Friday, September 9, 2022

ராகங்களும் தமிழ்த்திரையும்

 "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

 நான் பாடும்போது அறிவாயம்மா"

    எனும் ரஜினிகாந்தின் 'தில்லுமுல்லு' திரைப்படப்பாடலை,எஸ்.பி.பி யின் கனிவான குரலில் கேட்டமாத்திரத்தில், மொத்த ராகங்கள் பதினாறு என்று முடிவெடுக்க முற்படுவோம். ஆனால், அடுத்த இரண்டு வரிகளிலேயே, கவியரசு கண்ணதாசன் நம்மை பிடித்திழுப்பார்.

"பலநூறு ராகங்கள் இருந்தாலென்ன 

பதினாறு நாம் பாட சுகமானது"

  எனும் பொன்னான வரிகளால் ராகங்களின் எண்ணிக்கையை சங்கீத மேதைகளின் பேரறிவுக்கே விட்டு  விடுவார்.அதுமட்டுமன்று.பதினாறு ராகங்களின் பெயர்கள் அவர் அறிந்திருக்கக்கூடும்.அந்த பாடலின் சூழலுக்கு ஏற்றவாறு பதினாறு  ராகங்களின் பெயர்களை புறக்கணித் திருப்பார்.

  'சம்பூரண ராமாயனம்'திரைப்படத்தில் சங்கீத அறிஞன் இராவணனாக நடித்த டி.கே.பகவதியின்"சங்கீத சௌ பாக்யமே"பாடலுக்கு ரம்யமாய்க் குரல் கொடுத்த சி.எஸ்.ஜெயராமன்,ஒருசில ராகங்களின் பெயர்களைக்குறிப்பிட்டு,அவற்றில் அமைந்த பாடல்களை சபையோர் கேட்க,சளைக்காமல் நளினமான பாடல் வரிகளினால்,அந்த ராகங்களுக்கு சங்கீதக் கடலில் நாசுக்காய் நங்கூரமிடுவார்..மருதகாசியின் இசையாற்றலில் ஊறிய அவ்வரிகளுக்கு,கே.வி.மகாதேவன் இதமாய் இசையமைத்திருந்தார்.

  குறிப்பிட்ட  சில ராகங்களின் பெயர்தாங்கி சாகா வரம் பெற்று நினைவில் நின்ற சில அமுத கானங்கள் தமிழ்த்திரையில் உண்டு. காலை நேரத்தின் பெருமைபோற்றும் பூபாள ராகத்தின் பெயர் கூறும்,

"பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

 இருமனம் சுகம்பெரும் வாழ்நாளே"

   எனும் மெய்மறக்கும் பாடலை கே.ஜே.ஏசுதாஸ், உமாரமணன் ஆகியோ ரின் ஏகாந்தக்குரல்களின் குணமேற்றிய வரிகளினால், பாக்யராஜின்'தூறல் நின்னு போச்சு'திரைப்படம் தனிச்சிறப்பு பெற்றது.கவிஞர் முத்துலிங்கத்தின் முதன்மையான இப்பாடலுக்கு இசைஞானி மென்மையாய் இசை மெருகூட்டினார்.

  இதேபோன்று ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான 'மாநகரக்காவல்'திரைப் படத்தில் கே.ஜே.ஏசுதாசும்,கே.எஸ். சித்ராவும்,ஆனத்தத்தை அளந்து பாடிய,

"தோடி ராகம் பாடவா 

மெல்லப்பாடு

ஆதி தாளம் போடவா

மெல்லப்போடு"

  எனும் வாலியின் வசப்படுத்தும் வரிகளுக்கு,சந்திரபோஸ் சந்தோஷமாய் சங்கீதம் படைத்திருந்தார்.

  ரஜினியின் 'சிவாஜி'திரைப்படத்தில் சஹானா ராகத்தின் பெயர்தாங்கி, கவிப்பேரரசு வைரமுத்து எழுதி,இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ரசனை யுடன் இசையமைத்த,

"சஹானா சாரல் தூவுதோ

சகாரா பூக்கள் பூத்ததோ" 

  எனும் மணம் பரப்பும் வரிகளை உதித் நாராயன் சின்மயி குரல்களில் கேட்டு, இதமாய் செவிகள் குளிர் காய்ந்ததை, என்றும் மறக்க இயலாது.

