Saturday, July 22, 2023

வாழ்க்கைப் பாதையில் தமிழ்த்திரைப் பயணம்

 

   வாழ்க்கையை வெள்ளித்திரையில் காண்பதுமுண்டு;வெண்திரையுடன் வாழ்பவர்களும் உண்டு.வாழ்க்கை நிசமெனில் திரைபிம்பங்கள் நிசத்தின் நிழலே!.வாழ்க்கையுடன் இணைந்து பயணிக்கும் திரையுலகு, வாழ்க்கையின் சில பகுதிகளையாவது பிரதிபலிக்க வில்லையெனில் படைப்பு பொய்யாகிறது.

   ஒரு உலோகத்திற்கு தங்கமுலாம் பூசினாலும்,உலோகமின்றி முலாம் பூச இயலாது என்பதே உண்மை. வாழ்க்கை என்னும் உண்மை உலோகத்திற்கு, இலக்கியமும்,திரைக்கதையும் கற்பனையால் தங்கமுலாம் பூசுகின்றன. உடல் உண்மையென்றாலும்,புலன்கள் உண்மையென்றாலும்,காணும் காட்சிகள் எல்லாமே உண்மையாகி விடுவதில்லை. பொய்க்காட்சிகளால்,முகம் தெரியா உள்ளத்தில் ஏற்படும் பாதிப்புகள் உண்மையா பொய்யா என்பதற்கு,அவரவர் வாழ்க்கையே சாட்சி. 

  காலம் ஓடிக்கொண்டே இருப்பதால் காலத்தை நதியாகக்கருதி அதில் வாழ்க்கைப் பயணம் மேற்கொள்கை யில்,வாழ்க்கை இயல்பாகவே ஒரு ஓடமாக வோ,படகாகவோ மாறிவிடுகிறது.எனவே தான் அந்த கோணத்தில் சிந்திக்கும் படைப்பாளிகள், 

"வாழ்க்கையின் பாடம் ஊறிடும் ஓடம் என்றும்", 

{'இவன் அவனேதான்'திரைப்படத்தில் திருச்சி லோகநாதனும் எஸ்.ஜானகியும்  பாடியது }

"ஆசையே அலைபோல 

நாமெலாம் அதன்மேலே 

ஓடம்போல் ஆடிடுவோமே வாழ்நாளிலே"

என்றும், 

{படம்:- 'தை பிறந்தால் வழி பிறக்கும்';பாடியவர் அதே திருச்சி லோகநாதன் }   

"வாழ்க்கையெனும் ஓடம் 

வழங்குகின்ற பாடம் 

மானிடரின் மனதினிலே 

மறக்கவொண்ணா வேதம்" என்றும், 

('பூம்புகார்'திரைப்படத்தில் கே.பி சுந்தராம்பாள் பாடியது}.  

    வாழ்க்கையினை படகாக்கி,கால மெனும் தியில் பயணிப்பதாகக் கருது கின்றனர். 

  இந்த மூன்று பாடல்களையும் முறையே வில்லிபுதனும்,கண்ணதாசனும் கலைஞ ரும் எழுத,எம்.ரெங்கராவும்,கே.வி மகா தேவனும்,ஆர்.சுதர்சனமும் அமுதமாய் இசையமைத்திருந்தனர்.

  வாழ்க்கை என்பது நீண்ட ஒரு கனவோ அல்லது கனவு காண்பதே வாழ்க்கையோ என்று நினைக்கும் பட்சத்தில்,துறவுக் கோலம் கரையென மனக்கண்ணில் புலப் பட,ஆசையெனும் துடுப்பினை துறக்கச் செய்வதே வாழ்க்கையின் எல்லை என்று, வாழ்க்கையை ஓடமாக்கி.ஆசை களைத் துடுப்பாகி,கவிப்பேரரசு வைரமுத்து வரியமைத்த, 

"கனவு காணும்

வாழ்க்கை யாவும்

கலைந்து போகும்

கோலங்கள்

துடுப்புக்கூட

பாரம் என்று கரையைத்

தேடும் ஓடங்கள் "

  எனும் பாடலொன்று பாலு மகேந்திராவின் 'நீங்கள் கேட்டவை' திரைப் படத்தில் இடம் பெற்றது.இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸின் காந்தக்குரலில் ப்பாடல் நம் நினைவுகளை சுண்டியிழுப் பதை,எப்போதும் உணரலாம். 

  கால ஓட்டத்தில் வாழ்க்கையின் நகர்ச்சியைக் குறிக்கும் வண்ணமே, ஜெமினி பிக்செர்ஸின் 'வாழ்க்கைப்படகு' திரைப்படமும்  மணிவண்ணன்  இயக்கத் தில் சத்யராஜ் நடித்த'வாழ்க்கைச் சக்கரம்'திரைப் படமும் வெளியாயின. மேலும்'வாழ்க்கை'எனும் தலைப்பில் இரண்டு திரைப்படங்களும் 'வாழ்விலே ஒருநாள்''வாழ்க்கை ஒப்பந்தம்''வாழ்க்கை வாழ்வதற்கே''வாழ்வு என் பக்கம்''வாழ்வே மாயம்''வாழ்ந்து காட்டுகிறேன்"போன்ற திரைப்படங்களும் வெண்திரையில் வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களை புரட்டிப்பார்த்தன.

  காலங்கள் மாறிக்கொண்டே இருப்பி னும்,போராடாமல் வாழ்க்கை இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் வகையில் போராடித்தான் வாழ்ந்து முடிக்கின்றனர் .வெற்றி தோல்விகளுக்கிடையே வாழ்க்கை என்றுமே ஒரு போர்க்களம்தான். இதைத் தான் சரத்குமார் நடித்து வெளிவந்த'வேடன்' திரைப்படத்தில், 

"வாழ்க்கையே போர்க்களம் 

வாழ்ந்துதான் பார்க்கணும் 

போர்க்களம் மாறலாம் 

போர்கள்தான் மாறுமோ" 

  எனும் ஆழ்ந்த சோகத்தை எஸ்.பி.பியின் குரலில் ஒலித்த வைரமுத்துவின்  பாடல், நெஞ்சில் ஊடுருவி உணர்த்தியது.சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவான 'வேடன்' திரைப்படத்திற்கு,தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருந்தார்.

   இதேபோன்று எதிர்நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் என்ற தன்னம்பிக்கை தத்துவத்தை, 

"வாழ்ந்து  பார்க்கவேண்டும் 

அறிவில் மனிதாகவேண்டும் 

வாசல்த்தேடி உலகம் 

உன்னை வாழ்த்துப் பாடவேண்டும்" 

   என்ற பாடல் 'சாந்தி' திரைப் படத்தில்,இள நெஞ்சங்களின் வசந்த உணர்வுகளையும் துணிச்சலுகையும் வெளிப்படுத்தியது. மேலும்,

"வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை வாழிவிலே

ஆழக்கடலும் சோலையாகும் 

ஆசையிருந்தால் நீந்திவா 

.என்றும். ..............................................

வாழச் சொன்னால்

வாழ்கிறேன் மனமா இல்லை

வாழ்வினில் ஆழக் கடலில்

தோணி போலே அழைத்துச்

சென்றால் வாழ்கிறேன்" 

 என்றும்,

பெண்மை ஆண்மைக்கு வாழ்வியல் நடை முறைகளை படிப்பிப்ப தாகவும்,அதனை புரிந்து கொண்டு அதற்கு ஆண்மை  உடன் படுவதாகவும், இசைந்து வாழும் மனப் போக்கின் மகத்துவத்தை,'பலே பாண்டியா' திரைப் படத்தின் அற்புதமான பாடல் வரிகள் உணர்த்தின .  

  வாழ்க்கை சித்தாந்தங்களை எளிமை யான வரிகளில் இவ்வாறு சுட்டிக்காட்டினார் கவியரசு கண்ணதாசன்.இந்த இரண்டு சிவாஜி கணேசன் திரைப்படங்களுக்கும் மெல்லிசை மன்னர்களே,இனிமையாய் இசையமைத்திருந்தனர். 

  கால ஓட்டத்தில் வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் புரிய வருகின்றபோது,அன்பும் பாசமும் அழிகின்ற கோலங்களே என்று அறிந்து,மனம் நொந்துபோய்,வேதனையே கவிதையாகி,மனிதனை ஞானியாக்குவ துண்டு.அவ்வாறு "ஆறிலிருந்து அறுபது வரை'திரைப்படத்தில் இளைய ராஜாவின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடலே, 

"வாழ்க்கையே வேஷம்

இதில் பாசம் என்ன நேசம் என்ன

காலத்தின் கோலம் புரிந்தது,

ஞானிதானே நானும்"

  இந்த சோகமான வரிகளுக்கு சொந்தக் காரர்,திரைவசனமும் கவிதை ஆற்றலும் தன்னகத்தே கொண்ட பஞ்சு அருணாச்சல மாவார்.

   வாழ்க்கையில் கெட்டு உயர்ந்தோரும் உண்டு;மேன்மக்களாக வாழ்ந்து கெட்டோரும் உண்டு.அப்படி வாழும்போதும் தாழும்போதும்,நம்மை சுற்றியிருக்கும் சமூகம் வசைவு விமர்சனங்களை, கூறிக் கொண்டே இருக்கும்.இந்த ஒரு மறுக்க வொண்ணா உண்மையினைத் தான்'நான் பெற்ற செல்வம்'திரைப்படத்தில் ஜி.ராம நாதன் இசையில் டி.எம் சௌந்தராஜன் மனஉளைச்சலை இறக்கிவைத்து  பாடிய க.மு.ஷெரீபின் வரிகளான,

"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கு
ம்"

  எனும் வாழ்வியல் பாடல் நினைவுறுத் தியது.  

  இறுதியாக,வாழ்க்கையைப் பற்றி திரைக்கவிஞர்கள் எத்தனை விதமாக வரிகள் வடித்தாலும்,முடிவில் வாழ்வின் மாயக்கோலங்களே,வாழ்வின் வாய்மைப் பாடமாகும். இதைத்தான் 'நீர்க்குமிழி' படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அழுத்தமாய் ஒலித்த, 

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா 

ஆறடி நிலமே சொந்தமடா"

 எனும் கவிஞர் சுரதாவின் பாடலும்,'வாழ்வே மாயம்'திரைப்படத்தில் நம்மை முடிவிலா சோகத்தில் தள்ளிய, 

"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் 

தரைமீது காணும் யாவும் 

தண்ணீரில் போடும் கோலம்" 

  என்ற வாலியின் வலுவான வரிகளும், நெஞ்சில் நிலைநிறுத்தின.வி.குமாரும் கங்கை அமரனும் இசையால் இதயம் கனக்கச் செய்த இந்த இரண்டு பாடல் களும்,வாழ்க்கைப்பாதையில் தமிழ்த் திரையிசைவரிகளின் பயணத்தை, கற்பனை,யதார்த்தம் ஆகிய இரண்டு  எல்லைக்கற்களை கடக்காது,நிற்கச் செய்தன. 

ப.சந்திரசேகரன்

                                        ==============0=================     

2 comments:

  1. .....வாழ்வின் மாயக்கோலங்களே,வாழ்வின் வாய்மைப் பாடமாகும்.... ,,,👌

    ReplyDelete
  2. சிறப்பு சார்.... அருமையான பதிவு... நன்றி

    ReplyDelete