அழகைப்பற்றி பேசவோ எழுதவோ தொடங்கினாலே,ஆங்கில இலக்கியம் படித்தவர்க்கு,ஜான் கீட்ஸ்{John Keats} எழுதிய,
"A thing of beauty is a joy for ever" மற்றும்
"Beauty is truth,truth beauty
That is all ye know and need to know"
எனும் பொன்னான கவிதை வரிகள் நினைவுக்கு வராமலிருக்காது.தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள் 'முருகன் அல்லது அழகு'எனும் தலைப்பு கொண்ட,காலப்பெட்டகமான இலக்கிய நூல் ஒன்றை,அழகுடன் தமிழுக்களித்தார்.
இப்புத்தகத் தலைப்பினையும்,கீட்ஸ்சின் கவிதை வரிகளையும் ஒப்பிட்டுப்பார்க் கையில்,அழகு உண்மையெனில்,அதுவே ஆன்மசுகம் அளிப்பதாகும். இதேபோன் றொரு கருத்தினைத்தான் அருணகிரிநாதர் வடித்த திருப்புகழ் எனும். இறைவழிப்பாட லும் உணர்த்துகிறது .இந்த உண்மையை 'பஞ்சவர்ணக்கிளி ' திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அழகாய் வரிகளாக்கிய,
"சத்தியம் சிவம் சுந்தரம்
சரவணனன் திருப்புகழ் மந்திரம்"
என்று தொடங்கி
"அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்"
எனும் ஏகாந்த பாடலொன்று பி.சுசீலா வின் தேன் குரலில்,கேட்க கேட்க நம்மை மெய்மறக்கச் செய்தது.இப்பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தி ருந்தனர்.தமிழ்த்திரை உலகு,படத் தலைப் புகளாலும், பாடல்களாலும், அழகுக்கு ஆராதனை செய்யத் தவறியதில்லை.
'அழகு'{1984 film},'அழகன்','ஆணழகன்', 'பேரழகன்','அழகி','பாக்தாத் பேரழகி, அழகே'உன்னை ஆராதிக்கிறேன்',என்று சிறப்பான தலைப்புகள் அழகைச் சுற்றி வலம்வந்திருக்கின்றன.பாடல்களில்"அழகான பொண்ணு நான் அதுக் கேற்ற கண்ணுதான் {பி.பானுமதி'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'} என்று பெண்ணாக, தன்னழகை பறைசாற்றி,"உன்னழகை கன்னியர்கள் கண்ட தினாலே உள்ள மெலாம் உன் வசமாய் ஆனதினாலே"{பி.சுசீலா;'உத்தம புத்திரன்'}என்று ஆணின் பேரழகைப் பாராட்டி"அழகே வா அருகே வா"{பி.சுசீலா'ஆண்டவன் கட்டளை'}என்று அழகிற்கு வரவேற்பு தோரணம் கட்டி, அழகை அனுபவித்து,ஆர்ப்பரித்த தமிழ்த் திரை பாடல்கள்தான்,எத்தனை எத்தனையோ!
"அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு
அசைந்திடும் பூச்செண்டு
கனவுக்கு கனவு நினைவுக்கு நினைவு
கரைந்திடும் கற்கண்டு" { பி சுசீலா; 'வீரத்திருமகன்'}
என்று இயற்கையாய் அழகுடன் பயணித்தும்,
"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை"
{P.B. ஸ்ரீனிவாஸ் எஸ் ஜானகி; 'நெஞ்சம் மறப்பதில்லை'} என்று அழகின் ஆத்மாவை,அகன்று விரிந்த பரம்பொருளாய்,காதலின் வடிவில் தரிசிக் கும் மனப்போக்கும்,பாடல்களாய் மனதில் பதிகையில்,திரையிசை தனித்தடம் பதிக்கிறது.
மேலே குறிப்பிட்ட பாடல்களில் பானுமதியின் பாடலை ஏ.மருதகாசி புனைய எஸ்.தக்ஷிணாமூர்த்தி இசை யமைத்திருந்தார்.'உத்தமபுத்திரன் படப் பாடலுக்கான கே.எஸ்.கோபால கிருஷ்ணன் வரிகளுக்கு,இசைமேதை ஜி.ராமநாதன் இசையமுதூட்டினார் .இதர மூன்று பாடல்களும் கவியரசின் கைவண் ணத்தில் உருவாக,மெல்லிசை மன்னர்[கள்] இசைவிருந்து படைத்தனர்
சோகத்தை அழகாக்கி,அழகை சோகத் துடன் வெளிப்படுத்தி,'வைதேகி காத்திருந்தாள்'திரைப்படத்தில் எஸ்.ஜானகியின் மனதை உலுக்கும் குரலில் இதயத்தில் ஈட்டியெனப் பாய்ந்த பாடலே,
"அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதுமேன்"
எனும் வாலியின் வலிசுமந்த வரிகள். இசைஞானியின் இசையில்,காலம் சென்ற ராகவேந்திராவின் நட்டுவனார் பங்கேற் பும்,ரேவதியின் அசுரவேக நடனமும் உள்ளடக்கி,இப்பாடல் அழகின் ஆழம் கண்டது எனலாம்.
அழகை வார்த்தைகளால் வடித்தெடுத்து, கவிதைக்கு மட்டுமல்லாது, தமிழ்த் திரைக் கும் பெருமை சேர்த்த மூன்று பாடல்களை அள்ளித்தந்தார், கவிப்பேரரசு வைரமுத்து. அதில் முதலாவதாக வந்ததே,'புதிய முகம்' என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற,
"கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல்பெண் அழகு
இளமைக்குநடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்குநிலவழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
விடிகாலை விண்ணழகு
விடியும்வ ரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான்அழகு"
எனும்,தீந்தமிழ் வரிகளால், திரையிசை யில் இலக்கியம் படைத்த பாடல். இசைப் புயல் ஏ.ஆர்.ரெஹ்மானின் இசையுடன் கலந்து,உன்னி மேனனின் காந்தக் குரலில் என்னமாய் இதயத்தை வருடியது இப் பாடல்!
அடுத்தது சூப்பர்ஸ்டாரின் 'பாஷா' திரைப்படத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில்,கே.எஸ் சித்ராவும் எஸ்.பி.பி யும் ஆனந்தப்பரவசத் தில் பாடிய,
K.S.Chithra:-
"அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழ் அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு”
ஓஓ நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற
அஞ்சு விரல் அழகு
அழகு அழகு...................
SPB:-
அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
நெருங்கி வரும் இடை அழகு
வேல் எரியும் விழி அழகு
பால் வடியும் முகம் அழகு
ஓஓ தங்க முலாம் பூசி வைத்த
ஆங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
அழகு அழகு அழகு அழகு".
எனும் இனிய டூயட் பாடல். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்,புதுமை யான காட்சியமைப்புகளுடன் தேவாவின் இதமான இசையோட்டத்தில், இரு இசைச் செல்வங்கள் குரல்களில் என்றென்றும் இனிக்கும் பாடலாகும் இது. மூன்றாவதாக 'லவ் டுடே'{Love Today} திரைப்படத்தில் இளைய தளபதிக்காக,ஷிவாவின் இசையில்,பாடுநிலா எஸ. பி.பி பாடிய,
"என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன்தோள் சாய்ந்ததே"
எனும் இந்த அருமையான வரிகள், ஒய்யாரமாய் அழகை தனது உடமை யாக்கிய பெருமையில்,காதல் வயப்பட்ட இளைஞனின் பெருமிதத்தை நம்முடன் பங்குவைத்தன.அழகை சிந்தையில் போற்றி கொண்டாடிய இந்த மூன்று பாடல்களும்,தமிழ்திரையின் இசை வரலாற்றுப் பக்கங்களை செழுமையுடன் கூட்டின என்றுதான் கூறவேண்டும்.
இதேபோன்று நம் சுவாசத்துடன் அழகைச் சேர்த்த பாடலே 'சைவம்' திரைப்படத்தில் அமரர் நா.முத்துக்குமாரின் அழகடர்ந்த சொல்வளத்தால் சொர்க்கம் படைத்த,
"அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
.............................................
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மை அதுதான் மெய்யாய் அழகு
...................................................
இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு
...................................................
பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும்
நம் நேசம் ரொம்ப அழகு
இந்த ஏற்றமிகு வரிகளை மழலை மொழி யில்,பாடகர் உன்னி கிருஷ் ணனின் மக்கள் உத்தரா கிருஷ்ணன் பாட,அதற்கு ஜி.வி பிரகாஷ் நீரலையில் மிதக்கும் மலர்கள் போல,இசையமைத்திருந்தார். அழகு ஒரு அழியா ஆனந்த பரவசம் என்பதை, எவ்வளவு இதிகாசத்தன்மை யுடன் இது போன்ற பாடல்கள் வெளிப் படுத்துகின் றன.
அழகை தமிழாக்கி,தமிழை அமுதாக்கி, கற்பனையால் கவிதை கோபுரங்கள் உருவாக்கிய,திரையிசைக் கவிஞர்களும், அவர்களால் பெருமையுற்ற தமிழ்திரை யும்,அழகைப் பற்றிய பாடல்களை ஆலய மணிகளாய் என்றென்றும் ஒலிக்கச் செய்து,மனதிற்குள் மங்களம் சேர்க்கின் றன.
****************0********************