Saturday, August 22, 2020

தமிழ்த் திரைவானில் நிலவின் பயணம்

     விண்ணில் வளர்ந்தும் தேய்ந்தும் உலாவரும் நிலவினை, கவித்துவத்தின் கற்பனையால்,வெண்திரை வரிகளில் விதவிதமாய் உலாவச் செய்யும் கவிஞர்கள், நிலவோடு நம்மை நிரந்தரமாய்க் கட்டியிடுகின்றனர்.குழந்தைக்கு நிலவைக்காட்டி, குட்டிக்கதைகள் பல சொல்லி,உணவூட்டும் தாயின் பரிவுடன் தொடங்குவதே, நமக்கும் நிலவுக்கும் இடையே நிலவும் நடைமுறை உறவாகும் .
    "மிஸ்ஸியம்மா" திரைப்படத்தின் எஸ். ராஜேஸ்வரராவின் ரம்யமான இசையில், ஏ.எம்.ராஜாவும் பி.சுசீலாவும் மென்மையாகப் பாடிய  'வாராயோ வெண்ணிலாவே'  காலம் தொட்டு,நிலவை மையப்படுத்தி புனையப்படும் எந்த ஒரு பாடலும் திகட்டு வதேயில்லை என்று சொல்லு வதைக் காட்டிலும்,நிலவோடு இணையும்  எல்லாப்  பாடல்களும் நமக்கு பரவசத்தை ஏற்படுத்தி,தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்த்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக,திரைப்பட காதல் பாடல்களுக்கு,நிலவு உவமையாகி,உருவகமாகி,புத்தம்புது கற்பனை களில் ஊற்றெடுத்து,ஆற்றுப்பெருக்கென மகிழ்ச்சி வெள்ளத்தில் நம்மை அடித்துச் செல்கிறது.
    தமிழ்த் திரைப்பாடல் வரிகளில் கவிஞர்கள் பெரும்பாலும் காதலனை யோ அல்லது காதலியையோ,நிலவோடு உருவகப் படுத்தியோ ,அல்லது காதலர்கள் மற்றும் கணவன் மனைவி பிரிந்திருக்கும் காலங்களில், நிலவோடு வானத்தையும் மேகங்களையும் சம்பந்தப் படுத்தியோ,தமிழ் இலக்கியத்தின் தகைமையை பல பாடல்கள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
    1957-இல் எம்.ஜி.ஆர் பத்மினி இணைந்து நடித்து வெளியான'ராஜராஜன்' திரைப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில், கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி யின் வரிகளை,சீர்காழி கோவிந்தராஜனும் ஏ.பி.கோமளாவும் மெய்மறந்து பாடிய 'நிலவோடு வான்முகில் விளையாடுதே' எனும் பாடல் தொடங்கி, பிரபு தேவாவும் காஜலும் நடித்து 1997-இல் வெளியான 'மின்சாரக்கனவு' திரைப்படத்தில்,  மயிலிறகால் மனம்வருடும் வகையில் ,ஹரிஹரனும் சாதனா சர்கமும் அனுபவித்துப் பாடிய,ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, கவிப்பேரரசு வைரமுத்து வின்"வெண்ணிலவே வெண்ணிலவே விளையாட ஜோடி தேவை"பாடல்வரை கவிஞர்கள் பார்வையில்,காதலருக்கு நிலவு என்றும்,விளையாடும் ஒளிவடிவே!
