மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
உடலின் உரோமம் இழந்தால் உயிர் இழக்கும் கவரிமான் போல, மானமிழந் தால் உயிர் விடுவர்,உயர் பண்புடையோர் என்கிறார், வள்ளுவர்.
"மானமே ஆடைகளாம்
மரியாதை பொன் நகையாம்
நாணமாம் குணமிருந்தால் போதுமே
எங்கள் நாட்டுமக்கள் குல பெருமை தோன்றுமே"
எனும் 'பாகப்பிரிவினை' திரைப்படத் தில் இடம்பெற்ற டி.எம்.எஸ் குழுவின ருடன் பாடிய,"தாழையாம் பூ முடிச்சு" பாடலுக்கு இடையே தோன்றும் இணை யில்லா வரிகள், மானத்தை உடலுக்கும் உள்ளத்திற்கும் அழியா ஆபரணமாக்கின. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் ரம்யமாய் செவிகளில் ஒலித்த கண்ண தாசன் இவ்வரிகள் பண்பாட்டுக் குளத் தில் குளிக்கச் செய்தன மானத்தின் மாண்பினை 'பாகப்பிரிவினை'திரைப் படத்திற்கு முன்னால் வெளிவந்த 'சதாரம்' எனும் திரைப்படத்தில் திருச்சி லோக நாதன் மனமுருகிப்பாடிய,
"மண்மீது மானம்
ஒன்றே பிரதானம்
என்றெண்ணும் குணம் வேணும்
இதை மறந்தாலே வாழ்வில்
கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்"
என்ற பொன்னான A. மருதகாசியின் கருத்தாழமிக்க வரிகள், ஜி.ராமநாதன் இசையில் இன்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.
இதே போன்று,மானம் மாபெரும் தவ மெனக் கூறும் பாடல் வரிகள்,'விஜயபுரி வீரன்' திரைப்படத்தில் தஞ்சை ராமை யாதாஸ் எழுதி ஏ.எம்.ராஜா பாடிய, "உள்ளத்திலே உரம் வேணுமடா" எனும் பாடலுக் கிடையே,
"மானம் ஒன்றே
பிரதானம் என்றே
மறந்து விடாதே
வாழ்வினிலே"
என்று இரு இடங்களில்,ஒவ்வொரு இடத்திலும் இருமுறை ஒலித்து,மானத் தின் எல்லையை,விரியச் செய்தது. டி.ஆர்.பாப்பாவின் மெல்லிய இசையூற்றி லும் ஏ.எம.ராஜாவின் தேன்குழைந்த குரலிலும் இப்பாடல் ரசிகர் நெஞ்சங்க ளில் தனியிடம் பிடித்தது.
எம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடல்கள் சில, மானத்தின் மகத்துவத்தை மலையளவு உயர்த்துகின்றன.'வேட்டைக்காரன்' திரைப்படத்தில் டி.எம்,எஸ் குரலில் இதமாய் செவிகுளிரச்செய்த,கண்ண தாசனின் "வெள்ளி நிலா முற்றத்திலே" பாடலுக்கு இடையே,தனித்துவத்துடன் தெளிவு தந்த,
"நாலு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனிமரியாதை"
எனும் வரிகள் கே.வி.மாகாதேவன் இசையில் மனதில் முரசு கொட்டின. இதே போன்று,எம்.ஜி.ஆரின் 'சந்திரோதயம்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் குரலில் கம்பீரமாய் முழங்கிய,"புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக" பாடலுக்கிடையே பரவசமூட்டிய,
"கேள்விக்குறிபோல் முதுகு வளைந்து
உழைப்பது எதற்காக,
மானம் ஒன்றே பெரிதென எண்ணி
பிழைக்கும் நமக்காக"
என்ற கவிஞர் வாலியின் வாழ்த்துக்குரிய வரிகள்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் விண்ணை எட்டி எழுச்சி பரப்பின.
எ.ம் ஜி.ஆரின்'பணத்தோட்டம்' எனும் இன்னொரு படத்தில் இடம் பெற்ற தன்னம்பிக்கை,தரணியில் தடம் பதித்த
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே"
என்ற பாடலுக்கிடையே பசுமையாய் பண்பூட்டிய,
"மனதுக்கு மட்டும் பயந்துவிடு
தன மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு"
என்று வீரம் விதைத்த கண்ணதாசனின் வரிகள்,விஸ்வநாதன் ராம மூர்த்தி இசை யில் மனிதனும் மானமும் இரண்டறக் கலந்த நிலையினை நெறிப்படுத்தின.
எம்.ஜி.ஆரின் மற்றொரு திரைப்படமான 'தனிப்பிறவி'யில் டி.எம்.எஸ் பாடிய, "உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே" எனும் பாடலுக்கிடையே,
"ஆற்றுநீரைத் தேக்கி வைத்து
அணைகள் கட்டிய கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க
ஆடை தந்த கைகளே"
என்று ஒலித்த கண்ணதாசன் வரிகள். கே.வி.மகாதேவன் இசையில் மானமே ஆடைகளாம் என்பதன்,மறுகோணத்தைக் காட்டும்.
மானத்தைப்பற்றி வேடிக்கையான பாடலொன்று மணி ஓசை திரைப்படத்தில் எல் ஆர் ஈஸ்வரியின் வசீகரக்குரலில் பலரால் கேட்கப்பட்டு மிகவும் ரசிக்கப்பட் டிருக்கும்"ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமா வப்பாறு"என்று தொடங்கும் அப்பாடலில் இடையே ஒலிக்கும்,
"மாட்டு வண்டி.ஓட்டிக்கிட்டு
வீட்டுக்குத்தண்ணிய ஊத்திக்கிட்டு
மானத்தையும் காத்துகிட்டு
மனுஷனாக வாழ்ந்துகிட்டு
கிள்ளிவிட்ட பிள்ளையப்போல ஆழுகிறாரு
அவர் ஆம்பளையா பொம்பிளையா
என்னான்னு கேளு"
எனும் பேச்சுமொழிப்பாடல் எதார்த்தமாக மானத்தின் சிறப்பினை சீர்தூக்கும். விஸ்வநாதன் ராமமூர்த்தி.இசையில் கண்ணதாசனின் இவ்வரிகள் களை கட்டின.
முடிவாக,பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் காணும்,
"திருமதுகை யாகத் திரணிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் -எரிமண்டிக்
காணத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே
மான முடையார் மனம்"
எனும் கவிதை வரிகளின் பொருளான 'செல்வச் செருக்கினால் நல்ல குணம் அற்றோர் காட்டும் அவமதிப்பு,மானமுடை யோர் நெஞ்சினில் ஏற்படுத்தும் தாக்கம் , தீயெனப் பற்றி அனல் கக்கும்'என்பது தன்மானத் தின் தகைமையை தீப்பிழம் பாய் விண்ணில் பரவச் செய்யும்.மானத் தின் எல்லை வானம்வரை உயர்ந்து விரிந்ததாகும்!
=================0===================
No comments:
Post a Comment