Friday, February 20, 2026

மணக்கும் மதுரை.

   தமிழ்திரையில் பல பாடல்களும் திரைப் பட தலைப்புகளும்  ஊர்களைக் குறிப் பிட்டு ஊர்க்கூடிதேரிழுத்துக் கொண்டிருக் கின்றன.'மணப்பந்தல்' திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய"எந்த ஊர் என்ப வனே"எனும் பாடலில்,கற்பனை ஊர்கள் பலவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருக் கும்.

  "மணப்பாற மாடுகட்டி" எனும் 'மக்களை பெற்ற மகராசி' படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடலில், தமிழ் நாட்டின் பல ஊர் பெயர் கள் வந்துபோகும்.ஆனால், தமிழ்திரைப் படப் பாடல்களிலும் தலைப்புகளிலும் பலமுறை தோன்றிடும் ஊரின் பெயர், நான் மாடக்கூடலெனும் தூங்கா நகரம் என்ற, மதுரை மாநகரமே! 

   'மதுர','மதுரை வீரன்' 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்''மதுரை வீரன் எங்க சாமி' போன்ற திரைப்பட தலைப்புக்கள் மட்டுமின்றி, மதுரையைச் சுற்றி வரும் பல்வேறு பாடல்களும் உண்டு.

  முதலில் கே.பாலச்சந்தரின்' பூவா தலையா' திரைப்படத்தில் வாலி வரி யெடுத்து டி.எம்.எஸ் பாடிய,

"மதுரையில் பறந்த மீன்கொடியை 

உன் கண்களில் கண்டேனே" 

  எனும் பாடலை குறிப்பிட்டாகவேண்டும். நளினமும் ரசனையும் உள்ளடக்கிய இப்பாடல், நம்மை பாண்டிய சாம்ராஜ்ய காலத்திற்கே கொண்டு சென்றது. அதற்குப்பின்னர் 'திருமலை தென் குமரி' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, 

"மதுரை அரசாளும் மீனாட்சி 

காஞ்சியிலே நீ காமாட்சி" 

  எனும் பாடல், மதுரையை மனமுருகி, சொக்கநாதர் மனையாளின் இறைமை யுடன் கட்டிப்போட்டது. உளுந்தூர்பேட்டை ஷண்முகம் எழுதிய இப்பாடலுக்கு, குன்னக்குடி வைத்தியநாதன் குணம் குளிர இசையமைத்திருந்தார்.  

   மதுரையில் பறந்த மீன்கொடியுடன் காதலியின் விழிகளை ஒப்பிட்டதுபோல, காதலியின் நேசத்தை மரிக்கொழுந்தின் வாசத்துடன் உருவக்கப்படுத்திய பாடலே 'எங்க ஊரு பாட்டுக்காரன்'படத்தில் இளையராஜாவின் இசையில் மனோவும் சித்ராவும் பாடிய, கங்கை அமரின் வரிக ளான, 

"மதுரை மரிக்கொழுந்து வாசம் 

என் ராசாத்தி உன்னுடைய நேசம்" 

    என்ற நெஞ்சமெல்லாம் காதலை மனக்கச்செய்த பாடல்.அதே மதுரையை தன்னுடன் இணைத்து,தன் பெருமை போற்றிய பாடலே,'திருவிளையாடல் ஆரம்பம்' திரைப்படத்தில் D.இம்மானின் இசையில் கார்த்திக்,கல்பனா ராகவேந்தர் ஒன்றிணைந்து பாடிய, 

"மதுர ஜில்லா மச்சான் தாண்டி 

என் ஜாதகத்தில் குரு உச்சந்தாண்டி"

எனும் கவிஞர் விவேக் புனைந்த பாடல். 

. இதே பெருமையை இன்னும் சற்று குரலுயர்திப்படிய பாடலே 'மதுர' திரைப் படத்தில் ஷங்கர் மகாதேவன் அமர்க்கள மாய்ப் பாடிய, 

"மச்சான் பெரு மதுர 

நீ நின்னு பாரு எதிர

நான் ரெக்கை கட்டி பறந்து வரும் 

ரெண்டு காலு குதிர"

எனும் கபிலனின் பாடல்.

  மதுரையும் வைகையும்,நீரும் நிலமென கலந்து இனித்த பாடலே, 'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தில் வாலி தமிழ்ச் சொற்களை தேனில் நனைத்து எழுதி நம்மை சுவைக்கச்செய்த ,

''தென்மதுரை வைகை நதி 

தினம் பாடும் தமிழ் பாட்டு 

தேய்கின்றது பொன் மாலைநிலா 

தேயாதது நம் ஆசை நிலா

இது வானம் போலெ வாழும் பாசம்"

   என்று அண்ணன் தம்பி பாசத்தை,மது ரையும் வைகையுமென பிரிக்க முடியா பரவசத்தில் பிணைக்கச்செய்தது.இளை யராஜாவின் இசைக்கடலில்,எஸ்.பி.பால சுப்ரமணியம் மலேசியா வாசுதேவன்    மற்றும் P.சுசீலாவின் குரல்கள், குதூகல மாய்க் குளித்தெழுந்தன.

   ஆனால் இதே மதுரையை தள்ளி வைத்து,தன் காதலி பெருமையில் நளின மாய் துள்ளிய பாடலே,'அழகிய  தமிழ் மகன்'திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ரம்யமான இசையில்,பா.விஜய்யின் வரிகளை,பென்னி டயால்,அர்ச்சித், தர்ஷனா,சைந்தவி,ஆகிய நால்வரும் கூடிக்குழைந்து,களித்து பாடிய,

"மதுரைக்கு போகாதடி 

அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்" 

என்று தொடங்கி வேறு சில ஊர்களையும் சொல்லி, 

"அசருது அசருது ஊர் மொத்தமா 

அது என்ன அது என்ன உன் குத்தமா"      

   என்று மகிழ்ச்சியில் மனம் நிறையச் செய்தது.

. சங்கத்தமிழுக்கு சங்கென முழங்கி,முச்சங்கம் கண்ட மதுரை மண்ணை, தமிழ்த்திரை பாடல்கள் மூலம் தாராள மாய் கவுரவித்து,தமிழோடு விளையாடி,தன்னிகரில்லா தென்தமிழ் நாட்டின் பெருநகரத்தை பெருமை கொள் ளச்செய்துள்ளது என்பது,தமிழ்திரை யினை தலை நிமிரச்செய்யும் விடய மாகும்.

        ===============0===============

     

1 comment: