சோமுவின் படைப்பில் திரைக்கு வந்து மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிகர் திலகத்தின்'மக்களை பெற்ற மகராசி'{1957}திரைப் படமும்,பல்வேறுவகை திரைப்படங்களை இயக்கிய ஏ.சி. திருலோக்சந்தரின்'ராமு' எனும் திரைப்படமும்,பி.மாதவனின்'பட்டிக்காடா பட்டணமா'எனும் சிவாஜி கணேசன் நடித்த வெள்ளிவிழா திரைப்படமும்,கிராமத்து திண்ணைகளையும் பண்ணைகளை யும்,பாசத்தையும் மோசத்தையும்,கள்ளம் கபடற்ற நடைமுறைகளையும்,கபடுசூது களையும் ஒருசேரக் கலந்து,தமிழக கிராமங்களின் ஒட்டுமொத்த குரலாய் ஒலித்தன என்றால் அது மிகையாகாது.இதே சமயத்தில் வெளியான பி.மாதவனின்'சொந்தம்' திரைப்படமும் மதுரை திருமாறனின் இயக்கத்தில் உருவான 'வாயாடி''சூதாட்டம்' போன்ற திரைப்படங்களும்,கிராமச் சூழல்களை உள்ளடக்கிய கதை வழியில் பயணித்தன.
ஆனால்,இவர்களுக்கிடையே,நகர்ப்புற,மற்றும் படித்த நடுத்தர ரசிகர்களை மனதில் கொண்டே,கிராமக் கதைகளை முற்றிலும் தவிர்த்து,தனது இயக்கத்தில் ஒரு படைப்பாளியின் பல்வேறு பரிமாணங்களை மட்டுமே வெளிப்படுத்திய ஒரே தமிழ்த்திரை ஜாம்பவான்,இயக்குனர் சிகரம்,கே.பாலச்சந்தராவார்.எனது நினைவுக் கெட்டிய வரை அவரது இயக்கத்தில் உருவான,கிராமப் பின்னணி கொண்ட ஒரே திரைப்படம்,கமலும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த 'உன்னால் முடியும் தம்பி' எனும் திரைப்படமாகும்.
இதில் கூட கே.பாலச்சந்தர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் சங்கீத மேதை யின் கட்டுப்பாடான வாழ்க்கை வழிகாட்டுதலைத்தான் முன்னிறுத்தியிருந்தார். இருப்பினும்,இவர் தனது'பட்டினப்பிரவேசம்' எனும் இன்னொரு திரைப்படத்தின் மூலம்,எவ்வாறு கிராமத்தின் கீர்த்தி,நகரங்களின் நமச்சல்களினால் நரகமாகும் எனும் உண்மையை,உரத்த சிந்தனையால்,வெளிப்படுத்தினார்.இதற்கு முற்றிலும் மாறாக,பேரரசு எனும் பாலச்சந்தரின் அடுத்தத் தலைமுறை இயக்குனர்,தன்னுடைய 'திருப்பாச்சி'கதாநாயகனை{விஜய் }பட்டிக்காட்டிலிடுந்து பட்டணத்திற்கு அனுப்பி அங்கே கொடூரமாக வேரூன்றிய வன்முறை அட்டூழியத்தை, முழுமையாக களையெடுத்தார்.
கடந்த நூற்றாண்டின் இறுதி,இரு பத்தாண்டுகளில்,பட்டி தொட்டிகளின் படையுடன் தமிழ்திரையில் தரமாகவும் வலுவாகவும் குடியேறியவர்தான் பாரதிராஜா.கிராமக் கதைகளை திண்ணைகளிலும் மரத்தடிகளிலும், நடைமுறை நிகழ்வுகளாக அரங் கேற்றி,தமிழ் மண்ணுக்கு'முதல் மரியாதை'தேடித்தந்தவர்,இவர்.கமலை சப்பாணி யாகவும்,ரஜினியை பரட்டையாகவும்,கிராமத்தில் பிரவேசிக்கச் செய்து தனது 'பதினாறு வயதினிலே'எனும் முதல் படத்திலேயே,முண்டாசுக்கு முத்திரை பதித்த வர் பாரதிராஜா.
இவர் இயக்கத்தில் பின்னர்'கிழக்கே போகும் ரயில்','நிறம் மாறாத பூக்கள்','புதிய வார்ப்புகள்','வேதம் புதிது','அலைகள் ஓய்வதில்லை','கருத்தம்மா','மண்வாசனை', 'முதல் மரியாதை','நாடோடித் தென்றல்','கிழக்குச் சீமையிலே'போன்ற பல்வேறு கிராமத்து மின்னல்கள்,இடியுடன் கனமழை பொழிந்தன.இன்றைக்கு பாரதிராஜா வை மறந்து, கிராமங் களை நினைத்து பார்க்கவே முடியாது என்பது,அப்பட்டமான உண்மையாகும்.
பாரதிராஜாவின் மூச்சுக்காற்று கிராமங்களை சுற்றிவருகையில்,அது சுவாசித்த பல்வேறு நறுமணங்களே,அவரின் திரைப்படங்களுக்கு கருவாகி,கதையாகி, வெண்திரையில் நிகழ்வுகளாகின.புறணி பேசுதல், கோள் மூட்டுதல்,வசைமொழி யில் களிப்புறுதல், வசந்தத்திலும், வாடைக் காற்றிலும்,வளைந்து நெளிந்து காதல் புரிதல்,வீச்சருவாவில் வீரத்தை பொழிதல்,தீமைகளுக்கிடையே நன்மையினை பறைசாற்றுதல், நிலாவை கையில் பிடிக்க வாலிபத்தில் திமிறுதல்,தலை மயிற்றில் மணி கோர்த்து முதிர்ந்த மன இணக்கங்களை வெளிப்படுத்துதல்,போன்ற பல்வேறு சம்பவங்கள் மூலம்,கிராம இதிகாச நாயகரான பாரதிராஜா,என்றென்றும் தமிழ் மண்ணின் தவப்புதல்வனாவார்.
பாரதிராஜாவைப் பின்தொடர்ந்து அவர் அணியில் பணியாற்றிய கே.பாக்யராஜ், தனக்கே உரிய லந்து பதாதைகளோடு,'முந்தானை முடிச்சு 'ராசு குட்டி','எங்கள் சின்ன ராசா','பவுனு பவுனுதான்','சொக்கத்த தங்கம்' போன்ற தலைப்புகளில் கிராமங்களின் பல்வேறு வாயில்களைத் தட்டி, ஆங்காங்கே நடக்கும் நடப்புகளை முன்னிறுத்தி நையாண்டி தர்பார் கண்டார்.
மேலே குறிப்பிட்ட படங்களில்'சொக்கத் தங்கம்'தவிர,மற்ற அனைத்திலும் அவரே கதாநாயகனாக வலம் வந்தார்.அவரது இதர திரைப்படங்களான'அந்த ஏழு நாட்கள்', 'சின்ன வீடு','இது நம்ம ஆளு','மௌன கீதங்கள்','தாவணிக்கனவுகள்',போன்ற பிரபலமான திரைப் படங்கள் அனைத்திலுமே,கிராமச் சூழல் ஓரளவு தென்பட்டா லும், கதையமைப்பு,சம்பவங்களின் நகர்ச்சி ஆகியவை,கிராமங்களை முழுக்க முழுக்க மைய்யம் கொண்டதாகக் கூறமுடியாது.பாரதிராஜாவின் கவித்துவ படைப் பாற்றலும்,அவர் சீடரின் கலக்கல் படைப்புகளும், கிராமக் களேபரங்களை முற்றிலும் வித்தியாசமாக படம்பிடித்துக் காட்டின என்று சொல்லலாம்.
இந்த இரட்டையர்களின் காலத்திலேயே ஜே.மகேந்திரனின்'எங்கேயோ கேட்ட குரல்','முள்ளும் மலரும்',மற்றும் 'உதிரிப்பூக்கள்',எஸ்.பி முத்துராமனின்'முரட்டுக் காளை''சகலகலா வல்லபன்'மணிரத்னத்தின் தொடக்கப் படங்களில் ஒன்றான 'பகல் நிலவு',தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குனர்களின்'அன்னக்கிளி' கே.பாரதியினுடைய 'மறுமலர்ச்சி' ஆகிய திரைப்படங்கள், கிராமங்களை சரியாகச் சுற்றி வந்து, சிறப்பான திரைக்கதை காட்சிகளுடன், மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றன.இவர்களோடு, மணிவண்ணனின் 'சின்ன தம்பி பெரிய தம்பி',வாழ்க்கைச் சக்கரம், பி.வாசுவின் 'வேல கெடச்சிடுச்சு', 'சின்ன தம்பி' ராஜ் கபூரின்'சின்ன ஜமீன்' 'வள்ளல்' எம்.ரத்னகுமாரின்'சேனாதிபதி' போன்ற பல திரைப் படங்கள் வெளியாகி கிராமங்களை வெண்திரையில் முன்னுக்குத் தள்ளின.
கிட்டத்தட்ட இதே காலச் சூழலில் வெளிவந்த பரதனின் இயக்கத்தில் உருவான 'தேவர் மகன்'திரைப்படம் சிவாஜி,கமல்,நாசர் ஆகியோர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியது.கிராமக் கலாச்சாரத்தையும், தமிழினத்தின் ஒரு குறிப்பிட்ட சமூகத் தினுடைய அருமை பெருமை களையும் போற்றிப்பாடி,அதே சமூகத்தின் மண் விட்டகலா வன்முறை வீரியத்தை,வரலாறாக்கியது இத்திரைப்படம்.
பாரதிராஜாவிற்கு அடுத்தாற்போல் கிராமங்களின் அன்றாட வாழ்வியல் நெறி முறைகளையும் அறியாமையையும்,கிராமப் பஞ்சாயத்து நடைமுறைகளையும், அற்புதமாக வெளிச்சம்போட்டு காட்டினார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.'சேரன் பாண்டியன்'தொடங்கி 'நாட்டாமை','நட்புக்காக',பெரிய குடும்பம்'பரம்பரை','முத்து' 'பாட்டாளி' 'படையப்பா' என்று பல்வேறு திரைப்படங்கள் மூலம் கிராமத்தில் வெற்றிக் கொடி கட்டினார் இந்த அதிரடி படைப்பாளி.
இந்த பட்டியலில் நிச்சயம் இடம்பெறவேண்டிய திரைப்படங்கள்,ஆர்.வி.உதய குமாரின்'கிழக்கு வாசல்''சின்ன கவுண்டர்','பொன்னுமணி','எஜமான்'போன்ற மக்களின் பாராட்டுதலைப்பெற்று,நிறைந்த வசூலைக் குவித்த திரைப்படங்க ளாகும். இவற்றில் 'சின்ன கவுண்டர்' ஒரு கிராமத்து இதிகாசம் என்றே சொல்ல லாம்.அதே போலத்தான் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்','எங்க ஊரு பாட்டுக் காரன்''மனசுக் கேத்த மகாராசா' 'தங்கமான ராசா'போன்ற திரைப்படங்களும் ஆர்.சுந்தராஜனின் 'வைதேகி காத்திருந்தாள்''அம்மன் கோயில் கிழக்காலே' போன்ற திரைப் படங்களும்,திரையரங்குகளில் பல வாரங்களுக்கு ஜனத்திரள் கண்டன.
இவற்றில்'கரகாட்டக் காரன்'வைதேகி காத்திருந்தாள்'இரண்டும் வெள்ளி விழாப் படங்களாகும்.இத்திரைப்படங்களுடன் இணைந்து,ராஜ் கிரணின் 'என் ராசாவின் மனசிலே'அரண்மனைக் கிளி' மு.களஞ்சியத்தின்'மிட்டா மிராசு'சேரனின்'பொற் காலம்''வெற்றிக்கொடி கட்டு'மற்றும்'பாண்டவர் பூமி'தங்கர் பச்சானின்'அழகி' ஆகிய அனைத்துமே கிராமங்களின் கருவூலங்களாகத் திகழ்ந்ததாக,கருதப்பட வேண்டியவையாகும் .
இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட இயக்குனர்களின் திரைப்படங்கள் பட்டியலில், விக்ரமனின் 'சூரிய வம்சம்'ஹரியின்'அய்யா'லிங்குசாமியின் 'ஆனந்தம்',மற்றும் 'சண்டக்கோழி',சமீபத்தில் நம்மில் பலரும் கண்டு வெகுவாக ரசித்திருக்கக்கூடிய எம்.முத்தையாவின்'கொம்பன்' ஆர்.பன்னீர்செல்வத்தின்'கருப்பன்' பாண்டிராஜின் 'கடைக்குட்டி சிங்கம்''நம்ம வீட்டு பிள்ளை',ஆகிய அனைத்துமே தனி முத்திரை பதித்த கிராமீய திரைப்படங்களாகும்.இதில்,இயக்குனர் பாண்டிராஜின் இரு படங் களும் கிராமத்தின் கம்பீரத்துடன்,கூட்டுக்குடும்பத்தின் உணர்ச்சிப் போராட் டங்களையும்,உறவுகளின் ஒட்டுமொத்த பலத்தையையும், உருக்குமான இறுதிக் காட்சிகளாய் இறக்கி,காண்போர் கண்களை கலங்க வைத்தன.
