பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. எனும் வள்ளுவரின் இக்குறள்படி நோக்கின்,செல்வமெலாம் இழந்து வறுமையில் வாடிடும் வேளையிலும்,பழமையும் நல்லுறவும் பாராட்டுதல் சொந்தம் மட்டுமே,என்பதாகும்.
ஆனால் நவீன யுகத்தில் நாம் காண்பதோ வேறு; இன்றைய உலகில் உறவுகளின் பலமனைத்தும் செல்வம் உள்ளளவே!
இதைத்தான் சிவாஜி கணேசன் உணர்வு பூர்வமாக நடித்து பி.மாதவ னின் இயக்கத்தில் உருவான'எங்க ஊர் ராஜா'திரைப் படத்தில்,எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ்ஸின் உரத்த குரலில் நாம் கேட்டு விரக்தியுற்ற "யாரை நம்பி நான் பொறந்தேன்"பாடலின் இடையே வரும்,
"பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பஞ்சுவைச்சா
சொந்தமில்லே பந்தமில்லே"
இதேபோன்றொரு ஆழமான கருத்தினை வெளிப்படுத்திய ஒரு திரை கானமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான 'குலவிளக்கு' திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸின் கனத்த குரலில் ஒலித்த 'மேகம் திறந்த வேளையிலே'எனும் பாடலில் இடையே தோன்றும்
"நீ சிந்திய ரத்தத்தை சீரழித்தே
பல சொந்தம் வளர்ந்ததம்மா
அந்த சொந்தத்தை சிந்திக்கும் வேளையிலே
சொந்த ரத்தமும் சிந்துதம்மா
உந்தன் சித்தம் தளர்ந்ததம்மா"
எனும் கண்ணீரில் விளைந்த வரிகளாகும்.கண்ணதாசனின் கருத்தாழ மிக்க இப்பாடலுக்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசைய மைத்திருந்தார்.
வள்ளுவரின் சிந்தனைக்கு சற்றே மாறுபட்டதுதான் அவ்வை மூதாட்டி தனது மூதுரையில்,வெண்பா இருபதில் மொழிந்த,
"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு".
இப்பாடலின் விளக்கம்,நோய் நம்முடனேயே பிறந்து,சிலநேரம் நம்மைக் கொன்று விடுவது உண்டு.எனவே நோயினை உடன்பிறப்பாகக் கொண் டாட முடியாது. அதுபோலவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் நோயினைத் தீர்ப்பது போல,தொலைவிலிருக்கும் அன்னியரும் நமக்கு நன்மை தரும் உற்ற துணையாக மாறக்கூடும் என்பதாகும்.
இக்கருத்தினை வேறு ஒரு கோணத்தில் விளக்கிய பாடலே,சிவாஜி கணேசனின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான'படிக்காத மேதை' திரைப்படத்தில் டி.எம்.எஸ் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகியோ ரின் அற்புதக்குரல்களில் ஒலித்த 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா'எனும் பாடலின் நடுவே நறுக்குத்தெரித்தாற்போல் நுழையும்,
"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை"
எனும் ஆழ்மனதை ஆட்கொள்ளும் வரிகளாகும்.கண்ணதாசனின் இப் பாடலுக்கும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார்.
வள்ளுவரின் கருத்தையும் அவ்வையின் கருத்தையும் வேறுபடுத்திப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது சிவாஜி கணேசன் நடித்து எம்.எஸ் வியின் இசையில் உருவான "அண்ணன் என்னடா தம்பி என்னடா"பாடல். 'பழனி' படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு இடையே,நடைமுறை வாழ் வின் நெருடல்களையும் நிசங்களையும் நெஞ்சில் நிறுத்திய,
"தாயும் பிள்ளையும் ஆனபோதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா" என்றும்,
"வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்துபோகிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா"
எனும் வரிகளால் கவியரசின் புலமை,விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில்,காலம் கடந்து மனம் கனக்கச் செய்கிறது .
'பழனி'திரைப்படப்பாடலுக்கு இணையான ஒரு பாடலை இன்னும் சற்று வலுவான வேதனையுடன் சந்தம் நிறைந்த சொற்களால் ரஜினியின் 'தர்மதுரை'படத்தில்,
"அண்ணன் தம்பியென்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடியெனக்கு பதிலை"
எனும் வரிகள் மூலம் உணர்ச்சிப்பிழம்புகளாக வெடித்திருந்தார் பஞ்சு அருணாச்சலம்.கவியரசின் "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு"எனும் 'அவளொரு தொடர்கதை'திரைப்படப்பாடல் போல்,ஞானத்தை வெளிப் படுத்துவதாக அமைந்திருந்தது இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்பாடல்.
"நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்றபின்பு
உறவுக்கு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி"என்றும்,
"சொந்தத்தில் பந்தத்தில்
மோசத்தில் சோகத்தில் வந்து நின்று
உண்மைதனை இன்று உணர்ந்தேன்
இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்"
என்றும்,மனம் குமுறி கே.ஜே யேசுதாஸ் பாடுகையில் அவரோடு இணைந்து நாமுமல்லவா சொல்லவொண்ணா சோகத்தில் விழுந்தோம். உறவும் பகையும் ஒன்றாமோ,அன்றின் உறவே பகையாமோ,என்று மனம் ஊனமுறுகச்செய்யும் பல பாடல்களை,தமிழ்திரையிசை தந்திருக் கிறது,இந்த வகையில் 'இரவும் பகலும்'திரைப்படத்தில் இடம்பெற்ற டி.ஆர் பாப்பாவின் இசையில் டி.எம்.எஸ் குரலில் ஒலித்த,
"இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்றுதான்''
எனும் பாடலும் 'தேவதாஸ்' திரைப்படத்தில் C.R சுப்புராமனின் இசையில் கண்டசாலா பாடிய "உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை" எனும் பாடலும்,'படித்தால் மட்டும் போதுமா'திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் சிவாஜி கணேசனுக்காக டி.எம்.எஸ் மனமுருகி பாடிய "அண்ணன் காட்டிய வழியம்மா" பாடலில் இடம்பெற்ற,
"தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்"
போன்ற பல அர்த்தமுள்ள பாடல் பொக்கிஷங்களை தமிழ்திரையில் கேட்டு,அனுபவச் சிந்தனைகளில் ஆழ்ந்திருக்கிறோம்.இவற்றில்"இரவும் வரும் பகலும் வரும்"பாடலை ஆலங்குடி சோமுவும் "உறவுமில்லை பகையுமில்லை" பாடலை உடுமலை நாராயண கவியும் "அண்ணன் காட்டிய வழியம்மா" பாடலை கண்ணதாசனும் புனைந்திருந்தனர்
இறுதியாக மீண்டும் வள்ளுவரின் பின்வரும் குறளான,
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
என்பதன் பொருளான 'அன்பு நீங்கா உறவு அமைந்துவிட்டால் வாழ்வில் அதனைவிட செல்வமும் ஆக்கமும் வேறில்லை' என்பதனை அறிகையில், ஆரோக்கியமான உறவுகள் என்றும் ஊனமுறுவதில்லை என்பது உறுதி யாகும்.
ப.சந்திரசேகரன்
=======================
Tamil filmsongs were always enriched with deep human life truths...the painful experiences we had in our relations with others were expressed in these songs in right words
ReplyDeletenice observations by PC
ReplyDeleteThank you Mr.Kamal
DeleteVery nicely cited from cini song about relationship.
ReplyDeleteThank you reader.
DeleteWise observations. But life goes on condoning the harsh realities and appreciating the glimmers of the occasional goodness.
ReplyDeleteThank you Mr.LKD
Delete