Wednesday, September 1, 2021

கிறித்துவம் இஸ்லாமியம் போற்றிய,தமிழ்த்திரைப் பாடல்கள்.

    தமிழ்த்திரைக்கு பெருமை சேர்த்த'பாரத விலாஸ்'திரைப்படத்தில் இடம் பெற்ற "இந்திய நாடு என்வீடு;இந்தியன் என்பது என்பேரு"எனும் அற்புத மான பாடலின் இடையே வரும்"எல்லா மதமும் என்மதமே,எதுவும் எனக்கு சம்மதமே''எனும் ஒருமைப்பாட்டுச் சிந்தனையே,கலைத்தாயின் பிரம்மாண்ட பீடமாக விளங்கும்,திரையுலகின் கொள்கையாகும். 

   வெள்ளித்திரை,மொழிகளுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்டு,படைப் பாற்றலால் உலகை ஒன்றாக்குகின்து.மொழி ளும் கவிதை வரிகளி னால்,மதம் கடந்து,மனிதத்தை ஒன்றாகக் காண்பதே,வெள்ளித்திரையின் கோட்பாடு.

  இந்த பேதமகன்ற சிந்தனையின் வெளிப்பாடே,அவ்வப்போது நாம் கண்டு ரசித்த,கேட்டு மனம் நெகிழ்ந்த,எல்லா மதங்களையும் ஒன்றாகக் காணும் காட்சிகளும் பாடல்களுமாகும். இந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் இடம்பெற்ற,நெஞ்சில் நினைவலைகளாய் ஒலி யெழுப்பும் ஒரு சில பாடல்களை பெருமைப்படுத்துவதே,இப்பதிவின் நோக்கமாகும். 

  ' மிஸ்ஸியம்மா''ஞான ஒளி'ஜீசஸ் அன்னை வேளாங்கண்ணி''குழந்தை ஏசு''உண்மையே உன் விலை என்ன''வெள்ளை ரோஜா'போன்ற முக்கிய மான திரைப்படங்கள்,கிறித்துவ மதத்தின் புனித அம்சங்களை,பல வகை யில் துல்லியமாக வெளிப்படுத்தின.'குலேபகாவலி''அலிபாபாவும் நாற்பது திருடர்களும்''அலாவுதீனும் அற்புத விளக்கும்''முஹம்மதுபின் துக்ளக்'போன்ற திரைப் படங்கள் இஸ்லாமிய மத பெயர்களை தலைப் பாக கொண்டிருந்தாலும்,பிரதானமாக அவைகள் இஸ்லாமிய பெருமை யினை பறைசாற்றவில்லை.ஆனால்,அவற்றின் ஒரு சில பாடல்களும், வேறு ஓரிரண்டு திரைப்படப் பாடல்களும்,இஸ்லாமியர்களின் உணர்வு களையும், இறைநெறியினையும் நமக்கு வெளிப்படுத்தின. 

   இந்து மதமல்லாது,பிறமதம் போற்றும் பாடல்களில் மனதில் ஆழ்ந்த உணர்வுகளைத் தாங்கி,என்றென்றும் மறக்கவொண்ணா பாடலாக அமைந்ததே,ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தமிழிலும்,விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் தயாரித்து திரைக்கு வந்த,'மிஸ்ஸியம்மா'திரைப்படத்தில் கே.ராஜேஸ்வரராவ் இசையில் பி.லீலா பாடிய, 

"எனையாளும் மேரிமாதா 

துணைநீயே மேரிமாதா 

என்றும் துணைநீயே மேரிமாதா 

பரிசுத்த ஆவியாலே 

வரபுத்ரன் ஈன்ற தாயே 

பிரபு ஏசுநாதன் அருளால் 

புவியோரும் புனிதம் அடைந்தார்" 

  எனும் ஏகாந்த கீதம்.ந்தப்பாடல் இப்போது கேட்டாலும்,நம்மை கடந்த காலத்திற்கு இசை வாகனத்தில் இதமாய் பயணிக்கச்செய்யும்.இதே போன்றொரு கருத்தினை இன்னும் ஆணி அடித்தால்போல் வெளிப்படுத் திய பாடலே,'அச்சாணி'திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகி தனது ஆன்மாவுடன் சங்கமித்துப் பாடிய, 

"மாதாவின் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் 

தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் 

மாதா! 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே

மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே

மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா

மாதா!"

  என்று நமது இதயங்களை இசையோடு துடிக்கச் செய்த பாடல்.அதுவும் 'மாதா' என்று இரண்டாம் முறை உச்சரிக்கையில்,அந்த ஒற்றைச்சொல் நம் நெஞ்சை உலுக்குவதாக உணரக்கூடும். 

  1971-இல் கே.தங்கப்பன் இயக்கத்தில் உருவான'அன்னை வேளாங்கன்னி' திரைப்படம்,கிறித்துவ மதத்தின் பெருமையினை வலுவாக நிலை நிறுத் தியது.அன்னை வேளாங்கன்னியின் புனித மேலான்மையை வெளிப் படுத்தும் மூன்று கிளைக்கதைகளை முன்னிறுத்தி,ஜெமினி கணேசன் ஜெயலலிதா மற்றும் பலரும் பங்கேற்ற,நினைவுக்குரிய த்திரைப்படத் தில்,டி.எம்.எஸ் மனமுருகிப் பாடிய,

"தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்

ஜீவ நாடகம் முடிந்ததென்று தேவ மைந்தன் போகின்றான்

தேவ பூமி அழைத்ததென்று மேரி மைந்தன் போகின்றான

உலகை சுமக்கும் தோள்களிலே சிலுவை சுமந்து போகின்றான்

ஒளி வழங்கும் கண்களிலே  உறுதிகொண்டு போகின்றான்

குருதிபொங்கும் வேளையிலும் கோபமின்றி  போகின்றான்

கொடிமுள்ளால் மகுடமிட்டும் கொடுமை தாங்கி போகின்றான்"     

   எனும் அர்த்தப்புள்ளிகளால்,அழகிய கோலம் வரைந்த பாடல். 

   1972-இல்,பி.மாதவன் இயக்கத்தில் திரைக்கு வந்த 'ஞான ஒளி' திரைப் படம்,கிறித்துவ மத கோட்பாடுகளை,குறிப்பாக செய்த பாவங்களை முன் னிறுத்தி,பாவ மன்னிப்பு கோருவதாக பொருளறியப்பட்டு,செவாலியர் சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்பில்,அமோக வெற்றி பெற்றது. அந்த கனமான திரைப் படத்தில்,டி.எம்.சௌந்தராஜனின் கம்பீரக் குரலில் வசனமாகவும்,பாடலாகவும் ஒலித்த,

"தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

ஆயிரம் நன்மை தீமைகள்

நாங்கள் செய்கின்றோம்

நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்"  

எனும் பாடல் காலம் வென்று இன்றும் நெஞ்சில் நிலைக்கிறது.  

  பின்னர் 1973- இல் மலையாளத்தில் பி.ஏ.தாமஸின் இயக்கத்தில் தயாரிக் கப் பட்டு  தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிவந்த 'ஜீசஸ்'திரைப்படத் தில் முரளிதாஸ் என்பவர் இயேசு கிறிஸ்துவாகவும்,எம்.என்.நம்பியார் ஜூடாஸ் ஆகவும் நடித்திருந்தனர்.ஜெமினி கணேசன்,ஜெயலலிதா,ஜெய பாரதி,மற்றும் பலரும் நடித்திருந்த இத்திரைப்படம் இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை வெண்திரை நிகழ்வாக்கியது.

  1983-இல் சிவாஜி கணேசன் பாதிரியாராகவும்,காவல்துறை அதிகாரி யாகவும் இரட்டை வேடம் ஏற்று நடித்து ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் வெளி வந்த 'வெள்ளை ரோஜா'திரைப்படம் கிறித்துவ மதம் சார்ந்து,மதபேதங் களால் மறைக்கப்பட்ட குற்றங்களை,கருவாகக் கொண்டிருந்தது.அந்த திரைப்படத்தில் பாதிரியாராக தோன்றிய சிவாஜிக்கு குரல் கொடுத்து,  மலேஷியா வாசுதேவன் குழுவினருடன் பாடிய பாடலே, 

"தேவனின் கோவிலிலே

யாவரும் தீபங்களே

பாவிகள் யாரும் இல்லை

பேதங்கள் ஏதுமில்லை

மேரியின் பூமடி மேவிய

தேவனின் கோவிலிலே

யாவரும் தீபங்களே!

