காலக்கடலில்,உயிரினங்கள் அலை அலை யாய் சீறி எழுவதும் பின்னர் கடலுக்குள் கரைந்துபோவதுமே வாழ்க்கை.கால ஓட்டத் தில்,மனிதன் வரலாற்று ஏடுகளை உருவாக் குகிறான்.மனிதன் மடிந்தாலும் வரலாறு நிலைக்கிறது. காரணம்,கடலில் அலைகள் எழுந்து பாய்ந்து கரையைத் தொட்டு மீண்டும் கடலில் சங்கமிப்பதுபோல் மனித வாழ்வும் காலக்கரைதொட்டு காலக் கடலில் காலாவதியாகிறது.மானுடம் தொடரும் வரை வரலாறும் தொடரும்.பெருகி நிலைக் கும்.
அவ்வாறு பெருகி நிலைத்திடும் வரலாறு களில்,தமிழ்த்திரை வரலாறும் ஒன்றாகும். காலத்தை கருத்தில்கொண்டு பணியாற் றிய தமிழ்த்திரை,காலத்தின் பயணத்தை யும் பயன்பாட்டினையும்,பல்வேறு கோணங் களில் சிந்தனை வடிவாக்கி,சொற்களால் திரைப்பட தலைப்புகளாகவும்,பாடல் வரிக ளாகவும் வரலாற்றுப் பின்னலாக்கி, வாழ்வி யலாக்கியது.பெற்காலம்,எதிர்காலம், துள்ளித்திறிந்த காலம்,அது ஒரு கனாக் காலம்,காலம் வெல்லும்,காலம் மாறிப் போச்சு,காலமெல்லாம் காதல் வாழ்க,என்று பல்வேறு தலைப்புகளை,காலக்கடலில் படகுகளாக்கியது.
காலப் படகுகளை கவிதைகளாக்குகை யில், திரைக்கவிஞர்கள்,காலத்தின் முக்கியத் துவத்தை முதன்மைப்படுத்தும் விதமாக,
"காலம் பொன்னானது
கடமை கண்ணானது"(கல்யாணமாம் கல்யாணம்)
என்றும்,
"காலங்கள் உனக்காக காத்திருக்காது
காலடிச் சுவடுகள் கூடவராது"( பெண்ணை வாழவிடுங்கள்)
என்றும்,
"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவரவிட்டால் தூக்கமில்லை மகளே "(சித்தி)
என்றும்,பல்வேறு பாடல்களை எழுதி வைத்தனர்.இதில் முதல் பாடலை எம்.விஜய பாஸ்கரின் இசையில்,எஸ்.பி.பாலசுப்ர மணியம் பாட,இரண்டு,மற்றும் மூன்றாம் பாடல்களை,பி.சுசிலா மிகவும் நிதானமாக, முறையே,எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் இசை யில் பாடியிருந்தார்.பஞ்சு அருணாச்சலம் முதல் பாடலையும் இதர இரண்டு பாடல் களை கண்ணதாசனும் எழுதியிருந்தனர்.
இந்த சிந்தனையை சற்றே விலக்கி வைத்து,காலத்தின்மீது நம்பிக்கை வைத்து, தன்னை உற்சாகப்படுத்துவதோடு நில்லாது பிறருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம்,
"எங்கே போய்விடும் காலம்
அது என்னைமும் வாழவைக்கும்
உன் இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்" (தாழம்பூ)
என்றும்,
"காலமகள் கண்திறப்பாள் சின்னைய்யா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா
நாலுபக்கம் வாசலுண்டு சின்னைய்யா
அதில் நமக்கும் ஒரு வழியில்லைய்யா என்னய்யா" (ஆனந்த ஜோதி)
என்றும்,
"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே"(சிவகாமியின் செல்வன்)
என்றும்,அற்புதமான,வாழ்க்கைக்கு ஒளியூட்டும் பாடல்கள் உண்டு.
இதில் முதல்,மற்றும் மூன்றாம் பாடல் களின் வரிகளை வாலி எழுத,'ஆனந்த ஜோதி' பாடலை கவியரசு எழுதியிருந்தார். வரிசையாக,டி.எம்.எஸ்ஸும்,பி.சுசிலா வும்,மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் இப்பாடல்களை பாடியிருந்தனர்.'தாழம்பூ' திரைப்படத்திற்கு கே.வி.மகாதவனும், இரண்டாம் பாடலை எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்தும்,மூன்றாவது தன் பாடலை தான்மட்டும் தனித்தும் இசையமைத்திருந்தார்.
பாசத்தில் ஒன்றிய அண்ணனும் தங்கை யும் காலத்தின் மீது மட்டற்ற நம்பக்கை வைத்து,தாங்கள் சந்திக்கவிருக்கும் நல்ல காலம் வருகையில்,அதனால் மற்றவர் வாழ் விலும் வசந்தம் வரும் எனும் பொன்னான கருத்தை,பரவசத்துடன் பாடிய பாடலொன்று அமரத்துவம் கண்ட பாசமலர் படத்தில் அரங்கேறியது.டி.எம்.சௌந்தராஜனும் பி.சுசிலாவும் பாடிய,
"எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே"
எனும் அந்த அரிய கண்ணதாசன் வரி களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆனந்த மாய் இசையூட்டினர்.
