"உன் நண்பன் யார் என்று கூறு; நீ யார் என மதிப்பிடுகிறேன்" என்று விவரம் கோரலும், "குத்துவது நண்பனா இருந்தா,செத்தாலும் சொல்லக் கூடாது" { சுந்தரபாண்டியன் திரைப்பட இறுதி காட்சியில் சசிகுமார் கூறுவது} என்று விவரம் கூற மறுத்தலும், நட்பின் இரு முனைகளாகக் கொள்ளலாம்."நண்பனின் மரணத்தை விட மிகக் கொடுமையானது நட்பின் மரணம் " என்று நண்பர் ஒருவர் கூறியது,என் நினைவலைகளை விட்டு நீங்குவதே இல்லை!!. 'நட்பே துணை' எனும் திரைப்படத் தலைப்பு,
உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே
இடுக்கண் களைவதாம்பி நட்பு
எனும் பொன்னான திடுக்குறளை நெஞ்சில் மீண்டும் பதித்தது.
முகனக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகனக நட்பது நட்பு
எனும் குறள் மூலம் இன்முகம் காட்டுவதோடு நில்லாது, உள்ளன்பு கொண்டு நட்பு பாராட்டுவதே, உண்மையான நட்பென்று வள்ளுவர் தனது 'நட்பு' எனும் அதிகாரத்தில் வேறொரு குறளால் நண்பனின் மதிப்பை நிலை நிறுத்திக்கிறார்.
நண்பர்கள் இருவர் தங்களது நீண்ட இளமைக்காலம் உள்ளடக்கிய நட்பினை நினைத்து, ஏக்கத்துடன் பாடும்,
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே
இந்த நாள் அன்றுபோல் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே"
என்ற 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தில் மேஜர் சுந்தராஜனுடன் இணைந்து சிவாஜிக்காக டி.எம்.எஸ்ஸும் பாடிய கண்ணதாசன் பாடல், எம். எஸ். விஸ்வ நாதன் இசையில் களைகட்டியது. இதே போன்று 'சட்டம்' திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மலேஷியா வாசுதேவனும் கங்கை அமரனின் இசையில் பாடிய, வாலியின் வரிகளில் அமைந்த,
"நண்பனே, எனது உயிர் நண்பனே,
நீண்ட நாள் உறவிது;
இன்றுபோல் என்றும் தொடர்வது காண்"
எனும் பாடல், காலம் போற்றும் நட்பினை கொண்டாடியது.
காலத்தில் நிலைத்த நண்பர்களாய், 'உனக்காக நான்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசனுக்காக டி.எம்.எஸ்ஸும் கே. ஜே.யேசுதாசும் பாடிய,
"இமைத்தொட்ட மணிவிழி
இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இருமனம் ஒருகுணம்
இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம்
இல்லை இல்லை
கம்பனிடம் சோழன் கண்ட சுகம்
இது காவிய காலத்து அன்பு மனம்
பசும் பாலையும் நீரையும் சேர்த்த விதம் "
என்ற கண்ணதாசன் வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நண்பர்களின் ஒருமனதை நம் மனதில் நங்கூரமிட்டது.
"தில்" திரைப்படத்தில், வித்யாசாகர் இசையில் கார்த்திக் கே.எஸ்.சித்ரா திப்பு மற்றும் ஆனந்தும் இணைந்து நட்பின் அலைகளை நேரலைகளாக் கிய,
"ஓ நண்பனே நண்பனே,
நீ என்றுமே
வெற்றியின் நண்பனே"
எனும் அறிவுமதியின் பாடல், நண்பர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் நம்மையும் திளைக்கச் செய்தது.
சூழ்நிலை காரணமாக உயிரும் உடலுமாய் இருந்த நண்பர்கள் பிரிந்தாலும், சவால் விட்டுக்கொண்டிருப்பாரே தவிர,அவர்களின் நட்பு மாறாது.
'அண்ணாமலை' திரைப்படத்தில் சூழ்நிலையால் நண்பர்கள் பிரிந்தி ருக்க,
"வெற்றி நிச்சயம்
இது வேத சத்தியம்" எனும் பாடலுக்கிடையே வரும்,
"அடேய் நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்"
என்ற ஆக்ரோஷமான வரிகள், நட்பின் ஆழத்தையும், ஆத்திரத்தின் தாக்கத்தையும், ஒருசேர வெளிப்படுத்தும்.தேவாவின் இசையில் எஸ்.பி.பி பாடிய வைரமுத்துவின் பாடல் வரிகள், எரிமலையாய் வெடித்து, நீரில் தணிந்ததாய் தோன்றியது. இதே போன்றொரு நண்பர்களின் பிரிவுச் சூழல், தத்துவரீதியாக மலர்ந்து, மனதில் மணம் பரப்பிய பாடல் வரிகளே, 'பார்த்தல் பசிதீரும்'திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்தராஜன் பாடிய காணதாசனின்,
"உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை"
எனும் பாடலுக்கிடையே கேட்ட,
"தண்ணீர் தணல்போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகைபோல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்"
எனும் மகத்தான நட்பின் ஆழமும் வீச்சும்
'மகாபாரதம்' எனும் இதிகாசத்தில் தருமத்திற்கு அப்பால் நின்று, நண்பனுக்காக உயிர் நீத்த கர்ணனும், கர்ணன் பிடித்திழுத்ததால் துரியோதனன், மனைவியின் முத்துக்கள் சிதற,அப்போது அங்குவந்த துரியோதனன், மனைவியையும் நண்பனையும் துளியும் சந்தேகிக்காது ''சிதறிய முத்துக்களை அள்ளவோ தொடுக்கவோ''என வினவ உயரிய நட்பும்,உற்ற நண்பர்களாய் வாழ்வோருக்கு இணையாக வாழ்வில் வேறொன்றும் இல்லை என்பது போன்ற எண்ணத்தை ஏற்றிவைத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 'படிக்காத மேதை' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய,
மகாகவி பாரதியாரின்,
"எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்"
எனும் கண்ணன் பற்றிய பாடலில்,
"நண்பனாய், மந்திரியாய்,நல்லாசிரியனாய்,
பண்பிலே தெய்வமாய்,பார்வையிலே சேவகனாய்"
என்று வரிகளின் வரிசையில் நண்பனுக்கு முன்னுரிமை அளித்ததும் அதே போன்று ஆங்கிலத்தில் Friend philosopher and guide என்ற கூற்றில் நண்பனுக்கு முதலிடம் கொடுத்தலும், நண்பனை''உள்ளத்தில் உள்ளூறும் கள்ளாக்கி''உயரத்தில் அமர்த்துகின்றன.
"நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம், தெய்வீகம்" என்று பட்டியிலிடுகையில்,அதில் நல்ல நண்பனையும் சேர்த்துவிட்டால், சொர்கவாசலை சொந்த வாழ்க்கையில் கடக்கலாம்!
===========0============
No comments:
Post a Comment