Friday, January 3, 2025

எல்லார்க்கும் என்பதன் இனிமை.!

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்ப துவே அல்லாது

வேறொன்றும் அறியேன் பராபரமே"

   என்றார்,சைவ சித்தாந்த தத்துவத்தை சிந்தையில் வைத்துப் போற்றிய ,ஆன்மீக தத்தவச்சுடர் தாயுமானவர்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 

வல்லறிதல் வேந்தன் தொழில் 

   என்று,பகைவர்,நண்பர்,பொதுவானவர், என எல்லாரிடத்திலும் நிகழ்வன எல்லா வற்றையும்,எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டி யது,அரசின் வேலை என்றும், 

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து 

   என்று,பணிவு ன்து,பண்புடையோர் மட்டுமல்லாது,எல்லார்க்கும் நன்மை பயக்கும் செல்வமாகும் என்றும்,குறள்கள் மூலம் எல்லோர் நலனையும் முதன்மைப் படுத்தினார் வள்ளுவர்.

  தமிழ்த் திரைப் படங்களும் 'எல்லோரும் வாழவேண்டும்' 'எல்லோரும் நல்லவரே' 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று திரைப்படத் தலைப்புகளாலும் பின்வரும் மகத்தான பாடல்களாலும்,எல்லோரையும் மகிழ்வுறச்செய்ததன.   

 முதலாவதாக,'பராசக்தி' திரைப்படத்தில் டி.எஸ்.பகவதியும் எம்.எஸ். ராஜேஸ் வரியும் ஆர்.சுதர்சனம் இசையில் பாடிய அண்ணல் தங்கே எழுதிய,படம் முடிவுப்பாடலான, 

"எல்லோரும் வாழவேண்டும் 

உயிர்கள் இன்புற்று இருக்கவேண்டும்" 

எனும் பாடல் ஒரு தனி ரகம்.  

  இதனைப் புறந்தள்ளி'தென்றல் வீசும்' திரைப் படத்தில் P.சுசிலா பாடிய, கண்ண தாசன் வரிகளில்,விஸ்வநாதன் ராம மூர்த்தியின் இசையில் உருவான,

"எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது;

இதில் ஏழையென்றும் செல்வரென்றும்

கலகம் பிறந்தது"

எனும் உலக வாழ்க்கை நடைமுறைப் பாடல்,மனதில் கலக்கம் தோற்றுவித் தது.".

   ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட சிந்தனையுடன் 'கறுப்புப்பணம்' திரைப் படத்தில் கண்ணதாசனே பாடுவதற் காக,கண்ணதாசன் எழுதிய பாடல் 

"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் 

இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்" 

   எனும் மகத்தான வரிகள் மூலம்,ஒட்டு மொத்த மனித குலத்தின் நலம் வேண்டி சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்து,நன்மைச் சிந்தனையில்,மனித இனம் திளைக்கச்செய்தது.

  இறைவனைத் தொழுகையில் கூட்டுப் பிரார்த்தனையாகவோ,அல்லது எல்லோ ரின் தொழுகை,மகிழ்ச்சியை மனதில் தாங்கியோ'பாவ மன்னிப்பு' திரைப் படத்தில்,டி.எம்.சௌந்தராஜன் நாகூர் ஹனிபாவுடன் பாடிய கண்ணதாசன் வரிகளான, 

"எல்லோரும் கொண்டாடுவோம் 

அல்லாஹ்வின் பேரைச் சொல்லி 

நல்லோர்கள் வாழ்வை எண்ணி"

  எனும் பாடல்,நல்லோர்கள் வாழ்வை எண்ணி இறைவனை நினைக் கை யில்,மகிழ்ச்சிப்பரவசம் பூத்துக்குலுங்கி ஆன்மீகக் கொண்டாட்ட மாவதை ஆனந் தமாய் உணர்த்தியது. 

  ஆனால் அதே நேரத்தில், எல்லோரின் மகிழ்ச்சிக்காகப் பாடும் ஒருவன் காதலில் தோற்கும்போதோ,அல்லது நம்பிக்கை மோசம் போகும்போதோ, விரக்தியில் எம.எஸ்.விஸ்வநாதன் இசையில் மைந்த  கண்ணதாசன் வரிகளே 'எங்க மாமா'திரைப் படத்தில் டி.எம்.சௌந்த ராஜன் பாடிய, 

"எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன் 

நான்வாழ யார் பாடுவார்" 

   எனும் வேதனை நெஞ்சில் தாங்கிய பாடலாகும். இதற்கு முரண்பட்டு எல்லோ ரும் சொல்லுமோர் பாடலை தான் சொல் லுவதாக, 'மறுபடியும்' திரைப்படத்தில் எஸ.பி.பி குரல் குழைந்து பாடிய பாடலே,

"எல்லோரும் சொல்லும் பாட்டு

சொன்னேனே உன்னைப் பார்த்து

மேடையே 

வைய்யகம் ஒரு மேடையே

வேஷமே 

அங்கெல்லாம் வெறும் வேஷமே"

  என்று பொய்மையின் முகத்திரயைை புன்முறுவலுடன் மென்மயைாய் மடித் தெறிந்து வீசிய வாலியின் வசீகரப் பாடல்.இளையராஜாவின் இன்னிசையில் ஏகாந்தமாய் நெஞ்சில் ரீங்காரமிட்ட பாடலிது.

  பரவசம்,பரந்த சிந்தனை,யதார்த்தம் விரக்தி போன்ற பல நிலைகளில்  வியாபிக்கும் 'எல்லோரும்'எனும் சொல்லால் நம்மை எல்லாம் குஷிப் படுத்திய கண்ததாசன் பாடலொன்று 'சுமதி என் சுந்தரி' திரைப்படத்தில் இடம்பெற்றது. ரயில் பயணத்தின்போது பயணிகள் பாடுவதாக அமைந்த, 

"எல்லோருக்கும் காலம் வரும் 

சம்பாதிக்க நேரம் 

வருவது எந்த வழியோ" 

என்று ஆண்  குரலில் ஏ.எல்.ராகவனும், 

"அள்ளித்தர தெய்வம் உண்டு 

பூட்டிவைக்க பெட்டி உண்டு 

அதுவரை என்ன கதையோ" 

  என்று பெண் குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி யும் பாட,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அப்பாடல் களிப்புடன் களைக்கட்டியது. 

முடிவாக,

"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் 

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும்  இலரே"

என்று தொடக்கி 

"தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே" 

   என்று முடியும் புறநானூற்றுப்பாடலைப் போல, பிறர்க்கெனவும், எல்லார்க்கு வேண்டியும்,சிந்தித்தலும் செயல்படுத லும்  போன்றொரு, நல்லறம் பூத்துக்கு லுங்கும் அறநெறிப்பூங்கா,மண்ணில் வேறெதுவும் இல்லை என்பதை,உறுதி படக்கூறலாம். இந்தவகைத் தத்துவத் தையே இப் பதிவில் கண்ட பல பாடல் களும் சான்றுரைத்து,தமிழ்திரையின் பெருமையை பறைசாற்றுகின்றன.

                       ==================0=================