Tuesday, October 10, 2023

இரு நகைச்சுவை நடிகர்களின் பாடல் பரவசம்.

  

  




     தமிழ்த்திரை வரலாற்றில் நடிப்பும் பாடலும் இரண்டறக்கலந்திருந்த காலம் ஒன்று உண்டு. நடிப்பிசைப் புலவர் என்று முப்பரிமாணம் பெற்ற கே.ஆர்.ராமசாமி எனும் ஒரு நடிகரும் இருந்தார். எம்.கே.தியா கராஜ பாகவதரும் பி.யு.சின்னப்பாவும், பாடிக் கொண்டே நடித்த அக்காலப் பிரபல மான கதாநாயகர்கள். 

  ஆனால்,இவர்களின் காலத்திற்குப்பின்னர் திரைநிரப்பிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,காதல் மன்னன் ஜெமினி கணேசன், நவரச நாயகன் ஆர். முத்துராமன்,ஜேம்ஸ் பாண்ட் ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன்,சிவகுமார் போன்ற எந்த கதாநாயகர்களும் பாட இய லாதவர்கள் என்று தாங்களே உணர்ந்து, நடிப்புடன் நிறுத்திக்கொண்டனர். அடுத்த தலைமுறை முன்னணிக்கதாயகர்களில் பாடும் குரலில் ரஜினியை கமலும், அஜித்தை,விஜய் மற்றும் தனுஷ் போன் றோரும் பின்னுக்குத் தள்ளினர் எனலாம்.

  இருப்பினும்,காதாநாயகர்களைக்காட்டி லும் நகைச்சுவை நடிகர்கள் பாடுவ தென்பது தமிழ்த்திரையின் வரப்பிரசாதமே. கலைவாணர் என்.எஸ்.கே வுக்குப் பிறகு ஜே.பி.சந்திரபாபு மட்டுமே சொந்தக்குரலால் பாடுவதில்,தான் நடிக்கும் படங்களெல்லாம் தன் பாடலின்றி இருக்காது எனும் நிலையை உருவாக்கினார்.அதற்குப் பின்னர் நடிப்பிலும், நகைச்சுவை அமர்க் களத்திலும்,வசன அழுத்தத்திலும்,நடன ஆர்ப்பாட்டத்திலும்,தன்னை மிஞ்சும் வேறொரு நகைச்சுவை நடிகர் இல்லை எனும் நிலைப் பாட்டினை தனது முழுத் திறமையால்  உருவாக்கிய வைகைப்புயல் வடிவேலு, பாடுவதிலும் சந்திரபாபுவுக்குச் அடுத்தபடியாக வெற்றிக்கொடி கட்டினார்.

    சந்திரபாபுவின் குரலில் காந்தமென எப்போதுமே அதிர்வுகள் அறைகூவும்.அவர் நடித்த எல்லா படங்களிலும் அவர் ஒரு பாடலையேனும் பாடியிருந்தாலும், என்றென்றும் ரசிகர் மனதில் குடிகொண்ட தனிச்சிறப்பு கொண்ட அவரின் பாடல்களை பெருமிதத்துடன் பட்டியலிடலாம்.

   'மகாதேவி'திரைப்படத்தில் அவர் பாடிய "தந்தனா பாட்டு பாடணும் திந்தனா தாளம் போடணும்",'பதிபக்தி'யில் டி.எம் சௌந்த ராஜனுடன் சேர்ந்து பாடிய "இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிரக்கனும் அண்ணாச்சி",'புதையல்' படத்தில் இடம் பெற்ற "உனக்காக எல்லாம் உனக்காக", 'மணமகன் தேவை'யில் அமர்களப்படுத்திய "பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே",'மரகதம்'திரைப்படத்தில் நாம் பல முறை  கேட்டு ரசித்த ,அவர் ஜமுனா ராணியுடன் பாடிய "குங்கும பூவே,கொஞ்சு புறாவே",'கடவுளை கண்டேன்'படத்தில் அவர் எல் ஆர் ஈஸ்ஸ்வரியுடன் இணைந்து பாடிய "கொஞ்சம் தள்ளிக்கனும்",'நாடோடி மன்னன்'திரைப்படத்தில் ரோஷத்தை நகைச்சுவையாக்கிய"தடுக்காதே என்னை தடுக்காதே"'போலீஸ்காரன் மகளி'ல் அதே எல்.ஆர். ஈஸ்வரியுடன் பாடிய"பொறந் தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது"  போன்ற பாடல்கள் அனைத்துமே மட்டற்ற இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது. 

  சந்திரபாபு பாடிய தத்துவப்பாடல்களில் "பிறக்கும் போதும் அழுகின்றான்"{கவலை இல்லாத மனிதன்}"ஒண்ணுமே புரியலே உலகத்திலே"{குமார ராஜா},"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" {அன்னை }"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது"{ஆண்டவன் கட்டளை } போன்றவை என்றும் நெஞ்சில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.

