"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"என்று தனது உன்னத இலக்கிய படைப்பான கொன்றைவேந்தனில்,தமிழ் மூதாட்டி அவ்வை, என்றோ எழுதிவைத்தார்.
"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'
என்றார்,வாழ்வியல் நெறி புகட்டிய வள்ளுவர்.தாய்மை ஒரு தவமெனில் தாயை வணங்குதல் தன்னிலை உயர்த்தலே."அன்னையும் பிதாவும்" என்று கூறிடும் போதே,பிதாவை முந்துகிறார் அன்னை."ஈன்று புறந்தரு தல் என்தலைக் கடனே" என்ற வரிக்குப் பின்னரே,"சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே"என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல்.
எனவே தாய்மையை முன்னிறுத்தியே,மனித சமூகம் தலை நிமிர்ந்தது. மனித வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை வெள்ளித்திரையில் வழி நடத்தும் தமிழ்த்திரை உலகும்,தாய்மைக்கு சிரம் தாழ்த்தத் தவறிய தில்லை.குறிப்பாக,எம்.ஜி ஆர்.போன்ற ஒரு மாபெரும் கதாநாயகரால் பெருமையுற்ற தமிழ்த் திரைப்படத்துறை, அவரின் பல்வேறு திரைப்பட தலைப்புகளினால்,தாய்மைக்கு ஆலாபனை செய்தது.
இந்தவகை திரைப்படங்களின் பட்டியலில்'தாய்க்குப்பின் தாரம்''தாய் சொல்லை தட்டாதே''தாயைக் காத்த தனயன்''தெய்வத்தாய்''தாயின் மடியில்''தாய்க்குத் தலைமகன்''ஒருதாய் மக்கள்'போன்ற பிரபல மான திரைப்படங்களைச் சொல்லலாம்.சிவாஜியின் திரைப்படங்களில் 'அன்னையின் ஆணை''அன்னை இல்லம்' இந்த வகையில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
தலைப்புகள் ஒருபுறமிருக்க,தமிழ்த் திரையிசை,தரமான கவிதை வரிகளினால் தாய்மையை தங்க ரதத்திலேற்றி,தரணியெங்கும் உலாவரச் செய்தது.தலைப்பு களைப் போன்று பாடல் வரிகளிலும்,எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களே தாய்மையினை போற்றி புளகாங்கிதம் பெறச் செய்தன.ஆனால் இந்த வகையில் நடிகர் திலகம் மக்கள், திலகத்தை முந்திக்கொண்டார்.அவர் தந்தை மகனாக இரட்டை வேடத்தில் நடித்து 1958- இல் வெளியான'அன்னையின் ஆணை'திரைப்படத்தில்,
"பத்து மாதம்
சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய்
விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்…"
என்று டி.எம்.எஸ்ஸின் உச்சக்குரலில் தொடங்கும் பாடலின் தொடரும் வரிகளாக, அன்னைபோல் நம்மை ஆரத் தழுவும்,
"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை"
எனும் அற்புதமான பாடலாகும்.இந்த மகத்தான வரிகளை க.மு ஷெரிப் எழுத, பாடலுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட இதே தோரணையில்,மேலும் மிடுக்குடன் அமைந்த பாடலே,
"எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா அம்மா என்னது நீயாகுமா?"
என்று தொடங்கி,
"தாயின் மடியில் தலைவைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை".
என்ற கம்பீரமான வரிகளாகும்.இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் 'தாயின் மடியில்'{1964}.வாலி வரியமைத்த இப்பாடலுக்கும், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவே இசையமைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் தனது புரட்சிப்பாடல்களில்கூட,தாயின் மீது ஆணையிட்டு, சூளுரைத்து, அசத்தலான முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத் துவது,அவரது முத்திரையாகும்.அப்படி நாம் கேட்டு மனம் நிறைந்த பாடலே'நான் ஆணையிட்டால்' {1966}திரைப்படத்தில் இடம்பெற்ற,
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்"
எனும் ஆவேசமான குரல் எழுச்சியாகும்.வாலியின் அழுத்தமான வரிகள் எம்.எஸ் விஸ்வநாதனின் சூடான இசையில்,நம்மை சுண்டி இழுத்தன.
எம்.ஜி.ஆரின் தாய்ப்பற்று,அவரின் திரைப்பட வெற்றிக்கு மட்டுமல்லாது, அவரது அரசியல் பயணத்திலும்,தாய்மார்களின் ஒருமித்த வரவேற்பைப் பெறுவதில்,ஒரு வலுவான பின்னணியாக விளங்கியது என்று உறுதி யாகக் கூறலாம்.அந்த வகையில்'அவரை காலத்தை வென்ற 'காவியப் புதல்வனாக ஆக்கிய பாடலே, 'அடிமைப் பெண்,திரைப்படத்தில் அவருக்காக டி.எம்.எஸ் பாடிய,
"தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
அவள் என்றும் என்னை காக்கின்றாள்"
எனும் நம்பிக்கை வேரூன்றிய பாடலாகும்.ஆலங்குடி சோமு எழுதிய இந்த பரவசப் பாடலுக்கு,திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசைத்தேனூட்டினார்.