தோட்டத்து பூக்களைப்போல்

புன்னகை வீசிடுங்கள்

வாட்டத்தை போக்குகின்ற

வார்த்தையை பேசிடுங்கள்".

   இந்த பாடல் தூய்மை தழுவிய கருத்துக்களினாலும்,வாசுதேவனின் குரல் அழுத்தத்தினாலும்,சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்தியதோடு மட்டுமல் லாது,ஆழ்ந்து சிந்திக்கவைக்கும் பாடலாயிற்று.

   மேலே குறிப்பிட்ட பாடல்களில்'வெள்ளை ரோஜா'படப்பாடலை வாலியும், இதர மூன்று பாடல்களை கவியரசும் எழுதினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.இசையைப் பொறுத்தவரை'அச்சாணி'மற்றும் 'வெள்ளை ரோஜா'திரைப்படங்களுக்கு  இளையராஜாவும் 'ஞான ஒளி' படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதனும் 'அன்னை வேளாங்கன்னி'க்கு ஜி. தேவராஜனும் அற்புதமாய் இசையமைத்திருந்தனர்.

  முதலில் இஸ்லாமிய பெருமையை  திரைக்கு கொண்டுவந்து நினைவில் நிற்கச் செய்தது,எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'குலேப  காவலி' திரைப்படத்தில்,மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி ஆகியோரின் இசையில்,தஞ்சை ராமையாதாஸ் எழுதி,நாகூர்  ஹனிபாவும் S.C. கிருஷ்ணனும் பாடிய இஸ்லாமிய புகழும் மத நல்லிணக் கமும் இணைந்து போற்றிய, 

நாயகமே ....................

ஜகமே புகழவே .............

நாயகமே ...........

நாயகமே நபி நாயகமே

நலமே அருள் நபி நாயகமே

நாயகமே நபி நாயகமே

நாயகமே ...........

இணையில்லாத எங்கள் பாதுஷா

பிறந்த இன்ப நாளிலே நாயகமே

இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு

இன்புற வேண்டும் நாயகமே

நாயகமே நபி நாயகமே

நாயகமே ...............

அறியாமை இருள் நீங்கி

இன்ப ஒளி அமைய வேண்டும்

அன்பின் இதயமே 

காணிக்கை செய்வோம்

அருள் தாரும் நபி நாயகமே

நாயகமே நபி நாயகமே

  என்ற அழகும் எளிமையும் கொண்டபாடல்.ப்பாடல்,திரைப்பட வரலாற் றின் தொடக்க காலத்திலேயே,வரிகளால்,இசையால்,இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிது. 

   இஸ்லாமியத்தை நினைவில் நிற்கச் செய்த  இன்னுமொரு பாடல், 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'திரைப் படத்தில் எஸ்.தட்சிணா மூர்த்தியின் இசையில்,கண்டசாலாவின் குரலில்,''அல்லாவின் பெருமை யாலே சொல்லாமல் வந்ததே யோகம்''என்று ஒலித்தது .

  அதற்குப் பிறகு  1961-ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் திருவிழா கண்ட'பாவ மன்னிப்பு'திரைப்படத்தில் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்க பாடலாக விளங்கிதே,நாகூர் ஹனீபாவும்,டி.எம்.சௌந்தராஜனும் சேர்ந்து,ஒலியாலும் பொருளாலும் உள்ளம் நிறைத்த, 

"எல்லோரும் கொண்டாடுவோம் 

எல்லோரும் கொண்டாடுவோம் 

அல்லாவின் பேரைச்சொல்லி 

நல்லோர்கள் வாழ்வை எண்ணி" 

  எனும் கண்ணதாசனின் வரிகளால்,நல்லெண்ணங்களை நெஞ்சில் விதைத்த பாடல்.இப்பாடலுக்கு இடையே தோன்றும், 

"கடலுக்குள் பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை

முதலுக்கு அன்னை

என்போம் 

முடிவுக்கு தந்தை

என்போம்

மண்ணிலே விண்ணை

கண்டு ஒன்றாய் கூடுவோம்'' 

  எனும் வரிகள் வெறும் கற்பனையாய் நில்லாது,மனித வாழ்வின் அற நெறி கோட்பாடுகளை உன்னதமாய் வெளிப்படுத்தி,மத நல்லிணக்கத்தை உருவாக்கின.தமிழ்த் திரைவரலாற்றின் இந்த திவ்யப் பாடல் வரிகளுக்கு, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந் தனர்.

   இஸ்லாமிய தத்துவங்களை பழச் சாரென பிழிந்தெடுத்துத் தந்த இணை யில்லாப்பாடலொன்று சோ இயக்கத்தில் 1971-இல் வெளிவந்த'முஹம்மது பின் துக்ளக்'படத்தில் இடப்பெற்றது.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்  இசையமைத்த அந்த உணர்வு பூர்வமான, 

"அல்லாஹ் அல்லாஹ் 

அல்லாஹ் அல்லாஹ் 

நீ இல்லாத இடமே இல்லை 

நீதானே உலகின் எல்லை 

நிறம் வெளுக்க நீர்தான் உண்டு 

நீர் வெளுக்க  நீ தான் உண்டு

மனம் வெளுக்க யார்தான் உண்டு 

நபியே உன் வேதம் உண்டு 

உடலுக்கு ஒன்பது வாசல் 

மனதுக்கு எண்பது வாசல் 

உயிருக்கு உயிராய்க் காணும் 

ஒருவாசல் பள்ளிவாசல் 

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் 

இல்லார்க்கு எதுதான் சொந்தம் 

நல்லாருக்கும் பொல்லார்க்கும் 

நாயகனே நீதான் சொந்தம்" 

   என்ற கவிஞர் வாலியின் வற்றா நதியெனப்பாயும் வரிகளை,மெல்லிசை மன்னரின் உச்சக்குரலில் பாடக்கேட்டு,மெச்சாதவர்கள் இருக்க வாய்ப் பில்லை. 

   இறுதியாக 1975 -ஆம் ஆண்டு திரைக்கு வந்த,கலைஞரின் கதை வசனம் தாங்கி,கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் மு.க.முத்துவும் பத்மப்ரியாவும் நடித்த,'அணையா'விளக்கு திரைப்படத்தில்,மு.க.முத்து பாடிய மிகச் சிறந்த பாடலை நிறைவுடன் குறிப்பிட்டாகவேண்டும். எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில்,நாகூர் ஆண்டவரின் புகழ் பரப்பும் பாடலான, 

"கூன் பிறையை தொழுதிடுவோம் 

குர்ரானை ஓதிடுவோம் 

மேன்மைமிகு மெக்காவின் 

திசை நோக்கி பாடிடுவோம் 

நல்ல மனதில் குடியிருக்கும் 

நாகூராண்டாவா 

உன்னை மனதில் தினமுமெண்ணி 

நானும் வேண்டாவா 

யாரும் வருவார் யாரும் போவார் 

நாகூர் ஆண்டவன் சந்நிதியில் 

நானும் உண்டு நீயும் உண்டு 

நபிகள் நாயகம் முன்னிலையில்" 

  எனும் வரிகள் மூலம்,மு.க முத்துவின் இனிய குரலில்,இஸ்லாமிய வழி பாட்டுத்தங்களில்,நாகூர் தர்காவினை,தமிழகத்தின் மண்மணத்தோடு  மணக்கச்செய்து,உலக சுவாசத்திற்கு உடமையாயாக்கியது.

   பல மதங்கள் பலமுடனே, மனிதம் காக்கும் இந்திய திருநாட்டில், ஒவ் வொரு மொழியும் அனைத்து மதங்களின் முக்கியத்துவத்தினை திரைப் படங்கள் மூலம் கவிதை வரிகளாய்,இசைத்தேன் கலந்து,செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்து படைக்கின்றன. இந்திய ஒருமைப் பாட்டிற்கு,மத நல்லிணக்கம் நங்கூரமாக நின்று நன்மை பரப்புவதற்கு,திரைப்படங்கள் தலையாய பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் தமிழ் திரைப்படத்துறை, தமிழையும் தமிழரின் கலாச்சார முதன்மையினையும்,தலைநிமிரச்செய் கின்றது என்பதில்,எள்ளளவும் அய்யமில்லை.  

ப.சந்திரசேகரன்.

                                            ************0*************      

No comments:

Post a Comment