  நிறைய பாடல்களை ஜே.பி.சந்திரபாபு பாடியிருந்தாலும் பிரதானப் பாடல்கள் மட்டுமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் பாடிய பாடல்களை கவியரசு கண்ணதாசனும் கு.மா.பாலசுப்ரமணி யனும்,கே டி சந்தானமும்,தஞ்சை ராமையா தாஸும் எழுதியிருந்தனர்.பெரும்பாலான பாடல்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி யும் , கே.வி.மகாதேவனும், ஜி.ராமநாதனும் டி ஜி லிங்கப்பாவும்,எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் இசையமைத்திருந்தனர்.இந்த இசை மேதைகளின் இசையினூடே சந்திர பாபுவின் காந்தக்குரல்,நளினமாய் பயணித்து அவர் பாடல்களை கேட்கும் அனைவரையும் அப்பாடல்களோடு பயணிக் கச் செய்தது. 

   சந்திரபாபுவின் அதிர்வுக்குரலுடன் ஒப்பிடுகையில் வடிவேலுவின் குரல் வீச்சின் தாக்கமும் சொற்களின் உச்சரிப்புத் தெளிவும்,கூடுதல் குணம் காட்டும்.அவரது கலாட்டா பாடல்களாக "போடப்போடா புண்ணாக்கு"{என் ராசாவின் மனசிலே}        " எட்டணா இருந்தா எட்டூரு ஏன் பாட்ட கேக்கும்"{எல்லாமே என் ராசாதான்}"லக் லக் லக்"{தடயம்}"மதனா மதிவதனா" {மாயன்}"கட்டுனா அவள கட்டனும்டா"{ஜெய சூர்யா}"வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே"{காலம் மாறிப்போச்சு}"வாடா மாப்பிள வாழ பழ தோப்பில"{வில்லு] போன்ற அனைத்து பாடல்களுமே கலக்கல் கம்பீரங்களாக கொடிகட்டிப் பறந்தன.

   சந்திரபாபுபவின் மென்மை சற்று குறை வாக வடிவேலுவின் குரலில் தென்பட்டா லும்,இசை ஆர்ப்பாட்டத்தில் அவரின் பாடல்கள் தனி முத்திரை பதித்தன அதே நேரத்தில் சந்திரபாபுவைப்போல மயிலிறகு ஸ்பரிசம் ஏற்படுத்திய"சந்தன மல்லிகை யில் தூளிகாட்டி போட்டேன் தாயே நீ கண்ணுறங்கு தாலே லல்லேலோ"{ராஜ காளியம்மன்}பாடலும் சமீபத்தில் மா மன்னன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரெஹ்மான் இசையில் அவர் பட்டையைக்கிளப்பிய 

"மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா"

   பாடலும் இசையின் மீது வடிவேலு கொண்டுள்ள அசுரப்பிடிப்பை வெளிப் படுத்தும்.பாடலிலும் நடனத்திலும் சந்திர பாபுவுக்கு சற்றும் சளைக்காத வடிவேலு, நகைச்சுவை நடிப்பினிலும்,அங்க அசைவி லும்,உடல் மொழியிலும்,வசன உச்சரிப்புத் தெளிவிலும் சந்திரபாபுவை நீண்ட தூரம் புயலெனக் கடந்து தமிழ் திரையின் தன்னிகரில்லா நகைச்சுவை நடிகராக இமயம் கண்டார். 

  இருப்பினும்,சந்திரபாபுவின் பாடல்களில் கேட்போரின் உணர்வுகள் வசியப்படுத்தப் படுவதையும் உல்லாசமாய்  வருடப்படு வதையும் எவரும் மறுப்பதற்கில்லை. சந்திரபாபுவின் பாடும் திறனும் அவர் குரலின் இசைத் தகுதியும் அவரின் பாடல் களை அவர் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் இன்றியமையா இணைப்பாக்கின. முடிவாக,சந்திரபாபுவின் குரல் ஆரவணைப் பும் வடிவேலுவின் குரல் எழுச்சியும்,தமிழ்த் திரையிசையில் தனித்தனி தாக்கங்களை என்றென்றும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதை,திரை இசைப்பாளர் களும் ரசிகர்களும்,நிச்சயம் மனமாற ஏற்றுக்கொள்வர்.

           ===///==============///=====

        

2 comments:

  1. நடிக்கவந்ததால் சந்திரபாபு ஆன அமரர் ஜோசப் பிச்சை யும் சரி, எப்போதுமே வடிவேலுவாக இருக்கும் வைகை புயலும் சரி இரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்த்தாலும் மனதை நவரசங்களால் நிர ப்பியவர்கள்.

    ReplyDelete