Tuesday, December 22, 2020

தமிழ்திரையிசை வரிகளில் மாய,மயானக் கோலங்கள்

   'வாழ்க்கையும் வைராக்கியமும்'என்ற தலைப்பில் ஒரு உரைநடை புத்தகம் நான் இளங்கலை வகுப்பு  படிக்கையில் கல்லூரி பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டதாக நினைவு. பொதுவாகவே மனித வாழ்வில்,'பிரசவ வைராக்கியம்,'மயான வைராக்கி யம்'எனும் வழக்கு மொழிகள் பிரபலமாக பயன்படுத்தப்படுவதை பார்த்திருக் கிறோம்.

   இந்த வழக்குமொழிகளில்'மயான வைராக்கியம்',மரண நிகழ்வுகளா  மனித உணர்வுகளைத் தாக்கி பின்னர். கார்மேகம் போல் கலைவதுண்டு. மரணம்,மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தி,உறவுகளில் சொத்துத் தகராறு களின் காரணமாக எழும் பகைமை நிலைப் பாடுகளை,சற்று நேரத்திற்கு பின்னுக்குத் தள்ளி,பணத்தைக் காட்டிலும் மனித நேயமே பெரிதென்று நினைக்கச் செய்து, பின்னர் ஈமச் சடங்குகள் முடிந்த வுடன் மனம் ஒரு குரங்காக, பணத்தை நோக்கி பயணிப்பதே,மயான வைராக்கிய மாக கருதப்படுகிறது. 

   துளிர்ப்பதும் உதிர்வதும் இயற்கையின் இயல்பு;துளிர்த்ததும் வளர்ந்ததும் நிலைத்திடும் என்பது,மனிதனின் கனவு.மயானப்பாதை என்றுமே மனிதன் விரும்பி பயணிக்கும் பாதையன்று.ஆனால் தோல்விகளின் தழும்புகள்,மாயையில்  வலுப்பெற்ற சிந்தனைகளாய் வாழ்வினை புரட்டிப்போட்டிட,'தேவதாஸ்'திரைப் படத்தில் C.R. சுப்புராமனின்  இசையில்,கண்டசாலா முழங்கியதுபோல"உலகே மாயம் வாழ்வே மாயம்"என்று வெறுமையின் கம்பீரத்தை வீரியமாக்குகிறது.  இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி *பின்னணி இசை*{Background score } மைத் திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.   

  இதே வெறுமையினை விஸ்வரூபமாக்கி, அழுத்தமாகவும் ஆழமாகவும் கே.ஜே யேசு தாஸின் அதிர்வுக்குரலால் வெளிப்படுத் திய பாடலே, 

"வாழ்வே மாயம்! 

இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், 

தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? 

நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?" 

எனும் கண்ணில் நீர்மல்கச்செய்  காவிய வரிகள் கொண்ட  பாடலாகும்.  

"தாய் கொண்டுவந்ததை, 

தாலாட்டி வைத்ததை, 

நோய் கொண்டும் நேரமம்மா"

   என்ற வரிகள் செவிகளில் விழுகை யில்,நம் இதயம் தவித்துத் துடிப்பதை, கங்கை அமரனின் இசையில்,வாலியின் வேதனை வரிகளால்,சாகா நிகழ்வாக்கிய பாடல் இதுவாகும். 

  இதே கே.ஜே.யேசுதாஸின் ஒப்பற்ற குரலில் வைரமுத்துவின் வரிகளை உருக்க மான இசையில்'நீங்கள் கேட்டவை' திரைப்படத்தில் கேட்டு மெய்மறந்ததே,கீழ்க்  காணும் பாடல்! 

"கனவுகாணும் வாழ்கையாவும் 

கலைந்துபோகும் கோலங்கள்; 

துடுப்புகூட பாரமென்று 

கரையைத் தேடும் ஓடங்கள்" 

என்று தொடங்கி,இடையில்,  

"பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி 

இருக்கின்றதென்பது மெய்தானே!" 

  எனும் உண்மையை உள்ளடக்கிய இப்பாடல்,என்றும் நினைவில் தங்கிடும்,  மேனியெனும் மெய்யாய்!அதன் பொய்யாய்! 

மனித வாழ்வின் மாய நிலையினை உணர்த்திய இன்னுமொரு பாடலே, 

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா;

ஆறடி நிலமே சொந்தமடா.


முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா;

கண் மூடினால் காலில்லா கட்டிலடா.


பிறந்தோம் என்பதே முகவுரையாம்;

பேசினோம் என்பதே தாய்மொழியாம்.

மறந்தோம் என்பதே நித்திரையாம்;

மரணம் என்பதே முடிவுரையாம்."  

  எனும் கவிஞர் சுரதாவின் மகத்தான வரிகளை,சீர்காழியாரின் வெண்கலக் குரலில் வி.குமாரின் மென்மையான இசையோட்டத்தில்,'நீர்க்குமிழி'திரைப்படத்தில் கேட்டு, வெறுமையில் மனம் ஆழ்ந்ததே,அகம் நிறைந்த அனுபவமாகும் .  

   மனித வாழ்வின் மாய நிலைகளையும் வெறுமையையும்,கவியரசு கண்ணதாசன் அரும் புலமையுடன் வெளிப்படுத்திய அழகான திரைப்பாடல்கள் பலவும்,அவரது இமயக் கற்பனையின் விளைவாக உருவெடுத்த,ஞானப் பால்குடிக்கச் செய்யும் அட்சய பாத்திரமாகும்.குறிப்பாக,'பாத காணிக்கை'திரைப்படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் அமைந்த,  

"வீடு வரை உறவு;வீதிவரை மனைவி; 

காடுவரை பிள்ளை ;கடைசிவரை யாரோ" 

 எனும் வரிகளில் தொடங்கி பின்னர், 

"விட்டுவிடும் ஆவி;பட்டுவிடும் மேனி; 

சுட்டுவிடும் நெருப்பு;சூனியத்தின் நிலைப்பு" 

என்றும், 

"சென்றவனை கேட்டால்,வந்துவிடு என்பான்; 

வந்தவனைக் கேட்டால்,சென்றுவிடு என்பான்" 

  என்று,மயானக் காற்றால் மூச்சு முட்டச் செய்யும் டி.எம்.சௌந்தராஜனின் பாடல், என்றைக்கும் இதயம் கனக்கச் செய்வ தாகும்.

 இதேபோன்று 'அவன்தான் மனிதன்' திரைப்படத்தில் எம்.எஸ்.வி இசையில் கவியரசு புனைந்த, 

"மனிதன்  நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று; 

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று."  

எனும் பாடல் டி.எம்.எஸ் ஸின் உச்சக் குரலால் உளம் நிறைந்தது.

   மாயையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தின் பலவீனத்தை,கவியரசு பிரபலப்படுத்திய பாடல் தான்,'நெஞ்சில் ஓர் ஆலயம்'திரைப்படத்தில் P.B ஸ்ரீனி வாசின் காந்தக்குரலில் ஒலித்த,

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,தெய்வம் ஏதுமில்லை; 

நடந்ததையே நினைத்திருந்தால்,அமைதி என்றுமில்லை" 

எனும் அமோகப்பாடலாகும்.மெல்லிசை மன்னர்களில் மேன்மைமிகு இசையில், இப்பாடலுக்கு இடையே வரும், 

"எங்கே வாழ்க்கை தொடங்கும் 

அது எங்கே எப்படி முடியும் 

இதுதான் பாதை,இதுதான் பயணம் 

என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்; 

மாறுவதை புரிந்துகொண்டால்,மயக்கம் தெரிந்துவிடும்" 

   எனும் வரிகள்,மனித வாழ்வின் யதார்த்த நிலையினையும்,மாயவலையில் சிக்கித் தவிக்கும் மானுட துன்பத்தையும் ,சொற்களால் துல்லியமாய் படம்பிடித்துக் காட்டியது. 

  சிலநேரங்களில் மரணம்,மனிதனின் திருந்திய நற்குணங்களுக்கு சான்றுகூறும் என்றும்,நாம் நினைப்பதுண்டு.இப்படி ஒரு கருத்தைத்தான்,கவியரசு 'இருவர் உள்ளம்'திரைப்படத்தில், 

"ஏனழுதாய் ஏனழுதாய் 

என்னுயிரே ஏனழுதாய்" என்று தொடங்கி, 

"மரணம் வந்தால் தெரிந்துவிடும்; 

நான் மனிதன் என்று புரிந்துவிடும்;  

ஊர் சுமந்து போகும்போது, 

உனக்கும்கூட விளங்கிவிடும் " 

   என்று எழுதியிருப்பார்.திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில், டி.எம்.எஸ் குரலினாலும் ,சிவாஜியின் உணர்வுபூர்வமான நடிப்பினாலும்,இப்பாடல் நம் உள்ளங்களில் ஒரு தனி  டம் பிடித்தது என்று சொல்லலாம்.  

   கவியரசின் இன்னுமொரு மயான கீதம்தான் எம்.ஜி.ஆரின் 'முகராசி' திரைப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,

"உணடாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு;  

இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு; 

கொண்டாடும் போது ஒரு நூறுபேறு; 

உயிர் கூடுவிட்டு போகையிலே கூட யாரு."

  எனும் மிகச் சாதாரணமாக,வாழ்வின் உண்மையை உரைத்த உன்னத பாடல்.  மரணச் சுமையை மயானம் வரை கொண்டு சென்று இறக்கிவிடுவோருக்கு,நன்றி பாராட்டும் விதத்தில் அமைந்ததுதான், எம்.ஜி.ஆரின்'சங்கே முழங்கு' திரைப் படத்தில் இடம் பெற்ற,

"நாலு பேருக்கு நன்றி; 

அந்த நாலு பேருக்கு நன்றி; 

தாயில்லாத அனாதைக்கெல்லாம் 

தோள்கொடுத்து தூக்கிச் செல்லும், 

நாலு பேருக்கு நன்றி." 

  எனும் டி.எம்.சௌந்தராஜன் பாடிய, மனிதநேயப் பாடல். இப்பாடலையும் கவியரசு இயற்ற,அதற்கு. எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்திருந்தார்.

   வழக்கமாக,கதாநாயகர்கள்தான் தத்துவ பாடல்களை தங்கள் நெஞ்சில் தாங்கி, கேட்போர் நினைவுகளில் நீங்காமல் தங்கச் செய்வார்கள்.அதுவும் எம்.கே.தியாக ராஜ பாகவதர்,பி.யு.சின்னப்பா,டி ஆர் மகா லிங்கம் காலத்திற்குப் பிறகு,எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ,ஜெமினியோ சொந்தக்குரலில் பாடியதில்லை. 

   ஆனால்,ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய 'இரவும் பகலும்' திரைப்படத்தில், வில்லன் வேடம் அதிக திரைப்படங்களில் தரித்த எஸ்.ஏ.அசோகன் பாடிய,பின்வரும் பாடல், நம்மில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யிருக்கும்.ஆலங்குடி சோமு எழுதிய,

"இறந்தவனை சொமந்தவனும் இறந்துட்டான்; 

அத இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்." 

எனும் அப்பாடல்,டி ஆர் பாப்பாவின் இசையில்,அசோகனின் அபாரக் குரலில்,  வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

  மரணமும் மாயையும் சமத்துவத்தின் சாயல்கள்.ஏற்ற தாழ்வுகளின் பொய்முகங் களை கிழித்தெறியும் கீறல்கள். அனைவ ரும் அறிந்த,ஆனால் மனிதமனம் என்றைக் கும் ஏற்க மறுக்கும் இந்த  உண்மைகளை, 'படையப்பா' திரைப் படத்தில் அமைந்த  கவிப்பேரரசின் ஒரு பாடல்,மிக அற்புதமாக வெளிப்படுத்தியது. ஏ.ஆர்.ரெஹ்மான்  இசையில்,மனோ & Febi Mani பாடிய, 

"ஹோ ஹோ ஹோ கிக்கு ஏறுதே" 

 என்று தொடங்கும் அப்பாடலில் இடையே வரும் 

"கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே;     

தங்க பசுமம் தின்னவனும் மண்ணுக்குள்ளே."  

 எனும் வரிகள் மயான சமத்துவத்தின் மேன்மையை,உரக்க வெளிப்படுத்தின.

   இருப்பினும்,இந்த சமரசத்தின் சாராம் சத்தை 1956- இல் கே.ஏ.தங்கவேலும்,   பி.பானுமதியும் இணைந்து நடித்து வெளியான,ஆர்.ஆர்.சந்திரன் இயக்கத்தில் உருவான,'ரம்பையின் காதல்'எனும் திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், அற்புத மாக எடுத்துக்காட்டியது. டி.ஆர். பாப்பாவின் இசையில் சீகாழி கோவிந் தராஜன் மனமுருகிப்பாடிய, 

"சமரசம் உலாவும் இடமே, 

நம் வாழ்வில் காணா, 

சாமரம் உலாவும் இடமே!" 

எனும் அந்த ஏகாந்தப் பாடலுக்கிடையே வரும், 

"ஆண்டி ங்கே? அரசனும் ங்கே? 

ஆவி போனபின் கூடுவார் இங்கே!" 

என்றும், 

"எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு; 

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு" 

  என்றும் இடம்பெறும் வரிகளால்,கவிஞர் A.மருதகாசி,என்றும் தமிழ்த் திரைக் கவிதையின் கலங்கரை விளக்கமாகி றார்.இதுபோன்ற பாடல்களால் தமிழ்த்  திரையுலகு தரமுயன்று,மனித வாழ்வின் மறுபக்கமாகிறது.

   கலகமும் கலக்கமும் நிறைந்த மனித வாழ்வில்,நிழல்தேடும் நெஞ்சங்களுக்கு, மாயையின் மாட்சியினை,மயானத்தின் மாண்பினை,களமிறக்கும் பாடல்கள்,நிழல் திரையின் பிம்பங்களாக மட்டுமல்லாது, வாழ்க்கையின் விழுதுகளுக்கு மரண மெனும் முற்றுப்புள்ளி மூலம்,மாயையினை நிசமாக்குவதே,மயானப் பாடல்களின் நோக்கமாகும்.

   எல்லாற்றிற்கும் மேலாக,மன சஞ்சலங் களையும் களங்கங்களையும் களைந்து, வாழ்க்கையின் நேர்வழிப் பயணத்தை உறுதி செய்வதன் மூலம்,திரைக்கவிதை வரிகளின் மாய,மயானக் கோலங்கள், அழியா கோலங்களாகின்றன.

ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment