Sunday, June 21, 2026

மடி தேடும் மனசு

 

   வள்ளுவனின் குறள்களில்,'மடி'எனும் சொல் பெரும்பாலும் சோம்பலையே குறிக்கும். ஆனால், உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து, இளைப்பாற மடிதேடுவதே, மானுட இயல்பு. அதுவும் குறிப்பாக, தாய் மடி தேடுதலில் தனிச்சுகம் உண்டு. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அன்னையின் மடியில் இளைப்பாறுதல்,மண்ணில் மாபெரும் சுகமாகும். 

"உலகம் பிறந்தது எனக்காக;

ஓடும் நதிகளும் எனக்காக; 

மலர்கள் மலர்வது எனக்காக; 

அன்னை மடியை விரித்தாள் எனக்காக." 

  என்று எம்.ஜி.ஆருக்காக டி.எம். சௌந்த ராஜன் 'பாசம்' திரைப்படத்தில் பாடிய கண்ணதாசன் வரிகள் மூலம், தன்னிறைவு காணத்துடிக்கும் நெஞ்சம், தாய் மடியே தனக்காகக் காத்திருப்பதாக தன்பெருமை போற்றும்.ஆனால், தாயின் மடியில் கிடக்கும் சுகத்தை, 

"தாயின் மடியில் தலைவைத்திருந்தால் 

துயரம் தெரிவதில்லை; 

தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் 

வேறொரு தெய்வமில்லை" 

  என்று தாய்மடி என்பது, தவமிருந்து பெறத்தக்க,துன்பம் போக்கும் தத்துவத் தலையணையாகும் என்பதை, 'தாயின் மடியில்' எனும் திரைப்படத்தில்,அதே எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதி, கே.வி மகாதேவன் இசையில் உருவான, தன்னிகரில்லா பாடல், வலியுறுத்தியது. 

   அதேபோன்று கிடைக்காத தாய்மடிக் காக தவிக்கும் ஆன்மாவின் ஆற்றா மையை, அற்புதமாய் வெளிப்படுத்தியது, 'முதல் மரியாதை' திரைப்படத்தில் மலேஷியா வாசுதேவனும் எஸ்.ஜானகி யும் இணைந்து பாடிய, 

"பூங்காற்று திரும்புமா? 

ஏம் பாட்ட விரும்புமா?

பாராட்ட, மடியில் வச்சு தாலாட்ட, 

எனக்கொரு தாய்மடி கெடைக்குமா?" 

எனும் அற்பதமான பாடல்.

  வைரமுத்துவின் வலியுணர்ந்த வரி களும், இளையராஜாவின் இதயத்தில் கோலோச்சும் இசையும், இப்பாடல்மூலம் இமயம் எட்டிய இயக்குனர் அமரர் பாரதிராஜாவின் ஆன்ம வேதனையை, அனைவரின் நெஞ்சங்களிலும் ஆழப்பதித்தது. தாய்மடிக்காக எங்கும் இதுபோன்றொரு இணையில்லா பாடல், இனிவருமா என்பது, தாய்மடிக்காகத் துடிக்கும் நெஞ்சங்களின் தீராத் தாகமாகும். 

   தாய்மடி மட்டுமே சுகம்தரும் என்பது கட்டாயமில்லை.அன்பால் அரவணைக் கும் எவர்மடியும் இன்னுயிர்காக்கும் என்பதை உறுதிப்படக்கூறிய பாடலே , 'கற்பகம்' திரைப்படத்தில் வாலி வரிகள் தொடுத்து, விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையில் P.சுசீலா பாடிய, 

"அத்தை மடி மெத்தையடி;

ஆடிவிளையாடம்மா. 

ஆடும்வரை ஆடிவிட்டு, 

அல்லிவிழி மூடம்மா" 

என்ற நெஞ்சில் நீங்காமல் நிறைந்த பாடல்.

இப்பாடலில் தொடர்ந்து வரும், 

"மூன்றாம் பிறையில் தொட்டில்கட்டி 

முல்லை மல்லிகை மெத்தையிட்டு,

தேன்குயில் கூட்டம் பண்பாடும்; 

மான்குட்டி கேட்டு கண்மூடும். 

இந்த மான்குட்டி கேட்டு கண்மூடும்." 

  எனும் வரிகள், கவிதைக்களத்தில் இலக்கியதூவல்களை காலமெல்லாம் களிப்புற விட்டுச்சென்றன. இதுபோன்ற வரிகளால் கண்ணதாசனைப் போன்று வாலியும், தமிழ்த்திரையில், மண்ணுக் கும் விண்ணுக்குமிடையே வெற்றிமுரசு கொட்டினார்.

  கருணை மழை பொழிவதுபோல்,கன மான நெஞ்சங்களை இளைப்பாற்ற தாய்மடிக்கு இணையாக யார் மடியும் அமையக்கூடும். அன்பும் அரவணைப்பும் அகல் விளக்கென காயமுற்ற மனங்க ளுக்கு காலமெல்லாம் ஒளியூட்டும்!. 

"மடிமீது தலைவைத்து 

விடியும் வரை தூங்குவோம்  

மறுநாள் எழுந்து பார்ப்போம்"

   என்று காதல் வயப்பட்டோரோ, அல்லது இல்லறம் பற்றியோரோ, ஒருவர் மடியில் மற்றவர் இளைப்பாறும் உத்தி காணலாம். 'அன்னை இல்லம்' திரைப்படத்தில், கே.வி.மகாதேவன் மெல்லிசையில் டி.எம்.எஸ்ஸும் P. சுசீலாவும் மெய்மறந்து பாடிய இப்பாடல், நம்மில் பலரையும் மடித்தேடத் தூண்டியிருக்கும். 

   இல்லத்தரசியின் இதயம் நாற்திசையில் துடித்திட,கட்டிய கணவனை நோக்கி,

"மாலையிட்ட  நேரந்தொட்டு  

மனைவியாகினேன்  

உன்னை மடியில் வைத்து கொஞ்சும் போது

அன்னையாகினேன்

சேவை செய்யும் வேளையிலே 

தாதியாகி னேன்.

என்றும் தனிமையிலே இரவினிலே 

துணைவியாகினேன்"

.  எனும் வரிகளை சுசிலாவின் தேன் சுவைக்குரலில் கேட்கையில், 'பால்குடம்' திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலியின் வளமான"முழு நில வின் திருமுகத்தில் களங்கமில்லையோ' எனும் இப்பாடல்,ஆடவர் நெஞ்சங்களில் அளவற்ற ஆவல்களைத் தூண்டியிருக் கக்கூடும்.இன்றைய கருத்தோட்டத்தில் இப்பாடல் பிற்போக்கு சிந்தனையாகத் தோன்றினாலும், மடி தேடும் மனசுக்குள் மத்தாப்புகளை மிளிர வைக்கும் ஒரு ஒய்யார உணர்வாகவே, இவ்வரிகள் என்றென்றும் உலாவரும்.

  சோகம் சுருக்குக்கயிறாகும்போது,மனம் நொந்து மடிப்பிச்சை கேட்பதுண்டு.அதே மடிதனில், பாசமாய் படுத்துறங்கிய பிள் ளைகள்,பாவச்சுமையாகும் தருவாயில், சோதனைகளின் உச்சம் கண்ட மனம்,

"அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா

இடிபோல பிள்ளை வந்தால் மடி

தாங்குமா"

. என்று பீறிட்டு கதறுவதுண்டு.தாலாட்டிய மடி,தாளாத கனம் கண்ட இப்பாடல் வரி கள்,'தங்கப்பதக்கம்'திரைப்படத்தில் எம். எஸ்.விஸ்வனாதன் இசையில், கண்ண தாசன் வரிகள்சுமந்த,"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"பாடலின் இடையே தோன்றி,டி.எம்.எஸ் குரலில்,மடி யின் சுமதைனை நம் நெஞ்சங்களில் இறக்கி வைத்தது.

. முடிவாக, அழுதுமுடிக்கா நேரங்களில், பொழுதே மடியாகி,நம் மனதில் நாமே ஆறுதல் காணச்செய்யும். தான் உண்ட உணவை மீண்டும் தானே அசை போட்டு ரசிக்கும் ஆடு மாடுகளைப் போல, நம் துன்பங்களை நாமே அசைபோட்டு ஆறுதல் பெறுவதற்கு, உலகமே உறங்கும் இரவுப்பொழுது, மடியாகி நம்மை இளைப் பாற்றும்.'சரசா B.A 'எனும் திரைப்படத் தின் எஸ்.வேதாச்சலம் இசையில் P.B. ஸ்ரீனிவாஸ் பாடிய கண்ணதாசன் வரி களிலமைந்த, 

"இரவின் மடியில் உலகம் உறங்கும் 

நிலவின் அழகில் மலரும் மயங்கும் 

என் மன வேதனை யார் அறிவார் 

உண்மையைச்சொன்னால் யார் உணர்வார்" 

  என்று ஆதங்கத்தின் முழுமையை இர வுக்கு அர்ப்பணித்தது.இரவின் மடியில் இளைப்பாறத்துடிக்கும் இப்பாடல் மூலம், ஒரு மனிதனின் ஆதங்கத்தை நாம் உணர்கிறோம். 

  இது ஓர் மடிக்கணினிக் காலம்.இங்கே கணினிக்கென மடிகள் ஏங்காதிருக்க லாம்.ஆனால், மடிகளுக்கென ஏங்கும் மனசு கனத்தால் மயங்கிக்கிடக்கிறது. தாயோ தாரமோ,தமக்கையோ தமைய னோ, மாமனோ அத்தையோ,நண்பனோ தோழியோ, ஆறுதல் தேடும் மனதிற்கு, அரவணைக்கும் மடி யாருடையதாயினும், அது காலமோ இறைவனோ,நமக்கு சுமையிறக்க நல்கும், சுத்தமான இருப்பிட மான மடியாகும். இவற்றில் தாய்மடிக்கு இணையான மடியேதும் இப்புவியில், இதுவரை மானுடம் கண்டதில்லை. மடிதேடும் மனசு, மடிகளால் இறக்குமே கனம்.

                               ===================0==================          

      

      

2 comments: