"பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்"
எனும் கவியரசின் பாடல் வேறு ஒரு கோணத்தில் எழுதப்பட்டிருந்தாலும் 'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய இப்பாடல், பல்வேறு விதமான பறவைகள் இயற்கைக்கு அழகு சேர்த்து உயிரினங்களின் உயரத்தை சுட்டிக் காட்டுவதாக உணரலாம். தமிழ்திரைப் பாடல்கள் பல்வேறுவிதமான பறவை களை பல்வேறு கருத்துக்களால் பெருமைப்படுத்தியிருக்கின்றன.உயிரி னங்களில் பறவைகள் விரிந்து பறந்து உலகளக்கின்றன.ஆனால் பறவைகளில் காக்கைகள் பெருமளவு வாழ்வியல் பாடங்கள் புகட்டுகின்றன.
. உதாரணத்திற்கு 'பராசக்தி' திரைப்படத் தில் சி எஸ் ஜெயராமன் பாடிய,
"கா கா கா கா கா கா
ஆகாரம் உன்ன எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவங்க
அந்த அனுபவப்பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
காக்காவென ஒண்ணாக்க கூடுறீங்க"
. இந்த உடுமலை நாராயணக்கவியின் வரிகளை கேட்கையில் ஒற்றுமையின் பலத்தை பிரதிபலிக்கும் காக்கைகளின் குரலையும் நம்மால் ரசிக்கமுடியும் என்று உணர்த்தியது.ஆர்.சுதர்சனம் எளிமை யாய் இசையமைத்த இப்பாடல்,என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் காக்கைகள் ஒற்றுமை சிறப்பை வலியுறுத்திய,
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச்ச்சொன்னா ஒதுக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்துக்குடுத்தது யாருங்க"
எனும் டி.எம்.எஸ் பாடிய 'அன்புக்கரங்கள்' படப்பாடல்,
'ஆசைமுகம்' திரைப்படத்தில் அதே டி.எம்.எஸ் பாடிய,
"எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு"
பாடலுக்கிடையே தோன்றும்,
"காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்"
. எனும் பாடலும்,ஈமச்சடங்குகளுக்கு மூலமாக இருக்கும் காக்கைகள், ஒற்றுமைக்கு பாலமாக இருப்பதை உணர்த்தும்.இப்பாடலில்,
"கோழியைப்பாரு காலையில் விழிக்கும்
குருவியைப்பாரு சோம்பலை பழிக்கும்"
. எனும் பறவைகளிடமிருந்து மனிதன் கற்கவேண்டிய வேறு சில நல்ல பழக்க வழக்கங்களும் அடங்கியிருப்பதை அறியலாம்.'அன்புக்கரங்கள்''ஆசை முகம்' பாடல்கள் இரண்டையும் வாலி எழுத,முதலாவது திரைப்படத்திற்கு ஆர்.சுதர்சனமும், இரண்டாவது பாடலுக்கு எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவும் இசைய மைத்தனர்.
முப்பால் எழுதிய வள்ளுவர் குறள்களில் ஒன்றின் மூலம் காக்கைகளின் ஒற்றுமை இயல்பினை,
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.
. எனும் அற்புதமான குறள் மூலம் விளக்கி யிருந்தார்.
. காக்கையுடன் வேறிரண்டு பறவைக ளையும் துணைக்கழைத்து விருப்பம் நிறைவேற்றக்கூறிய பாடலே 'மகாதேவி' திரைப்படத்தில் எம் எஸ் ராஜேஸ்வரி குழந்தைக்குரலில் பாடிய,
"காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர்க்கொண்டா
பசுவே பசுவே பால்கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா"
. என்று ஆசையை பூர்த்தி செய்ய பறவைக்கொரு பணியைக்கொடுத்த பாடல்.உடுமலை நாராயண கவியின் இப்பிடலுக்கு விஸ்வனாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
வீடுகளில் அண்டங்காக்கைகளின் வருகை பித்ருக்களின் வருகையாகவே கருதப்படுகிறது. அதுவும் குறிப்பாக அம்மாவாசை மற்றும் திதி கொடுக்கும் தினங்களில், அவற்றின் வருகை மிகச் சிறப்பாக வரவேற்கப்படுகிறது.ஆனால் அண்டங்காக்கையின் கனத்த தலை யினை பெண்டிரின் கொண்டைக்கு ஒப்பிட்டு 'அந்நியன்' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் உற்சாக இசையில் அமைந்த வைரமுத்துவின் பாடல்,அதன் மாறுபட்ட சொல்லாண்மையின் காரணத் தால் ஒரு தனி ரகமாக கேட்டு ரசிக்கப்பட் டது.
"அண்டங்காக்கா கொண்டைக்காரி
அச்சுவெல்ல தொன்டைக்காரி"
எனும் அவ்விருவரிகள் நேசிக்கும் பெண்ணின் தோற்றத்தையும், அவளின் தேன்சுவை கலந்தகுரலின் செவியாளு மையையும், ஒருசேர கலந்து கற்பனை யின் கலவரத்தை வெளிப்படுத்தியது.
காக்கையின் பெருமை,அதன் சிறகினி ல்கூட குணம் கூட்டும் என்பதை மகாகவி பாரதி எழுதிய,
"காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா"
என்று மாயோன் கண்ணனின் {நீல} கரிய நிறத்தினை,காக்கையின் சிறகினிலேயும் காண முடியும் என்று உணர்த்தியது. இந்த வரிகளை 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் சுஜாதா பாடக்கேட்கையில், பரிசுத்தமான உணர்வுப்பரவசத்தை உள்வாங்க முடிந்தது.
'காக்கை சிறகினிலே' எனும் தலைப் பைத் தாங்கி பார்த்திபன் நடித்த ஒரு திரைப்படமும் வெளியானது. கடுகு சிரித்தாலும் காரம் போகாது என்பது போல பறவையின் நிறம் கருத்தாலும், பலவகைப் பறவைகளில் காக்கையின் பெருமை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்.
===============0=================
No comments:
Post a Comment