Saturday, November 11, 2023

நதிகளில் நீராடிய தமிழ்த் திரையிசை

"நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே"

  எனும் டி.எம்.ஸ்.குரலில் ஒலித்த கவி யரசின் 'பாசமலர்' திரைப்படத்தின்' "மலர்ந்து மலராத பாதி மலர்போல'' பாடலின் இடையே தோன்றும் வரிகள் இலக்கியத்தின் தனிச் சுவையை தமிழ்த்திரைக்கு தாரை வார்த்தன.பிறகு,

"நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே"

  என்ற உன்னி மேனன் பாடிய'ரிதம்' திரைப் படத்தின் கவிப்பேரரசின் வரிகள்,நதியை பெண்பாலாக்கி காதலில் தேனெனக் கலந்து, பெருமைப் படுத்தின.தமிழ்த்திரை அவ்வப்போது நதியில் குளித்து,திளைத்து, சுகம் கண்டது மட்டுமல்லாது,அச்சுகத்தை நாமும் கற்பனையில் பன்மடங்கு பெறச் செய்தது.

  'காத்திருந்த கண்கள்'திரைப்படத்தில் மனம் கனக்கச்செய்யும் வகையில் சீர்காழி கோவிநாதராஜன் பாடிய

''ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையி னிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா

வெளியிலே'' 

   எனும் மறக்காவொண்ணா பாடலும்,  'ஆண்டவன் கட்டளை'திரைப்படத்தில் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசிலா இதமாய் பாடிய,

''அமைதியான நதியினிலே ஓடும்-ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்''

  எனும் பாடலும்,மாறிக்கொண்டே இருக்கும் மனித உணர்வுகளோடு இயற்கையை இரண்டற கலக்கச்செய்தன.இரண்டு பாடல் களையும் கண்ணதாசன் எழுத இரண்டிற் கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியே இசை யமைத்தனர்.இந்த வகையில் காதலை நதியோடு உருவகப்படுத்தி 'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் P.சுசிலாவும் டி.எம்.சௌந்த ராஜனும் பாடிய,

"நதியெங்கே போகிறது

கடலைத் தேடி

நாளெங்கே போகிறது

இரவைத் தேடி "

  எனும் வரிகள் காதலில் அலைபாயும் மனதின் ஓட்டங்களை நதியின் ஓட்டமென சித்தரித்தது.காலப்பெட்டகத்தில் இடம் பெற்ற இப்பாடலையும் கண்ணதாசன் எழுத கே.வி.மகாதவன் தேனமுதமாய் இசை வடித் திருந்தார்.காதலை படகாக்கி அதை கால நதியில் ஓடவிட்டு P.சுசிலாவின் பொன் னான குரலால் நம்நெஞ்சங்களில் நீங்கா நினைவாகிய மற்றுமொரு பாடலே'பரிசு' திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளுக்கு அதே கே.வி.மகாதவன்  இசைவிருந்தாக் கிய

"காலமெனும் நதியினிலே

காதலெனும் படகுவிட்டேன்"

எனும் சோகத்தோடு சுகம் சேர்த்த வரிகள்.

  இப்படி நிறைவாக நதியின் ஓட்டத்தில் நலம்போற்றிய தமிழ்த்திரை,'ஓடும் நதி' 'நதியைத் தேடி வந்த கடல்' போன்ற  பொது வான நதி சார்ந்த தலைப்புகளையும்'கங்கா யமுனா காவேரி'சிந்து நதிப்பூ','ஆகாய கங்கை','பொங்கி வரும் காவேரி','தாமிர பரணி'என்ற நதிகளின் பெயர் கொண்ட தலைப்புகளையும் தாங்கி நின்றது.

  பாடல்களில் கங்கை நதியை கண்ண னோடு இணைத்து,

"கங்கைக் கரைத் தோட்டம் 

கன்னி பெண்கள் கூட்டம் 

கண்ணன் நடுவினிலே

காலை இளங்காற்று பாடி வரும் பாட்டு

எதிலும் அவன் குரலே"

  எனும் பாடல் பி.சுசிலாவின் குரலில் அமுத கான மாய் ஒலித்து, 'வானம்பாடி' திரைப் படத்தை வானம்வரை உயரச்செய்தது. கண்ணதாசனின் வரிகளை கே.வி.மகா தேவனின் இசை,மலையென நின்று நிலைக்கச் செய்தது.கங்கையை கண்ண னோடு மட்டும் இணைக்காது,இராமனையும் பிணைத்து கே.ஜே.ஏசுதாசும் வாணிஜெய ராமும் பாடிய,

"கங்கை நதியோரம் ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந் தாள்"

  எனும் பாடல்,'வரப்பிரசாதம்' திரைப்படத் தில் கவிஞர் அம்பிகாபதியின் வரிகளை கோவர்த்தனின் இசையுடன் இன்சுவை விருந்தாக்கி,இதிகாச பாடத்தை நதிக்கரை யில் நடத்திக் காட்டியது.

  யமுனை நதியை கண்ணனோடு இரண் டறக் கலந்த இரு பாடல்கள் நினைவுகளை நளினமாய்த் தழுவுகின்றன.

  முதலாவதாக'கௌரவம்'திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும்,பி.சுசிலாவும் பாடிய,

"யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே

கண்ணன் போவதெங்கே" 

எனும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் நனைந்த கண்ணதாசன் வரிகளும்,

  'தளபதி'திரைப்படத்தில் வாலி வரிகள் புனைந்து,இளையராஜா இசையில் மிட்டாலி பேனர்ஜி பாடிய,

"யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே

கண்ணனோடுதான் ஆட

பார்வை பூத்திட பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட"

  எனும் பாடலும் யமுனை நதிக்கு நம்மை யாத்திரை புரியச்செய்தன.

  கங்கையையும் யமுனையையும் சங்கமிக் கச்செய்து சந்தோஷமுற்ற 'இமயம்'திரைப் படத்தில் கே.ஜே.யேசுதாசும் வாணி ஜெயரா மும் சேர்ந்து குரல் சங்கமம் கண்ட

''கங்கை யமுனை இங்குதான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்''

என்று ராகத்தால் ரசனையில் மூழ்கச் செய்த

 கண்ணதாசன் வரிகள்,எம்.எஸ்.விஸ்வ நாதனின் பேரிசையில்,இமயம் தொட்டது.

   சிந்து நதியைப் பொறுத்தமட்டில்'கை கொடுத்த தெய்வம்'திரைப்படத்தில் இடம் பெற்ற டி.எம்.எஸ் குழுவினருடன் பாடிய பாரதியின் வரிகளிலமைந்த,

"சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நாட்டிளம் பெண்களுடனே"

  எனும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இனி மையாய் இசையூட்டிய பாடலும்,

  'நல்லதொரு குடும்பம்'திரைப்படத்தில் நாம் கேட்டு மகிழ்ந்த டி.எம்.எஸ்  மற்றும் பி. சுசிலா குரல்களால் குழைந்து பாடிய, கண்ணதாசன் வரிகளில் இளையராஜா வின் இன்னிசையில் இதயம் நிறைந்த,

 'சிந்து நதிக்கரையோரம் எந்தன் தேவன் ஆடினான்

தமிழ் கீதம் பாடினான்

என்னை பூவைப்போல சூடினான்"

  எனும் ஏகாந்த கீதமும் தனித்துவம் வாய்ந்த வை ஆகும். இதேபோன்று 'பொன்னுமணி' திரைப்படத்தில் ஆர்.வி.உதயகுமார் வரிகள் புனைந்து இளையராஜா இசையமைத்து, பாடும் வானம்பாடி எஸ்.பி.பி யின் குரலில் ஒய்யாரமாய் செவிகள் நிறைத்த,

"சிந்து நதி செம்மீனே

கொங்கு தமிழ் செந்தேனே

தென்னங் கீற்றில் ராகம் தேடும்

தெம்மாங்கே"

  எனும் அமைதிபொங்கும் பாடல் ஆன்ம சுகம் தந்ததாகும்.

   காவிரி நதியினை குறிப்பிட்டும்,அதன் மறு பெயரான பொன்னி நதியைக்காணும் ஆவலை வெளிப்படுத்தியும்,களமிறங்கிய நான்கு தமிழ்த் திரைப்பாடல்களை இங்கே குறிப்பிடுவது,காவிரி நதிநீரை பாடலிலா வது தடையின்றி பகிரச் செய்யும். முதலில் 'மன்னாதி மன்னன்' திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநதன் ராம மூர்த்தி இசையில் கே.ஜமுனாராணி மனமுருகிப் பாடிய,

"காவிரித்தாயே காவிரித்தாயே

காதலர் விளையாட பூவிரித்தாயே"

   எனும் பாடல் ஒரு பெண்ணின் மன வேதனையை நதியிடம் புகாராக முறையிட் டது.அதே காவிரியை பூவோடும் பெண் ணோடும் இணைத்து P.சுசிலாவும் டி.எம்.எஸ்ஸும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்  பாடிய

"காவேரிக் கரையிருக்கு 

கரைமேலே பூவிருக்கு

பூப்போல பெண்ணிருக்கு

புரிந்து கொண்டால் உறவிருக்கு"

  எனும் கண்ணதாசன் வரிகள்'தாயைக் காத்த தனயன்'திரைப்படத்தில் கே.வி.மகா தேவன் இசையில்,காதல் கொடி கட்டியது.

  காவிரியை பொன்னிநதி எனக் குறிப்பிட்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஏ.ஆர். ரெஹமான் இசையமைத்து குழுவின ருடன் பாடிய,இளங்கோ கிருஷ்ணனின் வரிகளிலமைந்த,

"பொன்னி நதி பாக்கனுமே 

பொழுதுக்குள்ள

கன்னி பெண்கள் காணனுமே காற்றப் போல"

  எனும் பாடல் நதியின்மேல் நாட்டம் கொண்டு நவீன ஓட்டம் பெற்று, நரம்பில் முறுக்கேற்றியது. 

  இந்த மூன்று பாடல்களையும் பின்னுக்குத் தள்ளி,'அகத்தியர்'திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் தன் தெளிந்த கம்மீரக் குரலால் காவிரி நதியினை போற்றிப்பாடிய,

"நடந்தாய் வாழி காவேரி 

நாடெங்குமே செழிக்க

நன்மையெல்லாம் சிறக்க

நடந்தாய் வாழி காவரி "

எனும் குன்னக்குடி வைத்திய நாதனில் கர்நாடக இசையிலமைந்த கவிஞர் கே.டி.சந்தானத்தின் வரிகள் தனிச் சிறப்பு பெரும். இப்பாடல் வரிகள்,

"வாழி அவன்தன் வளநாடு

மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி

ஒழியாய் வாழி காவேரி"

    என்று காவிரி நதியின் புகழ் பரப்பும் இலக்கியப் பெருமை வாய்ந்த பழைய பாடலொன்றை,நம் நினைவுகளில் தவழச் செய்யும்.

   நான்மாடக்கூடலின் நாற்திசையும் நலம் கூட்டும் வைகை நதியைப் பற்றி நிலம் சிறக்கச்செய்யும் பாடல்கள்,தமிழ்த்திரை இசைக்கு தன்னிகரில்லா சுவைக்கூட்டும். பாடல்கள் பல இருந்தாலும் அவற்றில் ஒரு சில பாடல்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும்.

   இந்தவகையில் என்றும் தெவிட்டா வண் ணம் டி.எம்.எஸ் P.சுசலா குரல்களில் 'பார் மகளே பார்'திரைப்படத்தில் பெண் மக் களை தாலாட்டும் வகையில் தேனொழுக பாடிய,

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண் ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குல மகளே"

   எனும் இலக்கியச் சொல்லாடல் நிறைந்த பாடல் தனி இடம் பிடிக்கும்.கண்ணதாச னின் இம்முத்தான கவிதை வரிகள் விஸ்வ நாதன் ராமமூர்த்தியின் வற்றா இசைக்கட லில் வசமாய்க் குளித்தெழுந்தன.

  அடுத்தாக 'ரிக்ஷா மாமா'திரைப்படத்தில் எஸ்.ஜானகியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் குரல்களால் இணைந்து குணம் கூட்டிய,

"வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்

காத்தாடுது.

கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே

கூத்தாடுது"

 எனும் கங்கை அமரனின் எளிமையான கவிதை வரிகள் அவரது தமையனாரின் இசையில் தாளம்போட வைத்தது.இதே கங்கை அமரன் வரிகள் அமைத்து அவரது அண்ணன் ஆன்மசுகம் தரும் வகையில் இசையமைத்த,

"வைகரையில் வைகைக் கரையில்

வந்தால் வருவேன் உன் அருகில்"

  எனும் எஸ்.பி.பி யின் குரல் கம்பீரத்தால் நம் உணர்வுகளை உருக்கிய 'பயணங்கள் முடிவதில்லை'திரைப்படப்பாடல்,வெள்ளி விழாக் கண்ட அப்படத்தின் வெற்றிப் பாடல் களிலொன்றாயிற்று.

  நான்காவதாக T.ராஜேந்தர் எழுதி இசை யமைத்து அவர் இயக்கிய "உயிருள்ளவரை உஷா'திரைப்படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் ஏக்கமும் சோகமும் வெளிப்படுத்திப் பாடிய,

"வைகைக்கரை காற்றே நில்லு.

வஞ்சிதனைப் பாத்தால் சொல்லு

காற்றே பூங்காற்றே

கண்மணி அவளைக் கண்டால் நீயும் 

காதோரம் போய்ச்சொல்லு"

  என்ற நெஞ்சை அள்ளும் பாடல் தரணி எல்லாம் வாழும் தமிழறிந்தோரை,தலை தாழ்த்தி வைகை நதியினை வணங்கிடச் செய்யும்.

 முடிவாக 'கொடுத்துவைத்தவள்' திரைப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ஜமுனா ராணி குரல்களால் இணைந்து காதல் நதியில் திளைத்த,

"பாலாற்றில் சேல் ஆடுது

இரண்டு வேலாடுது

இடையில் நூலாடுது"

  எனும் கண்ணதாசன் பாடல் கே.வி.மகா தேவன் இசையில் அமைந்திட, என்றும் இனிக்கும் உதயகீதமாக இசை ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்படுகிறது.நதிக ளோடு விளையாடும் தமிழ்த்திரை தெளி வுடனும் துடிப்புடனும் ஓடி,பரவசம் பலநூறு  சேர்த்துக் கரையேறுகிறது.

            ==============0===============






3 comments:

  1. சீரான நதியின் ஓட்டத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாத திரைப் பாடல் வரிகளின் அணி வகுப்பும் கூட மகிழ்ச்சி சிதறல் களை மனதில் குளிரூட்டின 🎇

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்துப் பதிவு.நன்றி.

      Delete