Thursday, September 9, 2021

காலம் வென்ற கவிதைப்பித்தன்


 

  

  "கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி''எனும்'ஜெயம்'திரைப் படத்தில் இடம்பெற்ற இதமான பாடலை,பலரும் கேட்டு ரசித்திருக்கக் கூடும்.கவிதையைக் கனவாகவும்,கனவிலும் கவிதையை நேசித்தும், தங்களின் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் கவிதைக்கே அர்ப்பணம் என்று வாழ்ந்த கவிஞர்கள் பலர்.

    தமிழ்த்திரைப்படத்துறையில் கற்பனையால்,கவிதையால் சிகரம் கண்ட,அ.மருதகாசி,கு.மா.பாலசுப்ரமணியன்,ஆலங்குடி சோமு,தஞ்சை ராமையாதாஸ்,பாபநாசம் சிவன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  கவியரசு கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,நா.முத்துக்குமார்,பா.விஜய் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் மத்தியிலே,கவிதைப்பித்தனாய் வாழ்ந்த வர்தான்,நேற்று இயற்கை எய்திய புலமைப்பித்தன் அவர்கள்.அவர் கவிதைகளில் காதல்,வீரம் தன்னம்பிக்கை,அறிவுரைச்  சிந்தனைகள், இப்படி பலவகையில் சொற்கள் சுந்தர தாண்டவமாடின என்பதில், எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

  'குடியிருந்த கோயில்'திரைப்படத்தில் இடம்பெற்ற"நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவன் யார் யார "பாடல் முதல்'அரிமா நம்பி' போன்ற எத்தனையோ திரைப்படங்களுக்கு அவர் எழுதிய எண்ணற்ற  பாடல்கள், இசையுடன் சங்கமித்து,நினைவுச் சின்னங்களாக வரிகளால் என்றென் றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும்.   

   பட்டுக்கோட்டையார் போல,புலமைப்பித்தனின் அறிவுரைப் பாடல் களான, 

 1}சிரித்து வாழ வேண்டும்

 பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

உழைத்து வாழவேண்டும் 

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே {உலகம் சுற்றும் வாலிபன்}

2}உன்னால் முடியும் தம்பி தம்பி 

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி 

3}அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா 

ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா {உன்னால் முடியும் தம்பி}

4}ஓடி ஓடி உழைக்கணும் 

ஊருக்கெல்லாம் கொடுக்கணும் 

ஆடி ஆடி நடக்கணும் 

அன்பை நாளும் வளர்க்கணும் {நல்ல நேரம்}

5}ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம் {பல்லாண்டு வாழ்க }

  போன்ற  அனைத்துமே கருத்துக் செறிவாலும் சொல்லாண்மையாலும், சிரசேறிய அற்புத கவிதை பொக்கிஷங்களாகும்.சிலேடைக்கு எடுத்துக் காட்டாக 'சிவகாமியின் செல்வன்' திரைப்படத்தில் அவர் அழகுடன் வடித்த,

 இனியவளே என்று பாடவந்தேன் 

இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன் 

  என்பது ஒரு இணையில்லா இலக்கிய தூவலாகும். ஒரே சொல்லை வைத்து,வரிக்கு வரி வித்தை காட்டிய'யார்'எனும் சொல் கரைபுரண்டோ டிய"நான் யார் நீ யார்"பாடலும்,'லா'எனும் ஒற்றைச் சொல்லால் உள்ளங் களை கிரங்கச் செய்த, 

கல்யாண தேனிலா 

காய்ச்சாத பால் நிலா {மௌனம் சம்மதம் } 

  பாடலும் "சித்தமெல்லாம் எனக்கும் சிவமயமே" என்பது போன்று,சொல் பித்தாகி 'சித்தமெல்லாம் எனக்கு சொல் மயமே' என்ற நிலைக்கு சொற் கடலில் முத்துக்குளித்த புலமைப்பித்தனுக்கு,விருதுகளும் அரசவைக் கவிஞர் கௌரவமும்,மிகச் சிறிய அங்கீகாரங்களே!   

   'கல்யாண தேனிலா'பாடலில்கூட,இரட்டுற மொழிதலுக்கு உதாரணமாக, 

நீதானே வான் நிலா 

என்னோடு வா நிலா 

  என்ற வரிகளைக்கூறலாம்.இப்பாடல் குறித்து ஜெயா தொலைக்காட்சி யில் பாடகர் மனோவுடன் நடந்த நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில், புலமைப்பித்தன் அவர்கள் பேசுகையில்,ஒரு பெண் ரசிகை இநத பாடலின் இடையே தோன்றும்,

உன் பார்வை தூண்டிலா 

நான் கைதி கூண்டிலா 

   எனும் வரிகளால்,தன்னைப்போன்று பலரும் கவிஞரிடம் வசியமாகி விட்டதாகச் சொன்னதை,சிரித்துக்கொண்டே நினைவுகூர்ந்தார்.

நளினமும் ரம்யமும் கூட்டும் சொற்களை உள்ளடக்கிய, 

1}ஆயிரம் நிலவேவா 

ஓராயிரம் நிலவேவா 

இதழோரம் சுவை தேட 

புதுப் பாடல் விழி பாட பாட{அடிமைப்பெண்}

2}எங்கே அவள் என்றே மனம்

தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக்

கேட்டதும் கண்களே பாடிவா {குமரிக்கோட்டம்}

3}பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்றது {நினைத்ததை முடிப்பவன்}

4}இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் 

தொட்டிலை கட்டிவைத்தேன்{நீதிக்கு தலைவணங்கு}

5}தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் 

மழைக்கொண்ட மேகம்{மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்} 

  போன்ற புலமைப்பித்தனின் பாடல்கள் பலவும் எம்.ஜி.ஆரின் திரைப் படங்களில் இடம்பெற்றவை ஆகும்.இப்பாடல்கள் போல் பலவும்,தமிழ் மொழிக்கே தனிப்பெருமை கூட்டிடும் என்பதை ,செவிகளில் விழும் அழகான சொற்களே நிலைநாட்டும்!  

    காதலும் பெண்மையும் கவின்மிகு சொற்களும்,புலமைப்பித்தனுக்கு கங்கைக்கரை காற்றே!.

பாடும்போதுநான் தென்றல் காற்று 

பருவ மங்கையோ தென்னங்கீற்று {நேற்று இன்று நாளை }பாடலிலும்,

 ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

 ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ {தங்க மகன் }

  பாடலிலும்,கற்பனையின் கம்பீரத்தாலும் சொல் நயத்தாலும்,அவர் காதலில் களிப்புற்றதை நம்மால் உணர முடிந்தது. 

  எதுகை மோனைக்கு ஆலாபனை செய்யும் விதமாக அமைந்திருந்த புலமைப் பித்தனின் பல பாடல்களில்,முக்கியமான இரண்டை குறிப்பிட் டாகவேண்டும். முதலாவதாக,'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான, 

உச்சி வகுடெடுத்து 

பிச்சிப்பூ வசக்கிளி 

பச்சைமலை பக்கத்துல

மேயுதுன்னு சொன்னாங்க 

 எனும் சந்தத்தேனில் குளித்த சொற்களும்,'உன்னால் முடியும் தம்பி' திரைப் படத்தில் கேட்டு ரசித்த, 

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும்

இங்கு மாறவில்லே

எங்க பாரதத்தின்

சோத்துச் சண்டை தீரவில்லே 

  எனும் சொல்வளமையால் வறுமையை சந்ததிற்கு சொந்தமாக்கிய வரிகளும்,என்றும் நினைவில் போற்றத்தக்கவையாகும்.  

   முடிவாக,மணிரத்னமும் கமலும் இணைந்து தமிழ்த்திரைப்பட வரலாற்றுப் பாதையில் மைல்கல் பதித்த 'நாயகன்'திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் புலமைப்பித்தன் எழுதினார் என்பதும், அப்பாடல்கள் அனைத்துமே என்றென்றும் காலப்பெட்டகத்தில் நிலைத் திருக்கும் என்பதும்,காலம் வென்ற க்கவிஞரின் தனிச்சிறப்பாகும்'நாயகன்'திரைப்படத்தில் வரும்'நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதிசி,''நிலா அது வானுக்கு மேலே''அந்தி மழை மேகம்''நீ ஒரு காதல் சங்கீதம்'எனும் நான்கு பாடல்களுக்கும் மகுடம் சூட்டியது போல ,

 தென்பாண்டிச் சீமையிலே 

தேரோடும் வீதிவியிலே 

வான்போல வந்தவனே 

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ 

வளரும் பிறையே தேயாதே

இனியும் அழுது தேம்பாதே

அழுதா மனசு தாங்காதே

அழுதா மனசு தாங்காதே 

    எனும் அழுத்தமான வரிகளை இளையராஜாவின் கனமான குரலில்  கேட்கும் போதெல்லாம்,காலம்வென்ற பித்தனின் புலமை ஆற்றலும் கவிதைகளின் தாக்கமும்,நளினங்களாக,நயமாக,வளமாக,வலிகளாக தமிழ் மொழியின்பால் மாறா பற்றுக்கொண்ட அனைவரின் மனக்கதவு களை சொற்களால்,சந்தங்களால்,சத்தான கருத்துக்களால்,இடைவிடாது தட்டிக் கொண்டே இருக்கும்.மரணம் உடலை கொண்டு சென்றாலும், மரணமில்லா பாடல்களால் காலப்பாதையில் கல்வெட்டாகி நிற்கும்,  அமரர் கவிதைப்பித்தனை,விருதுகளுக்கும் அரசவைக்கவிஞர் எனும் அடையாளத்திற்கும் மேலான நிலையில் மனதில் நிறுத்தி,கரங்கொட்டி ஆர்ப்பரித்து,கரங்கூப்பி வணங்கிடுவோம்!

ப.சந்திரசேகரன்

                                  *******************0******************** 

   

3 comments:

  1. ஒரு நல்ல பதிவு.கவிஞர் MGR அவர்களுக்கு மிகவு‌ம் பிடித்தவர்.

    ReplyDelete