தான் துயருற்ற நிலையில் இருக்கும் போதும்,தன்னைப்புறக்கணித்தோர்க்கு, காலத்தின்மீது நம்பிக்கை வைத்து,தன் ஆதங்கத்தை ஆதுதிரமாய் வெளிப்படுத் தும் வகையில் அமைந்த கனமான பாடலே, 'எங்க ஊரு ராஜா'திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ் ஆக்ரோஷமாய்ப் பாடிய
"யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க;
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க"
எனும் முரட்டு சவால் பாடல்.கண்ணதாச னின் இந்த இயல்பான வரிகள்,மெல்லிசை மன்னரின் இசைமழையில்,கண்ணீர்த்துளி களை கடலாக்கியது.
காலத்தை காதலுடன் பிணைத்து
"காலமெல்லாம் காதல் வாழ்க"( படமும், 'கால மெல்லாம் காதல் வாழ்க')
என்று,காதலில் மூழ்கிப்பாடுவதும்,
காலத்தை நதியாக்கி அதில் காதல் படகை விடுவதாய்,
"காலமென்னும் நதியினிலே
காதலென்னும் படகுவிட்டேன்
மாலை வரை ஓட்டிவந்தேன்
மறு கரைக்கு கூட்டிவந்தேன்" (பரிசு)
என்று மெய்மறந்து பாடுவதும்,இளமைக் கால கனவுகளாகும்.இரவையும் நிலவை யும் இணைத்து வைத்து,
"இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனாக்காணும்"
எனும் வரிகள் கொண்டு தொடங்கும் பாடலொன்றை,"டிக்டிக்டிக்" திரைப்படத் திற்காக,வைரமுத்து எழுதி எஸ்.ஜானகி பாட,இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த அனுபவத்தில் கடந்த கால கனவுக ளில் மிதந்து,
"வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்.
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்" ( தியாகம்)
என்று பாடி,சோகத்தில் சுகம் காண்போரும் உண்டு.
வாலி எழுதிய "காலமெல்லாம் காதல் வாழ்க" பாடலை பி. உன்னிகிருஷ்ணனும் கே.எஸ்.சித்ராவும் பாட,அதற்கு தேனிசைத் தென்றல் தேவா இதமாய்,இசை கூட்டியிருந் தார்.'பரிசு'மற்றும்'தியாகம்'திரைப்படங் களின் கண்ணதாசன் வரிகளை பி.சுசிலா வும் எஸ்.ஜானகியும் பாட,கே.வி.மகாதேவ னும் இளையராஜாவும் இசையமைத்திருந் தனர்.
காதல் வயப்படுகையில் காலத்தோடு காதலியை உருவகப்படுத்தி,காதலை கொண்டாடும் வண்ணம்,கவியரசு எழுதி P.Bசீனிவாஸ்,விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் இசையில் காலம் வென்ற,'பாவ மன்னிப்பு'திரைப்படப்பாடலான "காலங் களில் அவள் வசந்தம்"பாடல் என்றும் இதயம் நிறைந்த தேன்சுவைப்பாடலாகும்.
காலத்தின் போக்கையும்,காலமெல்லாம் எத்தர்களாய் விளங்கும் மனிதர்கள் பற்றியும், பட்டயம் கூறும் பாடல்கள்,தமிழ்த் திரையிசையில் தனியிடம் பிடித்துள்ளன. அவற்றுள்'உலகம் இவ்வளவுதான்'திரைப் படத்தில் நாகேஷுக்காக டி.எம்.எஸ்.பாடிய
"காலம் போற போக்கை பார்த்தா யாரு பேச்சை கேட்பது
கவலைப்பட்டு என்ன பன்ன ஆனபடி ஆகுது ஆனபடி ஆகுது"
எனும் அவினாசி மணியின் பாடலுக்கு வேதா கம்பீரமாய இசையமைத்திருந்தார். இதேபோன்று காலத்தை விமர்சித்து,
"காலமடி காலம் கலி காலமடி காலம்"
எனும் சீர்காழி கோவிந்தராஜன் உரத்த குரலில் அதிவேகமாய்ப் பாடிய பாடல், 'மாதவி'எனும் திரைப்படத்தில் இடம் பெற்றது.கா.மு.ஷெரீப் எழுதிய இப்பாடல் கே.வி.மகாதேவனின் அற்பதமான இசை யில் உருவானது. ஒவ்வொரு வரியிலும் "காலமடி காலம்"எனும் சொற்கள் இடம் பெறுவது இப்பாடலின் தனிச்சிறப்பாகும். 1959 இல் வெளியான இந்த திரைப்படத்தி லேயே,காலம் இப்படி விமர்சிக்கப்பட்டிருப் பதை பார்க்கையில்,இக்காலத்தில் நிகழும் மாற்றங்களை,சொற்களால் விளக்கிட இயலாது.
மனிதன் காலத்தை மாற்றுகிறான் என்றும், காலம் மாறினாலும் மனிதன் சகமனிதனை ஏமாற்றத் தவறுவதில்லை என்றும், உண்மை நிலைமை பரைசாற்றும் இரண்டு இணையிலாப் பாடல்களை,நாம் பலமுறை கேட்டு மகிழ்ந்திருப்போம்.'மனிதன் மாறவில்லை'திரைப்படத்தில்
"காலத்தை மாற்றினான்.
கோலத்தை மாற்றினான்
கொள்கையை மாற்றினான்
ஆனால்
மனிதன் மாறவில்லை
அவன் மயக்கம் தீரவில்லை"
எனும் சீர்காழி கோவிந்தராஜனும் பி.சுசிலாவும் பாடிய பாடலும்,'மலைக் கள்ளன்'திரைப்படத்தில்
"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே,
நம் நாட்டிலே"
எனும் டி.எம்.எஸ் பாடிய பாடலும்,எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.இதில் முதல் கண்ணதாசனின் பாடலுக்கு கண்டசாலா வும் 'மலைக்கள்ளன்'தஞ்சை N.ராமைய்யா தாஸ் வரிகளுக்கு,எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவும் நளினமாய் நாதம் படைத்தனர்.
கடந்து போகும் கால ஓட்டத்தில்,கரைந்து போகமல்,வரலாற்றுச் சிறப்போடு வாழ்ந்து முடிப்போரை,காலத்தை வென்றவர் என்று பெருமை போற்றும் விதமாக,
"காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்ப்பவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ"
என்று வாழ்த்திப் பாடுவதுண்டு.'அடிமைப் பெண்'திரைப் படத்தில் பி.சுசிலாவும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடிய,இந்த அமுத கானத்திற்கான வரிகளை,அவினசி மணி எழுத,கே.வி.மகாதேவன் ரம்யமாய் இசை யமைத்திருந்தார்.இவ்வாறாக காலத்தை முன் நிறுத்தி,வாழ்க்கைத் தத்துவங்களை கூறும் இன்னும் பல பாடல்கள் இருக்கக் கூடும்.
வள்ளுவர்'காலமறிதல்'என்னும் அதிகாரத் தில்,பத்து குறள்களில் காலத்தின் மேலாண் மையை வகுத்திருந்தாலும்,கலைஞரின்
"கலக்கத்திற்கு இடம்தராது உரிய காலத் திற்கென காத்திருப்போர் உலகத்தையே வென்று காட்டுவர் "எனும் பொருளறியும் விதமாக,
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
என்ற குறள் தனித்துவம் பெருகிறது.
ஆனால்,இந்த சிந்தனையிலிருந்து விலகி,காலத்தயும் ஞானத்தையும் காதல் வெல்லும்,எனும் உறுதியுடன்,
காலங்கள் பிரித்தபோதும்
கடவுளே தடுத்தபோதும்
கோலங்கள் நரைத்தபோதும்
குலமெலாம் வெறுத்தபோதும்
பாலங்கள் மீண்டும் சேர்ந்தால்
பார்வையைக் கண்ணீர் மூடும்
ஞாலங்கள் அதற்குக்கீழே
நான் கண்ட காதல் உண்மை.
எனச் சூளுரைக்கிறார் கவியரசு கண்ணதாசன்.
பதிவை முடிக்கும் தருவாயில் தோன்றும் வலுவான கருத்து யாதெனின்,காலச் சக்கரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே யொழிய,மாறுவதேயில்லை.ஆனால், 'மாற்றம் ஒன்றே மாறாதது' எனும் சித்தாந் தத்தில் ஊறிப்போன மனித இனம், காலத்தை கண்ணாடி ஆக்கி,காட்சிகளை மாற்றிக்கொண்டே இருப்பதோடு,காணும் காட்சிகளை விமர்சிக்காது,காட்சிகளை பிரதிபலிக்கும் கண்ணாடியை தரம் தாழ்த்து கிறது.இதன் வெளிப்பாடே, காலம் மாறிப் போச்சு என்பதும்,காலம் கலிகாலம் என்பதுமாகும்.ஓடிக்கொண்டிருக்கும் காலத்தோடு ஓடப்பழகும் மானிடம்,தன் ஓட்டத்திற்கு ஏதுவாக, காலத்தையும் கோலத்தையும் மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே வாழ்க்கையின் வட்டமாகும்!.
ப.சந்திரசேகரன்.
சிறப்பு... காலத்தால் அழியாத பாடல்கள்.... பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் அருமையான பதிவு... நன்றி சார்
ReplyDeleteநன்றி.திரு.மணிகண்டன்.
ReplyDelete