Saturday, August 1, 2020

கண்ணனும் தமிழ்த் திரையிசையும்

 


   நிலவைப்போல நீலநிறக் கண்ணனும்,தமிழ் வெண்திரையில் நீக்கம நிறைந்து,  கண்ணன் பாடல்களால் நம் நெஞ்ச மெல்லாம் பவனி வருவது,நமக்குக் கிட்டிய ஒரு இசை வரப்பிரசாதம் என்றே கூறலாம்.    
  கண்ணனைப் பற்றி எழுதத் தொடங்கையிலேயே என் நினைவை வருடிய முதல் பாடல்,'மாயமனிதன்'{1952}திரைப்படத்தில் A. மருதகாசியின் எளிமையான வரிகளுக்கு ஸ்ரீ கோவிந்தராஜூலு இசையமைக்க, ஜிக்கியின் காந்தக் குரலில் நம்மைக் கவர்ந்த, 
"கண்ணா கண்ணா வாராய் ராதை என்னைப்பாராய் 
ஜாலம் செய்யாதே நீ இப்போ எங்கே போறாய்" 
எனும் இதமான கீதமாகும்!
அதற்குப்பின்னர் நம் செவிகளில் இன்றும் ரீங்காரமிட்டு நம்மை மெய்மறக்கச் செய்யும் அனுபவமே,உத்தமபுத்திரன் திரைப்படத்தில் T.K.சுந்தர வாத்தியாரின் சுகமான வரிகளுக்கு,இசைமேதை G.இராமநாதன் ஏகாந்தமாய் இசையமைத்து, P.லீலா பாடிய, 
"காத்திருப்பான் கமலக்கண்ணன் அங்கே 
காத்திருப்பான் கமலக்கண்ணன் 
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து 
கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக்கண்ணன்" 
எனும் காலம் வென்ற பாடலாகும். 
L.V.பிரசாத் இயக்கிய 'மங்கையர் திலகம்' திரைப்படத்தில் A.மருதகாசியின் மகத்தான வரிகளை S.தட்சிணா மூர்த்தி தனது தரமான இசையில் ஒலிவடிக்க,
R. பாலசரஸ்வதி அனுபவித்துப் பாடிய, 
நீல வண்ண கண்ணா வாடா 
நீ ஒரு முத்தம் தாடா 
நிலையான இன்பம் தந்து 
விளையாடும் செல்வா வாடா"
எனும் அற்புதமான கண்ணன் பாடல்,என்றென்றும் நம் நினைவுளைத் தாலாட்டு வதில்லையா? 
   கடந்த நூற்றாண்டின் நீண்ட காலம்  வானொலிப்பெட்டியை வலுவாய் ஆக்கிர மித்து,அனைவரும் மெய்மறக்கக் கேட்டு,மேன்மை உணரப்பட்ட பாடலே, 
"கண்ணா கருமை நிறக்கண்ணா 
உன்னைக்காணாத கண்ணில்லையே !"
   ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான'நானும் ஒரு பெண்' திரைப்படத்தில் ஒலித்த  இப்பாடலில்,ஒவ்வொரு வரியிலும் கண்ணன் பெயர் வந்து,P.சுசீலாவின் சோகத்தில் தோய்ந்த சுகமான குரலில்,நம்மை சுதர்சனத்தின் இசையாலும் கவியரசு கண்ணதாசனின் வரிகளாலும்,முழுமையாய் ஆட்கொண்டது. கீழ்காணும் அந்த வரிகளளை படித்து பரவசமுறுவது,அப்பாடலுக்குள் மீண்டும் நம்மை பிணைத்துக்கொள்ளும் அமோக அனுபவமாகக் கருதலாம்.  
"மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா 
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா 
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா 
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா  
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா 
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா 
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா 
எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா"
   சந்தோஷம் தருபவன் கண்ணன்;சங்கடம் தீர்ப்பவன் கண்ணன்.சிந்தையில் கண்ணனை ஏற்றிய கவிஞர்களின் வரிகளில்,சந்தனமாய் மணப்பவனும் கண்ணனே!கண்ணனின் வண்ணம் மாற்றிய கவியரசின் கற்பனை ஊற்று,தமிழ் மண்ணில் என்றும் வற்றாமல் ஓடும் கவித்துவ ஜீவநதியாம் ! 
    பின்னர்  G.இராமநாதன் இசைவடிவில் மகாகவி பாரதியின்,   
"கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம், 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்"    எனும் பொன்னான  வரிகளா,'தெய்வத்தின் தெய்வம்'திரைப்படத்தில், இசைக்குயில் S.ஜானகி பாடி நாம் கேட்டு மகிழ்ந்தோம்.பகவத் கீதையின் சுவாசமான கண்ணனின் மனநிலை,கண்ணனனைத் தவிர வேறொருவர் அறிந்ததுண்டோ?
  1965 இல் வெளியான 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்தில் பி.சுசீலாவின் வசீகரக் குரலில் ஒலித்த, 
"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்"
    எனும் தாலாட்டுப்பாடல்,என்றும் தேனாய் இனிக்கும் மதுர கீதமாகும்.தெவிட்டா  ப்பாடல் வரிகளை,மாலையாக் கோர்த்த கவிஞர் வாலியும் அவ்வரிகளுக்கு வாட்டமாய் இசையமைத்துக்கொடுத்த இரட்டையர் விஸ்வநாதன் இராமமூர்த்தியும் இணைந்து,ஒரு இதிகாச தாலாட்டுப்பாடலை தமிழ்த் திரையுலகிற்களித்தனர் என்று பாராட்டலாம். 
   இதே பி.சுசீலாவின் நெஞ்சை அள்ளும் குரலில் வெளிவந்த இன்னுமொரு ஆனந்தமயமானப் பாடலே,ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில்,இன்பமூட்டிய கண்ணதாசனின் வரிகளா
"கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல 
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல" எனும் சொல்லால், இசையால், குரலால்,சொர்க்கம் தூவிய சங்கீத மழையாகும். 
    காதல் வயப்பட்ட பெண்ணுக்கு தான் காதலிக்கும் ஆடவன்,எப்போதும் கண்ணனின் மருவுருவே!அதனால் தான்,கவிஞரின் கற்பனையும் காதலை கண்ணனுடன் வளைத்துப்போடுகிறது.அப்படி அமைந்த பல பாடல்களில்  "கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல" எனும் வரிகளைப்போல் அமைந்தது தான் 'மெல்லத் திறந்தது கதவு'திரைப்படத் திற்கு,இளைய ராஜாவின் இசைக்கு வாலி வரிகள் அமைத்து,இசைக்குயில் கே.எஸ்.சித்ரா பாடிய,
"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பட்டு கேட்குதா?"
  எனும் செவிகளில் தேனூறும் பாடலாகும்.  
'இருகோடுகள்' திரைப்படத்தில்,மாயக்கண்ணனை பாமா,ருக்மணி இருவரும் சொந்தம் கொண்டாடும் போட்டியில், 
"புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக 
அவன் புல்லாங் குழலில் உள்ளம் மயங்கும் ண்மணிக்காக" 
என்றும், 
"புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக 
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக" 
என்றும், பி சுசீலாவும் ஜமுனா ராணியும் களமிறங்கிப்பாட, அப்பாடல் காட்சியில் தங்களின் ஒரே கணவனுக்கான உடமைப்போரில்,சௌகார் ஜானகியும் ஜெயந்தியும், அவர்களின் உணர்வுகளை,ஆழமாகவும் அழுத்தமாகவும், வெளிப்படுத்தினர்.வாலியின் வல்லமை கொண்ட வரிகளுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.கண்ணன் பாடல்களில் இது முற்றிலும் வேறுபட்ட    திரையிசைப் பாடலாகும். 
   இதற்கு ஒருபடி மேலே சென்று,கண்ணனுடனேயே போர்க்களத்தில் மோதிப்பார்ப்பதற்கு அறைகூவல் விட்ட பாடலே'கௌரவம்' திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசைக்கு கண்ணதாசனின் வரிகளாகத் தோன்றி வம்பிழுத்த,
"நீயும் நானுமா?கண்ணா நீயும் நானுமா?"எனும் போட்டியின் குணம் உயர்த்தும் புலியின் உறுமலாகும். 
    மகாபாரத நாயகனோடு மல்யுத்தம் புரிய,டி.எம்.எஸ்ஸின் உரத்த குரலில் ஒலித்த, 
இப்பாடலானது,"நாளைய பாரதம் யாரதன் காரணம்?"என்றும் வீரியம் உள்ளடக்கிய விடுகதைக் கேள்வியுடன் விடைபெற்றது.இவை அனைத்தையுமே கடந்து,தனித் தன்மையோடு,மடைதிறந்த  வெள்ளமென  வரலாறு படைக்க வந்தது,ஏ.வி.எம்மின்  'ராமு' திரைப்படத்தில்,கவியரசு கண்ண தாசனின் கற்பனை வளத்திலும்,கருத்துச்  செறிவிலும்  உதித்த
"கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் 
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் 
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் 
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் 
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான் 
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் 
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் 
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்"
   எனும் புத்துயிர்ப்பாடல்.மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனின் பிரம்மாண்ட இசையில் டி .எம் சௌந்தராஜனும் சீர்காழி கோவிந்தராஜனும் உச்சமாய்க் குரலெழுப்பி,விண்ணைத் தொட்டு அதிர்வலைகளை ஏற்படுத்திய ப்பாடல்,உரிய நேரத்தில் திரௌபதியின் மானம் காத்த பரந்தாமனின் காக்கும் கரங்களை,தமிழ் மொழியால் உலகுக்குணர்த்திய பாடலாகும். 
   நல்லவர்களின்,புனித ஆத்மாக்களின் இரட்சகனாக,நிச்சயம் கண்ணன் தோன்றுவான் என்பதை வலியுறுத்திய மற்றுமொரு பாடலே,ஏ.வி.எம் நிறுவனத் தின் தயாரிப்பில் உருவான 'அனாதை ஆனந்தன்' திரைப்பட, தலைப்புப் பாடல் காட்சியாக வந்த,  
"அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் 
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்"
    என்ற நம்பிக்கை நீரூற்றிய,நலம்போற்றும் வரிகள். கண்ணதாசன் வரிகளுக்கு கே.வி.மகாதேவன் இசையமைக்க,சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில்,வார்த்தைகளால் செவிகளுக்கும் மனதிற்கும்,வலுவூட்டியது இப்பாடல்.
     மேற்காணும் இரண்டு  பாடல்களும்,ஒரே நிறுவனத்தில் படைப்பில் உருவான திரைப்படங்களில் இடம்பெற்றது மட்டுமல்லாது, அப்பாடல்கள் அமைந்த இரண்டு காட்சிகளிலும்,வணங்குதற்குரிய நடிகர் வி.நாகையா, துணையுடனும் தனியாகவும் தோன்றி,பாடல்களுக்கு ஆன்மீக பலமூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது .
    கண்ணன் பாடல்கள் அனைத்திலும், 'கவிக்குயில்'திரைப்படத்தில் இளையராஜா வின் இசையில்  டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பி.சுசீலாவுடன் குரல் கலந்து பாடிய
சின்ன கண்ணன் அழைக்கிறான் 
ராதையை பூங்கோதையை 
அவன் மனம்கொண்ட ராகத்தைப் பாடி 
எனும் பாடல்,சொர்க்கபூமியை திவயக்குரல்களால் சுற்றிவரும் பாடலாகும். 
    'மகாபாரதம்'எனும் மாபெரும் இதிகாசத்தின் இதயமே கண்ணன்.நம்புபவர்களின் மெய்ப்பொருளாகவும்,காப்பியத்தின் கருப்பொருளாகவும் விளங்கும் கண்ணன், தமிழ்த் திரையிசை வரிகளுக்குள்,ஆன்மாவாக அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருப்பதை,கவிஞர்கள் உணர்ந்தது போல்,கவிஞர்களின் சொல்லாண்மையுடன் இசையெனும் தேனும் கலந்து,நெஞ்சில் என்றென்றும் நிலையுறும்,நிம்மதியும் நம்பிக்கியுமாக,கேட்பவரும் உணர்ந்திருப்பர். 
   கண்ணனை உள்ளடக்கிய ஒருசில பாடல்களை மட்டுமே இங்கே குறிப்பிட முடிந்தது.விட்டுப்போன பாடல்களுக்காக வருந்துவதைக் காட்டிலும், விட்டதைப் பிடிக்கும் வேட்கையுடன்,முடிவாக, கவியரசின் கருத்தூன்றிய வரிகளாய்,அவர்தம் சொற்களஞ்சியத்தின் சிறப்புச்சிதறல்களாய்,'அவன்தான் மனிதன்' திரைப்படத் தில்,மெல்லிசை மன்னரின் மாண்புறு இசைவடிவில்,டி.எம் சௌந்தராஜனின் கம்பீரக்குரலில் ஒலித்த,பிழை உணர்த்தும் பாடலுடன் நிறைவு செய்கிறேன்.

"ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா..?
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா..

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு..
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு..!


பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே..
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே..

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்..

நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்?
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..

உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா..
இதை உணர்ந்து கொண்டால், துன்பம் எல்லாம் விலகும் கண்ணா.

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்..
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்"{Courtesy Tamil Song Lyrics}

  கண்ணன் எனும் பெயரை உள்ளடக்கிய கவிஞர்களின் வரிகள்,தோற்றுப் போனதே இல்லை.குறிப்பாக கவியரசு கண்ணதாசன்,கண்ணனை கருப்பொரு ளாய் உள்வாங்கி,உரம்சேர்த்து,உணர்வு பூர்வமாய் கவிதை வரிகளாக உதயம் செய்கையில்,அவ்வரிகள் அனைத்தும் தத்துவச் சாரென,மனிதம் தழைக்கும் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டின.கண்ணன் பாடல்களை திரையிசையாய்க் கேட்கையில்,கீதையின் நாயகன் மகாபாரதத்தின் மையப்புள்ளி மட்டுமல்ல;அவன் பெயர் திரையிசைப்பாடல்களில்,கடையும் தயிரில் திரண்டுப் பெருகும் வெண்ணைபோல்,மனித இனத்தின் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரளாக  நிறைந் திருப்பதை,இசையை ரசிக்கும்,மொழியறிந்த எவராலும் உணரமுடியும் என்பது திண்ணம். 
 ப.சந்திரசேகரன் . 
                                         ====================================
                        
  
    
                       

1 comment:

  1. ஸார் எல்லாமே under one roof. Oru பாடல் ... இதுவும் ஒரு மஹா பாரதம் தொடர்பு உடைய ஒரு திரை படம் தான். பாண்டவர் தூததராக வரும் கிருஷ்ணனை அவமானப்படுத்த துரியோதனன் ஏற்பாடு செய்த நடன மங்கைகள் முதலில் கண்ணன் லீலைகளை குற்றம் satti பாடுவார்கள். முதல் வரி நினைவில்லை..." அப்பாவி பாம்பை கொண்டவனே...ஆடும் மாடும் மேய்ப்பவனுக்கு அரசியல் எதுக்கி அய்யா..? என்றெல்லாம் வரும் கண்ணன் குழல் இசைப்பார். பிது பாடிய அதே வாய்கள் புகழை பாடு வாது போல் கண்ணதாசன் பாடல் இருக்கும். கவியகண்ணா வா வா.. கண்ணா மன்ன வா வா வா...என்று பாடல் முடியும்....

    ReplyDelete