Wednesday, December 2, 2020

வாசுவும் பாலுவும் பரவசமா பாடினவங்க!


    P.B. ஸ்ரீனிவாசும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும்,சுந்தரத் தெலுங்கினை தாய்மொழி யாகக் கொண்டவர்கள்.இவர்கள் இருவருமே,தமிழ்த்திரை யுலகில் இசைத்துறை யில்,பல்லாண்டு வெற்றிக்கொடி கட்டியவர்கள். P.B.ஸ்ரீனிவாஸ்,பாலு அவர்களை விட பதினைந்து ஆண்டுகள் மூத்தவர். அவர் தமிழில் பாடிய முதல் பாடல்,'ஜாதகம்' எனும் திரைப் படத்தில் R.கோவர்தனம் இசையில் ''மூட நம்பிக்கையால் பல கேடுவிளையும்''எனும் பாடல். 

   P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களை'வாசு'என்றும் எஸ்.பி.பியை'பாலு'  என்றும்  செல்லமாக மனதில் கொண்டு,இப்பதிவை காண்போம்.வாசுவும் பாலுவும் ஒரே தாய் மொழியைக் கொண்டிருந்தாலும்,பாடகர்கள் எனும் வகையில் இவர்கள் இருவருக் கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.'பிரேம பாசம்' திரைப்படம் படத்தில் எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையில் வாசு பாடிய "அவன் அல்லால் புவி மீது,ஓர் அணுவும் அசையாது" என்ற பாடல் தொடங்கி,பலப் பல பாடல்களில் நாம் கேட்டு  மெய்மறந்த,மிருதுவான அதிர்வுகளை உள்ளடக்கிய அவரின் குரலில்,ப்போதுமே  ஒரு காந்த சக்தி உண்டு.

   ஆனால் பாலுவின் குரல் பதுங்கும்;பாயும்."பாடும்போது நான் தென்றல் காற்று" {நேற்று இன்று நாளை}என்றும்"ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்"{தெய்வ வாக்கு}என்றும் பாட்டைப்பற்றி தனது பாட்டிலேயே, அமைதியையும் ஆர்ப்பரிப்பை யும்,தன் ஒற்றைக்குரலின் பல்வேறு பரிணாமங்களால்,வெளிப்படுத்தக்கூடியவர் பாலு. 

   "நிலவே என்னை நெருங்காதே"{ராமு} என்று பாடினார் வாசு.பாலுவோ    எம்.ஜி.ருக்காக முதன் முதலில் பாடிய பாடலே,"ஆயிரம் நிலவே வா"{அடிமைப் பெண்}என்பதுதான்.மேலும் அவர் நிலவை வரவேற்று, "நிலாவே வா செல்லாதே வா"{மௌனராகம் }என்றும்,"வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே"{மெல்லத் திறந்தது கதவு} என்றும்  பாடி, இசையால் நிலவுடன் ஐக்கியமானார்.

   வாசு பெண்ணைப்பற்றி"காலங்களில் அவள் வசந்தம்"{பாவ மன்னிப்பு}என்று பாடினால் பாலு"அவள் ஒரு நவரச நாடகம்"{உலகம் சுற்றும் வாலிபன் }என்று பாடுவார்.வாசு"ரோஜா மலரே ராஜகுமாரி"{வீரத்திருமகன் }என்று காதலியை வாழ்த்தி மனம் மகிழ்ந்தால்,பாலு "காதல் ரோஜாவே!எங்கே நீயெங்கே,கண்ணீர் வழியுதடி கண்ணே " {ரோஜா }என்று சோகமழை பொழிவார்.

  "போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்?"{சின்ன தம்பி }என்ற பாலுவின் எழுச்சிக் கேள்விக்கு, வாசு"போவோம் புது உலகம் காண்போம் மதிமயக்கம்"{ வீர அபிமன்யு}என்று,வருக்கு இருபத்தைந்தாண்டு முன்னதாகவே,பதிலளித்திருந் தார்."எத்தனை எத்தனை இன்பமடா;இவை எல்லாம் உனக்கே சொந்தமடா"{யாருக்குச் சொந்தம்}என்று  வாசு மன நிறைவில்,மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பாடினால்,பாலுவோ"என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு"{Love Today}என்று இன்ப வெள்ளத்தில் பாடித் துள்ளுவார்.  

   வாசு "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்"{போலீஸ்   காரன் மகள்}என்று விடுகதை விடுத்தால்,பாலு"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நேரமில்லையோ"{மௌன ராகம்}என்று விரகதாபத்தை வெளிப்படுத்தி,மனம் குமுறுவார்.வாசுவின்''அவள் பறந்து போனாளே"{பார் மகளே பார்} பாடலும் பாலு வின்"பாடி பறந்த கிளி,பாட மறந்ததடி"{கிழக்கு வாசல் }பாடலும்,பிரிவின் பாரத்தை, ஏமாற்றத்தின் ஆதங்கத்தை,ஒருசேர வெளிப்படுத்துவதாகவே உணருகிறோம்.  

   வாசு"இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்"{ஹலோ மிஸ்டர் ஜமீன் தார் }என்று ஆனந்த பரவசத்தில் திளைத்தால்,"இளமை யெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு"{ பகலில் ஓர் இரவு }என்று ஆனந்தத்தை அணைத்தும்,"இளமை இதோ இதோ; இனிமை இதோ இதோ''{சகலகலா வல்வன் }என்று உற்சாகத்தில் உலாவியும், கரகோஷ மிடுவார் பாலு.இருவேறு மாறுபட்ட குரல்களால், இவர்கள் படைத்த இசைக்களஞ்சியம்,தமிழ் மொழி உள்ளளவும் இன்பமழை பொழிந்து கொண்டே இருக்கும்! 

   வாசு எம்.ஜி.ருக்கும்,சிவாஜிக்கும்,ஒரு சில பாடல்கள்களைப் பாடியிருந்தாலும், ஜெமினி கணேசனுக்காக அவர் பாடும்போது,அது ஜெமினி கணேசன் பாடுவது போலவே இருக்கும்.ஏ.எம்.ராஜாவுக்கு அடுத்தபடியாக ஜெமினி கணேசன்,ஆர்.முத்து ராமன் போன்றோ ருக்கு,வாசுவின் குரல் ஒரு வரப்பிரசாதம்,என்றே சொல்லலாம். அதே போல எம்.ஜி.ருக்கு ஒரு சில பாடல்களும்,சிவாஜிக்கு நிறைய  பாடல் களும்  பாடியிருந்தாலும், கமலுக்கும்,ரஜினிக்கும்,மோகனுக்கும், பாலுவின் குரல்  கனகச்சிதமாகப் பொருந்தியது.

    வாசுவின் குரல் மயிலிறகைப்போல் நம் உணர்வுகளை வருடி அமைதியில் மிதக்கச் செய்யும்.அவர் பாடிய"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்"{போலீஸ் காரன் மகள்}"மனிதன் என்பவன்  தெய்வமாகலாம்" &"மயக்கமா கலக்கமா"{சுமை தாங்கி}" "மாலையில் மலர்ச்சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே"& "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே"{அடுத்த வீட்டு பெண்}"சிரிப்புபாதி அழுகை பாதி"{எங்க வீட்டுப் பெண்} "நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால்"{நெஞ்சில் ஓர் ஆலயம்} போன்ற எண்ணற்ற பாடல்கள், என்றென்றும் தேனினும் இனிய தெவிட்டாச் சுவை யாக,நம் நினைவுளில் வலம் வந்துகொண்டிருக்கும். மென்மையான பாடல்களால், தமிழிசையின் தவப்புதல்வனாக விளங்கினார் ஸ்ரீனிவாஸ்.

   எனக்குத் தெரிந்தவரை அவரிடம் உல்லாசத் துள்ளல்கள்கூட எல்லை யைக் கடக்காமல் குரல் கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டிருந்ததாகவே தோன்றுகிறது.அவரின் குரலில் முற்றிலும் மாறுபட்ட,இசை ஆரவாரம் மிக்க ஒரே ஒரு பாடல்,'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் ஒலித்து நம்மை பரவசத்தில் ஆடவைத்த"மாடிமேல மாடிகட்டி கோடி கோடி சேர்த்துவைத்த சீமானே"எனும் அமர்க்களப் பாடலாகும்.   

    பாலுவின் குரலின் ஏற்ற இறக்கங்களும்,நெளிவு சுளிவுகளும் அதிர்வு ஆர்ப்பாட் டங்களும்,மிதக்கவும் மிரளவும் செய்யும் குரல் வீச்சும், சொல்லாண்மையும்,என்றைக் கும் சுகமூட்டும் நினைவலைகளே!வாசுவைப்போல் இவரும்,இதயத்தைத் தாலாட் டும்"பச்சைமலைத் தேரு"{கிழக்கு வாசல் }"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே"{புதுப்புது அர்த்தங்கள்}"மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" &"கற்பபூர பொம்மை ஒன்று"{கேளடி கண்மணி}"வண்ணம் கொண்ட வெண்ணிலவே"{சிகரம்}போன்ற நெஞ்சைத் தாலாட்டும் பாடல்களோடு நில்லாது, குரல் ஆளுமையால் இசையுலகின் மூலை முடுக்குகளிலெல் லாம் முழு வீச்சில் பயணித்தார்.

   மொத்தத்தில் வாசுவின் பாடல்கள்,விழுந்து வணங்கத் தக்கவை எனில், பாலுவின் பாடல்கள் ஆரத் தழுவி ஆனந்தப் பரவசத்தை தோற்றுவிக்கக் கூடியவை.சுருக்கமாக ஒரு தமிழ்திரைப்படத் தலைப்பின் பாணியில் கூறவேண்டுமெனில்,வாசுவும் பாலுவும் பரவசமா பாடினவங்க! 

  எல்லாவற்றிற்கும் மேலாக B P S எனும் மூன்று ஆங்கில எழுத்துக்களில் இந்த இருவருமே சங்கமித்திருப்பது எத்தனை அற்புதமான ஒற்றுமை! 

நன்றி:-Tamil Movie Poster.com

ப.சந்திரசேகரன் . 


No comments:

Post a Comment