கிராமக் கதைகளுக்கு மிகவும் உகந்த கதாநாயகர்கள் என்று நாம் நினைத்துப் பார்க்கையில்,நடிகர் திலகத்திற்குப் பிறகு நம் மனதில் முதலில் இடம் பிடிப்பவர் கள், ராமராஜன், விஜயகுமார், சத்யராஜ், சரத்குமார் ராஜ் கிரண், ஆகிய ஐவர் மட்டுமே! இவர்களில் சத்யராஜும் சரத்குமாரும் ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மிடுக்கினை கேப்டன் விஜயகாந்திற்கு இணையாக வெளிப்படுத் தக்கூடியவர்கள்.
விஜயகுமார் மீசை வைத்தால் கம்பீரத்துடன் கிராமத்திலும்,மீசை இல்லையேல் நளினதுடன் நகரத்திலும்,பவனி வரக்கூடிய நடிகர்.அதே போலத்தான் கார்த்திக் முத்துராமனும்! பிரபு,கிராமமோ நகரமோ மீசையுடன் மிதமாக, நடிப்பிற்கு மெருகேற் றுவார்.ராமராஜனையும் ராஜ் கிரணையும்,கிராமத்தை விட்டு வெளியே கொண்டு வரவே முடியாது. இவர்களுக்கு அடுத்த படியாக கார்த்திக் சிவகுமாரும் விஜய் சேதுபதியும், இயல்பாக கிராமத்து மண்ணில் காலூன்றினர் என்று உறுதியாகச் சொல்லலாம்.
கிராமங்களை வைத்து திரையிசையை எண்ணிப்பார்க்கையில்,இசைஞானி தமிழ்த்திரைக்குக் கிடைத்த வரப்பிரசாதமே.'அன்னக்கிளி'படத்தில் "மச்சானைப் பாதீங்களா "என்று தொடங்கி,இசையால் தமிழக கிராமங்களின் கிளர்ச்சியினை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்தார் இளையராஜா.அவருடைய கிராம இசை கரகோஷத்தை,பின்வரும் காலங்களில் வெல்லப்போவது யாரோ என்று தெரிய வில்லை.அது இயலுமா என்பதும் சந்தேகமே!
கதையும் இயக்கமும்,நடிப்பும் நிகழ்வுகளும்,இசையும் பாடலும் ,என்று அனைத் தையும் அழகோடும் ஆளுமையோடும்,நமது பார்வைக்கும் செவிக்கும் பங்குவைக் கும் ஒளி ஒலி அமைப்புகளும்,நிலத்திற்கு அழகு சேர்க்கும் நடனக் காட்சிகளும், ஒன்றுபட வெண்திரையை ஒழுங்குடன் ஆக்ரமிப்பதே,நாம் இதுவரை திரையரங்கு களிலும்,சின்னத் திரையின் ஒளிபரப்பிலும்,ஆனந்தமாய் கொண்டாடிய தமிழ் திரையின் கிராமத்து கதைகளாகும்.தமிழகத்து கிராமங்களின் தனிச்சிறப்பை, தன்னிகரில்லா படைப்புகள் மூலம்,தரணியெங்கும் கொண்டு சேர்த்த தமிழ்த்திரை உலகு,விழுந்து வணங்குதற் குரியதாகும்.
ப.சந்திரசேகரன் .
+++++++++++++++++++++++++++++++++++
பட்டினி இருப்பான் முன்பு பல்சுவை விருந்தும், பரதேசி முன்பு கட்டு கட்டாய் பணக்குவியலையும் கொட்டிய நிலையில், எந்த விதமான எதிர் வினை இருக்குமோ இதை முழுதும் படித்தவர்களின் நிலையும் அப்படிதான் இருக்கும்....
ReplyDeleteThoroughly enjoyed reading this. A golden era...
ReplyDeleteThoroughly enjoyed reading this. A golden era...
ReplyDeleteThoroughly enjoyed reading this. A golden era...
ReplyDelete