Thursday, July 1, 2021

தமிழ்த்திரையில் ஒளியின் வீச்சு.

   கலைஞனின் உளியால்,கல்லில் ஒளி பிறக்கிறது.நற்சிந்தனைகளால் நெஞ்சில் தீபமேற்றிய நல்லுணர்வு தோன்றுகிறது. கவிஞனின் கற்பனை ஒளியேற்ற,பூட்டிய கதவுகள் திறக்கையில் ஊடுருவும் ஒளியென,மனமெ லாம் ஒளி ஊடுருவுகிறது. ஊக்கமும் படைப்பாற்றலும், இறைமைக்கு இணையாகும். எனவேதான் வள்ளுவர் ஊக்கமுடை மை ஒளி  ன்றும், ஊக்கமின்மை இழிவென்றும்,தனது 

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

   என்ற ஒப்பற்ற குறள் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.ஒளியே வாழ்வின் உற்சாகம்.இருள் சாபத்தின் வெளிப்பாடு. இக்கருத்தினை ஒட்டியே சில தமிழ்த் திரைப்பட தலைப்புகளும் திரையிசை வரிகளும் ஒளியின் மாட்சியினை உணர்வுபூர்வமாக்கின. 

  தமிழ்த் திரைப்படங்களில் பிரகாசித்த ஒளியினை'ஞான ஒளி''இருளும் ஒளியும்' 'ஒளி விளக்கு''ஒளி பிறந்தது'போன்ற சிறந்த தலைப்புகளாகக்  காணலாம்.திரைப்படத் தலைப்புகளைக் கடந்து மகாகவி பாரதி எழுதிய, 

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா வா 

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா" 

  எனும் எழுச்சிமிகுப் பாடலை,திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவரது உன்ன தக் குரலில் பாடியதைக் கேட்டு கேட்டு, நாம்நாம் பரவசத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கி றோம்.பின்னர் இதே பாடலை எம்.எல்.வசந்தகுமாரியும் ராதா ஜெயலக்ஷ்மியும்,'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்'எனும் திரைப்படத்திற் காக ஜி.இராமநாதன் இசையில் பாடினர் எனபது,அதன் சுவையான தொடர்ச்சியாகும் 

   1959-ஆம் ஆண்டு கே.வி.ஸ்ரீனி வாசன் இயக்கத்தில் உருவான,'கண் திறந்தது'எனும் திரைப்படத்தின் தலைப்புப் பாடலாக ஒலித்த,சீர்காழி கோவிந்தராஜன் குழுவினருடன் பாடிய,குணம் செழிக்கும் பாடலான, 

"கண் திறந்தது; 

ஒளி பிறந்தது; 

இருளகன்றது! 

புதுவாழ்வு பெருவோமடா; 

நல்ல புத்தியாய் பிழைத்து என்றும் 

சத்தியத்தை காத்து நின்று, 

புதுவாழ்வு பெருவோமடா"

   எனும் வி.சீதாராமனின் கவிதை வரிகளுக்கு டி.ஆர்.ராஜகோபாலன் திவ்யமாய் இசைவடிவம் அளித்திருந்தார்.அறிவுக்கண் திறக்க,அற நெறி ஒளிவடிவாகி, நல்வாழ்வுக்கு தடம் பதிக்கும்,எனும் வாழ்வியல் சித்தாந் தத்தை சாறாக்கி,சுய உணர்வுகளை சுத்தீகரம் செய்த பாடலாகும் இது.  

  எதிர்காலத்தை எவருமே இருண்டதாக நினைத்துப் பார்ப்பதில்லை; அவ்வாறு நினைத்துப்பார்ப்பின் வாழ்க்கையில் பொருளில்லை. நம்பிக்கை நெஞ்சில் வைத்து வாழ்வோர்க்கு,எதிர்காலம் என்றும் ஒளி நிறைந்ததே.இதைத்தான்'பச்சை விளக்கு'திரைப்படத்தில் டி.எம்.எஸ் ஸின் கணீர் குரலில் ஒலித்த கவியரசின், 

"ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது 

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை என் காதில் விழுகிறது" 

  எனும் காலத்தால் அழிக்கமுடியாத கானம்,நெஞ்சில் ஆழமாய்ப் பதித்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் நாம் கேட்ட ஒப்பற்ற பல பாடல் களில் இதுவும் ஒன்றாகும்.

