Friday, June 11, 2021

பாடலை வலம்வரும் பாடல்கள்

   'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது போல் பாடலில்லா திரைப் படம் பாதிக்கிணறு தாண்டிய கதையே!பாடல்களே இல்லாமல் பெருமை யுற்ற'அந்தநாள்'போன்ற ஒரு சில திரைப் படங்கள் இருந்தா லும்,பாடல் கள் அனைத்துமே தேன் சுவையாய் அமைந்த திரைப்படங்கள்  திரை  ரங்குகளுக்குள்ளேயும் வெளியேயும்,தினந்தோறும் ஒலித்து, திகட்டா செவிக்குணவு படைத்த துண்டு.

  சுவையான பாடல்கள் மட்டுமல்லாது, பாடலெனும் சொல்லை சுற்றி வரும்  எண்ணற்ற பாடல்கள், தமிழ்திரை யிசை கானங்களில் தடம் பதித்  துள்ளன. அப்பாடல்கள் பெரும்பாலும் செவிகளில் உட்புகுந்து நம் நெஞ்சங் களை  அமுதுண்ணச் செய்வதுண்டு. அதுபோன்ற பாடல்கள் வருணனைப் பாடல்களாகவோ,சபையேறும் கீதங்களாகவோ திரைப் படங்களில் அமையப்பெறுதலே,வழக்கமாகும். 

   பாடலை உளமார நேசித்து, உயிரோடு கலந்து,உணர்வுப்பூர்வமாக உவகையுடன்,டி.எம்.சௌந்தராஜன் நடித்துப்பாடிய ஒரு ஒப்பற்ற பாடலை,  முதன் முதலில் இங்கே நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும்.கே. சங்கரின் இயக்கத்தில் உருவான'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில் இடம் பெற்ற, 

"எங்கே நான் வாழ்ந்தாலும் 

என்னுயிரோ பாடலிலே 

பாட்டெல்லாம் கவிமழையாய் 

பாடுகிறேன் என்னுயிரே" 

எனும் இம்மெய்சிலிர்க்கும் பாடலை, கவியரசு எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்கு உயிரூட்டினார்.  

  பாடலைப்பற்றி  நாம் கேட்டு,மெய் மறந்த பாடல்,'பாசமலர்' திரைப்படத் தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை யில்,காதல் மயக்கத்தை வெளிப் படுத்தும் வண்ணம்  கே.ஜமுனா ராணி  பாடிய,  

"பாட்டொன்று கேட்டேன்

பரவசமானேன்

நான் அதை பாடவில்லை" 

  எனும் வசீகரப்பாடலாகும்.'பாசமலர்' திரைப்படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் கவியரசு எழுதியிருந் தார் என்பது, இன்னொரு அழகான உண்மையாகும். 

  இதற்கு அடுத்தாற்போல் பாடலைப் பற்றி பாடி நம்மை உளம்குளிரவைத்த பாடல்,அதே விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில் 'வீரத்திருமகன்' திரைப் படத்தில் எஸ்.ஜானகியின் இடைப்பட்ட குரல் இணைப்பில், P.B.ஸ்ரீனிவாஸ் குழைந்து பாடிய, 

"பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்       

காணாத கண்களை காண வந்தாள்

பேசாத மொழியெல்லாம் பேசவந்தாள் 

பெண் பாவைநெஞ்சிலே ஆட வந்தாள்" 

  எனும் ஆனந்த கீதமாகும்.இரட்டை யரின் இசையில்,கவியரசின் எல்லா பாடல்களும்,இத்திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டன என்றால்,அது மிகையாகாது. 

  பாடல்களின் பரிசுத்தம்,உண்மை காதலின் உள்ளடக்கம்.இந்த வகை யில் உணர்வுகளின் உருவகமாக, பாடல்கள் படையெடுத்து,செல்லுமிடம் நோக்கி சென்றடைவதுண்டு.அவ் வாறு சென்றடையமுடியாத தருணங் களில்,இயற்கையை துணைக்கழைக் கும் காதலரும் உண்டு.ப்படி  அமைந்த மறக்க வொண்ணா பாடலே, எம் ஜி ஆரின் 'படகோட்டி' திரைப் படத்தில் இடம்பெற்ற, 

"பாட்டுக்கு பாட்டெடுத்து 

நான் பாடுவதை கேட்டாயோ 

துள்ளிவரும்  வெள்ளலையே 

நீ போய் தூது  சொல்ல மாட்டாயோ" 

  எனும்,அழுத்தமான காதல் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வரிகளாகும். வாலியின் வளமான வரிகளுக்கு விஸ்வநாதன் ராம மூர்த்தி இசை ழுப்பி, வசந்த விழா கொண்டாடினர்.

  இந்தவகையில் அமைந்த மற்று மொரு பாடலே,'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்காக டி.எம். சௌந்த ராஜன் உருக்க மாய்க் குரல்கொடுத்த, 

"ஒரே பாடல் உன்னை அழைக்கும் 

உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்" 

   எனும் ஆழ்ந்த காதலை அனுபவித்து அர்த்தமாகிய,கண்ணதாசனின் வரிகளாகும்.இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசை உயிரூட்டினார்.

  பாடலுக்கான உந்துதலை உணர வைக்கும் ஒரு சில பாடல்களும் உண்டு. அவற்றில்'ஐந்து லட்சம்' திரைப்படத்தில் ஜெமினி கணேச னுக்காக எஸ்.எம் சுப்பையா நாய்டு வின் சுறுசுறுப்பான ஒலியோட்டத் தில்,டி.எம்.எஸ் பாடிய,

" நான் பாடிய முதல் பாட்டு 

இவள் பேசிய தமிழ் கேட்டு 

நான் கவிஞனென்றானதெல்லாம் 

இந்த அழகியின் முகம் பார்த்து" 

   எனும் பாடலும்,புது வசந்தம்' திரைப் படத்தில் எஸ்.எ. ராஜ்குமாரின் மித மான இசை நகர்வில், கே.ஜே.யேசு தாஸ் பாடிய, 

"பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா 

பால் நிலாவ கேட்டு 

வார்த்தையிலே வளைக்கட்டுமா 

வானவில்ல சேர்த்து" 

  எனும் கற்பனையூற்றின் புதுவெள்ள முமாகும்.இவ்விரு பாடல்களையும் முறையே வாலியும் நா.முத்துலிங்க மும் புனைந்திருந்தனர்.   

   உற்சாகமாக,ஒருவர் மேடையில் பாடுகையில் அப்பாடல் ரசிக்கும் படியாக இருப்பின்,அப்பாடலுடன்  இணைந்து மற்றும் பலரும் பாடுவதும் ஆடுவதும் இயற்கையே! இப்படி அமைந்த பல காட்சிகளை நாம் பல திரைப்படங்களில் கண்டு களித் திருக்கிறோம்.அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக'தங்கை' திரைப் படத்தில்  நடிகர் திலகத்திற்காக டி.எம். எஸ் ரசித்துப்பாடிய, 

"கேட்டவரெல்லாம் பாடலாம் 

என் பாட்டுக்குத் தாளம் போடலாம் 

பாட்டினிலே பொருளிருக்கும் 

பாவையரின் கதையிருக்கும் 

மனமும் குளிரும் முகமும் மலரும்"  

   எனும் ஆர்ப்பாட்டமானப் பாடலும், 'கண்ணன் என் காதலன்'திரைப்படத் தில் அதே டி.எம்.எஸ், எம்.ஜி.ருக் காக பரவசமாய்ப் பாடிய, 

"பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி சேரவேண்டும்

கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்"  

எனும் வரிகளும்,அவற்றைப் பின்தொடர்ந்து பொருள்பட பாடப்பட்ட, 

"பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்

கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்" 

போன்ற வரிகளும், 

"ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்" 

  எனும் எம்.ஜி.ஆரின் 'குடியிருந்த கோயில்'திரைப்படப் பாடலை நம் மனதில் நிலை நிறுத்துகின்றன. டி.எம்.எஸ்,பி.சுசீலா இணைந்து சொற்களால் நாவினில் நர்த்தன மாடிய,'குடியிருந்த கோயில்'பாடலை, எவரும் மறந்திருக்க இயலாது.  

   மேற்கண்ட மூன்று பாடல்களுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை யமைக்க,முதல்  பாடலுக்கு  கண்ண தாசனும்,இரண்டாம் பாடலுக்கு  வாலியும், மூன்றாவது பாடலுக்கு ஆலங்குடி சோமுவும்,தங்களது கவித் துவத்தை காணிக்கையாக்கினர். இசை மேடையில் பரவசப்பாடல்களல் லாது நலம்வாழ்த்தும் பாடல்களும் உண்டு. இவற்றில் முக்கியமாக இரண்டை குறிப்பிட்டாக வேண்டும். முதலாவதாக,'எங்கமாமா'திரைப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் நெகிழ்ந்து பாடிய, 

"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் 

நான் வாழ யார் பாடுவார் 

என் பாடல் நான் பாட பலராடுவார் 

இனி என்னோடு யாராடுவார்" 

   நெஞ்சைத்தொடும் வரிகளாகும். கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒரு பாடல்தான் எம்.ஜி.ஆரின் 'நான் ஏன் பிறந்தேன்'திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையோட்டத்தில், டி.எம்.எஸ் குரலுயர்த்திப்பாடிய,

"நான் பாடும் பாடல் 

நலமாக வேண்டும் 

இசைவெள்ளம் நதியாக ஓடும் 

அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்" 

  என்பதாகும். கண்ணதாசனின் 'எங்க மாமா'படப்பாடலும்,வாலியின் எம். ஜி .ஆர் படப்பாடல் வரிகளும்,காலம் வென்று,காதோரம் லோலாக்காக மென்மையாய் அதிர்ந்து, நினை வலைகளில் நிலைகொண்டுள்ளன. 

   பாடல்கள்,காதலுக்கும் மோதலுக் கும்,இசைமேடைகளின் இனிய அர்ப்பணிப்புகளுக்கும் அப்பாற்பட்டு, புவியாளும் பலமுடையவை என்பதைத்தான் 'திருவிளையாடல்' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி .எம்.எஸ்.கம்பீரமாக, மூச்சு முட்டப் பாடிய,

"பாட்டும் நானே பாவமும் நானே 

பாடும் உனைநான் பாடவைத்தேனே" 

   என்று 'சர்வம் சிவமயம்' எனும் தத்துவத்தை இசைமூலம் உணர்த்திய பாடலாகும்.அகிலத்தின் அசைவு களுக்கு ஆண்டவனே மூலம் என்பதை,உச்சம் தொடும் வரிகளால் உலகாளச் செய்தார் கவியரசு.  

   பாடலைப் போற்றும் பாடல்களை நினைத்துப்பார்க்கையில்,அது ஒரு இசைக்கடல்.அதில்  முத்துக்குளித்ததில் ஒரு சில பாடல்களை மட்டுமே இங்கே நினைவுகூற முடிந்தது. அவ்வாறு நினைத்துப்பார்க்கை யில்,'பாடு நிலா'என்றும்'பாடும் வானம்பாடி'என்றும் விண்ணில் கொடிகட்டிப் பறக்கும் குரலுடை யோன்,'உதகீதத்தால் உயிர்களைத் தொட்ட'பாட்டுக் கொரு தலைவன், அமரர் எஸ்.பி.பி பாடிய, 'பாடலைப் பற்றிய பாடல்கள்' ஒரு இமாலயம்  தொட்ட மனப்பிரமையை ஏற்படுத்து கின்றன.குரல்களே பாடல்களின் உள்மூச்சு.இந்த உள்மூச்சின் வீச்சினை ஒட்டியே,பாடலின் மகத் துவம் பன்முகத்தன்மை பெறுகிறது.

ப.சந்திரசேகரன்.

                                          =================================   

  

No comments:

Post a Comment