Tuesday, June 2, 2020

திரைக்கவிதை வரிகளில் கண்கள்

     புலன்களே கவிதைக்கு ஊற்று. குறிப்பாக விழிகளே கவிதையின் விதைகள்.எத்தனைக் கவிதை வரிகள் விழிகளென்னும் விதைகளால் விருட்சமாகியிருக்கின்றன.பி.பானுமதியின் இனிமைக்குரலில்' அம்பிகாபதி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே'பாடல் போல எத்தனை திரையிசைப் பாடல்களில், விழிகள் சுகமாக  வலம் வந்திருக்கின்றன.
   காதலில் கட்டுண்டோர்'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு;அது காவியம் ஆயிரம் கூறும்'{மரகதம்}என்றோ,போட்டியில் களம்  காண்போர் ''கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே'{வஞ்சிக் கோட்டை வாலிபன்}என்று ஆர்ப்பரித்தோ காதலின்  மகத்துவத்தையும், மோதலின் வீரியத்தையும்,கண்களின் மூலம்,கவிதை வரிகளாக்கினர்.
    காதல் புரிகையில் கன்னியருக்கு,கண்களே ஆயுதம். இதைத்தான் கவிஞர்கள் திரையிசை வரிகளில்'கண்கள் இரண்டும் இனி உம்மைக் கண்டு பேசுமோ' {மன்னாதி மன்னன்}எனும் காதலியின் வேதனை கேள்விக்கு விடையாக 'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே'{அடுத்தவீட்டுப்பெண்} என்றும் 'வேலாலே விழிகள்'{என்னைப்போல் ஒருவன்}என்றும் எழுதி வைத்தார்களோ என்னவோ! பெண்டிரின் பார்வை ஆடவரை இயக்கும் மாபெரும் சக்தி என்பதைத் தான் பாரதிதாசன்"கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் ஆடவற்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்று திரைக்கு வெளியில் நின்று விமர்சித்தார்.  
     மேலும் காதலின் வியப்பில்"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை"{பாம்பே }என்று கலங்கிக் கூறும் பாணியிலும் ,இந்த புகார் தகவலுக்கு, ஏற்பளிக்கும் வகையில்,"கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால் காதல் என்று அர்த்தம்"{திருடா திருடா}என்ற விடுகதை பாணியிலும்,திரையிசைப் பாடல்களில்,கவிஞர்களின் சாமர்த்தியம் சிகரம் கண்டது.     
   'கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ'  {களத்தூர் கண்ணம்மா }என காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் அன்பால் சீண்டுவதும்,விரக்தி மனநிலையில் காதலன்'கண்களே, கண்களே,காதல் செய்வதை விட்டுவிடுங்கள்'{வாழ்க்கைப் படகு}  என்று மாற்றத்தில் எச்சரிக்கை விடுவதும், காதல் விளையாட்டில், கண்கள் புரியும் சாகசங்களே.
    ஆனால் அதே நேரத்தில் மனைவியிடம் ஆழமான காதல் கொண்ட கணவன் 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி'{வியட்நாம் வீடு}என்று மனமுறுக்கிப் பாடுவதும் ஆன் பெண் உறவில்,கண்கள்  காவியம் படைக்கின்றன என்பதே,ஆத்மார்த்தமான உண்மையாம்
    திரையிசைக் கவிஞர்கள் சில நேரங்களில் கண்களின் நம்பகமற்றத் தன்மையை தங்கள் பாடல் வரிகளில் உறுதியாக வெளிப்படுத்தியதும் உண்டு. இந்த வகையில் நாம் கேட்ட சில பாடல்கள் தான்,எம் ஜி ஆர் திரைப்படங்களில் ஒலித்த,'கண்போன போக்கிலே கால் போகலாமா?' {பணம் படைத்தவன்}  'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' {நினைத்ததை முடிப்பவன்} போன்ற பாடல் வரிகளும் ,ஜெய்ஷங்கர் நடித்து வெளிவந்த 'பட்டணத்தில் பூதம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணில் தெரிவதெல்லாம் காட்சியா?'போன்ற வரிகளும் கும்.கண்கள் பார்க்குமோ அல்லது பேசுமோ அவைகள்  மனதின் கதவுகளாக இல்லாதபட்சத்தில்,போலிகளின் சரணாலயமே.
      அதுமட்டுமல்ல! கண்கள் முற்றிலும் ஒருவழிப் பாதையே.காணும் காட்சிகளை,பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவையின் நிலை யிலிருந்து கண்கள் எப்போதும்  பிரித்துப்பார்க்குமாயின்,மனதிற்கு தேவையற்ற சஞ்சலங்களும் சலனங்களுக்கும் நிச்சம்  இருக்கப்போவ தில்லை.'கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை'  {ஜீன்ஸ்}எனும் ஒற்றை வரியில் சொன்னது போல, இருவிழிகளின் ஒரு வழிப் பாதையினூடே மனமேறும் காட்சிகளை,மனம் எப்படி எடுத்துக் கொள்கிறதோ அதன் விளைவுகளுக்கு மனமே பொறுப்பாகிறது.சொந்தமில்லாக் காட்சிகளை மமேடையில் ஏற்றியதற்கு கண்களை தூக்கு மேடைக்கு அனுப்பவும் முடியாது.
   கண்கள்  சிலநேரம்  பொய்த்தாலும் அன்புன்,கருணையின் கலைக் கூடமாக விளங்கும் விழிகள்,மனித நேயத்தின் மாற்றுவழியாக,காணும் காட்சிகளை தன்வலைக்குள் கட்டிப்போட்டு,வன்புயலை வசந்தமாய் மாற்றுமென்றால் அது மிகையல்ல. இதைத்தான் திரைத்துளிகளில்,'கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலிலே தெய்ம் வரும்'{ஆனந்தி}எனும் பாடல்மூலம் உணரப்பெற்றோம். 
    விழிகளைப்பற்றி சற்று வித்தியாசமாகக் கருதுகையில் அவைகள் சூழ்ச்சி யில் மற்றவரை வீழ்த்தும் முயற்சியின் விளைநிலமாகவும்,கண் திருஷ்டி யெனும் பெயரில் கலவரச்  சொல்லாகவும்,அடிக்கடி குறிப்பிடப் படுதை  காண்கிறோம். இந்த வகையில் புனையப்பட்ட வரிகளே 'கண்படுமே பிர்  கண்படுமே  நீ வெளியே வரலாமா'{காத்திருந்த கண்கள்} மற்றும்'கண்ணுபடப் போகுதய்யா சின்ன கவுண்டரே திருஷ்டி சுத்த வேண்டுமைய்யா சின்ன கவுண்டரே' {சின்ன கவுண்டர்} போன்ற திரையிசைப் பாடல் வரிககளைக் கண்டோம்!     
    கண்களின் காட்சிகள் மெய்யோ பொய்யோ,கண்கள் என்றும்  மனதின்  பொக்கிஷமே.அதனால்தான் நாம் ஆழ்ந்து நேசிப்பவர்களை  'என்  கண்ணே' என்றழைக்கிறோம்.இதன் அடிப்படையில்தான்,மனதை  அமைதியுடன் ஆக்கிரமிக்கும் 'கண்ணே கலைமானே'{மூன்றாம் பிறை}  என்ற  பாடலையும் 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது  சாயவா' {விஸ்வாசம்}  என்ற  அருமையான  திரையிசைப்பாடல் வரிகளையும்  கவிஞர்கள் நம் நெஞ்சில்  ஊஞ்சலாட  வைத்தனர்.
    இதனை  இன்னும்  உணர்வு பூர்வமாகச் சொல்ல வேண்டுமெனில் நேசிக்கும் ஒருவரைக் கண் இமைக்காமல் காப்பாற்று வேன் என்பதன் பொருளாகும். இதனைத்தான்'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா 'என்  கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா'{ பெண்ணின் மனதைத் தொட்டு} எனும் பாடல் வெளிப்படுத்துகிறது.மொத்தத்தில், திரையிசைப் பாடல்வரிகள் கண்களால் நம்மை கைது செய்கின்றன.
 ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. தெரிய வில்லை ஸார். இத்தனை விபரங்களையும் படித்து உள்வாங்கி முடிந்ததும் என்ன வகையில் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை என்று உண்மையை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்...எல்லாம் வல்ல இறை அருள் துணை புரியட்டும் மேம் மேலும் உங்கள் புலமைக்கு... நாங்களும் அவ்வபோது அதை அனுபவித்து மகிழ்ச்சி அடைகி ரோம்

    ReplyDelete