எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்கிறார் வள்ளுவர்.இதனையே இன்னும் சுருக்கமாக"எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்"என்கிறார் தமிழ் மூதாட்டி அவ்வையார்.இந்த இரண்டு அறிவுரைகளிலும்'எண்'எனும் சொல், எண்ணம்,கணிதம்,அறிவியல் போன்ற வற்றைக் குறிப்பிடுவதாகக் கூறலாம்.
தமிழ்திரையில் எண்கள் திரைப்படத் தலைப்புகளாகவும் பாடல் வரிகளாகவும் நிறையவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. தலைப்புகளைப் பொறுத்தவரை,ஒன்றே குலம்,ஒரே வழி,ஒருவன்,இரு மலர்கள்,இரு வல்லவர்கள்,மூன்றெழுத்து,மூன்று முடிச்சு, மூன்று தெய்வங்கள்,மூன்று முகம்,நான்கு சுவர்கள், நான்கு கில்லாடிகள்,ஐந்து லட்சம், ஜந்து சகோதரர்கள்,ஆறு புஷ்பங்கள், ஆறிலிருந்து அறுபதுவரை,ஏழாம் அறிவு, எட்டுப்பட்டி ராசா,ஒன்பது ரூபாய் நோட்டு, பத்து எண்றதுக்குள்ள,பத்துமாத பந்தம் போன்ற பல தலைப்புகளை பட்டியலிடலாம்.
பாடல்களில் பிரதானமானது'திருவிளை யாடல்' திரைப்படத்தில் அவ்வையாரைக் கண்டு அன்னை பார்வதிதேவி "அவ்வையே ஒன்று இரண்டு என்று இறைவனை வரிசைப் படுத்திப்பாடு"என்று சொல்ல, உடனே அறிவார்ந்த கவிஞர் அவ்வை வடிவில்,கே.பி.சுந்தராம்பாள்,
"ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உயர்வான செந்தமிழில் மூன்றானவன்"
என்று சிவபெருமானை எண்களால்,ஒன்று முதல் பத்துவரை சொல்லி வாழ்த்திப்பாடு வார்.
இதேபோன்று 'பணக்கார குடும்பம்' திரைப்படத்தில் டி.எம்.சௌந்தராஜனும் எல். ஆர்.ஈஸ்வரியும் சேர்ந்து,
"ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே"
என்று பாடிய பாடலும்,'பல்லாண்டு வாழ்க'திரைப்படத்தில்,
"ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று பேசுவோம்"
என்று கே.ஜே.யேசுதாசும் பாடிய பாடலும். நம் நினைவுகளைத் தழுவும்.
எண் இரண்டிற்கு'வசந்த மாளிகை'திரைப் படத்தில் டி எம் எஸ் பாடிய,
"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று"
எனும் இனிய பாடலை நினைவு கூறலாம் .
எண் மூன்றைப் பொறுத்தவரை 'தெய்வத் தாய்'திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய,
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
கடமை,அது கடமை"
எனும் பாடல்,தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
எண் நான்கிற்கு அதே எம்.ஜி.ஆருக்காக 'சங்கே முழங்கு' படத்தில் டி.எம்.எஸ் பாடிய
"நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி"
எனும் அர்த்தம் நிறைந்த,அருமையான பாடலாகும்.
ஐந்தாம் எண்ணை வைத்து நேரடியாகத் தொடங்கும் பாடல் ஏதும் என் நினைவைத் தட்டவில்லை என்றாலும் எம்.ஜி.ஆரும் சாவித்திரியும் நடித்த'பரிசு'எனும் படத்தில் டி.எம்.எஸ். பி.சுசிலா இணைந்து பாடிய
"எண்ண எண்ண இனிக்குது
ஏதேதேதோ நடக்குது
வண்ண வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா"
எனும் இனிய டூயட் பாடல்.
ஆறுக்கு அற்புதமாய் அழகு சேர்த்த பாடல், 'ஆண்டவன் கட்டளை'திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்காக டி.எம்.எஸ் மனமுருகி பாடிய,
"ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகையில்
அந்த தெய்வத்தின் கட்டளை ஆறு".
தத்துவ சிந்தனைகள் உள்ளடக்கிய தன்னிகரில்லா பாடலாகும்.
எண் ஏழுக்கென என்றென்றும் நம் நெஞ்சை நெகிழவைக்கும் பாடலே, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்'திரைப்படத்தில், ஸ்ரீவித்யாவுக்காக வாணி ஜெயராம் உணர்வுகளை உயிர்மூச்சாக்கிப் பாடிய,
"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி"
எனும்,ஆயிரம் அர்த்தங்களை கேள்விக் குள் தங்கவைத்த பாடல்.
எட்டு எனும் எண்ணைப்பற்றி நினைத் தாலே என்றைக்குக் கேட்டாலும், 'பாத காணிக்கை' திரைப்படத்தில் பி.சுசிலா குரல் வளத்தால் கண்களில் நீர் கசியச்செய்த
"எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றிவைத்த என்தலைவன்
வி்ட்டு விட்டு சென்றானடி"
எனும் திசை எட்டும்,எட்டிப்பாயும் பாடல்.
இந்த இடத்தில்,மனித வாழ்க்கையை எட்டு காலப்பிரிவுகளாகப் பிரித்து 'பாட்ஷா' திரைப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய,
"ரா ரா ரா ரா ராமைய்யா
எட்டுக்குள்ள உலகமிருக்கு ராமைய்யா"
எனும் பாடலை அவசியம் குறிப் பிட்டாக வேண்டும்.இதே போன்று மனித உடலை எட்டுபங்குகளாய்ப்பிரித்து,
"எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை
இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும்
எத்தனை சேட்டை"
என்று'கலியுகக் கண்ணன்'திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனுக்காக டி.எம்.எஸ் பாடிய "ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச் சுட்டே"பாடலுக்கு இடையே தோன்றும் வரிகள்,தனி மனித ஆணவத்தை கவித வரிகளால் தரைமட்டமாக்கும்.
எண் ஒன்பதிற்கு சற்று நிகரான பாட லொன்று கே.பாலச்சந்தரின்'நவக் கிரகம்' திரைப்படத்தில் கேட்டிருப்போம். நாகேஷ் தொடங்கும், ஏ.எல்.ராகவனும்,பொன்னு சாமியும் பாடிய,வேடிக்கையான அப்பாட லில்,
"நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்
ஒன்னுக்கொன்னு சேராது
ஒன்னோடொன்னு பேசாது
ஒன்னுமொன்னும் ஒன்பது ரகம்"
என்ற விமர்சன வரிகள் விளையாடும்.
பத்துக்கென சில சிறப்பான பாடல்கள் உண்டு.அவற்றில் மறக்க இயலாதது 'அன்னையின் ஆணை'திரைப்படத்தில் டி எம் எஸ் சிவாஜிக்காக உச்சக்குரலில் பாடிய,
"பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழச் செய்தாள்".
இங்கே ஒன்று எனும் எண்ணைத் தவிர,ஒவ்வொரு எண்களுக்கும் ஒரு உதாரணமே குறிப்பிடப்பட்டுள்ளது.எண் ஐந்திற்கும்,ஒண்பதிற்கும் நேரடி உதாரணங்கள் எட்டப்படவில்லை.இந்த பத்து எண்களுக்கான பாடல்களில், 'ஒன்றே குலமென்று'எனத் தொடங்கும் பாடலை புலமைப்பித்தனும்,'மூன்றெழுத்தில் என் முச்சிருக்கும்'மற்றும் 'நீங்க நவக்கிரகம்' பாடலை வாலியும்,'அன்னையின் ஆணை' படப்பாடலை கா.மு.ஷெரீபும்,"ரா ரா ரா ரா ராமைய்யா" பாடலை வைரமுத்துவும் "ஜெயிச்சுட்டே"பாடலை வாலியும் எழுத, இதர பாடல்கள் அனைத்தையுமே கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார் என்பது மிகவும் போற்றுதலுக்குரிய விஷயமாகும்.
இப்பாடல்களில் 'அன்னையின் ஆணை'படத்திற்கு எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவும்,'பரிசு','திருவிளையாடல்','வசந்தமாளிகை'திரைப்படங்களுக்கு கே.வி.மகாதேவனும்,'பாட்ஷா'படத்திற்கு தேவாவும்,'கலியுகக் கண்ணனுக்கு' வி.குமாரும்,இதர படங்க ளுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்தும் ராமமூர்த்தியுடன் இணைந்தும் மாண்புற இசையமைத்திருந்தனர்.
இப்பதிவினை காணுவோர்க்கு,வேறு பல சிறப்பான உதாரணங்களும் தோன்றக் கூடும்.மொத்தத்தில்,எண்களால் கைது செய்யப்பட்ட பாடல்கள்,எண்களை இசை யோடு கோர்த்து,ஒன்றிலிருந்து பத்தாக நம்எண்ண அலைகளை எழுச்சியுறச் செய் வதாக உணரலாம்.
ப.சந்திரசேகரன்.
எண்களால் கைது செய்யப்பட்ட பாடல்கள்,எண்களை இசை யோடு கோர்த்து,ஒன்றிலிருந்து பத்தாக நம்எண்ண அலைகளை எழுச்சியுறச் செய்தன🙏🏻
ReplyDelete