Tuesday, April 11, 2023

கவண்டமணியின் தனி ஆவர்த்தனம்
    கவுண்டமணியையும் செந்திலையும் இணைத்து இவ்வலைப்பதிவில் ஏற்கனவே ஒரு ஆங்கிலக்கட்டுரை பதிவிட்டிருந்த போதிலும்,சமீபத்தில் ஒருஉணவு விடுதி யில் அவரை நேரில் சந்தித்தபிறகு, செந்திலிடமிருந்து அவரைப் பிரித்து அவரின் தனி ஆவர்த்தன நகைச்சுவை பிரம்மாண்டத்தை மைய்யப்படுத்தி,ஒரு சிறப்பு பதிவு போட வேண்டும் எனத் தோன்றியது.

   செந்திலுடன் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவற்றில் என்றும் மனதில் நிற்கும் படங்களில்'சின்ன கவுண்டர்','சின்னவர்','பாட்டுக்கு நான் அடிமை','ஊரு விட்டு ஊரு வந்து', 'நாட்டாமை','கரகாட்டக் காரன்','தங்கமான ராசா','ஜென்டில் மேன்','ஜெய்ஹிந்த்' 'கர்ணா',போன்ற வற்றை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.சொப்பன சுந்தரி காரும்,இரண்டு வாழைப் பழக் காட்சியும், 'கரகாட்டக் காரன்' நகைச்சுவையை,பட்டி தொட்டி எல்லாம் பரவலாய் பவனி வரச் செய்தது. மேற் கண்ட பட்டியலில் கடைசி மூன்று படங்களில், அர்ஜுனுக்கும் சரியான ஈடு கொடுத்தார் கவுண்டமணி.மேலுப் அரஜுனின்'ஆயுத பூஜை'திரைப்படத்தில் செந்தில் இல்லாமல் அரஜுனுடன் தனித்து பயணித்தார் கவுண்டமணி.

  இடையில் செந்திலை கழற்றிவிட்டு அவர் பல படங்களில் பிரதான கதாநாயகர் களுடன் இணைந்து பட்டையை கிளப்பி யிருக்கிறார்.'பதிநாறு வயதினிலே' திரைப்படத்தில் ரஜினியின் எடுபிடியாக பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்கு முன்னரே,அவர் எம்.ஜி.ஆரின், 'ஆயிரத்தில் ஒருவன்','உழைக்கும் கரங்கள்',சிவாஜியின்,'ராமன் எத்தனை ராமனடி''தேனும் பாலும்'உட்பட,ஏழெட்டு திரைப்படங் களில் சிறிய கதாபாத்திரங் களில் தோன்றியிருக்கிறார்.ஆனால் அவரின் நடிப்பு அடையாளத்தை தமிழ்த் திரை உலகில் பதியச்செய்த பெருமை பாரதிராஜாவுக்கே உண்டு.அதற்குப்பிறகு அவரை பிரபலமாக்கிய பெருமை கோவை தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸையேச் சாரும்.

  'பதினாறு வயதினிலே'திரைப்படத்தில் "பரட்ட'' என்று ஒவ்வொரு முறையும் சொல்லி ரஜினியின் கதாப்பாத்திரத்தின்  பெயருக்கு அழுத்தம் சேர்த்தும்,'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்தில் தனக்குச் சொந்தமான லைன் வீடுகளை வாடகைக்கு விட்டு,இந்த "சென்னை மாநகரத்திலே" என்று தொடங்கி தன் வீட்டு வாடகைதாரர் களிடம் கூவிப் பெருமை பாடியதையும் அப்படங்களைப் பார்த்தவர்  எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.சரத்குமாரின் 'சூரியன்'திரைப் படத்தில் டுபாக்கூர் அரசியல்வாதியாகத் தோன்றி"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"என்று கூறுவதும், பின்னர் அதே  சரத்குமாருடன் 'ரிஷி' திரைப்படத்தில் நகைச்சுவையும் வில்லத் தனமும் சேர்ந்த அரசியல்வாதியாகத் தோன்றியதும் அவரின் தனிச்சிறப்பாகும்

  'பதினாறு வயதினிலே'திரைப்படத்திற்குப் பிறகு அவர் ரஜினியுடன் 'உழைப்பாளி', 'மன்னன்','பாபா'போன்ற திரைப்படங்களில் இணைந்து,களைகட்டும் காமெடி தர்பார் படைத்தார்.குறிப்பாக 'மன்னன்' திரைப் படத்தில் அவரும் ரஜினியும் பொய்க் காரணங்கள் கூறி விடுப்பு எடுத்து திரை யரங்கில் விஜயசாந்தியால் அடையாளம் காணப்பட்டு மறுநாள் தொழிற்சாலையில் அவரிடமிருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பின்னர் மாட்டிக்கொள்வது, கொள்ளை சிரிப்பை வரவழைத்தது.

  சத்ய ராஜுடன் கவுண்டமணி இணை கையில் அந்த இரட்டையரின் லொள்ளும், ரகளையும், தனி ரகம்."அப்பா உலகமகா நடிகன்டா" என்று கூறுவது தனி ஆவர்த் தனத்தின் அலம்பல்.அதற்கு சத்யராஜும் அப்பாவி போல் முகம் வைத்துக்கொள்வது இன்னு மோர் ரகளை.

