Wednesday, August 12, 2026

எம் ஜி ஆரின் அறிவுரைப்பாடல்கள்


 

  இன்று பல உச்ச நட்சத்திரங்கள் எம்.ஜி. ஆரின் முதல்வர் அரியணைக்கு ஆசைப் படுவதோ,அல்லது அந்த உச்சத்தை எட்டி விட்ட பெருமிதத்தில் திளைப்பதோ,நடை முறைக்குப் புறம்பான நிலைப்பாடே! காரணம், நிசத்தில் எம்.ஜி.ஆர் கட்ட மைத்த அந்த பிம்பம்,எவ்வளவு அசாதார ணமானது, என்றும் அந்தப் பிம்பத்தை அவர் எவ்வளவு சிரமப்பட்டு சீரிய முறை யில் தனது அறநெறிப் பாடல்களால் கட்டமைத்தார் என்று ஒருமுறையேனும் நினைத்துப் பார்ப்பார்கக்க வேண்டும். உண்மையிலேயே,இன்றைக்கும் எம்.ஜி. ஆரின்  கொள்கை சார்ந்த அறிவுரைப் பாடல்கள், காலத்தை வென்றெடுத்து நிற்கின்றன. 

எம்.ஜி.ஆர் முதலில்'நாடோடி மன்னன்'  திரைப்படத்தில்,  

"தூங்காதே தம்பி தூங்காதே 

நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே" 

என்று தொடங்கி, பின்னர் 'திருடாதே'  திரைப்படத்தில்,  

"திருடாதே  பாப்பா திருடாதே 

வறுமை நிலைக்கு  பயந்து விடாதே 

திறமை இருக்கு மறந்து விடாதே'' 

என்று தொடர்ந்து,அப்பாடலில் இடையே 

"சிந்தித்து பார்த்து செய்கையை  மாற்று

சிறுசா இருக்கையில்  திருத்திக்கோ,  

தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ." 

  என்று கருத்துரைப்பதும்,நற்சிந்தனை புகட்டும் நல்வழி கோட்பாடுகளாம்! .இதே போன்றொரு கருத்தினைத்தான் பின்னர் 'பெற்றால் தான் பிள்ளையா' திரைப்படத் தில் இடம் பெற்ற,  

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி  

இந்த நாடே இருக்குது தம்பி" 

என்று தொடங்கி, 

"தவறு என்பது தவறி செய்வது 

தப்பு என்பது தெரிந்து செய்வது 

தவறுசெய்தவன் திருந்த பார்க்கனும் 

தப்பு செய்தவன் வருந்தியாகனும்" 

என்னு பாடியதும் நல்வழிச்சிந்தனை யாம்!

 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம் பெற்ற, 

"சின்னப் பயலே சின்னப் பயலே 

சேதி கேளடா" 

என்று ஆரம்பித்து,  

"உன் நரம்போடுதான் பின்னி வளரனும் 

தன்மான உணர்ச்சி"

  என்று சுயமரியாதையை உயர்த்திப் பிடித்தார்.இதேபோன்று,'பணத்தோட்டம்' திரைப்படத்தில்,

"என்னதான் நடக்கும்  நடக்கட்டுமே 

இருட்டினில் நீதி மறையட்டுமே" 

எனும் பாடலுக்கிடையே,

"மனதுக்கும் மட்டும் பயந்து விடு; 

ன்மானத்தை உடலில் கலந்து விடு: 

இருக்கின்ற வரையில்  வாழ்ந்துவிடு;  

இரண்டினில்  ஒன்று  பார்த்து விடு"  

என்று தன்னபிக்கையை  ஆர்ப்பரிக்கச் செய்வார்.

. இவற்றை எல்லாம் கடந்து அறநெறியின் உச்சம் தொட்டது 'நம் நாடு' திரைப்படத் தில் இடம் பெற்ற,

"நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே;

நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே."

என்ற பாடல். அப்பாடலின் இடையே,

"கிளி போல பேசு;இளம் குயில் போல பாடு;

மலர் போல சிரித்து நீ குறள் போவ வாழு.

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாபம்.

மெய்யான அன்பே தெய்வீகமாகும்"

. எனும் உன்னதக் கருத்துக்கள் உள்ளத் தினுள்ளே உண்மையைத் தைத்தது.

இதே போன்று,

"சிரித்து வாழ வேண்டும்

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

உழைத்து வாழ வேண்டும்

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"

என்று 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப் படத்திலும்,

"எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிரிய மனமிருக்கு''

என்று துவங்கி அதில்,

"உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி

உழைத்திட வேண்டும் கைகளை நம்பி."

என்று 'ஆசை முகம்'திரைப்படத்திலும்,

"ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே"

என்று'அடிமைப் பெண்'திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிலும், கேட்கப்பட்ட அத்தனையும், அறிவுரைக் களஞ்சியத் தில் தனியிடம் பிடிக்கும்.

"கண்ணை நம்பாதே 

உன்னை ஏமாற்றும்

உன்னை ஏமாற்றும் 

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது.

அறிவை நீ நம்பு 

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும் 

பொய்யே சொல்லாதது".

  என்று 'நினைத்ததை முடிப்பவன்' திரைப் படத்தில் அறிவுரையாகவும்,அதே போன் றொரு கருத்தினை,

"கண்போன போக்கிலே கால் போகலாமா?

கால் போன போக்கிலே மனம் போகலாமா?

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

மனிதன் போனபாதையை மறந்து போக லாமா?"

என்று ஆதங்கமாகவும் வெளிப்படுத்தி யிருந்தார்.

    இவற்றுக்கெல்லாம் சற்றே மாறுபட்டு, 'விவசாயி' திரைப்படத்தில்,

"நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கனும்

நாட்டு மக்கள் மனங்களிலே நாண யத்தை விதைக்கனும்"

என்று பொது மனித அறநெறியினை முன்வைத்தார், எம்.ஜி.ஆர்.

  இந்த நாணயம் எனும் சொல்லை தூக்கிப்பிடிக்கும் விதமாக 'நான் ஆணையிட்டால்' படத்தின் "தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை" என்ற பாடலுக்கு இடையே மாண்புடன் ஒலித்த, 

"எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை;

அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்கையில்  தோல்வி இல்லை"  

எனும் வரிகள் வலியுறுத்தின.  

    இப்படி நிறைய அறநெறிப் பாடல் களால் நன்னடத்தை விதிகளை இயல் பாக  மனித மனங்களில் விதைத்துச் சென்றன, பல்வேறு எம்.ஜிஆர் திரைப் படப் பாடல்கள்.

   இப் பாடல்களில் 'நாடோடி மன்னன்' 'திருடாதே' 'அரசிளங்குமரி' பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுத, முதலிரண்டு பாடல்களுக்கு எஸ்.எம். சுப்பையா நாய்டுவும்,மூன்றாவது திரைப்படத்திற்கு ஜி.இராமநாதனும் இனிமையாய் இசையூட்டினர். 'பணத் தோட்டம்' பாடலை கவியரசு புனைய, 'விவசாயி' திரைப்படப் பாடலை உடுமலை நாராயண கவியும்,பணம் படைத்தவன்  பாடலை' A.மருதகாசியும் எழுதியிருந் தர். இதரப்பாடல்கள் அனைத்தும் வாலியின் வசம்  சென்றன.'பணத் தோட்டம்' 'பணம் படைத்தவன்'படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தும், 'நம் நாடு''நான் ஆணையிட்டால்' 'நினைத்ததை முடிப்பவன்'.திரைப்படத் திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் தனித்தும் இசைஅமைத்தனர்.ஆசை முகம்' திரைப் படம்  எஸ்.எம். சுப்பைய்யா நாயுடுவின் இசையில் திளைக்க'விவசாயி' திரைப் படம் கே.வி.மகாதேவன் இசையில் உருவாயின.

  எம்.ஜி.ஆரின் அறிவுரைப் பாடல்கள் ஒருசிலமட்டுமே இப்பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளன.இன்னும் எத்தனையோ விழிப்புணர்வு பாடல்கள் அவரின் திரைப் படத்தில் இடம் பெற்றுள்ளன.எம். ஜி.ஆரு க்கு பக்க பலமாக இங்கே குறிப்பிட்ட அனைத்து பாடல்களையும் டி.எம் சௌந்த ராஜன் பாடி,கேட்போர் நெஞ்சங்களி லெல்லாம்  உற்சாகமூட்டினார் என்றால் அது மிகையாகாது.காதல் காட்சிகள் ஒரு சிலவற்றில் விமர்சனத்திற்குள்ளாகும் படி எம்.ஜி.ஆர் நடித்திருந்தாலும் அவரின் அறிவுரைப் பாடல்கள் பலவும் சமுதாய  எழுச்சியை தீர்க்கமாய் உருவாக்கின. இந்த வகையில் வேறு எந்த ஒரு நடிகரும் எம்.ஜி.ஆரின் தனியிடத்தை நிரப்ப இயலாது என்பது  திண்ணம்.

   இப்பாடல்கள் அனைத்தையுமே வழக்கம் போல வலைத்தள உதவியை நாடாது,என் நினைவிலிருந்து மட்டுமே திரட்டி பதிவு செய்தேன் என்றால், என்னைப்போன்று இன்னும் எததனையோ நபர்களின் நெஞ் சில் இப்பாடல்கள் நிலைந்திருக்கக் கூடும்.இதர தகவல்களுக்காக மட்டுமே நான் வலைத்தள தரவுகளை நாடினேன். இப்படிப்பட்ட பல பாடல்கள் காலம் உள்ள வரை எம்.ஜி.ஆரை நினைவு கொள்ளச் செய்யும்.

             ==========0===========


  



1 comment:

  1. நீங்கள் குறிப்பிட்டுள்ள *நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..."* என்ற திரைப்படப் பாடலின் வைர வரிகள் இவை " *கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்:* *கடமை இருந்தால் வீரன் ஆகலாம்: .பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்: இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்"*

    ReplyDelete