   'ஒருதலை ராகம்' திரைப்படத்தில், முகாரி ராகத்தின் முனகலுடன்,நம் நெஞ்சங்களில் சோகத்தை தூவிய பாடலே,டி.ராஜேந்தர் கவிபுனைந்து இசையமைத்த,

"கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

கலையிழந்த மாடத்திலே முகாரி ராகம்".

   எனும் மனதில் மரண ஓலம் தோற்று வித்த வரிகள்.ஜெயச்சந்திரனின் வசீகரக்குரலில் நம்மை வேதனையில் துடிக்கச் செய்தது இப்பாடல்.இதே தாடிக்கார இயக்குனரின் வரிகளிலும் இசையிலும் உதித்த,

"எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி"

  எனும் பாடலை 'உறவைக்காத்த கிளி' திரைப்படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் சசி ரேகா ஆகியோரின் ஆர்ப்பரிக்கும் குரல்களில் கேட்பதில்தான் எத்தனை சுகம்.டி. ராஜேந்தரின் பன்முகப் படைப்பாற்றலை அவரது வசனங்களும் திரை இயக்கமும்,பாடல் வரிகளும்,இசை இயக்கமும், ஏற்றமுடன் பறைசாற்றும்.

  பிலஹரி ராகத்தை பெருமைப் படுத்தும் பாணியில் தனது'உன்னால் முடியும் தம்பி'திரைப்படத்தில்,அந்த ராகத்தின் பெயரை மார்த்தாண்டம் பிள்ளை எனும் கதாபாத்திரத்திற்கு, 'பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை'என பெயர் சூட்டிஆலாபனை செய்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். இந்த ராகத்தில் உருவான பாடல் களுக்கு பாலச்சந்தரின்'நான் அவனில்லை'திரைப்படத்தில் ஜெயச் சந்திரனும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய,"மந்தார மலரே மந்தார மலரே"பாடலும்,'சந்திரோதயம்'திரைப்படத் தில் டி.எம்.சௌந்தராஜனும் சீர்காழி கோவிந்தராஜனும் சேரந்து பாடிய, 

"காசிக்குப் போகும் சன்னியாசி 

உன்குடும்பம் என்னாகும் நீ யோசி"

 பாடலும்,'அகத்தியர்'திரைப்படத்தில் எம்.ஆர் விஜயா பாடிய "தலைவா தவப் புதல்வா வருகவே"பாடலும் உதாரணமாகக் காட்டபடுகின்றன. இந்த மூன்று பாடல்களையும் முறையே கண்ணதாசன்,வாலி மற்றும் கே.டி.சந்தானம் எழுத,முதல் இரண்டு பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையிலும்'அகத்தியர்'பாடல் குன்னக்குடி வைத்யநாதனின் சங்கீத ஞானத்திலும் இசைவிருந்தாயின.

  குன்னக்குடி வைத்யநாதனின் இசைத் திறனில் கோலோச்சிய 'அகத்தியர்' திரைப்படத்தில் அகத்தியருக்கும் ராவணனுக்குமிடையே அரங்கேறிய 

"வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்"

   எனும் போட்டிப்பாடலில்,பைரவி, ஆரபி,தோடி,ஹமசத்வனி,மோகனம்  ஷண்முகப்ரியா,காம்போதி,பாகஸ்ரீ,கௌரிமனோகரி,போன்ற ராகங்க ளின் பெயர்களால்,டி.எம்.எஸ்ஸும் சீர்காழியாரும் சங்கீததின் நறு மணத்தை சுவாசிக்கச் செய்தனர்.

  கே.பாலச்சந்தர்,'அபூர்வ ராகங்கள்' 'சிந்து பைரவி' போன்ற தலைப்புக ளால்,ராகங்களுக்கு மகுடம் சூட்டினார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில், கே.ஜே.ஏசுதாஸ் பாடிய,

"அதிசய ராகம் ஆனந்த ராகம்

அழகிய ராகம் அபூர்வ ராகம்" 

என்று தொடங்கி,

"முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி" 

  என முடிந்த பாடல்,பைரவி எனும் கதாநாயகியின் பெயருக்கும்,பைரவி ராகத்திற்கும்,பரிவட்டம் கட்டியது. திரைப்படத் தலைப்புகளினாலேயே ராகங்களுக்கு ரசனை கூட்டிய பாலச்சந்தர்"ராகம் தெரியவில்லை" என்றும்"பாடறியேன் படிப்பறியேன்,பள்ளிக்கூடம் நானறியேன்"என்றும் கூறி பாடத் தொடங்கும்,மனச்சுமை நிறைந்த பெண் ஒருத்தியை,"மரிமரி நின்னே முரளீத"என்று அவர் பாடலை முடிக்கச்செய்து,சங்கீத ஆணவத்தில் திளைத்த,ஜே.கே.பி. எனும் பாடகரை, தலைகுனியச் செய்தார். 

   பாலச்சந்தரின் இசைதாகத்திற்கான இன்னொரு எடுத்துக்காட்டே 'வறுமையின் நிறம் சிவப்பு'திரைப்படத் தில் எஸ்.பி.பி &ஜானகி குரல்ளில் நம் நெஞ்சங்களை கொள்ளையடித்த,"சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி"எனும் சந்தத்தால் சங்கீதத்திற்கு சரணம் செய்த பாடல்.

   பாரதிவாசுவின் (சந்தானபாரதி& P.வாசு) இயக்கத்தில் உருவான, 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தில் உமாரமணன் பரவசமாய்ப் பாடிய, "ஆனந்த ராகம் கேட்கும் காலம்"எனும் அற்புதமான பாடலை கங்கை அமரன் இயற்ற,அப்பாடல் வரிகளுக்கு அவரது தமையனார் அருவியின் பாய்ச்சலாய் இசையமைத்திருந்தார்.

   பின்னர்' ஆனந்த ராகம்'ஒரு திரைப் படத்தலைப் பாயிற்று.'ஒருதலை ராகம்'திரைப்பட தலைப்பினைப் போல்'வசந்த ராகம்' 'நெஞ்சில் ஒரு ராகம்'எனும் தலைப்புகளுடன் வேறிரண்டு திரைப்படங்களும் வெளியா யின.இது போலவே கமலின் 'உல்லாசப் பறவைகள்' திரைப்படத்தில்

 "தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

 கேட்டாலும் போதும் 

இளநெஞ்சங்கள் வாழும்"

  எனும் பஞ்சு அருணாச்சலத்தின் பாடலொன்று,ஜென்சியின் இனியக் குரலில்,இசைஞானியின் இசையில், நம் உணர்வுகளை ராகத்தால் கட்டிப் போட்டது.

  இசையை ரசிக்கும் எனக்கு,ராகங் களின் பெயர்கள் சில தெரியுமே ஒழிய, அவற்றின் இசை நுணுக்கங்களும் இசையின் உள்ளார்ந்த உன்னதமும் சத்தியமாய்த் தெரியாது.இப்பதிவின் நோக்கமே என் நினைவில் தங்கிய சில ராகங்களின் பெயர் தாங்கிய பாடல்களையும் 'ராகம்'எனும் சொல்லை தலைப்பில் தாங்கிய திரைப்படங்களையும் பதிவு செய்வது மட்டுமே.

  இருப்பினும்,மிகச்சிறந்த ராகங்களில் காம்போதி(ஜி) பிரதானமானது என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.டி.எம்.சௌந்தராஜனின் கம்பீரக்குரலில் ஒலித்த "தமிழ்மாலை தனைச்சூடுவாள்"('அம்பிகாபதி" திரைப்படம்) பாடலும்,பின்னர் அவர்பாடிய"கல்வியா செல்வமா வீரமா"('சரஸ்வதி சபதம்'திரைப்படம்) பாடலும்,காம்போதி ராகத்தில் அமைந் திருந்ததாக இசையறிஞர்கள் கூறுவர். இவற்றில்,முதல் பாடலை  கே.டி.சந்தானம் எழுதி,ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். இரண்டாவது பாடல்,கண்ணதாசனின் கற்பனையில் உருவாகி,திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசையால் உயிர் பெற்றது.

  'ஆண்டவன் கட்டளை'திரைப்படத்தில் TMS மற்றும் P.சுசீலா குரலில் மெல்லிய நீரோடையாய் செவி குளிரச்செய்த,

 "அமைதியான நதியினிலே ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்"

  எனும் கண்ணதாசனின் பாடல், எம்.எஸ்.விஸ்வநாதனின் மேலான இசையில்,ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்திருந்தது என்பதும்,இசை வல்லுனர்களின் கருத்தாகும்.இதே ராகத்தில் அமைந்த, 

ஒரே பாடல் உன்னை அழைக்கும் 

எந்தன் உள்ளம் உன்னை நினைக்கும்

  எனும் பாடலையும்,கண்ணதாசனே எழுதியிருந்தார்.'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய இப்பாடலுக்கும்,மெல்லிசை மன்னரே தேனிசை கலந்தார்.

  ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த "பழமுதிர்ச் சோலை எனக்காகத் தான்"எனும் மற்றொரு ஏகாந்தமான பாடலை,ஏசுதாஸ் குரலில்'வருஷம் பதினாறு'திரைப்படத்தில் பலமுறை உளமாற கேட்டு ரசித்தோம்.வாலியின் இந்த வசியமூட்டும் பாடலுக்கு இளைய ராஜா மகத்துவமாய் ராகமும் தாளமும் சேர்த்திருந்தார்.

  'சதாரம்'திரைப்படத்தில் டி.எம் சௌந்தராஜன் பாடிய, 

"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே"

   எனும் பாடல்,ஷண்முகப்ப்ரியா ராகத்தில் இசைக்கப்பட்டதாகவும், டி.எம்.எஸ் பாடிய மற்றொரு பிரசித்தி பெற்ற பாடலான,

"ஏரிக்கரையின் மேலே 

போறவளே பெண்மயிலே"('முதலாளி' திரைப்படம்)

   எனும் பாடல் ஆரபி ராகத்தில் அமைந்திருந்ததாகவும்,'இருமலர்கள்' படத்தில் நாட்டியப்பேரொளி பத்மினி ஆட,டி.எம்.எஸ் உற்சாகமாய்ப்பாடிய "மாதவி பொன்மயிலால் தோகை விரித்தாள்"பாடல் கரஹரப்ப்ரியா ராகத்தில் இயற்றப்பட்டதாகவும்  வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின் றன.இந்த பாடல்கள் மூன்றையும் தமிழ்த்திரையின் வரலாற்றுப் பாடகர்,தனக்கே உரித்தான குரல் சிறப்பினால் காலத்தில் அழியாமல் நிலை பெறச்செய்தார் என்பது, குறிப்பிட்டு கல் வெட்டில் பதிக்கப்பட வேண்டியதாகும். 

   இந்த மூன்று பாடல்களில்,'சதாரம்' திரைப்படப் பாடலை அ.மருதகாசி இயற்றி இசைவேந்தர் ஜி.ராமநாதன் இசையமைக்க,கவிஞர் கா.மூ.ஷெரீ பின்'ஏரிக்கரையின் மேலே'பாடலை திரை யிசைத்திலகம் தன் ஆழமான இசை ஆற்றலால் பட்டிதொட்டி எல்லம் வலம்வரச் செய்தார்.வாலியின் வாழ்நாள் பெருமையென கருதப்பட்ட 'இருமலர்கள்' படப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் அரங்கமே அதிரும்படி இசையமைத்திருந்தார்.

  'கல்யாணி'ராகம் இன்னொரு பிரபல ராகமாக,தமிழ்திரையை வலம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த ராகத்தில் எண்ணற்ற திரைப்பாடல் கள் இருந்தாலும் 'அம்பிகாபதி' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய,

"சிந்தனை செய் மனமே செய்தால்

தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஹண்முகனை

சிந்தனை செய் மனமே" 

எனும் அமரகீதமும்,

'நானே ராஜா' திரைப்படத்தில் டி.எம்.எஸ் குரலில் நினைவில் நின்ற ''ஆதி அந்தம் இல்லா ஜோதியே" பாடலும் 'தங்கப்பதுமை' திரைப் படத்தில் சாகா வரம் பெற்ற"முகத்தில் முகம் பார்க்கலாம்"எனும் டி.எம் எஸ்& பி.லீலா இணந்து பாடிய பாடலும், முக்தா பிக்சர்ஸ் தயாரிபான 'தவப்புதல்வன்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் குரலில் ஆன்ம சுகம் தந்த, 

"இசைகேட்டால் புவி அசைந்தாடும் 

அது இறைவன் அருளாகும்"

    எனும் தெய்வீக கானமும், கலைஞரின் எழுத்தாற்றலில் உருவான,'பூம்புகார்' திரைப்படத்தில் ஒலித்த,"காவிரி பெண்ணே வாழ்க"(டி.எம்.எஸ் & பி.சுசிலா) பாடலும்,'பூவா தலையா' திரைப்படத்தில் கேட்ட "மதுரையில் பிறந்த பூங்கொடியை"(டி.எம்.எஸ்&பி. சுசிலா)எனும் அமுத கீதமும், பின்னர்,'உயர்ந்த உள்ளம்' திரைப்படத்தில் எஸ்.பி.பி யின் இணையிலாக் குரலில், இன்பத்தை உள்வாங்கி இதயத்தை நிறைத்த "வந்தாள் மகா லக்ஷ்மியே"பாடலும் கல்யாணி ராகத்தில் அமைந்ததாகத் தெரிகிறது.

    மேற்கண்ட பால்களில்,முதலாவதை கே.டி.சந்தானம் எழுதி,ஜி.ராமநாதன் இசைச் சேர்க்க,இரண்டாவதை, கே.பி.காமாட்சிசுந்தரம் எழுத, டி.ஆர்.ராம்நாத் இசையமைத்திருந்தார். 'தங்கப்பதுமை'பாடலுக்கு பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமும்,விஸ்வ நாதன் ராமமூர்த்தியும் சொந்தக்காரர் கள்.'தவப்புதல்வன்' பாடலை கண்ண தாசன் கருத்துடன் புனைய, அதற்கு விஸ்வநாதன் தனியே இசையமைத் திருந்தார்.

   கவிஞர் மாயவநாதனின்"காவிரி பெண்ணே வாழ்க"பாடல் ஆர்.சுதர்சனத்தின் இசை மேலாண்மை யில் உருவானது.கடைசி இரண்டு பாடல்களுக்கும் வாலி வரிவடிவம் கொடுக்க,ஒன்றுக்கு மெல்லிசை மன்னரும்,மற்றொன்றிர்க்கு இசை ஞானியும் கல்யாணி ராகத்தில்களை கட்டச் செய்தனர்.'பூவா தலையா' திரைப்படத்தில்,

"பூவா தலையா போட்டா தெரியும் 

நீயா நானா பார்த்துவிடு"

  எனும் டி.எம்.எஸ்& சீர்காழியாரின் ஆரவாரக்குரல்களில் அமைந்த தலைபுப்பாடல்,மோகன ராகத்தில் அமைந்து வாலி விஸ்வநாதன் இருவரின் புகழ் பரப்பியதும் வலைத் தளத் தகவலாகும்.

  இதே சீர்காழி கோவிந்தராஜன்'தை பிறந்தால் வழி பிறக்கும்'எனும் பழம்பெரும் திரைப் படத்தில் பாடிய

 "அமுதம் தேனும் எதற்கு, நீ,

அருகினில் இருக்கையிலே எனக்கு"

 எனும் ஒய்யாரப்பாடல் மோகன கல்யாணி ராகத்தில் அமைந்திருந்த தாகக் கூறப்படுகிறது.கவிஞர் சுரதாவின் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க பாடல்,கே.வி.மகாதேவன் இசையில் நீங்கா நினைவாயிற்று.

   எத்தனை ராகங்கள்!எத்தனை பாடல்கள்! எல்லாம் கற்பனைக் கருவூலத்தில் வெளியேறி,ராகக் கடலில் முத்துக்குளித்து,மாசற்ற மனிதக்குரல்களில்,மகுடம் சூட்டின. ராகங்கள் அறியாமலேயே,ராகக் கடலில் இலேசாய்க் குளித்தெழுந் ததில்தான் எத்தனை சந்தோஷம். புனித நீராடிய புளகாங்கிதம்!.இதில் பிழையேதும் இருப்பின் சங்கீத மேதைகள் பொருத்தருள்க.குறைந்த எடுத்துக்காட்டுகளே இடம் பெறும் இப்பதிவில்,முடிவாக,'சம்பூரண ராமாயன'த்தின் சங்கீதப்பாடலை 'காம்போ தி'எனும் ராகத்தைச் சொல்லி சி.எஸ்.ஜெயராமன் முடிப்பது போன்று, 'திருவிளையாடல்' திரைப்படத்தில், ஹேமநாதபாகவதருக் காக குரல் கொடுத்து,

"ஒர நாள் போதுமா? 

இன்றொரு நாள் போதுமா

நான்பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான்பாட

இன்றொரு நாள் போதுமா

புது ராகமா சங்கீதமா,அதைநான்பாட

இன்றொரு நாள் போதுமா"

என்று தொடங்கும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,இறுதியாக,

"இசை கேட்க எழுந்'தோடி' வருவாரன்றோ" 

என்றும், 

எனக்கிணையாக 'தர்பாரி'ல் எவருமுண்டோ?

என்றும்,

"கலையாத 'மோகன'ச் சுவை நானன்றோ"

என்றும்

"கானடா என்பாட்டு தேனடா:

இசைச் செல்வம் நானடா"

  என்றும்,தோடி தொடங்கி, தர்பார், மோகனம்,ஆகிய ராகங்களையும் குறிப்பிட்டு,கானடா ராகத்தை முழங்கி,கர்வத்துடன் தன் பாட்டை முடிப்பார். இங்கே கர்வம் என நான் குறிப்பிட்டது ஹேமநாதரின் கர்வமே யன்றி இசை மேதையை விமர்சித்து அல்ல.ஹேமநாதரின் இசை அகந்தையை அழிக்க, சிவபெருமான் விறகு வெட்டியாகத் தோன்றி"பாட்டும் நானேபாவமும் நானே" எனப்பாடி, அவரை பாண்டிய மண்ணை விட்டே, விரட்டி அடித்தார் என்பதையும், 'திருவிளையாடல்' திரைப்படம் நகைச்சுவை ததும்ப விளக்கியது.

  'திருவிளையாடல்'திரைப்படத்தில் எல்லா பாடல்களுமே இசை அறிஞர் களை அரங்கங்களில் கூடி மேலான கருத்துக்களை அசை போட்டு விவாதிக்கச் செய்திருக்கும்.இந்த ஆரோகண,அவரோகணத் ஆட்டக்களத் தில், ராக,தாள,குரல்கள் அடுக்கி, இசை கோபுரம் அமைப்பதில்,முழு மூச்சுடன் இறங்கிய கவிஞர் கண்ண தாசன்,பாடகர்கள்,கே.பி.சுந்தராம்பாள், டி.எம் சௌந்த ராஜன், டி.ஆர்.மகா லிங்கம்,டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, மற்றும் இசைத்திலகம் கே.வி.மகா தேவன் கூட்டணி,தமிழ்திரை வரலாற் றில் புதிய அத்தியாயம் படைத்தது.

   குரல் உச்சத்தில்,முதல் மூவரும் கோபுரக் கலசங்களாயினர்.இசை ஞானத்தில் பாலமுரளி பாடம் புகட்டினார்"பழம் நீயப்பா"பாடல் விண்ணைத் தொட்டது."பாட்டும் நானே பாவமும் நானே"அனைத்து இயக்கங் களையும் நிறுத்தி இயங்கச்செய்தது. ."இல்லாத தும் இல்லை" பாடலும் "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை"பாடலும் மகாலிங்கத்தை சிவலிங்கத்துடன் இரண்டற இணையச் செய்தன."ஒருநாள் போதுமா" பாடலைக் கேட்க, பொழுது கள் போதாது.இசையை மூச்சாக நினைப்பவர்களுக்கு இப்பாடல்கள் அனைத்துமே மூச்சுக் காற்றானது.

   ராகக்கோட்டையை,அனுமதியின்றி கொஞ்சம் எட்டிப் பாரத்த என்னை, சங்கீத சாம்ராஜ்ஜியம் சபிக்காதிருக் கட்டும்.அறியாத் துறையினைச் சுற்றி வந்த இப்பதிவில்,அரங்கேறிய கருத்துக்களுக்காக,விக்கிபீடியா உட் பட அனைத்து வலைத்தள பிரிவு களுக்கும் என்றென்றும் நன்றியுடைய வனாவேன்.திறன் ஆளும் கலை வாணி பாதம் பணிந்து,இப்பதிவினை முடிக்கிறேன்.

ப.சந்திரசேகரன்.

                                    ============0============


  





4 comments:

  1. Raaga devathai ungalai aaseervadhikkattum

    ReplyDelete
  2. சிறப்பு சார்... இசை ஞானமோ ராகங்களை பற்றிய ஞானமோ எனக்கு கிஞ்சித்தும் இல்லை.. உங்கள் பதிவு மிகவும் எளிமையாக ராகங்களை திரைபபாடல்களை வைத்து விளக்குவதை வியந்து பார்க்கிறேன். சில பாடல்களை ஏற்கனவே கேட்டுயிருந்தாலும் ராகம் தெரியாது. உங்கள் வரிகளில் அவற்றை தெரிய வரும்போது பிரமிப்படைகிறேன். நன்றி சார்

    ReplyDelete
  3. மிக்க நன்றி மணிகண்டன்.

    ReplyDelete