   கதிரவனின் ஒளி போற்றும் மண்ணில், உயிரினங்களின் உற்சாக ஒளி யாக என்றென்றும் விளங்குவது பெண்மையும் தாய்மையுமாம்.எனவே பெண்ணை ஒளியின்  உருவாக்கிப் பார்ப்பது,பெண்மைக்கு பெருமை சேர்ப்பதோடு நில்லாது,மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் கருவின் ஒளியே மூலம் என்பதை,காலம் நம் கண்முன்னே காட்சிப்பொருளாக்கு கிறது.இந்த அடிப்படையில்தான்,'ன்னிப் பெண்' திரைப்படத்திற்காக அவிநாசி மணி எழுதிய,ஒளியின் பிரகாசத்தை பெண்மையின் பேரிசை யாய் ஒலிக்கச் செய்த, 

"ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா 

இங்கே நீ பிறந்த போது தெய்வம் நேரில் வந்ததம்மா" 

  எனும் மண் மணக்கும் பாடலாகும். என்றும் மறக்கவொண்ணா இப் பாடலை, டி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாட, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இனிதாய் ப்பாடலுக்கு  இசைத்தேன் கலந்தார். 

  பார்வையற்ற ஒருவருக்கு பெண்மையே காதலியாக, வாழ்க்கைத் துணையாக இருந்து,விளக்கின் தீபமென பார்வை தந்து,வழிகாட்டக் கூடும் என்று,இதமாய் இதயம் தொட்ட வரிகளே,கண்ணதாசன் எழுதி, வி.குமாரின் இசையில்,டி.எம்.எஸ் பாடிய, 

விளக்கே நீ கொண்ட ஒளி நானே 

விழியே நீ கண்ட நிழல் நானே 

எனும்,முக்தா V. சீனிவாசன் இயக்கத் தில் உருவான 'நிறைகுடம்' திரைப் படப் பாடலாகும்.

   கிட்டத்தட்ட'இருளும் ஒளியும்' திரைப்படத்திற்கு ஒப்பான ஒரு கருத் தினை பாடலாக வெளிப்படுத்தியது,மலையாள மொழியிலிருந்து ஒலிச் சேர்க்கை{dubbing} செய்யப்பட்ட 'தேவி' எனும் திரைப்படத்தில் , அன்றைய மலையாளத் திரையின் சூப்பர்ஸ்டார் பிரேம் நசீருக்காக டி.எம்.சௌந்த ராஜன் மிகவும் உருக்கமாய்ப் பாடிய,

"இருள் பாதி ஒளிபாதி கொடுத்தான் 

இறைவன் எதிலுமே சரிபாதி வைத்தான்" 

   எனும் பாடல்.பல்லடம் மாணிக்கம் வரிமைத்த ப்பாடலுக்கு,தட்சிணா மூர்த்தி மென்மையாய் இசையூட்டினார். 

  இருளைக்கீறி அழிக்கும் சக்தி ஒளிக்கு உண்டு என்பதை,மிக துல்லி யமாக வெளிப்படுத்தும் பாடல் ஒன்று அஜித் நடிப்பில் இந்தியிலும்{PINK} தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி திரைக்கு வந்த 'நேர்கொண்ட பார்வை' எனும் திரைப்படத்தில்,யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கவிஞர் அமுதாதேவி எழுதி,Dhee பாடிய, 

"வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே.....

.......................................................