    சிலநேரம் கவிஞர்கள்,காதலர்களின் சேவைக்கென,வெண்ணிலவை குடைபிடிக்க அழைப்பதும் உண்டு, அப்படி அமைந்த ஒருபாடல் தான் 'அபலை அஞ்சுகம்'எனும் திரைப்படத்தில்,திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் மெய்மறக்கச் செய்யும் இசைவடிவமைப்பில், உடுமலை  நாராயண கவியின் உருவாக்கத்தில்,டி.ஆர்.மகாலிங்கமும்  பி.சுசீலாவும் குரல் விரித்துப் பாடிய,
 "வெண்ணிலா குடைபிடிக்க, 
வெள்ளிமீன் தலையசைக்க, 
விழிவாசல் வழிவந்து இதயம் பேசுது" 
என்ற தேன்சுவைப் பாடலாகும். பெண்ணை நிலவாக்கி பெண்ணோடு,நிலவின் மானம் காக்க முற்பட்ட பெரும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின், 
"ஆடைகட்டி வந்த நிலவோ, 
கண்ணில் மேடைகட்டி  ஆடும் எழிலோ"
எனும் 'அமுதவல்லி'திரைப்பத்தில் வரும்  வரிகள்,உண்மையிலேயே,மனித கலாச்சாரம் போற்றும் ஒரு உன்னதமான கற்பனையாகும்.மெல்லிசை மன்னர்களின் இசை மழையில் டி.ஆர்.மகாலிங்கம் பி. சுசீலா குரல்களில் இப்பாடல்,பழைய தமிழ்த்திரைப் பாடல்களில்,அமரத்துவம் பெற்ற  ஒன்றாகும். இதே போலத்தான் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில்,வாலியின் கைவண்ணத்தில், டி .எம். எஸ்ஸின் உரத்தக் குரலில் கேட்ட, 
"நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ, 
நீரலைகள் இடம் மாறி,
நீந்துகின்ற குழலோ"
என்ற வரிகள்,பெண்ணை நிலவாக்கி,மண்ணில் உலாவச்  செய்தன. இப் பாடலுக்கும் இசையமைத்தது,மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பது, அனைவரும் அறிந்திருக்கக்கூடும்.         
    பெண்ணை நிலவாக்கி,காதலனின் வருகைக்கென,காத்துத் களைத்துக்  போன காதலியைப் பார்த்து,
"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், 
நெருப்பாய் காய்கிறது"
{போலீஸ்காரன் மகள்- திரைப்பத்தில்,மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியது.}
என்று கேள்விகளால்,சில்மிஷம் செய்யும் ஆண்மகனின் காதல் வருணனை களில்,கதிரவனின் வெப்பத்தைக்  கடன்வாங்கி,நிலவுக்களிப்பர் என்பதே,  கவிஞர்களின் கற்பனைக் கருவூலக் காட்சியாகும்.
   இதன் எதிர்மறைக் கற்பனையாக,
"ஒரு பெண்ணை பார்த்து 
நிலவைப் பார்த்தேன் 
நிலவில் குளிரில்லை"
{தெய்வத்தாய்--மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இசையில்,டி .எம்.எஸ் பாடியது
என்று,பெண்ணின் வண்ண விழிகள் ஆயிரம் நிலாக்களின் குளிரை உள்ளடக் கியது என்றும், விண்ணுக்குச் சென்று நிலவின் குளிரை கொண்டாட வேண்டிய தில்லை;பெண்ணின் விழிகளிலேயே நிலவின் குளிரை நிசமாகக் காணாலாம் என்றும்,கவிஞர்களின் கற்பனை விழிகள், ஆழ்ந்து அகன்று,ஆனந்தம் பறைசாற்று வதுண்டு. மனம் விரும்பா பெண்ணை நோக்கி,
"வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்க லையா''?என்றோ, 
{தாலாட்டுப்பாடாவா திரைப்பத்தில்,இசைஞானி இளையராஜாவின் இணையற்ற பொன்தூவலில்,அருள்மொழியும் எஸ்.ஜானகியும் பாடியது}
அல்லது,நெருங்கிவரும் பெண்ணைக் கண்டு,
"நிலவே என்னிம்  நெருங்காதே;
நீ நெருங்கும் நிலையினில் நானில்லை''{'ராமு 'திரைப்பத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்,பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியது}
என்று பாடுவதோ,ஆண்வர்க்கத்தின் இரட்டை நிலைப்பாடுகளாக இருக்கக்கூடும், என்று எண்ணத்தோன்றுகிறது.அதே போலத்தான்,தன்னை நெருங்கவிடா மனைவி யைப் பார்த்து,
"நிலவைப் பார்த்து வானம் சொன்னது, 
என்னை தொடாதே!"
{சவாலே சமாளி-டி .எம்.எஸ் பாடியது;இசை  மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் }
என்பதை,அநியாயமாக தண்டிக்கப்பட்ட ஆண்வர்க்கத்தின் அங்கலாய்ப்பாகப்  பார்க்லாம்.
      கண்ணுக்கும் கற்பனைக்கும் விருந்தளிக்கும் நிலவினை,அமுதின்  அட்சயபாத்திரமாக வருணித்து அது தன் அருகில் வரவில்லையே எனும் ஏக்கத்தை வெளிப்படுத்திய அமுத கீதமே'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தில்  கு.ம. பாலசுப்ரமணியனின், 
"அமுதை பொழியும் நிலவே 
நீ அருகில் வராததேனோ".
எனும் பி சுசீலா மெய்மறந்து பாடிய பாடல்.இந்த சுகமான வரிகளுக்கு டி.ஜி லிங்கப்பா இசையமைக்க அப்பாடல் காலத்தால் அழியாத இசை பொக்கிஷமானது.
     வளர்ந்து தேய்ந்து விண்ணை அலங்கரிக்கும் நிலவவில்லை மாறா நிலைக்கு கொண்டு சென்றனர் காதலர் இருவர்.'பெரிய இடத்து பெண்' திரைப்படத்தில் டி.எம் சௌந்தராஜனும் பி சுசீலாவும் இனிக்க இனிக்க பாடிய, 
"அன்று வந்ததும் இதே நிலா 
இன்று வந்ததும் அதே நிலா 
என்றும் உள்ளது ஒரே நிலா 
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா"
எனும் பாடல்.கண்ணதாசன் வரிகள் எழுத விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இப்பாடல்,என்றென்றும் இனிக்கும் இசை விருந்தானது.     
    சிலநேரங்களில் காதலர்களின் திக்குமுக்காடலைக் கடந்து, கவிஞர்களின் மாற்றுக் கற்பனை,நிலவைக் காணவில்லை என்றும்,வானமே நிலாவைத் தேடுவதாகவும் விண்ணுக்கும் நிலவுக்குமிடையே காதல்களம் அமைத்துக் கொடுப்பதுண்டு. அப்படி விபரீதக் கற்பனையில் விளைந்த பாடல்தான் வாலியின் வசந்த வரிகளாய் அமைந்த,  
"வா வெண்ணிலா,உன்னை வானம் தேடுதே; 
மேலாடை மூடிய ஊர்கோலமாய்ப் போவதேன்?"
  'மெல்லத் திறந்தது கதவு'திரைப்படத்தில் மெல்லிசை மன்னரும்,இசைஞானியும், இணைந்து இசையமைத்த இப்பாடல்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி குரல் இழைவுகளில்,நிலவென  விண்ணைத் தழுவியது.இதே எஸ்.பி.பியின் சௌந்தர்யக் குரலின் பல்வேறு தோரணைகளில்,வானத்தை ஓடையாக்கி நிலவை அதில் நீந்தச் செய்த பாடலே  வாலி எழுதி,இளையராஜா இசையமைத்த ,என்றும் இனிக்கும் "நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா"என்தாகும்.   
    நிலவைப்பற்றி ஒரு வித்தியாசமான பாடல் ஏ.வி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் நடித்து வெளியான 'பால் கும்' திரைப்படத்தில் ஒலிக்கக் கேட்டிருப்போம்.  வாலியின் வரிகளுக்கு சூலமங்கலம் சகோதரிகள் திவ்யமாய் இசையமைக்க, பி.சுசீலாவின்  வசீகரக்  குரலில் வந்த, 
"முழு நிலவின் திருமுகத்தில் 
களங்கமில்லையோ 
அது  கண்குளிர தண்ணொளியை 
வழங்கவில்லையோ" 
   என்ற அந்த பாடல் வரிகள், வளர்ந்து தேயும் குறையினைப்போன்றதே,தன் கணவன் தனக்குள் காணும் குறைகள் என்று,மனைவி தன் கணவனின் தளர்ந்த மனநிலைக்குத் தெம்பூட்டுவதாக அமைந்திருந்தது.ஒருவகையில் பார்த்தால் நிலவை ஆணுடன் ஒப்பிட்ட ஒரு வித்தியாசமான பாடலாக இதனைக் கொள்ளலாம்.
    காதல் முற்றிப்போன ஒரு வாலிபனுக்கு நிலவை பொய்யாக்கி,அதன் இடத்தில்  தன்னையும்  தன் காதலியையும்  வைத்துப்பார்க்கும் களவுறும் கற்பனையும் உண்டு என்பதைத்தான்,'பட்டினப்பிரவேசம்'திரைப்படத் தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்,இசையில் எஸ்.பி.பாலசுப்ரமன்யத்தின் பரவசக்குரலில் பதிந்த,
"வான் நிலா நிலா ல்ல;
உன் வாலிபம் நிலா.
தேன் நிலா எனும் நிலா,
என் தேவியின் நிலா;
நீ இல்லாத நாள் எல்லாம்,
நான் தேய்ந்த வெண்ணிலா"
   எனும் கவிப்பேராசின் காவிய வரிகள் வெளிப்படுத்தின.இதையே தான், இதற்குமுன்பே வெளியான எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' திரைப்படத்தில்,  கே.வி.மகாதேவனின் இசையில்  எஸ். பி.பாலசுப்ரமணியம் பாடி, முதல் பாடலாக வெளியான, புலமைப்பித்தனின்"ஆயிரம் நிலவே வா"எனும் பாடல் வலியுறுத் தியது. நேசிக்கும் பெண்ணை நிலவின் பன்முகப் பெருக்கமாகக் காணும் காதல னின் மனநிலையே இது. இவையெல்லாம் போதாதென்று,காதல் வயப்பட்டோர், 
"நிலவை கொண்டு வா 
கட்டிலில் கட்டி வை;
மேகம் கொண்டு வா 
மெத்தை போட்டு வை"என்றும் {'வாலி'} 
"அந்த நிலாவத்தான் 
நான் கையில புடிச்சேன் 
என் ராசாவுக்காக"{'முதல் மரியாதை'}
என்றும்,நிலவுக்குச் சென்ற விஞ்ஞாணிகளையும் வென்றெடுக்கும் மிடுக்குடன், நிலவை காதல் வலைக்குள் விழச் செய்வதும்,அல்லது அடிமையாக்க முற்படுவ தும்,காதல் அட்டகாசத்தின் ஆணவப் பெருக்கன்றோ! மேற்காணும் இரண்டு பாடல்களுமே,கவிப்பேரரசின் கவிதை காணிக்கைகளாகி,ஒன்றுக்கு தேனிசைத் தென்றல் தேவாவும்,மற்றொன்றுக்கு இசைஞானியும்,இசையமைத்தனர் என்பது குறிப்பிடப்படவேண்டியதாகும்   
    ஆனால் கவிஞனின் கற்பனை,நிலவின் ஒரே வட்டத்தையோ அல்லது கூன் பிறையை மட்டுமோ,சுற்றி வருவதில்லை.வெண்ணிலவின் குளிர்ச்சியைப் போல் இதமாக,இனிமையாக,நம் செவிகளில் புகுந்து,
"என் இனிய பொன் நிலாவே"என்றோ,{'மூடுபனி' திரைப்படத்தில்  இளையராஜாவின்  இசையில் கே.ஜே.யேசுதாஸின் காந்தக் குரலில் கேட்டு ரசித்தது}
'நிலவும் மலரும் பாடுது 
என் நினைவில் தென்றல் வீசுது" என்றோ,{'தேனிலவு' திரைப்படத்தில் ஏ.எம். ராஜா இசையமைத்து பி.சுசீலாவுடன் இணைந்து பாடியது}   
"நிலவு தூங்கும் நேரம், 
என் நினைவு தூங்க வில்லை'என்றோ,{'குங்குமச் சிமிழ்' திரைப்படத்தில்  இளையராஜாவின்  இசையில்  எஸ். பி.பாலசுப்ரமண்ம் பாடிது}
காலமெல்லாம் நம் நெஞ்சைத் தாலாட்டும் நிலவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு.
    மொத்தத்தில் நிலவுக்குள் இளைப்பாறும் கவிதை வரிகள் அனைத்துமே,கவிஞர் களின் கற்பனை வானில்,தேயாமல் என்றென்றும் உலாவரும் பௌர்ணமி நிலவின் குளிரொளிக் கலாபமே ! 
 ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment