Saturday, July 1, 2023

ஆறுதலின் அரவணைப்பில்


  வாழ்க்கைக்கடலில் திக்கற்று தடுமாறி, மூழ்கிடும் வேளையில் உதவும் கரங்களே, ஆறுதலின்',அகமும் புறமும்."தோழா தோழா தோளில் கொஞ்சம் சாஞ்சுக்கணும்" என்று  ஆறுதலுக்கு அலைவோர்க்கு உரிய  நேரத்தில் நிழலாய்த் தொடர்ந்து தாங்கும் தோள்களே,ஆறுதல்.உதவிக்கு யாருமே தென்படாதபோது,கண்ணுக்குப் புலப்படா இறைவனடியை அடைந்தோர்,ஆறுதல் அளிப்பர் என்கிறார் வள்ளுவர். 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 

மனக்கவலை மாற்றல் அரிது 

  எனும் இக்குறள்,ஒப்பில்லா திருவடிகளை அடைந்தோர் மட்டுமே ஆறுதலுக்கான வடிகால் ஆவர்,என்கிறது.  

  உறவுகள் ஆயிரம் இருந்தாலும்,நட்பினால் கிடைக்கப்பெறும் ஆறுதல் ஆன்ம சுகம் அளிப்பதாகும்.அதனால் தான் வள்ளுவர், 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் கலைவதாம் நட்பு 

எனும் பிரபலமான குறளினை மனித இனத்திற்கு விட்டுச்சென்றார். 

  ஆறுதலில் முதன்மையானது,தன்னிரக்க மின்றி ஒவ்வொரு நபரும் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ளும் சுய ஆறுதல் மனப்போக்கு.இதற்கான உரத்த ஓலி பாடலொன்றை,மெல்லிசை மன்னர் தன் சொந்தக்குரலில்'வெள்ளிவிழா'திரைப் படத்திற்கென சுறுசுறுப்பாய் பாடியிருந்தார்.

"உனக்கென்ன குறைச்சல் 

நீ ஒரு ராஜா 

வந்தால் வரட்டும் முதுமை 

வந்தால் வரட்டும் முதுமை" 

 எனும் இந்த வலிமையூட்டும் வரிகள், முதுமையின் முனகல்களுக்கு நவத்தால் பூட்டிட்டது.இதே மெல்லிசை மன்னர்,         'சிவகாமியின் செல்வன்' திரைப் படத்தில், தந்தை தன் மகளுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் பாடிய பாடல்,அழகுடனும்,அர்த்த முடனும் அமைந்திருந்தது. 

"எதற்கும் ஒரு காலம் உண்டு 

பொறுத்திரு மகளே

இன்பத்திலும் துன்பத்திலும்  

சிரித்திடு மகளே"  

எனும் இதமாய் இதயம் வருடும் வரிகளில், துன்பம் நிச்சயம் துவண்டுபோகும்.   

  ஆறுதலின் அடர்த்தியில் டி.எம்.சௌந்த ராஜனின் கணீர்க்குரலின் அமைந்த, ஒருசில மறக்கமுடியா பாடல்கள் உண்டு. 'பந்தபாசம்' திரைப்படத்தில் தம்பிக்கு அண்ணன் ஆறுதல் அளிப்பதாக அமைந்த, 

"கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு 

காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு" 

எனும் தரமான பாடலும், 

'என் அண்ணன்' படத்தில் அவர் எம்.ஜி. ஆருக்காக பாடிய, 

"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா 

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா"என்ற பாடலுக்கிடையே வரும், 

"உண்டு உண்டு என்று நம்பி காலை எடு

இன்று உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு "

  எனும் நம்பிக்கை வரிகள் நெருப்பெனப் படர்ந்து,கவலைகளை தீயிட்டுக் கொளுத் தியது.

  உடல் ஊனத்தாலோ சூழ்நிலைச்சுமை களாலோ தளர்ந்துபோகும் கணவனுக்கு நெஞ்சார ஆறுதல் கூறும் மனைவியர், கணவனுக்கு கரையாத பலம் தருகின்றனர். இந்த வகையில் 'பாகப்பிரிவினை'திரைப் படத்தில் சரோஜாதேவிக்காக பி.சுசீலா பாடிய, 

"தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுவுண்டோ 

உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந் தாலும் அன்பு குறைவதுண்டோ" 

  எனும் குறையில் நிறைகாணச் செய்யும் பாடல்,ஆறுதலின் முதன்மைக் குரலானது. இதேபோன்று இளம் வயதிலேயே அகால மரணமுற்ற மனைவிக்காக ஏங்கித்தவிக் கும் கணவன்முன், இறந்து போன மனைவி ஆவியாகத் தோன்றி,இதயத்துணையாக ஆறுதல் அளிக்கும்  காட்சிக்கென,'கற்பகம்' திரைப்படத்தில் பி சுசீலா பாடிய, 

"மன்னவனே அழலாமா 

கண்ணீரை விடலாமா 

உன்னுயிராய் நானிருக்க 

என்னுயிராய் நீயிருக்க" 

 எனும் அமுத கீதம்,என்றென்றும் நெஞ்சில் இனித்து,கேட்பவர்க்கெல்லாம் ஆறுதல் தரும்  பாடலாகும். 

  தூக்கத்தை ஆறுதலாக்கி,தூக்கத்திலும் துணையிருப்பேன் என்று உறதியளிக்கும் பெண்மையின் பேரன்பில் திளைப்பதைத் தவிர,வேறு நிம்மதிக்கோலம்,மண்ணில் உண்டோ? இப்படி ஒரு உறுக்கமான அன்பை ஆறுதலாக்கிய பாடலே,'ஆலயமணி'திரைப் படத்தில் எஸ்.ஜானகி மனம் கனிந்துப்  பாடிய,

"தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னை தொடர்ந்திருப்பேன்

என்றும் துணையிருப்பேன்"

  எனும் நித்திரையில் நிம்மதி தவழச் செய்யும் பாடல்.

  கனவனின் அன்பு பூரணமாகக் கிட்டாத நிலையிலும்,கனவனின் நிம்மதியை பெரிதாக நினைத்து ஆறுதல் உணர்வுடன் மனைவி பாடுவதாக பி.சுசிலாவின் குரலில் இனிமையுடன் குணம் சேர்த்த பாடலே,

"எங்கே நீயோ நானுமங்கே உன்னோடு" என்று தொடங்கி,

"காதல் என்றால் சேயாவேன்

கருணை என்றால் தாயாவேன்

தினமும் உந்தன் நிழலாவேன்

உனக்கென நான் வாழ்வேன்"

 என்று ஆறுதலுக்கு பெண்மையை அற் பணித்த,'நெஞ்சிருக்கும்வரை'திரைப் படத்தின் ஆழமான நெஞ்சை இறுக்கும் வரிகள்,ஒரு அழகான வாழ்க்கைப் பாட மாகும்.

 இப்படி பலவிதமான ஆறுதல் பாடல்களில் காதலருக்காகவும் அவர்களின் காதல் மனச்சுமையை இலேசாக்கும் வகையிலும், நண்பர்கள் பாடுவதுண்டு.அப்படிப்பட்டதோர் பாடலை'காதல் கோட்டை'திரைப்படத்தில் தேவா தானே இசையமைத்துப் பாடியிருந் தார்.

"கவலைப்படாதே சகோதரா

எங்கம்மா கருமாரி காத்துநிற்பா

காதலத்தான் சேர்த்துவப்பா

கவலைப்படாதே சகோதரா"

  ஆறுதலால் மனித மனமளந்த திரைப்பட வரிகள் தமிழ்த்திரையில் ஏராளம். இது போன்ற காட்சியமைப்புப் பாடல்கள்  இன்னும் நிறைய உண்டு.மேற்கண்ட பாடல்களில் வெள்ளி விழா,சிவகாமியின் செல்வன்,கற்பகம் ஆகியவற்றின் வரிகளை வாலி எழுத,முதல் பாடலுக்கு வி.குமாரும், இரண்டாவதற்கு மெல்லிசை மன்னரும் மூன்றாம் பாடலுக்கு திரையிசைத்திலக மும் இசையமைத்தனர்.

  'பாகப்பிரிவினை','ஆலய மணி','நெஞ்சி ருக்கும்வரை''என் அண்ணன்'ஆகிய படங்களின் சுட்டிக்காட்டப்பட்ட பாடல்க ளுக்கு கண்ணதாசன் வரி வடிவம் கொடுக்க,முதல் இரண்டிற்கு விஸ்வ நாதன்இராமமூர்த்ததி இணைந்தும், 'நெஞ்சிருக்கும்வரை'பாடலுக்கு,எம்.எஸ்.வி தனித்தும் இசைச்செறிவூட்டினர்.'என் அண்ணன்' திரைப்படம் கே.வி.மகாதேவன் கரங்களில் கனிந்து பரவசமூட்டியது.

 'பந்த பாசம்'திரைப்படப்பாடல்,கவிஞர் மாயவநாதனால் புனையப்பட்டு விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை கண்டது.'காதல் கோட்டை' பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் அத்திரைப் படத்தின் இயக்குனரும் கவிஞருமான அகத்தியனாவார்.

  முடிவாக,ஒவ்வொரு மனிதனுக்கும் சுகமான,நிசமான ஆறுதல் வழங்கிய பாடலே,கண்ணதாசன் இயற்றி விஸ்வ நாதன் ராமமூர்த்தி இசையில் P.B.சீனிவாஸ் குரலில் நம் அனைவரையும் இளைப்பாரச் செய்த,

"மயக்கமா கலக்கமா 

மனதிலே குழப்பமா

வாழ்க்கையே நடுக்கமா"

எனும் பாடலும்,அப்பாடலின் இறுதி வரிகளான,

"இருக்கும் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

 எனும் இதிகாசமாக அமைந்த,அனைவர்க் குமான ஆறுதல் சொற்கள்.

   "சொர்க்கமும் நரகமும் நம் வசமே"என்று கவியரசு எழுதியது போல,அவரவர் உள்ளமே அவரவர்களின் இருப்பிடம் என்றாகிட, அவரவர் நிம்மதியும், அதற்கான ஆறுதல் மொழிகளும்,அவரவர் வசமே!.

ப.சந்திரசேகரன்.
5 comments:

 1. அருமையான பாடல்களை பற்றிய பதிவு சார். ... மயக்கமா கலக்கமா மனதிலேகுழப்பமா....எனக்கு என்றும் பிடித்தது ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.மணிகண்டன்.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 2. "Wow, this post truly captivated my attention! The content is engaging and thought-provoking, and the visuals are simply stunning. Thank you for sharing such valuable insights. Can't wait to see more from you!" Keep up the fantastic work, you're doing an amazing job!"
  Visit SDMoviesPoint. SBS

  ReplyDelete