விதிகள் தாண்டி கடலில் ஆடும்

இருள்கள் கீரி ஒளிகள் பாயும்

நான் அந்த கதிராகிறேன்" 

  என்ற வரிகளால் நெஞ்சைக் கீறி பாய்ந்தது.நேர் கொண்ட பார்வையின் ஒளியில்,வன்மையும் தீமையும் பொசுங்கிக் கரியும் என்பதை,வித்தி யாசமான சொல்லாண்மையுடன் விளக்கியது இப்பாடல். 

  இறைவனின் ஆலயத்தில் ஏற்றும் நெய்விளக்கிலும்,மெழுகுவர்த்தியிலும் பளிச்சிடும் ஒளியில், இறைமையின் ஒளிப்பிழம்புக்களை ஆத் மார்த்த மாக காணப்பெறுகையில்,மனமுருகி நாம் மறு உலகத்திற்கு பிரவேசிப் பதுண்டு.இன்பமும் துன்மபும் நிறைந்த வாழ்வில்,நம்பிக்கை ஒளியில் இரண்டறக் கலந்து நன்மை நாடுவதே,மனித இயல்பாகும். துன்பம் நேர் கையில் கண்ணீரை இறைவனுடைய பாதத்தில் சமர்ப்பித்து,கருணை ஒளியினை யாசிப்பது,துவண்ட உணர்வுகளைத் துளிர்விடச் செய்யும். இதைத்தான்'ஒளிவிளக்கு'திரைப்படத்தில்,வாலி வரிவடிவம் கொடுக்க, மெல்லிசை மன்னர் இசையமைத்து,பி.சுசீலா மனமுருகிப் பாடிய, 

இறைவா உன் மாளிகையில்

எத்தனையோ மணி விளக்கு,

தலைவா உன் காலடியில்

என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,

  பாடல் உணர்த்துகிறது.இதே போன்றொரு கருத்தினைத்தான் 'கௌரவம்' திரைப்படத்தில் கவியரசு எழுதிய, 

"மெழுகுவர்த்தி எரிகின்றது

எதிர் காலம் தெரிகின்றது

புதிய பாதை வருகின்றது

புகழாரம் தருகின்றது ..."

   எனும் பாடல் வரிகள் நம்பிக்கையின் நாதமாய்,அமைதியாகவும் அழுத்த மாகவும்,டி.எம்.எஸ் குரலில் மனதோடு கலந்து,நம்மை மெய்மறக்கச் செய்தது.இப்பாடலுக்கும் மெல்லிசை மன்னரின் இதமான  இசையே, கேட்போரின் இதயத் துடிப்பானது.

   முடிவாக,ஒளி என்பது வெளிச்சம் மட்டுமல்ல; ஒளியே அறிவின் அடை யாளம் என்பதைத்தான்,

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.

  எனும் வள்ளுவரின் மற்றொரு குறள் விளக்குகிறது.அதாவது அறிஞர்கள் சபையிலும், அறிவற்றோர் சபையிலும் சரியாக நடந்து கொள்ளத் தெரிந் தவன் அறிவொளி நிறைந்தவன் என்கிறார் வள்ளுவர்.ஒளி வீரத்தின் வீச்சு என்கிறது,புறநானூற்றுப் பாடலொன்றின் இறுதி வரிகளான, 

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு றிந்து பெயர்தல் காளைக்கு கடனே! 

   இவ்வரிகளின் உட்பொருளாக நாம் அறிவது,ஒரு போர்வீரனின் வீரம் அவன் கையிலேந்தும் வாளின் ஒளியெனப் பிரகாசிக்கிறது என்பதாகும்.மொத்தத்தில், ஒளியின் ஊட்டம் அறிவாக,உரமாக,வீரமாக, நம்பிக்கை யாக,நன்மைகளாக,மனித வாழ்க்கையை வழிநடத்துகிறது என்பதே, வெளிச்சம் காட்டும் தெளிவான பாதையாகும் .

ப.சந்திரசேகரன்

                               ============================== 

No comments:

Post a Comment