



"பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்""பணம் பாதாளம்வரை பாயும்" போன்ற வழக்கு மொழிகள் பல தமிழில் உண்டு.நடைமுறையில் நாம் காண் பதோ,பணம் இல்லையெனறால்,பிணத்திற்கும் இல்லை குணம் என்பதும் . பாதாளம் காணும் பணத்தால்,மனிதர்கள் வேதாளங்களாய் மாறுவர் என்பது மாகும். தமிழ்திரைப்படங்களில் படத்தின் தலைப்பாகவும்,கவிதை வரிகளாக வும்,நம் சிந்தனையை புரட்டிப்போட்டிருக்கிறது,பணம் எனும் சொல்.
நடிகர் திலகம் நடித்த 'பராசக்தி' வெளியான அதே ஆண்டு{1952},அவர் நடித்து வெளியான இன்னுமொரு திரைப்படம்தான் 'பணம்'. கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'பணம்' திரைப்படத்திற்கு,கலைஞர் வசனம் எழுதியிருந்தார்.அதில் வரும் நறுக்குத்தெரித்தாற்போன்ற வசனம்தான், 'பணம் எனும் மோகனமான மூன்றெழுத்து; இன்று முட்டாள்களின் கைகளிலே குவிந்து கிடக்கிறது' . அதே திரைப்படத்தில் கலைவாணர் பாடிய பாடல்தான் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்"
கைக்கெட்டாத பணமும்,கைக்கு வந்து கரைந்து போகும் பணமும்,{"கையில வாங்குனேன் பையில போடல;காசு போன இடம் தெரியல" என்று சிவாஜி கணேசன் நடித்து,ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான,'இரும்பதிரை' திரைப்படத்தில் கே.ஏ.தங்கவேலுவின் வாயசைப்பில் திருச்சி லோகநாதன் பாடியது போல} மனிதன் கனவில் மட்டுமே காணும்,நடைமுறை வாழ்வின் கானல் நீர்த்துளிகளாம்.
என்.எஸ்.கே,மற்றும் கே.ஏ. தங்கவேலு போன்றோரின் நகைச்சுவை உணர் வோடு பல ஆண்டுகள் கழித்து 'ஏழையின் சிரிப்பில்'{Year 2000} எனும் திரைப்படத்தில் பிரபுதேவா வாயசைத்த,"ஓம் பணம், ஓம்பணம் ஏம் பணம்" என்று தொடங்கி "யப்பா,யப்பா,ஐயப்பா! கண்ணுல காச காட்டுப்பா!"எனும் பாடல் வரிகள் இன்றும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன .
காசு வருகிற நேரம் கூடவே மகாலட்சுமியும் வருவாள் என்றோ,அல்லது மகாலட்சுமி வரும் நேரம், காசு பணம் கொண்டாடும் நேரம் என்பதைத்தான், 'காதலா காதலா' திரைப்படத்தின் நகைச்சுவை திருவிழாவினூடே,"காசுமேலே காசுவந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராசகட்சுமி தட்டுகிற நேரமிது"எனும் கமலின் கரகோஷ வரிகளில் களிப்புடன் கேட்ட ரசித்தோம்.
'பணம்'திரைப்படத்தைத் தொடர்ந்து 1954 இல்,வை.ஆர் சாமி இயக்கத்தில் என் டி ராமராவ் நடித்த'பணம் படுத்தும் பாடு' திரப்படம் வெளியானது.பிறகு ஏழாண்டுகள் கழித்து,கிருஷ்ணாராவ் இயக்கி எஸ்.எஸ் இராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த 'பணம் பந்தியிலே' {1961}திரைப்படத்தில்,படத்தின் தலைப்பையே பாடல் வரிகளாகக் கொண்டு, சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடிய"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே"என்ற மனதில் ஆழமாக வேரூன்றிய,அருமை யான பாடலை,நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
பணத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய மற்றொமொரு பாடல் தான் ஏ.காசிக்கிங்கத்தின் இயக்கத்தில், ஜெமினிகணேசனும் ஏ.வி.எம். ராஜனும் நடித்து1967 -இல் வெளிவந்த, 'பந்தயம்' திரைப்படத்தில்,நாம் மிகவும் கேட்டு ரசித்த, டி . எம். சௌந்தராஜன் பாடிய,"காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா; கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே"என்ற பாடல்.
காசோடு கடவுளையும் கூட்டாளியாக இணைத்து,பணம் இல்லையேல் ஆண்டவனைக்கூட ஆலயத்தில் தரிசிக்கமுடியாது என்பதை, உள்குத்தாகக் கொண்டது,இப்பாடல்.இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளால் ஈர்க்கப்பட்ட ஏ . வி. எம் நிறுவனம் பின்னர் அதனையே 'காசேதான் கடவுளடா'{1972} என்று ஒரு திரைப்படத்தின் தலைப்பாகக் வைத்து ,அமோக வெற்றி கண்டது.
காசுக்காக மட்டுமேதான் வாழ்க்கை என்ற உண்மை நிலவரத்தை ஆட்டம் பாட்டுடன் சொன்னதுதான்,'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' {1956}திரைப்படத்தில் நாம் கண்டு, கேட்டு ரசித்த,"நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு; ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு காசுக்கு" என்ற தமாஷான பாடல்.
'பணம் பந்தியிலே' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்,எம்.ஜி,ஆர் சரோஜாதேவி இணைந்து நடித்து கே.ஷங்கரின் இயக்கத் தில் உருவான 'பணத்தோட்டம்'{1963} திரைப்படம்,மாபெரும் வெற்றிபெற்ற தோடு,அத்திரைப் படத்தில் டி .எம் .சௌந்தராஜன் பாடிய ஒருபாடலில் நாம் கேட்ட,"ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி;முத்தம்மா,நம் கட்டையிலும் வேகாதடி"எனும் வரிகள்,நம்மை தத்துவரீதியாக ஆழ்ந்து சிந்திக்க வைத்தன.
பணம் பாசத்தையே விழுங்கும் மலைப்பாம்பு எனும் கருத்தைத் தான்,ஏ.பீம்சிங் இயக்கத்தில் உருவான 'பழனி'{1965}திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தனது ஆழ்ந்த மனக்குமுறலாய், வேதனையுடன் வாயசைக்க,டி .எம் .எஸ் ஸின் உரத்த குரலில் 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தமென்ன டா காசில்லாதவன் குடும்பத்திலே' என்று தொடங்கி"பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா"எனும் பாடல் வரிகளில், பணத்தின் அகோர தாண்டவத்தையும்,பாசத்தின் பரிதாபத் தையும் அனுபவத்தன்மையுடன் விளக்கினார்,கவியரசு கண்ணதாசன்.
இதேபோன்று ஒரு நொந்துபோன மனநிலையைத் தான் 'நம்ம வீட்டு லட்சுமி' {1966}திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் ஒலித்த "பணம் இருந்தா போதுமடா மடியிலே ;அய்யா பாசமென்ன நேசமென்ன உலகிலே" எனும் பாடல் வரிகள் படம்பிடித்துக் காட்டின.
பணத்தை மைய்யமாக வைத்து பணம் படைத்தவன்''{1965}பணமா பாசமா' {1968}'பணக்கார பிள்ளை'{1968}'கை நிறைய காசு'{1974} 'பணத்துக்காக' {1974} 'பணம் பத்தும் செய்யும்' {1985}போன்ற தலைப்பு களைக்கொண்டு,பல தமிழ்த் திரைப்படங்கள் வெளியாயின. இதில் பணத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும், மகள் நேசிக்கும் ஆண்மகனை மாப்பிள்ளையாக ஏற்க மறுத்து, பல பிரச்சனை களுக்குக் காரணமான, கொடூரத்தாய்க்குலத்தை சித்தரித்த'பணமா பாசமா' ஒரு தனி ரகம்.
அத்திரைப்படத்தில் ஒரு மறக்கமுடியாத வசனத்தைக் கூட,இயக்குனர் திலகம் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் பலமாகப் புகுத்தியிருந்தார். "அம்மா !மகன் செத்தாலும் பரவாயில்ல; மருமகள் விதவையாகனும்னு நினைக்கிற மாமியாரப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.ஆனால்,மகள் விதவையானாலும் பரவாயில்ல ; மருமகன் சாகனும்னு நெனைக்கிற மாமியார இப்பதாமா பார்க்கிறேன்!"
B.சரோஜாதேவியின் குழைவுக்குரலில் மனத்தைத் தாக்கிய இந்த வசனம், இன்றும் மறக்க முடியாததே.'பணமா பாசமா"வின் கொடுந் தாய்க்குலத்தைத் தொடர்ந்து,பின்னர் 'குழந்தையும் தெய்வமும்' மாப்பிள்ளை' போன்ற வேறு சில திரைப்படங்களிலும் இதுபோன்ற பணப்பேய்களான,தாய்க்கதாபாத்திரங்கள் அரங்கேறினர்.
எது எப்படி இருந்தாலும்,என்னதான் பணம் நிச வாழ்விலும் நிழல்த் திரையிலும் விதவிதமாய் நம்மை ஆட்டிப்படைத்தாலும், பணத்தை மிஞ்சிய,அதாவது பணத்தை விட்டுக்கொடுக்க வைக்கின்ற,நிலைப் பாடுகள்,வாழ்வில் இல்லாமல் இல்லை. விட்டுக் கொடுக்கும் தாராள மனப்போக்கும்,பணத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் தார்மீகக் கடமை உணர்வுகளும்,அவ்வப்போது தழைப்பதால் மட்டுமே,இன்றும் மண்ணில் மனிதம் நிலைக்கிறது.
1978-இல் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'அந்தமான் காதலி திரைப்படத்தில்' சிவாஜி கணேசனுக்காக டி.எம். எஸ் பாடிய "பணம் என்னடா பணம் குணம்தானடா நிரந்தரம்" எனும் பாடலுக் கேற்பதான்,இன்றும் பலரின் வாழ்க்கை நெறிமுறைகள் நிர்ணயிக்கப் பட்டு,பாதை வகுக்கப்பட்டு,பயணம் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு,என்றுமே மறக்கமுடியா ஏ.சி.திருலோக் சந்தரின் இயக்கத்தில் உருவான 'அவன்தான் மனிதன்'{1975} எனும் மேன்மை யான திரைப்படத்தை, ஒரு உன்னத உதாரணமாகக் காணலாம்.
ப.சந்திரசேகரன் .
ரசித்தேன் சிறந்த ஆய்வு. நூலாக அச்சிட்டு வெளியிடலாம்.
ReplyDelete