"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை"
எனும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத் தில் டி.எம்.எஸ் பாடிய பாடலும்,அப்பாட லுக்கு இடையே தோன்றும்,
"பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே"
எனும் வரியும்,'ஏன்?'எனும் கேள்வி, மனித நெஞ்சங்களில் ஏற்படுத்தும் சமூக தாக்கத்தை உணர்த்தியது.அதே போன்று 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் வாணி ஜெயராமின் கூர்ந்த குரலில் மனதைக் கிழித்த,
"ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்"
எனும் வரிகளைக்கொண்ட,
"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்"
என்று தத்துவக் கேள்வியினை மனதில் எழுப்பிய பாடலும்,'ஏன்?' எனும் கேள்வி யின் ஏற்றத்தினை ஆழ்ந்து நிலை நாட்டும்.
மேலும் இப்பாடலில்'ஏன்?'எனும் கேள்வி யில் அய்யமும்,ஆழ்ந்த சோகமும், விடை காணா புதிர்களாய்,தொக்கி நிற்கும்.
பிறப்பைப் பற்றிய புதிரும்,விடையறிய விழையும் வினாவும் கூட,சில நேரங்க ளில் 'ஏன்?' எனும் கேள்வியாய் எழும்.
"நான் ஏன் பிறந்தேன்
இந்த நாட்டுக்கு நலமென புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் கேட்டிடு என் தோழா"
என்று ஒவ்வொருவரும் தன் பிறவியின் நோக்கங்களை,'ஏன்?' எனும் கேள்வியால் வென்றடுக்க வேண்டும் எனும்,'நான் ஏன் பிறந்தேன்?'திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடலும்,உடல் ஊன முற்ற,தந்தை யாய்த்தானிருந்து,தனக்குப் பிறந்த மகனை நோக்கி,
"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க,
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்லமகனே"
என்று சோகத்தில்'பாகப்பிரிவினை' திரைப் படத்தில் அதே டி.எம்.எஸ் எழுப்பும் "ஏன்?" எனும் கேள்வியின் எதார்த்தமும், பிறப்பின் பொருளுணர்த்தும் பதமான கருத்துக்களாம்.
இந்த கருத்தையே சற்று வேறு விதமாக , நகைச்சுவை கோணத்தில் 'அத்தையா மாமியா'திரைப்படத்தில் வாலி எழுதி எம் எஸ் விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,
"நான் பெத்த மகனே நடராஜா
இப்போ ஏன்டா பொறந்த மகாராஜா"
எனும் சுவையான பாடலாகும்.
சிரிப்பையும் அழுகையையும் கூட,'ஏன்?' எனும் கேள்வி,புதிய பாதையில் பயணிக்கச் செய்யும்.
"ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து
உன் எழில்தனைப் பாடவா தமிழைச் சேர்த்து"
எனும் 'பொன்னித் திருநாள்'படத்தில், சிரிப்புடன் தமிழால் எழில் கூட்டிய,P.B.ஸ்ரீ நிவாஸ் பாடிய பாடலும்,
"ஏன் அழுதாய் ஏன் அழுதாய்
என்னுயிரே ஏன் அழுதாய்
நான் அழுது ஓய்ந்தபின்னே
நன்றி சொல்லவா நீ அழுதாய்"
என்று இல்லறத்தில் கணவனும் மனைவியும் காதலுடன்,கண்ணீரையும் பகிரும் காரணங்கள் உள்ளடக்கிய, அழுகையை, அனுபவமாக்கிய,'இருவர் உள்ளம்' படத்தின் டி.எம்.எஸ் பாடலும், 'ஏன்?' எனும் கேள்விக்கு வாழ்வியல் விடையளிக்கும்.
'ஏன்?' என்ற கேள்வி சில சமயங்களில் கடவுளையும் விடுவைப்பதில்லை.
"கடவுள் ஏன்,கல்லானான்
சில கல்லாய்ப்போன மனிதர்களாலே"
என்று, கல்மனம்கொண்டு கடவுளை கல்லாய் மட்டுமே காண்பபோர் இடையே, கடவுள் கல்லாய் மட்டுமே காட்சியளிப்பார் என்று,மனிதத் தவறுகளை ஒட்டு மொத்த மாய் சுட்டிக்காட்டும் வகையில் அமைந் திருந்தது,'என் அண்ணன்'திரைப் படத்தில் டி.எம்.எஸ் பாடிய இப்பாடல்.
கடவுளைப்போல் இயற்கையை நோக்கி யும் 'ஏன்?'எனும் கேள்வி எழக் கூடும். அப்படித்தான் 'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் P.சுசிலாவின் குரலில்,
"என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என் நிலை சொல்லிவா"
எனும் பாடல் அமைந்திருந்தது.
இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக கைய்யில் மதுக்கிண்ணத்தை ஏந்திய 'வசந்த மாளிகை' சிவாஜிகணேசனுக் காக,சிலேடை சிறகடிக்க டி.எம்.எஸ் குரல் எழுப்பிப்பாடி,
"ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
ஏன் ஏன் ஏன்?
பல வண்ணத்தில் நீந்துகிறேன்"
என்று தொடங்கி முடிவில் விடையறியா
"ஏன்? ஏன்?ஏன்?"
என்று எகத்தாளமும் எழுச்சியும் கலந்து பாடலை முடிக்கையில்,எத்தனை பேர் திரை அரங்குகளில் அந்த'ஏன்'எனும் பரவசத்தில் எழுந்து ஆடியிருப்பர்!.
அரிதாக 'ஏன்?' எனும் ஒற்றைச் சொல் கொண்ட திரைப்படமொன்றையும் பல ஆண்டுகளுக்கு முன்னால்,தமிழ்த்திரை கண்டது.அப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ர மணியம் பாடிய,
"இறைவன் என்றொரு கவிஞன்,
அவன் படைத்த கவிதை மனிதன்"
எனும் பாடல்,பொருளாலும் இசையா லும், தனித்துவம் கொண்டிருந்தது.
மேலே குறிப்பிட்ட பாடல்களில் 'கலங்கரை விளக்கம்'படப்பாடலுக்கு பஞ்சு அருணாச்சலமும்,'பொன்னித் திரு நாள்'பாடலை P.Kமுத்துசாமியும் எழுத, 'பாகப் பிரிவினை' 'இருவர் உள்ளம்' ,'அபூர்வ ராகங்கள்','வசந்த மாளிகை' மற்றும் 'என் அண்ணன்'படப்பாடல்களை கண்ணதாசனும்,இதர இரண்டு எம்.ஜி. ஆர் திரைப்படங்களான 'ஆயிரத்தில் ஒருவன்' &'நான் ஏன் பிறந்தேன்?' படப்பாடல்களுக்கு வாலியும் வரிவடிவம் படைத்திருந்தனர்.
இப்பாடல்களில் 'பொன்னித்திருநாள்' 'என் அண்ணன்'மற்றும்'வசந்த மாளிகை' திரைப்படங்களுக்கு திரையிசைத்திலக மும்'நான் ஏன் பிறந்தேன்?'பாடலுக்கு சங்கர் கணேஷும்,இதர பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தனித்தும்,ராம மூர்த்தியுடன் இணைந்தும்,தேனிசை கலந்தனர்.'ஏன்'திரைப்படத்தின் இறை வன் என்றொரு கவிஞன் பாடலை கவி யரசு எழுத அதற்கு டி.ஆர் பாப்பா,நளின மாய் இசையூட்டினார்.
மொத்தத்தில்,ஏன் எனும் கேள்விகளால், எதிர்பார்ப்புகளுக்கு விடைகிடைக்கும்; அறிவும் ஆற்றலும் மேம்படும்;ஆனந்தம் பெருகும்;ஆர்ப்பரிப்பு அலைமோதும். ஏகாந்தம் ஆன்மாவுடன் சங்கமிக்கும்.'ஏன்' எனும் கேள்வியே,வாழ்வின் வெளிச்சம். வானுயரம்,தானுயர்த்தும்,ஏணி.
≈==========0==========0==========
👏👏
ReplyDelete*A prudent question is one-half of wisdom, Sr.* 🙏🏻
ReplyDelete*ஒரு விவேகமான கேள்வி ஞானத்தின் ஒரு பாதி அய்யா* 🙏🏻*