 இந்த இருவரும்,'வால்டர் வெற்றிவேல்' தொடங்கி,'வாழ்க்கைச்சக்கரம்''வாத்தியார் வீட்டு பிள்ளை','வேல கெடச்சிடுச்சு'திருமதி பழனிச்சாமி','பிரம்மா','நடிகன்','பங்காளி', 'தாய்மாமன்','மாமன் மகள்',வள்ளல்' 'வண்டிச் சோலை சின்னராசு','உலகம் பிறந்தது எனக்காக'என்று பல திரைப்படங் களில் நகைச்சுவை தோரணம் கட்டியிருந் தாலும்'நடிகன்'திரைப் படம் இதில் ஒரு தனி இடம் பிடிக்கும்.'வால்டர் வெற்றிவேலில்' நேர்மையான அமைச்சர் விஜயகுமாரின் தனிச்செயலராக இருந்துகொண்டு,லஞ்சம் வாங்கத்துடிக்கும் கவுண்டமணியின் கதாபாத்திரம் லொள்ளுத் தாண்டவம்.இது போன்ற ஒரு வேடிக்கை கதாபாத்திரத்தை, அவர் சத்யராஜின்'மலபார் போலிஸ்' திரைப் படத்தில் ஏற்று அடிக்கடி சத்யராஜை 'கோவிந்தோ'என்று அழைக்கையில் திரை யரங்கில் நகைச்சுவை சரவெடிதான்.   

  மேலும் கமலுடன்'ஜப்பானில் கல்யாண ராமன்','சிங்காரவேலன்'திரைப் படங்க ளிலும் பிரபுவுடன் 'வியட்நாம் வீடு''சின்ன தம்பி''மை டியர் மார்த்தாண்டன்'திரைப் படங்களிலும்,ஜெயராமுடன்'முறை மாமன்'படத்திலும் தெறிக்க,தனி ஆவர்த் தனம் புரிந்திருக்கிறார்,கவுண்டமணி. பின்னர் பார்த்திபனுடன் இணைந்து டாட்டா பிர்லா படத்தை நகைச்சுவை பட்டறையாக் கினார்.

  கார்த்திக் முத்துராமனுடன் கவுண்டமணி இணைந்த,'உள்ளதை அள்ளித்தா',நகைச் சுவையில் கொடிகட்டிப்பறந்தது.ஒவ்வொரு முறையும்'நான் உங்க தம்பி மாதிரி'என்று கார்த்திக் கூற,உடனே கவுண்டமணி மனம் இளகுவது,உள்ளதை உண்மையிலேயே அள்ளிச் சென்றது,'மேட்டுக்குடி'யில் கவுண்டமணி காட்டும் காதல் பார்வை,ஒரு தனி ரகம். 

  வெறும் நகைச்சுவை மட்டுமல்லாது குணசித்ர கதாபாத்திரமும்,நையாண்டி வில்லத்தனமும் கவுண்டமணிக்கு கைவந்த கலை.இயக்குனர் V .சேகரின்'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்','ஒண்ணா இருக்க கத்துக்கணும்','வரவு எட்டணா செலவு பத்தணா','நான் பெத்த மகனே', 'விரலுக்கேத்த வீக்கம்'போன்ற திரைப்படங் கள் அனைத்திலும்,கவுண்டமணிக்கென்று சிறப்பான கதாபாத்திரம் அமைந்திருந்தது. நைய்யாண்டி கதாபாத்திரத்தில் விஜயகாந் தின்'பொன்மனச் செல்வன்'திரைப்படத் தில்,தில்லாலங்கடி வில்லனாகக் களமிறங் கினார் கவுண்ட மணி. இதேபோன்று 'ஆவாரம்பூ'திரைப் படத்தில்"எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான்னா கீழ இருக்கிறவன் என்னடா பன்றதுன்னு"எனும் நக்கலும் நகைச்சுவையும் நிரம்பிய வசனம், அந்த திரைப்படத்தையே மறக்க முடியாத தாக்கியது

   கவுண்டமணி வசன உச்சரிப்பில் தெளிவும்,குரல் ஓட்டத்தில் சொற்களுக் கேற்ற வாறும்,அவற்றின் காட்சி சூழலை அனுசரித்து வசனங்களை சொல் பிறழா மல் கேட்கவைக்கும் குரல் இயக்கமும் கொண்ட,ஒப்பற்ற நடிகர்.அவர் தனி ஆவர்த்தனம் புரிந்த அனைத்துக் காட்சி களுமே கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் நிற்காது, அவரை தனியாக இயங்கச் செய்தது மட்டுமல்லாது சில நேரங்களில் கதாநாயகர்களையே அவரின் கட்டுப்பாட் டில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

  இந்த பெரும் பலமே,அவரை பெருவாரி யான திரைப்படங்களில் செந்தில் உட்பட இதர நகைச்சுவை நடிகர்களை கட்டியாளச் செய்தது.கவுண்டமணியின் வரைய றைக்குள் இல்லாது செந்திலால் நிச்சயம் எந்த ஒரு திரைப்படத்திலும் தனியாக சோபித்திருக்க முடியாது.ஆனால்,செந்தில் இல்லாமல் கவுண்டமணியின் தனி ஆவர்த்தனம் அருமையாக ஆட்டக்களம் கண்டது என்பது,தமிழ்த்தரை கூறும் நடை முறை நிசமாகும்.

             ≈=====≈======≈======≈=====≈

2 comments:

  1. சிறப்பு சார்..... " தலையாட்டி பொம்மைகள்" என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்த நினைவு..

    ReplyDelete