'தென்றலைத் தீண்டியதில்லை நான்;
தீயைத் தாண்டியிருக்கிறேன்"
என்று 'பராசக்தி' திரைப்படத்தில் நீதி மன்றத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் கலைஞரின் வசனத் தில்,கற்பனையையும் வாழ்வியல் நடை முறையையும் ஒரு சேர உணரமுடிந்தது.
"சிந்தித்தால் சிரிப்பு வரும்
மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும்
மானிடரின் வாழ்வே! "
என்று பாடினார் டி .எம் சௌந்தராஜன், 'செங்கமலத்தீவு'எனும்,ஓர் பழைய திரைப்படத்தில்!.திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் அமைந்த கவிஞர் திருச்சி தியாகராஜ னின் இவ்வரிகள், பலரையும் சிந்திக்க வைத்திருக்கும். இருப்பினும்,தென்றலும் புயலும் கலந்ததோர் மானுட வாழ்வில், ரம்யமான தென்றல்,வாழ்வின் ரசனை களைக் கூட்டுகிறது.
காதல் வயப்பட்ட விழிகள்,உறங்கும் தென்றலையும் திங்களையும்,உற்று நோக்கிக்கொண்டே உறங்காதிருப்ப துண்டு,எனும் பாணியில் அமைந்திருந் தது,'பெற்ற மகனை விற்ற அன்னை' திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமூர்த்தி இசையில்,அ.மருதகாசி வரிகளமைத்து ஏ.எம்.ராஜாவும் P.சுசீலாவும் பாடிய,
"தென்றலுறங்கியபோதும்
திங்களுறங்கியபோதும்
கண்களுறங்கிடுமா காதல்
கண்களுறங்கிடுமா காதல்
கண்களுறங்கிடுமா"
எனும் மனதில் என்றென்றும் ஏகாந்தமாய் ரீங்காரமிடும் பாடல்.
ஆனால் கவிஞனின் வேறொரு கோணத் தில்,தென்றலை உருவகப்படுத்தி பாடச் செய்து,அத்தாலாட்டுமயக்கத்தில் உறக் கத்தை தழுவி,கனவுலகில் கால்பதிக்கச் செய்த பாடலே,'மனிதன் மாறவில்லை' திரைப்படத்தில் கண்டசாலாவின் இசை யில்,P.சுசீலா சுவைக்கூட்டிப் பாடிய,
"தென்றல் பாடவும் தேன் மலராடவும்
கண்கள் மூடவும் கனவு கண்டேன்
வெண்ணிலாவும் ஓளி விரித்த
பஞ்சணையில்
கனவில் நானொரு காட்சி கண்டேன்"
எனும்,தஞ்சை என்.ராமையாதாஸ் மென்மையாய்,மேன்மையாய்,வரிகள் வடித்த,வசந்த கானம்.
இதேபோல் தென்றலைப்பாடச்சொன்ன இன்னொரு பாடலே,'மனசுக்குள் மத்தாப்பு'திரைப்படத்தில் ஜெயச்சந்திர னும் சுனந்தாவும்,எஸ்.ஏ.ராஜ்குமார் எழுதி இசையமைத்த,
"பூந்தென்றலே நீ பாடிவா
பொன் மேடையில் பூச்சூடவா"
என்று பூந்தென்றலுக்கே பூச்சூட்டிய பொன்னான பாடல்.
இந்த வகையில் காதலன் தன்னயே தென்றலாக்கி,காதலியின் பழைய நினை வுகளை தட்டி எழுப்பிய பாடலே பாக்ய ராஜின்'வீட்ல விசேஷங்க' திரைப் படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் உச்சக்குரலில் பாடிய
மலரே தென்றல் பாடும் கானமிது
நிலவே உன்னைக்கூடூம் வானமிது
என்ற இளையராஜாவின் இசையில் திளைத்த,வாலியின் வரிகள்.இதே பாடல் அத்திரைப்படத்தில் அருண் மொழி யும் எஸ்.ஜானகியும் பாடும்,'டூயட்' பாடலா கவும் இடம் பெற்றிருந்தது.
இந்த கற்பனைகளிலிருந்து மாறுபட்டு, தென்றலின் இசைஞானத்தை கிண்டல் செய்யும் வகையில்,வைரமுத்து கவி புனைந்த வரிகளே,'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் அருண்மொழியும் கே.எஸ்.சித்ராவும் இணைந்து பாடிய,
"தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அத என்னான்னு கேட்டு நீ
மெட்டுப்போட்டு காட்டு"
என்று தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் மனதில் மகரந்தக் கிளர்ச்சி யூட்டிய பாடல்.
இன்னும் ஒருபடி மேலே போய்,கற்பனை யில் இலக்கிய நயம் கலந்து,'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'திரைப்படத்தில் புலமைப்பித்தன் வளமாக வரிதொடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாத னின் மேலிசையில்,கே.ஜே.ஏசுதாசும், வாணி ஜெயராமும் சேர்ந்து தென்ற லையும் மழைமேகத்தையும்,கார் முகில் கேசத்தில் இறுக்கிக்கட்டியது,
"தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழைக்கொண்ட மேகம்"
எனும் அகமகிழ்ச்சிப்பாடல்.
ஆனால்,தென்றலை வாழ்க்கைத. துணையாக்கி,அதன் வருகைக்காக ஏங்கிக்காத்திருக்கும் ஆண்மகனின் விரகதாபத்தை,அற்புதமாய் உணரச் செய்யதது,வாலி வரம் பெற்று வரிகள் கூட்டிய,
"மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வரை நேரமில்லையோ
அன்பே, என் அன்பே!"
எனும் இசைஞானியின் இசையில் எஸ்.பி.பி பாடி,கேட்போர் நெஞ்சங்களி லெல்லாம் கரவொலி கூட்டிய பாடல்.
தென்றல் உடலைத் தழுவுகையில் ஏற்படும் சிலிர்ப்பை,சொல்லி மாளாது. அதென்றலின் தீண்டலை,தானே இசையமைத்து தன் அதிர்வுக்குரலால், மயிலிறகால் மனதை வருடும் வண்ணம் பரவசமூட்டி,இளையராஜா பாடிய பாடலே,
"தென்றல் வந்து தீண்டும்போது
என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது
என்ன வண்ணமோ நெனப்புல"
எனும் 'அவதாரம்' திரைப்படத்தில் நாம் கேட்ட வாலியின் வெண்சாமர மூட்டும் பாடல்.
இப்படிப்பட்ட உணர்வுப்பிடியில் விளைந்த,இன்னொரு பாடல்தான், ஸ்ரீதரின் 'தென்றல் வந்து என்னைத் தொடு' திரைப்படத்தில் கே.ஜே.ஏசுதாசும் எஸ்.ஜானகியும் சேர்ந்து காதல் வைபோக த்தை உருவாக்கிய,
"தென்றல் வந்து என்னைத் தொடும்
என்னை சத்தமின்றி முத்தமிடும்"
எனும் வைரமுத்து சொல் தொடுத்து இளையராஜா சொல்லுக்கு இசைக் கூட்டிய பாடல்.
தென்றலை தலைப்பாக்கிய B.S. ரங்கா வின் இயக்கத்தில் உருவான 'தென்றல் வீசும்'{1962} எனும் மிதமான தலைப்பும் கலைஞரின் கதைக் களத்தில் உருவான 'தென்றல் சுடும்' {1989}எனும் தலைப்பும் தென்றலின் குளிர்ச்சியையும் வெப்பத் தையும் நம் சிந்தனைக்கு விட்டுச் சென்றன.
இப்பதிவில் குறிப்பிடப்பட்ட பாடல்களும் தலைப்புகளும்,தென்றல் பானையில் பொங்கிய, இனிப்புச் சுவையின் சிறிய காணிக்கையே! தென்றலின் மடியில் இளைப்பாறிய திரைப்படங்கள் இன்னும் எத்தனையோ இருக்கும்.அதுவே தமிழ்த் திரைக்களஞ்சியத்தின் வளமும் வனப்பு மாகும்.
=============0==============
No comments:
Post a Comment