Tuesday, March 24, 2026

மரங்களும் மனிதமும்

 

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் 

செல்வம் 

பெருந்தகை யான்கண் படின் 

   என்று பிறருக்கு உதவிடும் பெருந்தன் மையும் ஒப்புரவு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால்,அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாக்கப் பயன் படுவது போன்றாகும் என்று,கலைஞரின் பொருள்கூற உரைக்கிறது,வள்ளுவரின் குறள். இதற்கு நேர்மாறான, 

நச்சப் படாதவன் செல்வம் 

நடுவூருள் 

நச்சு மரம்பழுத் தற்று 

   என்ற குறளுக்கு, வெறுக்கப்படுபவனி டம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக்குலுங்குகின்ற பழமும், வெவ்வேறானவையல்ல என்று பொருளுரைக்கிறார், கலைஞர். இப்படி பொதுப்படையாக மரங்களைப்பற்றி எழுதிய வள்ளுவர், பனை மற்றும் மூங் கில் மரங்களைப்பற்றியும் குறிப்பிட்டு, குறள்கள் வழங்கியுள்ளார்.தமிழ்திரையும் பல்வேறு நிலைப்பாடுகளில் மரங்களின் பெருமை போற்றியுள்ளது. 

  முதலாவதாக 'குலவிளக்கு' திரைப்ப டத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சுசீலா பாடிய கவியரசின் வரிகளான, 

"பனைமரம் தென்னைமரம் வாழை மரம் 

மக்கள் 

பழகும் பழக்கத்திற்கு மூணு மரம்"

 என்று தொடங்கி, 

"பனை மரத்துக்கு ஒருதரம் தண்ணீர் 

பாய்ச்சிவிட்டால் போதும்  அது 

தனை வளர்த்து தலையில் நுங்கினைத் 

தந்து விளையாடும்;

தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம் 

தீர்த்தம் விடவேணும்.அந்த 

தீர்த்தம் இளநீரை சேர்த்துக் கொண்டு வரும் 

காத்திருக்கவேணும்;

வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர் 

வார்த்தை பின்னாலடியோ, 

அது 

பூவை பழத்தை இலையைக்கொடுப்பது 

போட்ட கடனடியோ"    

என்று பாடி,

"மக்களில் பனை தென்னை வாழை என 

மூன்று வகைகளுண்டு; அவர் 

நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த 

மூன்று விதங்களுண்டு" 

   என்று அற்புதமாய் இன்னும் பல வரிகள் சேர்த்தமைத்து விளக்கியிருப்பார், கண்ணதாசன்.

 'குலவிளக்கு' திரைப்படம் வெளியாவ தற்கு முன்பே 'தை பிறந்தால் வழிபிறக் கும்' திரைப்படத்தில் கே முத்துசாமி வரி களமைத்து கே.வி மகாதேவன் இசையில் எம் எஸ் ராஜேஸ்வரி பாடிய, 

"மண்ணுக்கு மரம் பாரமா,

மரத்துக்கு இலை பாரமா,

கோடிக்கு காய் பாரமா,

பெற்றெடுத்த குழந்தை 

தாய்க்கு பாரமா" 

   என்று மரத்தை தாங்கும் மண்ணையும், கருவில் மழலையைத்தாங்கும் தாயை யும்,பொறுமைக்கு இலக்கணமாக்கி உறவுகளில் அன்பிருப்பின் சுமைகளும் சுகமா னதே என்னு மரத்தை மனிதத் துடன் ஒப்பிட்டுக்கோரியது இந்த பழைய பரவச மூட்டும் பாடல்.  

  மரமோ மனிதரோ,தனக்கும் பயன்படாது மற்றவர்க்கும் பயன்படவில்லையெனில், வளர்வதில் வாழ்வதில் அர்த்தமில்லை. 

"சாலையிலே புளியமரம் ஜமீந்தாரு வச்சமரம்

ஏழைகளை காக்கும் மரம் எல்லோர்க்கும் உதவும் மரம்" 

    என்று புளிய மரத்தின் பெருமையினை 'வடிவுக்கு வளைகாப்பு' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன்  இசையில் P சுசீலா வும் எல்.ஆர்.ஈஸ்வரியும்  புளிய மரத்தின் புகழ்  பாடிட 'படித்தால் மட்டும் போதுமா' திரைப் படத்தில் டி.எம்.சௌந்தராஜன் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடிய "ஓஹோஹோ மனிதர்களே" பாடலுக்கு இடையே வரும், 

"ஓதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது" 

   என்று ஒரு மரம் பெருத்தால் மட்டும் போதாது,பிறருக்கு வலுவாக உதவ வேண்டும் என்ற கருத்து,மனிதனுக்கும் பொருத்தமான ஒன்றே! 'வடிவுக்கு வளைகாப்பு'பாடலை ஏ.எஸ். நாராயணன் எழுத'படித்தால் மட்டும் போதுமா'பாடலை கண்ணதாசன் புனைந்திருந்தார்.

  மனிதருக்குள் காதல் மலருவது போல மரங்களுக்குள்ளும் காதல் மலரலாமே, என்பது போன்றொரு வேடிக்கையான கருத்தினை,'முத்தான முத்தல்லவோ' திரைப்படத்தில், வாலி வரிதொடுத்து எம். எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான,

"புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு 

கிட்டக்கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு" 

   வரிகள் வெளிப்படுத்தின.கோவை சௌந்தராஜனும் சசிரேகாவும் பாடிய இப்பாடல், "இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது" எனும் கருத்தினை பறைசாற்றுவது போலிருந் தது.இப்படி மரங்களை மனிதக்காதலுடன் இணைத்து இன்பம் சேர்த்து, 'கிழக்குச் சீமையிலே' திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ் மானின் இசையில், வைரமுத்து வரிகள் அமைத்த, 

"ஆத்தங்கரை மரமே அரச மர இலையே

ஆல மர கிளையே அதிலுறங்கும் கிளியே" 

   என்று மனோவும்,சுஜாதா மோகனும் பாடிய பாடல் உச்சக்குரல்களால் காதலின் உயரத்தை விண்ணை முட்டச்செய்தது.

  உறவுகளின் நெகிழ்ச்சியை மரங்களு டன் பிணைத்து, மனங்களை கனமாக் கிய பாடலே,'எங்க பாப்பா'திரைப்படத்தில் டி. எம்.சௌந்தராஜனும் எம்.எஸ். ராஜேஸ் வரியும் பாடிய,

"ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு; 

ஒரு  அன்னை தந்தது;  

ஒன்று காவல் கொண்டது.

ஒன்று கண் வளர்ந்தது" 

  என்று மனித உறவின் ஆழ்ந்த பாசப் பிணைப்பினை, மரங்களுடன் கட்டிப் போட்டது. கண்ணதாசனின் இப்பொன் னான வரிகளுக்கு,எம்.எஸ்.விஸ்வநாதன் உணர்வுபூர்வமாக இசையமைத்திருந் தார்.

  இப்படி பல பாடல்கள் மண்ணும் மரமும் மனிதமும் முக்கோணமாகிட"பூப்பூவாய் பூமியிலே ஆயிரம் பூ பூத்திருக்கு"என்பது போன்று, நன்மைகள் பூத்துக்குலுங்கும் தோப்புகளாய்,மனிதம் தழைக்கவேண் டும் என்பதை, இலக்கியமும் திரைப்படப் பாடல்களும் ஒருசேர உயர்த்திப் பிடிக்கின் றன.நிழல் தரும் மரங்களை நடுவது, மனித நெஞ்சங்களில் அன்பை வேரூன் றச்செய்வதற்கு இணையாகும்.

                            ===============0===============  

No comments:

Post a Comment