எம்.ஜி.ஆர்,சிவாஜி கணேசனைத் தொடர்ந்து,ரஜினியும் கமலும்கூட, தாயின் பெருமையினை தங்களின் ஒரு சில படங்களில் தலைப்புகளா கவும் இசைவரி களாகவும் தமிழ்த்திரையுலகிற்கு தாரைவார்த்துக் கொடுத்தனர்.கமலின்'தாயில் லாமல் நானில்லை'திரைப்படமும்,ரஜினி படங்களின் தலைப்புகளாக வலம் வந்த 'தாய் மீது சத்தியம்''அன்னை ஓர் ஆலயம்'போன்றவையும் தாய்மையின் முக்கியத் துவத்தை பறைசாற் றின.கமலின்'தூங்காதே தம்பி தூங்காதே'{1983}திரைப்படத்தில் இளையராஜாவின் இதமான இசையில் எஸ்.பி.பி பாடிய,
"நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே"
எனும் பாடலும்,மன்னன்{1992} திரைப்படத்தில்,அதே இசைஞானியின் இசையில், ரஜினிக்காக கே.ஜே.யேசுதாஸ் மெய்மறந்து பாடிய,
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது"
ஆகிய இரு பாடல்களுமே,மயிலிறகால் வருடி,மனம் மயங்கச் செய்தன.இந்த இரண்டு அருமையான பாடல்களுமே,கவிஞர் வாலியின் வானுயரக் கற்பனையில் விளைந்த திரைக்கவிதை பொக்கிஷங் களாகும்.இதே ஆண்டு வெளியான 'உழைப் பாளி.திரைப்படத்தில் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய,
"அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே"
என்ற பாடல்,ஆழ்ந்த சோகத்தில் ஊறிய ஆத்மாவின் ராகமென ஒலித்தது. வாலியின் வளமான வரிகள்,இளையராஜாவின் இன்னிசையில் ஏகாந்தம் பரப்பியது.
சூப்பர்ஸ்டாரின் மற்றுமொரு தாய்மை போற்றிவணங்கும் பாடலையும் இங்கே நினைவு கூறவேண்டும்.ஆம்.அவர் நடித்த'மாவீரன்'{1986}எனும் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய,ஆன்மீக மனம் கமழும்,
"சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை
தீர்க்கவேண்டும் நீயே
மகா துர்க்கை என்னும்
பேர் படைத்த தாயே"
என்று மலேஷியா வாசுதேவன் குரலில் தாய்மையெனக் கருதும் தெய்வத்தின் திருப்பாதத்திற்கு, துன்பத்தை சமர்ப்பித்த பாடல்.
தாய்மையைத் தொழுவதோடு நில்லாது தாய்மையின் அருமை பெருமைகளை அழகுடன் வருணித்து,உன்னிக்கிருஷ்ணனின் காந்தக் குரலால் மேன்மைப்படுத்திய சொற்களே ,எஸ்.ஜே சூர்யா நடித்த 'நியூ' எனும் வித்தியாசமான திரைப்படத்தில் நாம் கேட்டு மகிழ்ந்த பின்வரும் பாடல் வரிகளாகும்.
காலையில் தினமும்
கண்விழித்தால் நான் கை
தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா
என் தாய்போல் ஆகிடுமா
இமைபோல் இரவும் பகலும்
எனைக்காத்த அன்னையே
உனதன்பை பார்த்தபிறகு
அதைவிட வானம் பூமி
ஆகும் சிறியது.
ஏ.ஆர்.ரெஹ்மானின் ஏற்றமிகு இசையில் அமைந்த இப்பாடலுக்கும் வாலியே இசையமைத்திருந்தார் என்பதிலிருந்து,தாய்மைக்கு புகழ் சேர்க்கும் பல்வேறு தரமான பாடல்களுக்கும்,இம்மாபெரும் கவிஞரே அற்புதமான வரிகள் வழங்கினார் என்பது அவரது வாழ்வின் வரலாற்றுச் சிறப்பாகும்.
தாய்மையின் தியாகத்தை உணராது,தாய்மனதை நோகடித்த எவரும் நிம்மதியாக வாழமுடியாது எனும் வாழ்க்கை நெறியினை வெளிப் படுத்திய பாடலே ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'அரண்மனைக்கிளி' படத்தில் இசைஞானி இதமாக இசையமைத்து அவரே மனமுருகிப் பாடிய "என் தாயினும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே"எனும் இப்பாடல் நம் உள்மனதை குடைவதுபோன்ற உணர்வை .இப்பாடலை எழுதியவர் பொன்னடியான் எனும் கவிஞராவார்.
இவை எல்லாவற்றையும் கடந்தது தான்,தனுஷ் தானே மிக எளிமை யாகவும் யதார்த்தமாகவும் எழுதி,அனிருத் இசையில் 'வேலையில்லா பட்டதாரி'{2014}படத்தில் பாடி நம் எல்லோரின் கவனத்தையும் தாய்மையின்பால் திருப்பிய, நிகழ்கால நிசமான பின்வரும் பாடல்.
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் உன்ன
கண்ணா மூச்சி ஏன் வா நீ வெளியே.........
நான் தூங்கும் முன்னே
நீ தூங்கிப் போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம் ....................
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கும் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே
தனிமை நிலையானதே ...........
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்கவேண்டும்
நான் பாடும் பாட்டு
நீத் தூங்க என்றென்றும்
காதோரம் கேட்கும்"
காலங்கள் மாறலாம்;சமூகக் கோட்பாடுகளும் வாழ்வியல் சித்தாந்தங் களும் புதுவடிவம் பெறலாம்.ஆனால், தாய்மையின் தாக்கமே, மனித வாழ்வின் துவக்கமாகவும்,தொடர் நிகழ்வுகளாகவும்,கடந்தகால நினைவு களாகவும்,தனிமனித நெஞ்சங்களில் ஆலயமணி ஓசைகளாய்,என்றென் றும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை,நடைமுறை அனுபவங்களாக மட்டுமல்லாது,திரை நிகழ்வுகளாகவும் நம்மால் காண முடிகிறது. .இதைத்தான் காலம் காலமாக,தமிழ்திரையிசை பாடல்கள்,வரிகளால் தோரணம் கட்டி,விழாவாகக் கொண்டாடுகின்றன.
ப.சந்திரசேகரன் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++